91. இருமுகத்தாள்
தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும் முயல் என அமர்ந்திருந்தான். தேரின் சகடங்கள் கல்லிலும் குழியிலும் விழும் ஓசை ஒவ்வொன்றும் அவன் தலைமேல் உருளைக்கற்கள்போல விழுந்தன. பற்கள் கிட்டித்திருப்பதை செவிகளில் எழுந்த உரசல் ஓசை வழியாக அறிந்ததும் தலையை அசைத்து தன்னை விடுவித்துக்கொண்டான். மூச்சை இழுத்து இழுத்து விட்டு உள்ளத்தை குளிர்வித்தான்.
தேர் நின்றதும் முன்சென்ற தேரில் இருந்து இறங்கி அருகே வந்த சுபகன் “இன்னும் சற்றுதொலைவில் காட்டின் தொடக்கம் வந்துவிடும். அங்கிருந்து ஒற்றையடிப்பாதைதான். அன்னையும் நீங்களும் மட்டும் செல்வதே முறை” என்றான். “அன்னை எப்படி இருக்கிறார்?” என்றான் புரு “தேரிலேறிய கணம் முதல் உறைந்து சிலையென்றிருக்கிறார். இந்த ஒன்பதுநாட்களிலும் அவர்கள் துயிலவே இல்லை.” புரு திகைப்புடன் “முற்றிலுமா?” என்றான். “ஆம் அரசே. அவர்கள் பல ஆண்டுகளாகவே துயிலின்மை நோய் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அந்த மெலிவும் உலர்வும் அதனால்தான். தேரில் அமர்ந்திருக்கிறார்கள். இரவில் குடில்களில் வெறுமனே விழிமூடி படுத்திருக்கிறார்கள் என உடன் வரும் சேடி சொல்கிறாள்.”
புரு தலையசைத்தான். சுபகன் சென்று தன் தேரில் ஏறிக்கொண்டான். காட்டின் எல்லையில் தேர்கள் நின்றதும் புரு தயங்கி உள்ளேயே அமர்ந்துகொண்டான். அன்னையை மட்டும் அனுப்பினால் என்ன என ஓர் எண்ணம் ஓடியதும் அதை கடிந்து விரட்டினான். சுபகன் வந்து “அரசே…” என அழைத்ததும் திரையை விலக்கி இறங்கியபோது உடல் களைப்பில் தளர்ந்திருந்ததை உணர்ந்தான். விரைவில் அனைத்தும் முடிந்தால் போதும், நன்றோ தீதோ அழிவோ எதுவாயினும் எனத் தோன்றியது.
சர்மிஷ்டை தேரிலிருந்து இறங்கி நின்றிருந்தாள். அவள் அணிந்திருந்த மரவுரியாடையின் நிறத்தால் அங்கே ஒரு பட்டமரம் நின்றிருப்பதாகவே முதலில் தோன்றியது. அருகே சென்றபோது ‘அல்லது சிதல்புற்று’ என நினைத்துக்கொண்டான். அது என்ன வீண் சொல் என பிறிதொரு உள்ளம் வியந்தது. ‘ஆடை என்பது ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உடல்.’ இத்தருணத்தை இப்படி பொருத்தமில்லா சொற்களைக்கொண்டு திசைதிருப்பி எளிதாக்கிக் கொள்கிறேனா? இடர்நிறைந்த தருணங்களில் எளிய செயல்களில் ஈடுபடுவது நல்லது என்று சுகிர்தர் சொல்லி கேட்டிருக்கிறான்.
அவளருகே சென்று “செல்வோம், அன்னையே” என்றான். அவள் தலையசைத்து உடன்நடந்தாள். அவன் சுபகனிடம் தலையசைவால் விடைபெற்று புதர்கள் மண்டிய காட்டுக்குள் சென்ற கால்தொடர் பாதையில் நடந்தான். அவள் பின்னால் வருவது ஒலியாக எழவில்லை. அவள் உடல் தக்கைபோல எடையற்றிருக்கிறது போலும். நிழல்போல் ஆகிவிட்டிருக்கிறாள். அவன் வாழ்ந்த காடு நினைவில் எழுந்தது. அங்கே ஒவ்வொரு புதரையும் கூர்ந்துநோக்கி கையிலிருக்கும் குச்சியால் விலக்கி விலக்கித்தான் அவனால் நடக்கமுடியும். ஒரு சிறு கல் காலடியில் புரண்டால்கூட நிலையழிந்து உடலுக்குள் நீர்க்குமிழி பதறும். இப்போது புதர்களை கால்களாலேயே சாய்த்து செல்லமுடிகிறது. உடல் வலுக்கொண்டிருக்கிறது. இதோ இருந்துகொண்டிருக்கிறேன், வலுவான கால்களால் விரைவான கைகளால் ஓளிரும் விழிகளால். இங்கே. இக்கணம். இதுவன்றி எதுவும் பெரிதல்ல.
