பகடாலு நரசிம்மலு நாயிடு நூறாண்டுகளுக்கு முன்பு எழுதிய தென்னாட்டு யாத்திரைதான் தமிழில் முதலாவதாக பயணக்கட்டுரை என நினைக்கிறேன். அதில் அவர் கன்யாகுமரிக்குச் சென்றதை எழுதுகிறார். நாகர்கோயிலில் இருந்து வண்டிகட்டிக்கொண்டு செல்லவேண்டும்.
அங்கே மணல்மேடுகளுக்கு நடுவே கன்யாகுமரி அம்மனின் ஆலயம். அருகே திருவிதாங்கூர் மகாராஜா கட்டிய படித்துறையும் பலிமண்டபமும். அர்ச்சகர் இல்லத்தில் தங்கிக்கொள்ளலாம். அவர்களிடமே பாத்திரங்கள் வாங்கிச் சமைத்து உண்ணலாம். நிலவில் மணல்மேல் அமர்ந்திருப்பது பிரம்மத்தை நேரில்பார்ப்பது போல என்கிறார்.
காந்தி கன்யாகுமரிக்கு 1925 ல் வந்தார். அங்குள்ள நீரும் மணலும் அந்த குமரியன்னையைப்போலவே என்றும் மாறா இளமைகொண்டவை என எழுதினார்.
ஆனால் அந்தக் கன்யாகுமரி இன்றில்லை. ஒவ்வொருநாளும் அழிந்துகொண்டிருக்கிறது இந்த அழகிய கடல்முனை. திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்றுகூடச் சொல்லலாம்.
என் நினைவிலேயே கன்யாகுமரி அழகாக இருந்திருக்கிறது. 1970ல் நான் அப்பாவுடன் முதல்முறையாக கன்யாகுமரிக்குச் சென்றேன். அன்றும் அது அழகிய மணல்மேடுகளால் ஆனதாகவே இருந்தது. கடலை நெடுந்தொலைவிலேயே நோக்கமுடியும்.
காந்திமண்டபம் 1956 ல் வந்தது. விவேகானந்தர் பாறை 1970 ல். ஒவ்வொன்றும் கன்யாகுமரியை அன்னியப்படுத்தின என இன்று தோன்றுகிறது. காந்திமண்டபம் ஓர் அழகற்ற கான்கிரீட் கட்டிடம். விவேகானந்தமண்டபம் அப்படி அல்ல. கலையழகு கொண்டது.
ஆனால் அவற்றைக் கட்டியது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகியது. அன்றுமுதல் .இன்றுவரை கன்யாகுமரியில் கட்டிடங்களை கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கடற்கரையையே மறைத்துவிட்டார்கள். காமராஜ் மணிமண்டபம் ஒர் உப்புபாரித்த உடைந்த கட்டிடம் இன்று. எவரும் உள்ளே சென்று பார்ப்பதில்லை. மேலும் எட்டு மண்டபங்களுக்கான கோரிக்கைகள் உள்ளன.
இந்த ஒவ்வொரு கட்டிடமும் கடற்கரையை அபகரித்தது. சுற்றுலாமையமாக கன்யாகுமரியை ஆக்கியது. பயணிகள் பெருகப்பெருக கன்யாகுமரி மாநகராட்சி அதை பணம் கொய்யும் இடமாக ஆக்கியது. கடைகள் சகட்டுமேனிக்குக் கட்டப்பட்டன. விடுதிகள் எந்த விதிகளும் இல்லாமல் எழுந்தன.
2000த்தில் அமைந்த திருவள்ளுவர் சிலை நிறுவுதலே அழிவின் உச்சம். அந்த விழாவின்போது தி.மு.க பிரமுகர்கள் பணம்பெற்றுக்கொண்டு கடலோரம் நூற்றுக்கணக்கான கடைகளைக் கட்ட அரசு அனுமதி வாங்கியளித்தனர். அன்று கட்டப்பட்ட அத்தனை தற்காலிக கடைகளும் அப்படியே நீடித்து இன்று கடலை மறைக்கும் கடைவீதியாகிவிட்டன
இன்று கன்யாகுமரியில் நடக்கக்கூட இடமில்லை.நாற்றமடிக்கும் ஒரு சந்தைமுனைபோல் உள்ளது கன்யாகுமரி.இப்போது இரண்டு ஆண்டுகளாக அப்பால் எஞ்சியிருந்த கடல்மணலில் முழுக்க கடைகளை அனுமதித்திருக்கிறார்கள்.. கடல்நீர் விளிம்புவரை விற்பனையாளர்கள். எங்கு நின்றாலும் தங்கள் கடையை மறிக்காதீர்கள் என்று வசைபாடுகிறார்கள்.
