நித்யா, நேர்காணல்கள் -கடிதங்கள்

nitya sea

அன்பும் மதிப்பும் மிக்க திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.

உங்களது நேர்காணல்கள் – திரு வெங்கட்ராமன் தொகுத்தது ஏப்ரல் 2017 வரையிலானது [நேர்காணல்கள் முழுத்தொகுப்பு] புத்தகமாய் வந்து விட்டதா? அப்படியானால் உங்கள் கையொப்பமிட்டு எனக்கு ஒன்று வேண்டும். உடன் மறுதபாலில் பணம் அனுப்பிவிடுகிறேன்.

இணையத்தில் 57 பக்கங்களுக்கு pdf கிடைத்தது. அதைப் பதிவிறக்கம் செய்து விட்டேன்.

மொத்த நேர்காணல்கள் புத்தகம் மேற்குறித்தது வேண்டும். தயவுசெய்து அனுப்பித் தரவும். நன்றி.

உஷாதீபன்

***

அன்புள்ள உஷாதீபன்

நேர்காணல்களை நூலாக்குவதில் எனக்கு ஆர்வமில்லை. ஒன்று அது என் சொல் அல்ல. நேர்காணல் செய்தவர்களின் பதிவு. அத்துடன் பெரும்பாலான நேர்காணல்களில் திரும்பத்திரும்ப ஒரே செய்திகள்தான். அதைத் தவிர்க்கமுடியாது. ஏனென்றால் வெவ்வேறு காலங்களில் உருவாகிவரும் புதியவாசகர்களுக்காக அவை எடுக்கப்படுகிறன

ஜெ

***

sai makesh

வணக்கம் ஜெ,

நித்யாவின் இறுதிநாட்கள் கட்டுரையில் அவர் சமாதி அடைந்தார் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு கேள்வியைத் தூண்டியது.

இங்கே இறந்தார் என்பதை மரியாதை கருதி சமாதி அடைந்தார் எனக் குறிப்பிட்டீர்களா அல்லது ராகவேந்திரர் திரைப்படத்தில் காட்டப்பட்டது போல் பலர் முன்னிலையில் தன் மூச்சை தானே அடக்கி உயிரை வெளியேற்றினாரா?

இல்லை தனிமையில் நிகழ்ந்த ஒன்றை குருவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் சமாதிதான் அடைந்திருப்பார் என்று கருதி எழுதினீர்களா?

ஆன்மீகத் துறவிகள்/அறிஞர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் போது இது முக்கியமானது என நினைக்கிறேன்.

நன்றி,

சாணக்கியன்,

பெங்களூரூ.

***

அன்புள்ள சாணக்கியன்,

அனைத்து மெய்ஞான நூல்களிலும் ஃபலசுருதி என ஒன்று இருக்கும். அந்த மெய்ஞானத்தை கற்றால் என்ன கிடைக்கும் என்று. அதற்கு பொதுவான பதில் என்பது ‘முக்தி’ அதாவது விடுதலை, வீடுபேறு

ஆனால் அச்சொல் ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது. துயர்களில் இருந்து விடுபடுவது, அறியாமையிலிருந்து விடுபடுவது, பிறவிச்சுழலில் இருந்து விடுபடுவது, பிரம்மத்திலிருந்து பிரிந்திருக்கும் நிலையிலிருந்து விடுபடுவது என. அந்தந்த ஞானமரபின் தத்துவத்தைக்கொண்டே அச்சொல்லைப் பொருள் கொள்ளவேண்டும்

மிகப்பொதுவாகச் சொல்லப்போனால் சமாதி என்றால் முழுமையான முக்தி என்றே பொருள். அது ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு பொருள். பொதுவாக யோகமரபில் அதற்கு அளிக்கப்படும் விளக்கமே பரவலாக அறியப்படுகிறது. அதுவே நீங்கள் சொல்வது

அத்துடன் சாமானிய மக்களுக்கு மெய்யறிதல், அறிவாகி நிறைதல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளமுடியாது. அவர்கள் அறிந்தது உலகியலில் அதற்கு இடமில்லை. அவர்கள் அந்த உலகியல்தளத்தில் வைத்து அதற்கு ஒரு விளக்கம் அளித்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அது புராணமரபிலிருந்து எடுத்த நம்பிக்கைகளையும் தங்கள் கற்பனைகளையும் கலந்து உருவாக்கப்படுவது

உலகியலில் உழல்பவர்கள் ஞானிகள் என்பவர்கள் உலகியலில் அதிசூரர்கள் என்றே எண்ணிக்கொள்வார்கள். தங்கள் ஞானி பொன்மழை பொழியவைத்தார் ஆயிரம்பேருக்கு அரிசியில்லாமல் சோறாக்கினார் என்பார்கள். தங்களால் இயலாதவற்றை அவர் செய்தார் என எண்ணிக்கொள்வரகள். ஒரேசமயம் இரண்டு இடங்களில் இருந்தார், சுவர்வழியாக ஊடுருவினார் என்பார்கள்

இந்த மாயங்களில் இருந்து மீறி எழாமல் ஒருவருக்கு மெய்யான ஆன்மிகத்திற்குள் நுழைய முடியாது. இது நம் எல்லையைக் காட்டுகிறது. இத்தகைய கற்பனைகளால் நாம் மெய்யறிவை நிராகரிக்கிறோம். அருவி தரையிலிருந்து மேலே சென்றால்தான் அற்புதம் என்று நினைக்கிறோம். கடல்நீர் வானுக்குச்சென்று மழையாகப்பொழிவதன் மகத்தான் அற்புதத்தை உணராத மூடத்தனம்தான் அது

அத்வைத மரபில் துயரம் என்பது அறியாமை. அறியாமையிலிருந்து நான் – அது என்னும் இருபால்பட்ட நிலை எழுகிறது. அதுவே முதற்பெரும் துயர். இருத்தல்துயர், இறப்பின் துயர் என அத்துயர் பெருகுகிறது. அந்த இருநிலையைக் களைதலே அத்வைதம் – இரண்டின்மை – எனப்படுகிறது. அதை எய்தியவர் விடுதலைபெற்றவர். அவரே சமாதியடைந்தவர். முற்றாதல், பிறிதிலாதல் நிலை அது

அந்நிலையை நித்யா அடைந்தார் என நான் அறிவேன், ஏனென்றால் அவர் அதைநோக்கிச் சென்றுகொண்டிருந்தார் என்பதை அருகிருந்து கண்டேன்.அதையே அக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன். அதுவே என் நோக்கில் சமாதி நிலை – அது மட்டுமே. ஆகவே அவர் சமாதி அடைந்தார் என்றேன். அச்சொல்லே மரபு.

மாயமந்திரங்கள் வழியாக சமாதி நிலை நிகழ்வதில்லை.

ஜெ

***

நித்யா -கடிதங்கள்

 

 

 

முந்தைய கட்டுரைமுதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2
அடுத்த கட்டுரைவிளாஞ்சோலைப்பிள்ளை