அந்த எண்ணம் அவனை மலரச்செய்தது. இருக்கிறேன் என்னும் சொல்லாக அவன் சித்தம் உருமாறியது. உடல்வலு உள்ளத்திற்கு அளிக்கும் செய்தியே அதுதான், இருத்தல். மண்ணை விசையுடன் அழுத்தி எடைகொண்டு அழுத்தும் காற்றை தோள்களில் தாங்கி. இந்த மரங்கள் போல. வெயிலொளி மஞ்சளாகவும் நிழல் பசுமையாகவும் ஆகி அமைந்திருந்த ஓவியப் பரப்பை விழிகளால் தொட்டுத் தொட்டு நோக்கியபடி அவன் நடந்தான்.
எத்தனை நோக்கினாலும் தீராதது. எத்தனை அள்ளிச்சேர்த்தாலும் தொடப்படாமல் எஞ்சுவது. இக்கணம் அன்றி எதுவும் பெரிதல்ல. இது நழுவிக்கொண்டிருக்கிறது. சென்றுகொண்டே இருக்கிறது. இவற்றில் ஓரிரு துளிகள் மட்டுமே மிஞ்சவிருக்கின்றன. பிறிதெல்லாம் வெறும் உளமயக்குகள், உணர்வுநாடகங்கள். கடந்து திரும்பி நோக்கினால் எளிய இளிவரல்கள். அந்தத் தருணத்தை ஐம்பது ஆண்டுகள் கடந்து சென்று திரும்பி நோக்கினான். சுகிர்தவனத்தில் தன் குடிலின் சொல்லவிந்த தனிமையில் அமைந்து. இதழ்கோடும் ஒரு புன்னகைக்கு அப்பால் பொருள்கொள்பவை எவையுமில்லை.
தேவயானியின் குடில்வாயிலை அடைந்தபோது அவன் திரும்பி சர்மிஷ்டையிடம் “இதுதான்” என்றான். அவள் தலையசைத்து முன்னால் சென்றாள். அவன் அவளுக்குப் பின்னால் கூப்பிய கைகளுடன் தொடர்ந்தான். வழியென அமைந்தது மழைக்காலத்தில் நீரோடும் ஓடை. அதிலிருந்து குடிலமைந்த மேட்டுக்கு ஏற கல்லடுக்கி படிகள் சமைக்கப்பட்டிருந்தன. முதல்படியில் கால்வைத்ததும் அவன் மிக அருகே வேங்கை ஒன்றின் உறுமலை கேட்டான். இடையில் படைக்கலமேதுமில்லாமல் வந்ததை அப்போதுதான் உணர்ந்தான். அன்னையை திரும்பும்படி அழைக்கலாமா என அவன் எண்ணுவதற்குள் அவள் மேல்படிக்கு சென்றுவிட்டிருந்தாள்.
மேலே முற்றத்தில் மிகப்பெரிய அன்னைவேங்கை ஒன்றின் சீறும் முகம் தெரிந்தது. விடைத்து நீண்ட கன்னமயிர்களும், பளிங்குருளை விழிகளும், திறந்த செந்நிறவாய்க்குள் வளைந்தெழுந்த பற்களுமாக அது மூக்கை நீட்டியபடி மெல்ல காலெடுத்து வைத்து அணுகியது. சிறுகாதுகளில் ஒன்று சொடுக்கிக்கொண்டது. அதற்கு அப்பால் அதன் ஆடிப்பாவை என பிறிதொரு வேங்கை. சர்மிஷ்டை தயங்காமல் மேலேறிச்செல்ல வேங்கைகள் கால் மடித்து பின்வாங்கி உரக்க உறுமின.
பிறிதொன்று எண்ணாமல் புரு அன்னையைத் தொடர்ந்து சென்றான். மேலே பல உறுமல்கள் ஒலித்தன. அங்கே மேலும் பல வேங்கைகள் இருப்பதை புரு கண்டான். அவை சீறியபடி உடல்தாழ்த்தி அவர்களை சூழ்ந்துகொண்டன. அவன் உடல் மெய்ப்புகொண்டிருந்தது. தசைகள் இழுபட்டு இடத்தொடை அதிர்ந்தது. சர்மிஷ்டை நேராகச் சென்று முற்றத்தின் நடுவே நின்றாள். அவள் அவற்றை கண்டதாகவே தோன்றவில்லை.