பழைய கன்யாகுமரி மாபெரும் மணல்மேடு ஆலயமே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மணல் அகற்றி மீட்கப்படும். இருபக்கமும் இரு மீன்பிடித்துறைமுகங்கள் வந்ததும் மணல் இல்லாமலாகத் தொடங்கியது. இன்று கன்யாகுமரியில் மணலே கிடையாது.
கடலரிப்புக்காக கடற்கரை முழுக்க பாறைகளை போட்டிருப்பதனால் வெறும் இருபதடி நீளத்திற்கு மட்டுமே இங்கே மணற்கரை உள்ளது. வேறெங்கும் கால்நனைக்கமுடியாது. அந்த கடல்தான் அங்குள்ள கடைக்காரர்களின் வணிகத்தின் ஆதாரம். ஆனால் மொத்தக் குப்பையையும் கடற்கரையில்தான் கொட்டுகிறார்கள். மலம்கழிக்கிறார்கள். கன்யாகுமரி ஒரு மாபெரும் திறந்தவெளிக் கழிப்பறையும்கூட.
நம்மிடம் ஆவணப்படம் எடுக்கும் வழக்கமே இல்லை. எடுத்தாலும் அது அரசு ஆவணக் காப்பகத்தில் இருக்கும். ஆகவே பலசமயம் இடங்களின் பழைய தோற்றங்களை சினிமா வழியாகவே அறிய வேண்டியிருக்கிறது
பழைய சினிமாப்பாடல்கள் வழியாக என் பிரியத்திற்குரிய குமரிமுனையை பார்த்துக்கொண்டிருந்தேன். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி 1974ல் வெளிவந்த கன்யாகுமரி ஒரு முக்கியமான படம். கமல் கதாநாயகனாக நடித்த ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கம். பஸ்ஸிலேயே கதாநாயகனை படப்பிடிப்பு அழைத்துச் செல்வார்கள் என்று கமல் அந்தப் படப்பிடிப்பு அனுபவங்களைச் சொன்னார். டிபன் கேரியரையும் கதாநாயகனே கொண்டு செல்லவேண்டும். டிராலி தள்ளவேண்டும். கிரேன் எடைகளை ஏற்றவேண்டும்.
கன்யாகுமரியின் மணற்குன்றுகளை இந்த படத்தில் பார்க்க ஏக்கமாக இருக்கிறது. இன்றுபார்க்கையிலும் இயல்பான நடிப்பு இருப்பதனால் சலிப்பு வரவில்லை.
197 4ல் நான் திருநெல்வேலியில் பார்த்தபடம் வயசுப்பொண்ணு. அறுவை தாளாமல் எழுந்து ஓடிவந்தது நினைவிருக்கிறது. ஆனால் இப்போது இந்தப்பாடலைப் பார்க்கையில் இதிலுள்ள கன்யாகுமரியின் காட்சி ஒரு வகையான கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது கே.எஸ்.சேதுமாதவனின் கன்யாகுமரிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின்பு எடுக்கப்பட்ட படம். கன்யாகுமரி தூய்மையாகவும் நெரிசலில்லாமலும்தான் இருக்கிறது
கன்யாகுமரி 1920களில் இருந்ததுபோலவே விடப்பட்டிருந்தால், கடற்கரையும் கோயிலும் கல்மண்டபமும் மணல்மேடுகளுமாக இருந்திருந்தால் எத்தனை மகத்தான இயற்கை ஆலயமாகத் திகழ்ந்திருக்கும். கடலில் இருந்து இரண்டு கிலோமீட்டருக்கு கட்டுமானங்கள் கூடாது என்னும் நெறி மட்டும் பேணப்பட்டிருந்தால்போது. அதன் சுற்றுலாவருமானமே பலமடங்காக இருந்திருக்கும்
நமக்கு அழிப்பதில் ஒரு பயிற்சியே இருக்கிறது.