23-4-2017 அன்று வம்சி புத்தகங்களின் வெளியீட்டுவிழாவில் வாசிப்பைப் பற்றிப் பேசினேன். அதில் ஒரு பகுதியாக நாங்கள் அருணாச்சலப்பிரதேசம் சென்றதைப் பற்றிச் சொன்னேன். திட்டமிட்ட ஈரோடு கிருஷ்ணன் அருணாச்சலப்பிரதேசத்துக்கு ஒதுக்கியது வெறும் இரண்டுநாட்கள். அங்கே சென்ற பின்னர்தான் தெரிந்தது அது தமிழகத்தைவிடப் பெரிய நிலம். சென்று கொண்டே இருந்தோம், திரும்பி வந்துகொண்டே இருந்தோம்.
அருணாச்சலப்பிரதேசம் நமக்கு முற்றிலும் தெரியாத நிலம். இந்தியாவில் அதிகமாக அறியப்பட்ட நிலங்கள் வங்கம், கேரளம், கர்நாடகம். அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரம். ஏனென்றால் அவை இலக்கியமாக பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டின் நீட்சியே போல கிடக்கும் ஆந்திரம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதன் விரிவு கூட நம் மனதில் இல்லை. ஏனென்றால் அந்நிலம் இலக்கியமாக மாறவில்லை.
தமிழ்நாட்டில் அதிகம் எழுதப்பட்ட நிலம் குமரிமாவட்டம். கணிசமானவர்களுக்கு இங்குள்ள பண்பாட்டுவிரிவு ஊடாட்டம் எல்லாம் தெரியும்- நான் தெரிந்துகொள்ள விழைபவர்களைச் சொல்கிறேன். அடுத்ததாக நெல்லை, தஞ்சை. முற்றிலும் தெரியாத இடங்களென்றால் வாணியம்பாடி கடலூர் போன்ற இடங்கள். அவை எழுதப்படவில்லை. எழுத்திலேயே நிலம் கருத்தாக மாறி நிலைகொள்கிறது.
குமரிமாவட்டத்தை எழுதிய நவீனகாலகட்ட எழுத்தாளர்களின் ஒரு பட்டியலையும் அங்கே அளித்தேன். அதை பதிவுசெய்து வைக்கலாமெனத் தோன்றியது.
முஜிபுர் ரஹ்மான்
நட சிவக்குமார்
வித்வான் லட்சுமணபிள்ளை
ஆறுமுகப்பெருமாள் நாடார்
பேரா ஜேசுதாசன்
ஐசக் அருமைராசன்
அனீஷ்கிருஷ்ணன் நாயர்
ரோஸ் ஆன்றோ
கடிகை அருள்
ஏறத்தாழ நாற்பது எழுத்தாளர்கள் என்பது குறைவான எண்ணிக்கை அல்ல. ஒரேநாளில் ஓடியே கடக்கக்கூடிய அளவுக்குச் சிறிய மாவட்டம் இது. இங்கே அனேகமாக ஒவ்வொருநாளும் எங்கேனும் ஏதேனும் ஒர் இலக்கியவிழா நடந்துகொண்டே இருக்கும். மரபிலக்கியம் வணிக இலக்கியம் மத இலக்கியம் நவீன இலக்கியம் என. பலதளங்களிலாக எழுதும் குறைந்தது நூறுபேரை இங்கே பட்டியலிட முடியும். அவர்களில் இருந்தே இந்த நாற்பதுபேர் எழுந்து வந்திருக்கிறார்கள்.
இந்த எளிய பட்டியலே ஏன் குமரியில் நவீனத்தமிழிலக்கியம் வளர்கிறது என்பதற்கான விளக்கம். இதில் தாய்மொழியை மலையாளமாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் ஏறத்தாழ சமானமாகவே இருக்கிறார்கள். இந்தப் பன்மைத்தன்மையே இலக்கியத்தின் அடிப்படைவிசை.