நான்கு வேங்கைகள் குடிலின் திண்ணையில் படுத்திருந்தன. ஒன்று நான்கு கால்களையும் மேலே தூக்கி மல்லாந்து கிடந்தது. குடிலுக்குப் பின்னாலிருந்து இரு வேங்கைகள் மெல்ல காலடி எடுத்துவைத்து வந்து அங்கேயே நின்று உறுமின. அப்பகுதியே அவற்றின் வண்ணக்கோடுகளால் அனல்பற்றி எரிவதுபோலிருந்தது. சர்மிஷ்டை மெல்ல அசைய முற்றத்தில் நின்ற இரு வேங்கைகள் தாவி திண்ணைமேல் ஏறிக்கொண்டன. ஒரு வேங்கை உரக்க உறுமியபோது அனைத்தும் இணைந்து பெருமுரசுகள்போல கார்வையுடன் ஒலியெழுப்பின.
குடிலுக்குள் இருந்து நிழல் நீண்டு வெளியே விழுந்தது. தேவயானியின் மரமிதியடி அணிந்த கால்களும் பின்பு மரவுரியணிந்த இடைவரை உடலும் தெரிந்தன. அவள் கூரைமூங்கிலைப் பற்றியபடி குனிந்து “யார்?” என்றாள். சர்மிஷ்டையை அடையாளம் கண்டுகொண்டதும் விழிநிலைக்க அமைதியடைந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அசைவிலாது நின்றனர். வேங்கைகள் உறுமியபடியும் முனகியபடியும் கோட்டுவாயிட்டபடியும் விலகிச்சென்று படுத்துக்கொண்டன. ஒரு வேங்கை மட்டும் மூக்குநீட்டி அணுகி சர்மிஷ்டையை முகர்ந்தபின் முகம் சுளித்து தும்மியபடி திரும்பிச்சென்றது. இரு வேங்கைகள் காதுகள் ஒலிக்க தலையை சிலுப்பிக்கொண்டன.
தேவயானி குருநகரியிலிருந்து கிளம்பியபோது இருந்ததைவிட பொலிவுகொண்டிருந்தாள். விழிகள் ஒளிர, இதழ்கள் மென்செம்மை கொண்டிருக்க, இளமைநிறைகொண்ட கன்னியெனத் தோன்றினாள். புரு தேவயானியை அடைந்து “அன்னையே, தங்களை பார்க்கவிழைந்தார்கள், ஆகவே கூட்டிவந்தேன். தங்கள் கால்தொட்டு சென்னி சூட எனக்கு ஒப்புதல் அளியுங்கள்” என்றான்.
அச்சொற்களைக் கேட்டு இருவரும் கலைந்தார்கள். தேவயானி “வருக!” என அவனை அழைத்தாள். பின்னர் சர்மிஷ்டையிடம் “உள்ளே வா” என்றாள். அவள் திரும்பிச்சென்றபோது நீண்ட குழல் ஐந்துபுரிகளாக முடைந்து கால்மடிப்பு வரை நீட்டப்பட்டிருப்பதை புரு கண்டான். ஐந்து இருளருவிகள் என அவை மின்னின.
பீமன் “நான் அங்கு ஒருநாள் இருந்தேன். அன்னையை அங்கேயே விட்டுவிட்டு நான் மட்டும் மீண்டேன். அங்கேயே இருப்பதாக அவர்கள் சொன்னபோது நான் வியப்புறவில்லை. அதுவே நிகழுமென்று அறிந்திருந்தேன்” என்றான். “நகருக்குள் நுழைந்ததும் ஆறுதல்தான் அடைந்தேன். எனக்கு கோசல நாட்டில் மணம் கோரியிருப்பதாக சுகிர்தர் சொன்னார். அவர் மைந்தனை என் அமைச்சனாக்கிவிட்டு கானேகவிருப்பதை அறிவித்தார். அரசுச்செயல்களில் என்னை முற்றாக ஆழ்த்திக்கொண்டேன்.”
“மூன்று மாதங்களுக்குப்பின் கானுறைவாழ்விலிருந்த தந்தை யயாதி விண்புகுந்ததை அறிந்தேன். அவரை அங்கேயே உடன்வாழ்ந்த முனிவர்கள் சிதையேற்றிவிட்டிருந்தனர். துறவுபூண்டவர் என்பதனால் குடிநெறிகளின்படி எனக்கும் அவருக்கும் உறவேதுமில்லை. நான் நீரும் அன்னமும் அளிக்கவோ நோன்பிருந்து தூய்மைகொள்ளவோ வேண்டியதில்லை. அவருக்காக ஒரு விண்ணேற்றுவிளக்கை குடிமூத்தாரின் பள்ளிப்படைக்கோயில் முன் ஏற்றிவைத்தேன். அச்செய்தியை அறிவிக்கச் சொல்லி தூதனை காட்டுக்கு அனுப்பிவைத்தேன்.”
