அன்புள்ள ஜெ
ராகவ் அனுப்பிய மெயில் பார்த்தீர்களா? ஷண்முகவேல் பிரயாகைக்கு வரைந்த திரௌபது படத்தை அப்படியே ஒரு ஆங்கில நாவலில் பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் அந்த எழுத்தாளரின் தளத்திலேயே வந்துள்ளது.
http://www.madhavimahadevan.com/
https://www.facebook.com/MadhaviSMahadevan/
(இணைப்பு: மாதவி மகாதேவன் புத்தகத்தில் கையெழுத்திடுகிறார்)
இதை ஷண்முகவேலே வரைந்தாரா என்று தெரியாதவரையில் இதை திருட்டு என்றே கொள்ளவேண்டும்.
இந்த நிறுவனத்தின் பெயர் வெஸ்ட்லேண்ட் புக்ஸ். இவர்களை அமேசான் நிறுவனமே வாங்கியுள்ளதாக செய்தி. (ஆச்சரியம் என்னவென்றால் வெஸ்ட்லேண்டின் லோகோவும் அப்படியே இன்னொரு பெருநிறுவனமாக வால்கிரீன்ஸின் நகல்! அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன்)
இந்த ‘கௌந்தேயாஸ்’ நூலின் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் லைக் அள்ளுகிறது. காசு குடுத்து வாங்கி படித்துப்பார்க்கவேண்டும்.
மது
அன்புள்ள மது
சந்தேகமில்லாமல் இது ஷண்முகவேல் ஓவியம் ிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றி அமைக்கப்பட்டதுதான். இன்று மகாபாரதம் என தேடினால் கிடைப்பவை ஷண்முகவேல் ஓவியங்களே. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலேயேகூட மகாபாரதம் சார்ந்து இத்தனை ஓவியங்களை ஒருவர் வரைந்து கிடைப்பதில்லை.
ஷண்முகவேலின் சாதனைகளை மிக எளிதாக இந்த ஆங்கில பதிப்பாளர்கள் மறைக்கவும் செய்வார்கள் – திருடும்பொருட்டு. வேறு எதறாகவும் இல்லாவிட்டாலும் தமிழகம் என ஒன்று இங்கே இருக்கிறது என்பதன்பொருட்டாவது ஆங்கிலத்தில் எழுதத்தெரிந்த நண்பர்கள் இதை ஊடகங்களில் எழுதவேண்டும்.
இது ஒரு கேரள ஓவியருக்கு நிகழ்ந்திருந்தால் இந்நேரம் பத்து ஆங்கில இதழ்களிலாவது செய்தி வந்திருக்கும். இச்செய்தியைக்கூட ஏதேனும் மலையாள இதழாளர் வழியாக ஆங்கிலத்தில் வரச்செய்யலாம் எனத் தோன்றுகிறது
இன்னொன்றும் உண்டு, வருங்காலத்தில் வெண்முரசில் இருந்து எடுக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட, தழுவப்பட்ட படைப்புகள் வந்துகொண்டே இருக்கும். பல காலத்திற்கு. ஏனென்றால் இத்தனை விரிவான ஒரு மூலம் பிறிது இல்லை. இப்போதே ஒன்றிரண்டை நண்பர்கள் கருத்தில்படுத்தினர்.இது மகாபாரதத்தை ஒட்டி இந்தியில்எழுதிய கோலிக்கும் நிகழ்ந்தது. இலக்கியத்தில் இதை எவரும் எதுவும் செய்ய முடியாது
ஜெ
***
ஷண்முகவேல் ஓவியங்கள் இணையப்பக்கம்