கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்

kiraa

அன்புள்ள ஜெ.,

கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை

கி.ரா. அவர்களின் தீவிர வாசகி என்ற முறையில் கி.ரா.வுக்கு ஞானபீடம் என்று தாங்கள் விடுத்த அறைகூவல் நிறைவாக இருந்தாலும், இதை கூட சொல்லி செயலாற்றவேண்டிய சூழலில் இருக்கிறோமே என்ற கசப்புணர்வும் சேர்ந்த படி தான் உள்ளது.

ஒரு மாபெரும் எழுத்தாளரை கொண்டுசென்று சேர்க்கவேண்டிய நிலை என்பதே சற்று அருவருக்கத்தக்க செயலாக எனக்கு தோன்றுகிறது என்று முதலில் சொல்லிவிடுகிறேன் – தவறென்றால் மன்னிக்கவும். நாடெங்கிலும் இருந்து வாசிப்புப்பசியும் நுண்ணுணர்வும் உள்ளவர்கள் தானே கூட்டம்கூட்டமாக அவரைத் தேடிவரும் நிலை இருக்கவேண்டும்! கி.ரா.வின் படைப்பாற்றலும் மேதமையும் சொல்லித்தான் புரியவைக்கப்படவேண்டும் என்றால், அப்படிப்பட்ட வாசகபரப்புக்கு மூன்றாம் தர கவிஞர்களும் அசட்டு எழுத்தாளர்களுமே நாயகர்களாக இருக்கட்டுமே. கி.ரா.வை அவரது வாசகர்கள் நாம் கொண்டாடிவிட்டுப்போகிறோம், அது நமக்கு கிடைத்த பெரும் பேர். ஏன் அவரது அருமை புரியாதோர் முன்னிலையில் அவர் ஆக்கங்களை கொண்டுசெல்லவேண்டும் என்று உணர்வதாக முதலில் பதிவுசெய்கிறேன்.

அதே நேரத்தில், நீங்கள் சொல்லவருவதும் நன்கு புரிகிறது. தேசிய அளவில் தமிழ் மொழி மீதுள்ள இளக்காரமும் தவறான பார்வையும் களைய வேண்டும் என்றால் நம்முடைய மூத்தோரை நாம் முன்னிறுத்திப்பேசி, ஞானபீடம் போன்ற தரமான விருதுகள் நியாயமாக அவர்களுக்கு வர வழிவகுக்கவேண்டும். இப்படிப்பட்ட செயல்பாடுகளும் இம்மொழியில் நிகழ்கின்றன என்று உலகம் காணவேண்டும். அதைத்தவிர, முக்கியமாக, இந்திய வாசகர்பரப்புக்கு இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று சுட்டிக்காட்ட வேண்டும். நாடு முழுவதும் உள்ள தேர்ந்த வாசகர்கள் அவரை வாசிக்கவேண்டும். அந்தவகையில், இது தேவைக்குரிய செயல் தான் என்று ஒப்புக்கொள்கிறேன்.

மொழிபெயர்ப்புகள், ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரவேண்டும் என்று சொல்லியிருந்ததை கவனித்தேன். இது தொடர்பாக ஒரு பதிவு. இந்திய-ஆங்கில சூழல் மீது அசூயை உருவாவதற்கும், நான் தீவிரமாக தமிழில் வாசிக்க, எழுத தொடங்கியதற்கும் ஒரு காரணம் இது. இந்திய மொழிகளிலிருந்து, குறிப்பாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு நடப்பதில் உள்ள அரசியலை பற்றி நீங்கள் அறியாததை நான் புதிதாக ஒன்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் அரசியலையும் தாண்டி, மொழியாகங்களை வாசிப்பவர்கள் பலரது மனநிலையையும் உளவியலையும் இங்கு பதிவுசெய்ய நினைக்கிறேன்.

இந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை, குறிப்பாக தமிழில் எழுதும் எழுத்தாளர்களை, தலையில் தட்டிக்கொடுத்து ‘பரவாயில்லை, நீயும் நன்றாக எழுதுகிராய்’ என்ற கேவலமான பாவனை ஒரு புறம். வட்டார மொழியில் எழுதப்படுகிறது என்ற காரணத்தினாலேயே ஒர் ஆக்கத்தை தூக்கி நிறுத்தி, தங்களை இலக்கிய சீர்திருத்தவாதிகளாக காட்டிக்கொள்ளும் வாசகர்கள் இன்னொரு புறம். “ஒடிசாவில் நாற்பது பேர் மட்டுமே பேசும் ஒரு வட்டார வழக்கில் முழுக்க முழுக்க ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கு தெரியுமா? அதை படிக்காதவனெல்லாம் ஒரு வாசகனா?” போன்ற பாவனைகள். இத்தனைக்கும் இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தாய்மொழியில் ஒரு வரி கூட வாசிக்காதவர்கள். அத்தனைக்கும் ஆங்கிலம் தான் பாலம். இவர்கள் வட்டாரங்களை ரட்சிக்க வந்துவிட்டார்கள். இன்னும் சிலர் பெரிய பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது என்பதாலேயே ஒரு ஆக்கம் அம்மொழியின் சிறந்த நூல் என்று நம்புகிறார்கள். பெருமாள் முருகன் தான் இவர்களது கணிப்பில் சமகால தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்.