“என் கடன்கள் முடிந்ததும் மீண்டும் காட்டுக்குச் சென்று அன்னையரை கண்டேன். நான் சென்றபோது வேங்கைகள் முன்பு அறியாதவைபோலவே உறுமியபடி சூழ்ந்துகொண்டன. அவற்றை என் சித்தத்தைவிட என்னுள் ஓடிய குருதி நன்கறிந்திருந்தது. ஒரே குடிலை இரண்டாகப் பகுத்து முன்பகுதியில் மூத்த அன்னையும் பின்பகுதியில் அன்னையும் குடியிருந்தார்கள். என் குரல்கேட்டு மூத்த அன்னை வெளியே வந்தாள். மறுபக்கம் வழியாக அன்னை வந்து நோக்கினாள். அவர்கள் என்னை அறிந்ததாகவே தெரியவில்லை. அவர்களின் விழிகள் முன்னரே விண்சென்றுவிட்டிருந்தன.”
“அன்னை மேலும் மெலிந்து உருகியிருந்தாள். மூத்த அன்னை எரிதழல் என சுடர்ந்தாள். நான் அவர்களிடம் கேட்கவந்த எதையும் சொல்லாக்கவில்லை. அங்கு வரும்போது அக்கேள்வியின் விசையால் நான் அதிர்ந்துகொண்டிருந்தேன். அக்கணத்தில் அக்கேள்வி என்னுள் திரளவே இல்லை. பின்னர் சோர்ந்து திரும்பிவந்தபோது எனக்குள் அவ்வினா இயல்பாக எழுந்தது. யயாதி என்பவரை அவர்கள் அறிவார்களா? அவ்வினாவை ஒட்டி அடுத்த வினா எழுந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் அன்றி பிறரை அறிந்திருந்தார்களா?”
இறகு மெல்ல இறங்கி தரையை அடைந்து படிய பீமன் விழித்தெழுந்தான். இடமும் காலமும் துலங்கா விழிகளுடன் முண்டனை நோக்கினான். “வருக, நாம் வழிபடாத அன்னை ஒருத்தி இங்குள்ளாள்” என்றான் முண்டன். அவன் கையை ஊன்றி எழுந்து நின்றான். கால்கள் சற்று தள்ளாடுவதுபோல் உணர தலையை உலுக்கி நெற்றிமேல் ஓசையுடன் அடித்தான். “தலையில் அறைந்துகொண்டால் விழிதெளியும் என்பது ஒரு நல்ல கண்டுபிடிப்பு” என்றான் முண்டன். “என் சித்தத்தை சொற்கள் நிறைத்துவிட்டன. அவை எனக்கு முற்றிலும் பொருளாகவுமில்லை” என்றான் பீமன்.
“சொற்களால்தான் மானுடர் ஒருகணத்தையும் பிறிதொன்றையும் இணைத்துக்கொள்கிறார்கள்” என்றான் முண்டன். “நான் எப்போதுமே என்னைச் சூழ்ந்திருக்கும் நிலத்தால்தான் அதை செய்கிறேன். என் சொற்கள் ஒருபோதும் அறுபடா நதியென பெருகியதில்லை” என்றான் பீமன். “நீர் சொன்ன அத்தனை கதைகளையும் உதிரி வரிகளென்றே இப்போது நினைவுகூர்கிறேன். அவற்றிலிலிருந்து நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. என்னால் அவ்வாறு கற்கவும் இயலாது.”
“நாம் பேசுவதை யானைகளும் புரவிகளும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் அவற்றின் அகத்தை எவ்வண்ணமோ நம் மொழி சென்று நிறைப்பதை உணரமுடியும்” என்றான் முண்டன். “நான் பேசிக்கொண்டிருந்தது உங்கள் கனவுடன்.” பீமன் தலையை அசைத்தான். “வருக!” என முண்டன் புதர்களை விலக்கி முன்னால் சென்றான்.
அந்தச் சிற்றாலயம் முன்பக்கம் இருந்த அதேவடிவில் பின்பக்கத்திலும் வாயிலுடன் இருப்பதை அப்போதுதான் பீமன் கண்டான். “இரட்டை ஆலயங்களா?” என்றான். “ஆம், இத்தகைய ஆலயங்களை நாம் தென்னகத்தில் காணலாம்… வருக!” என முண்டன் புதர்களை தாவிக்கடந்தான். அங்கே செண்பகமரம் கிளைகள் முழுக்க மலர்களை மட்டுமே சூடி நின்றிருந்தது. வெண்ணிறமலர்கள் நீளக்கிளிஞ்சல்கள்போல தரையில் சருகுகள் மேல் பரவியிருந்தன. செண்பகமணம் எழவில்லை என எண்ணியதுமே சுழன்றுவந்த காற்று மூக்குச்சவ்வை எரிக்கும் அந்த மணத்தை மென்பட்டு போல அவனைச்சுற்றி போர்த்தியது.
வாயில் முன் சென்று நின்ற முண்டன் “இவள் சர்மிஷ்டை. இவர்கள் இரட்டையன்னையர் என்று குருநகரியின் அரசகுடிகளால் வழிபடப்பட்டனர். குருநகரி சிறுநாடுகளாக உடைந்தழிந்தபோது அதன் கொடிவழியினரான தீர்க்கர்களும் அஷ்டபலரும் காம்யகரும் இங்கு வந்துகொண்டிருந்தனர். காலப்போக்கில் அவர்களாலும் இது கைவிடப்பட்டது. இன்று அசுரத்தொல்குடியின் கொடிவழியினர் மட்டுமே இங்கு வருகிறார்கள்” என்றான். பீமன் அவனருகே சென்று நின்று உள்ளே பார்த்தான்.
உள்ளிருந்த சிலை மறுபக்கமிருந்த சிலையைப்போலவே இருந்தது. ஒருகணம் மறுபக்கத்திற்கே சுற்றிவந்துவிட்டோமா என பீமன் எண்ணினான். “இரு தேவியரும் ஒரே உருவில்தான் செதுக்கப்பட்டுள்ளனர்” என்றான் முண்டன். “சிறிய வேறுபாடு சர்மிஷ்டை வலக்கையில் அமுதகலம் வைத்திருக்கிறாள்.” “ஆம்” என்றான் பீமன். “புருவின் குலச்சரடிலெழுந்தது அஸ்தினபுரி. உங்கள் நகர்மேல் அமைந்திருக்கிறது அன்னையின் கையிலிருக்கும் இந்த அமுதகலம்.”
பீமன் நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் “ஆம், இவளும் ஐந்தில் ஒரு முகம்தான்” என்றான். “வணங்குக!” என்றான் முண்டன். பீமன் உடல் நிலம்படிய விழுந்து வணங்கினான். எழுந்து அன்னையின் விழிகளை நோக்கியபோது அவன் நன்கறிந்தவை அவை என்று தோன்றியது. அப்போது வீசிய மலர்மணமும் நன்கறிந்ததென்றே இருந்தது. ஆனால் அந்த மணம் கல்யாணசௌகந்திகம் அல்ல என்று தெளிவாகத் தெரிந்தது.
புருவும் அரசியும் மைந்தரும் சாயாவனத்தின் அருகே இருந்த உத்தரதுர்க்கம் என்னும் சிற்றூருக்கு சென்று சேர்ந்தபோது அந்தியாகிவிட்டிருந்தது. அங்கே இருந்த காவலர்மாளிகை அவர்களுக்காக ஒருக்கப்பட்டிருந்தது. அதன் அசுரகுடிக் காவலர்தலைவனான சந்தன் அவர்களை ஊர் எல்லையிலேயே வரவேற்றான். உடன் மங்கலத்தாலத்துடன் மூன்றுசேடியரும் முழவும் சங்கும் கொம்பும் மணியுமாக ஐந்து இசைச்சூதரும் இருந்தனர். குரவையொலிகளுடன் அவர்களை வரவேற்று முகமன் உரைத்து வணங்கி அழைத்துச்சென்றான்.
ஊருக்கு நடுவே அமைந்திருந்த காவலர்தலைவனின் மாளிகை பழையதாக இருந்தாலும் தூய்மையாக இருந்தது. அவர்களுக்காக புதியமரவுரிகளும் இறகுத்தலையணைகளும் ஒருக்கப்பட்டிருந்தன. ரௌத்ராஸ்வன் முன்னரே துயின்றுவிட்டிருந்தான். ஈஸ்வரன் நின்றுகொண்டே துயிலில் ஆடினான். ரௌத்ராஸ்வன் தேரோசை ஓய்ந்ததை அறிந்ததும் விழித்தெழுந்து “தந்தையே…” என்று கைநீட்டினான். “துயில்க” என்றான் புரு. ரௌத்ராஸ்வன் “நான் துயிலமாட்டேன்…” என்றான். ஈஸ்வரன் வந்து புருவின் மேலாடையை பற்றிக்கொண்டான். புரு கைகாட்ட ஏவலர் அவர்களை தூக்கிக்கொண்டு சென்றனர்.