இவர்கள் யாரென்றால் ஆங்கில ஊடகங்களில் இதழாளர்களாகவும் கட்டுரையாளர்களாகவும் இலக்கிய பக்கங்களை வடிவமைப்பவர்களாகவும் பதிப்பகங்களில் ஆசிரியர்களாகவும் பணி செய்பவர்கள். இவர்களில் ஓரிருவர் மட்டுமே தாய்மொழியில் வாசிக்கப்பயின்றவர்கள். எனக்கு யாதோரும் தொடர்பும் இல்லாத கன்னடமொழியை ஒரு ஆர்வத்தின்பால் மட்டும் எழுத்துக்கூட்டி படிக்கத்தொடங்கியிருக்கிறேன். தீவிரமாக தொடர்ந்தால் இரண்டாண்டுகளில் கன்னடத்தில் நாவல்கள் வாசிக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இத்தனைக்கும் இலக்கியமோ இதழியலோ என் தொழில் அல்ல. இவர்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை? இது ஒரு வித அலட்சிய போக்கு மட்டுமே. இந்த மனநிலையுடனும் கூடத்தான் நாம் போராடவேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன்னால் கி.ரா.வின் நாட்டார்கதைகளின் தொகுப்பொன்று ஆங்கிலத்தில் வெளிவந்தது. நானும் கி.ரா.வின் உலகிற்குள் இந்த நூல் மூலமாகவே வந்தேன். ஆனால் அதன் பின் நான் கி.ரா.வை வாசித்தது முழுக்க தமிழில். கோபல்ல கிராமம் வாசித்தேன். அவரது சிறுகதைகளை ரசிக்கத்தொடங்கினேன். குறிப்பாக ‘பேதை’, ‘கோமதி’, ‘கனிவு’ போன்றவை. ஒரே நேரத்தில் நாட்டார் வாழ்வியலையும் அழகியலையும் பேசி, அதற்கு மேல் ஒரு தளத்தில் மனித மனத்தின், வாழ்வின் பிணைப்புகளும் துக்கங்களும் விடுபட்ட கணங்களையும் காட்டும் முறை என்னை உள்ளிழுத்தது. சாளரத்துக்கு வெளியில் பனிபொழிகையில் அவர் கதைகளின் மூலம் கரிசல் நிலத்தின் மண்ணையும் மணத்தையும் வெப்பத்தையும் விரிவையும் மீண்டும் மீண்டும் உணர்ந்திருக்கிறேன்.

ஆனால் இந்திய-ஆங்கில வாசகர்கள் பலர் மத்தியில் கி.ரா. இன்னமும் கூட சுவாரஸ்யமான,  கொஞ்சம் விரசமான நாட்டார்கதைகளை சேகரித்து எழுதிய ஒரு கிராமிய தாத்தா, அவ்வளவுதான். அவர்களையும் சொல்லி குற்றம் இல்லை. மொழியாகங்களை மட்டுமே நம்பி இருப்போருக்கு எது மொழியாக்கம் செய்யப்படுகிறதோ அதுவே அந்த பானை சோற்றின் பதமாக ஆகிறது. மொழியாக்கம் செய்தவரையும் பதிப்பாளரையும் கூட குற்றம் சொல்ல முடியாது. இவை சுவாரசியமான கதைகள். நல்ல மொழியாக்கம். முன்னுரை தெளிவாகத்தான் இருக்கிறது. நாட்டாரியலில் ஆர்வம் உள்ள யார்வேண்டுமானாலும் படிக்கும்படியான நூல். ஆனால் கி.ரா.வின் வேறு நூல்கள் மொழியாக்கத்தில் இல்லாதவரையில் அவரை பற்றிய இச்சித்திரத்தை எளிதில் மாற்ற முடியாது (கோபல்ல கிராமம் கூட மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதை பற்றிய விமர்சனங்கள் ஆங்கிலத்தில் நான் படித்ததாக நினைவே இல்லை. தேடி பார்த்ததிலும் பெரிதாக ஓன்றும் கிடைக்கவில்லை). இச்சூழலில் அலட்சியத்தை தாண்டி கி.ரா.வுக்கு ஞானபீடம் கிடைத்தால் மிகப்பெரிய விஷயம் அது. அதுவே ஒரு வெற்றி.

இந்தப்பின்னணியில் நீங்கள் முன்வைக்கும் அறைக்கூவல் மிக முக்கியமானது. இந்த குரலின் முக்கியத்துவம் இன்று பரவலாக கவனிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. என்வரையில் நான் செய்யக்கூடியது கி.ரா.வை பற்றி பேசுவது, எழுதுவது. அதை செயகிறேன்.

சில தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துள்ளேன், ஆகவே என் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

எஸ்

 

kiraa

அன்புள்ள எஸ்,

கி.ராவுக்கு ஞானபீடம் பற்றி ஏன் எழுதினேன் என்றால் ஞானபீடம் தமிழுக்கு தவறிப்போகும்போதெல்லாம் அதையும் ‘தமிழன்மீதான புறக்கணிப்பு’ என ஆக்கிக்கொள்ளும் குரல்கள் எழுவதனால்தான். எங்கே சிக்கல் இருக்கிறது, என்ன செய்யவேண்டும் என சுட்டிக்காட்ட.

எனக்கு அக்கட்டுரை குறித்துவந்த ஒரே நல்ல கடிதம் இது. பிற அனைத்துமே ‘பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கிறீர்கள்’ , ‘கி.ரா தமிழரே அல்ல’, ‘தமிழ் ரசனையை குற்றம் சொல்ல என்ன தகுதி உனக்கு?’ ‘எது மக்களால் ரசிக்கப்படுகிறதோ அதுவே மக்களுக்கான இலக்கியம்’ என்னும் வகையான எதிர்வினைகள் மட்டுமே.

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–93
அடுத்த கட்டுரைசுஜாதா விருதுகள் -கடிதங்கள்