நீராடி உணவுண்டதும் மைந்தர் புத்துணர்வு கொண்டனர். அவர்களின் குரல்கள் உள்ளே ஒலித்தன. புரு நறுவெற்றிலை மென்றபடி திண்ணையில் கட்டப்பட்டிருந்த பெரிய ஆட்டுகட்டிலில் அமர்ந்திருந்தபோது ரௌத்ராஸ்வன் ஓடிவந்து அவன் கால்களை கட்டிக்கொண்டு “நான் துயிலமாட்டேன்… நான் கதை கேட்பேன்” என்றான். புருவின் முன் பீடத்தில் அமர்ந்திருந்த சுபகன் “யார் சொல்லப்போகிறார்கள் கதை?” என்றான். “சூதர் வருகிறார்… குடத்தையும் முழவையும் நந்துனியையும் நானே பார்த்தேன்.” ஈஸ்வரன் “அன்னையும் விறலியும் பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே கதைசொல்லப் போகிறார்கள். நானே கேட்டேன்” என்றான்.
“மல்லநாட்டுச் சூதனும் விறலியும் வந்துள்ளனர், அரசே” என்றான் அருகே நின்ற முதுஏவலன். உள்ளிருந்து கல்லணிகளும் புலித்தோலாடையும் அணிந்த கரியநிற விறலியும் பௌஷ்டையும் பேசிச்சிரித்தபடி நடந்துவந்தார்கள். விறலி பெரியவிழிகளைத் திருப்பி புருவை நோக்கி பின் ரௌத்ராஸ்வனைப் பார்த்து புன்னகைத்தாள். அவன் தந்தையின் ஆடையை அள்ளிப்பற்றிக்கொண்டு முகம்புதைத்தான்.
முன்வாயிலினூடாக காவலர்தலைவனுடன் முதுசூதரும் அவர் மைந்தன் எனத்தோன்றிய இளையவனும் வந்தனர். அவர்களை சுபகன் எதிர்கொண்டு அழைத்துச்சென்று அமரவைத்தான். விறலி தன் கணவனுக்குப்பின்னால் அமர்ந்தாள். முதியவர் நந்துனியை மெல்ல மீட்டியபோது அந்த அறையே இசைகேட்பதற்காக செவிகள் கொண்டது. முதிய சூதர் “அரசருக்கும் அரசிக்கும் அமைச்சருக்கும் வணக்கம். அவர்களின் அழியாக்குலவழியில் எழுந்த மாமன்னர்களுக்கும் எழவிருக்கும் மாமன்னர்களுக்கும் வணக்கம். பேரன்னையருக்கு தாள்பணிந்த வணக்கம்” என்றார்.
அரசி புருவின் அருகே அமர்ந்தாள். ரௌத்ராஸ்வன் அவன் மடியில் தொற்றி ஏறி அமர ஈஸ்வரன் உடலை அவன் மேல் ஒட்டிவைத்தபடி அருகே அமர்ந்தான். பிரவீரன் அமைச்சரின் அருகே சிறுபீடத்தில் அமர்ந்தான். ஏவலர் கைகட்டி சுவர் சாய்ந்து நின்றனர். “எங்களிடம் மாமன்னர் யயாதி மெய்யுலகு எய்திய கதையைப் பாடும்படி சொன்னார்கள்” என்றார் முதியசூதர். “நாங்கள் அக்கதையை நுறுமுறை பாடியுள்ளோம். அவர்களின் கொடிவழியினர் செவிக்கென பாடுகையில் எங்கள் சொற்கள் தேனுடன் கூடுதிரும்பும் தேனீக்களாகின்றன” என்றார்.
அவர் திரும்பி பிரவீரனைப் பார்த்து “இவரே முடிசூடவிருப்பவர். வெற்றிமேல் வெற்றிகொள்பவர் என்பதனால் இவரை ஜனமேஜயர் என வாழ்த்துகின்றன நூல்கள்” என்றார். சற்று திகைத்து “எந்த நூல்கள்?” என்றான் புரு. “அரசே, நடந்தவற்றை எழுதும் நூல்களுண்டு. நடக்கவிருப்பனவற்றை எழுதும் நூல்களும் உண்டு” என்றார் சூதர். புரு ஒருகணம் கழித்து புன்னகைத்து கைகூப்பினான். இளம்சூதன் எங்கோ என வெறித்த விழிகளுடன் “கதைகள் அழியாத பெரும்வலை. மானுடர் அவற்றின்மேல் சென்றமரும் சிற்றுயிர்கள். நடுவே அமைந்த சிலந்திக்கு வணக்கம்” என்றான்.
“பாடுக!” என்றான் புரு. நந்துனி அதுவே எண்ணிக்கொண்டதுபோல இசை துள்ள ஒலிக்கத் தொடங்கியது. ஓர் உச்சியில் முழவு வந்து இணைந்துகொண்டது. “இது மாமன்னர் யயாதி விண்ணேகியதைப்பற்றி சாலபஞ்சிகர் எழுதிய சலஃபஸல்லாபம் என்னும் காவியம். ஏழு பாதங்கள் கொண்டது. குளிர்ச்சுனை திரைகிழித்து விழிநீர்மகள் எழுந்து யயாதியை ஆட்கொள்ளும் இடத்தில் இது தொடங்குகிறது. அவர்களின் ஆடலை எழுபது பாடல்களால் விளக்குகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் வனைந்தனர். கலைத்து மீண்டும் வடித்தனர். முற்றாகக் கலைத்து முகிலென மறைந்தனர்” என்றார் சூதர். விறலியின் குரல் எழுந்து அவர்களை தழுவியதுபோல ஒலிக்கத் தொடங்கியது.
புலரியில் எழுந்து கிளம்பிபபோது ரௌத்ராஸ்வனும் ஈஸ்வரனும் துயிலில் இருந்தனர். அரைத்துயிலிலேயே அவர்களை நீராட்டி நோன்புக்கான அணிகளை பூட்டியிருந்தனர் சேடியர். பிரவீரன் புருவுடன் தேரில் ஏறிக்கொண்டான். பௌஷ்டையும் சேடியும் பின்னால் வந்த தேரில் ஏறினர். சுபகன் முன்னால் சென்ற தேரில் ஏறியதும் புரவிகள் காலெடுத்து வைத்தன. தேர் ஓடத்தொடங்கியதும் காலைக்குளிர்காற்றில் அன்று பிறந்ததுபோன்ற ஓர் உணர்வை புரு அடைந்தான்.
பிரவீரன் அவனிடம் “நான் ஜனமேஜயன் என்றார் சூதர்” என்றார். “ஆம், அந்தப்பெயரில் நீ முடிசூடக்கூடும். அல்லது உன் களவெற்றிக்குப்பென் அப்பெயர் தேடிவரக்கூடும்” என்றான் புரு. பிரவீரன் “தந்தையே, அது பிறிதொருவனின் பெயர் என நினைக்கிறேன். எனக்குள் அவன் நிகழ்வதே நான் என்று தோன்றுகிறது.” புரு புன்னகையுடன் “யார்?” என்றான்.
“நான் என் கனவில் இருகைகளாலும் அம்பெய்யும் சவ்யசாசியான வில்லவனாக தோன்றுகிறேன்” என்றான். “ஆம், அது இயல்பான எண்ணம்தானே?” என்றான் புரு. “அல்ல, அது நான் அல்ல. பிறிதொருவன். கரியநிறமும் ஒளிவிடும் விழிகளும் கொண்டவன். கிளிகளைப்போல தாவி காற்றிலெழும் சிற்றுடல் கொண்டவன்” என்றான் பிரவீரன். “அவனாக நான் இருக்கையில் முன்பு எப்போதோ இருந்தவன் என இப்பிரவீரனை எண்ணிக்கொள்கிறேன்.” புரு சிரித்தபடி மைந்தனின் குழலை வெறுமனே வருடினான்.
தேர்கள் காட்டின் விளிம்பை சென்றடைந்தன. வீரர்கள் படைக்கலங்களுடன் இறங்கி நின்றனர். புரு இறங்கியதும் பிரவீரனும் உடனிறங்கினான். அரசியும் சேடியும் இறங்கி ஆடை திருத்திக்கொண்டார்கள். ரௌத்ராஸ்வனை ஓர் ஏவலன் தூக்கி இறக்கியபோது அவன் விழித்துக்கொண்டு “நான் நடப்பேன்… நான் நடப்பேன்” என்றான். ஏவலன் அவனை கீழே இறக்க அவன் ஓடிவந்து புருவின் ஆடையை பற்றிக்கொண்டு “நான் நடப்பேன்” என்றான். “வருக” என்றான் புரு. ஈஸ்வரன் ஏவலன் ஒருவனின் கைபற்றி அரைத்துயிலில் என நடந்தான்.
அவர்கள் கால்நிரைப் பாதை வழியாக நடந்தனர். இருபுறமும் காடு அப்போதும் எஞ்சியிருந்த இருளுடன் இரவின் ஒலியுடன் சூழ்ந்திருந்தது. ஒரு கீரி குறுக்காக புல்கதிர்வாலை விடைத்து கடந்துசென்றது. அவர்களின் வரவை ஆட்காட்டிக்குருவி ஒன்று கூவியறிவித்தபடி தலைக்குமேல் தாவித்தாவி சுழன்றது. பின்னர் உச்சிக்கிளைக் குரங்கு ஒன்று குமுறத்தொடங்கியது. தொலைவில் குரங்குக்கூட்டம் காற்று கிளைகளை உலைத்துச் செல்வதுபோல பாய்ந்து அகன்றது.
அவர்கள் ஆலயத்தைச் சென்றடைந்தபோது அரசியும் சேடியும் மூச்சுவாங்கிக்கொண்டிருந்தனர். இலைநுனிஅரங்களும் முட்களும் கிழித்த கையை அரசி தூக்கி மெல்ல ஊதினாள். சேடி ஒரு மலரைப்பறித்துக் கசக்கி சாறை அக்கீறல்கள் மேல் பூசினாள். “செல்வோம்” என்றான் புரு. “அதுதான் ஆலயம்.” அது ஒரு பசும்பாசி படர்ந்த சிறிய பாறைபோலத்தான் தோன்றியது. அதன்மேல் வெற்றிலைபோல இலைகள் விரித்த கொடிகள் அடர்ந்திருந்தன. நூற்றுக்கணக்கான தலையாட்டல்கள்போல இலைகள் காற்றில் ஆடின.
முன்னரே வந்திருந்த ஏவலர் ஆலயத்தின் முற்றத்தை புல்செதுக்கி தூய்மை செய்திருந்தார்கள். விரிக்கப்பட்ட பாளைகளிலும் வாழையிலைகளிலும் பூசெய்கைப் பொருட்கள் பரப்பப்பட்டிருந்தன. முழவும் கொம்பும் குழலுமாக இசைச்சூதர்கள் வலப்பக்கம் காத்து நின்றிருந்தனர். ஈச்சையோலையாலும் மலர்களாலும் தோரணங்கள் கட்டப்பட்டு முகப்பு அணிசெய்யப்பட்டிருந்தது.
அவர்களைக் கண்டதும் முழவுகளும் கொம்புகளும் ஒலிக்கத் தொடங்கின. பறவைகள் கிளைகளுக்குமேலே பறந்து எழுந்து கலைந்தன. “கீரி… ஒரு கீரி ஓடுகிறது” என்றான் ரௌத்ராஸ்வன். “பேசாதே” என ஈஸ்வரன் அவனை அதட்டினான். பிரவீரன் “இது பூசெய்கை. ஒலி எழக்கூடாது” என இளையோரிடம் மெல்லியகுரலில் சொன்னான். கைசுட்டியபடி அதே குரலில் “கீரி” என்றான் ரௌத்ராஸ்வன்.
கோயில் முற்றத்தில் அவர்கள் சென்று நின்றதும் பூசகர் உள்ளிருந்து வந்து மரத்தாலத்தில் இருந்து நீறு அள்ளி அவர்கள் மேல் வீசி “அன்னையருள் பொழிக… நலம்சூழ்க!” என வாழ்த்தினார். முழவோசை அதிர்ந்துகொண்டே இருக்க சூழ்ந்திருந்த இலைகளெல்லாம் அதற்கேற்ப அசைவதாகத் தோன்றியது. குனிந்து அமர்ந்து நுழையவேண்டிய சிறிய கருவறை. அதற்குள் இரண்டுமுழ உயரத்தில் கரிய கற்சிலை நின்றுகொண்டிருந்தது. ஒவ்வொருமுறையில் என முதல்நோக்கில் அது நான்கு கைகள் கொண்ட அன்னை என்று தோன்றியது. பின்னர்தான் இரண்டு உடல்கள் இருபாதிகளென இணைந்த தோற்றம் அது என தெரிந்தது.
சுபகன் “அஸ்ருபிந்துமதி… இரட்டையன்னை என்றும் சொல்லப்படுவதுண்டு” என்றான். பூசகர் “வலக்கையில் அமுதகலம். இடக்கையில் கதிர்ப்படைக்கலம். விழிநீர்மணிமாலை சூடியிருக்கிறாள்” என்றார்.
புரு கைகூப்பி தொழுதான். பூசகர் உள்ளே சென்று தாலத்தில் ஏழு அகல்விளக்குகளை சுடருடன் எடுத்து வைத்து மணியோசையுடன் சுடராட்டு காட்டினார். அவன் செவ்வொளியில் எழுந்த இரட்டைமுகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். சுடர்த்தாலம் சுழன்றுவருவதற்கு ஏற்ப இரு முகங்களும் மாறிமாறி ஒளிகொண்டு அணைந்தன.