85. இறுதி நஞ்சு
ஹிரண்யபுரியை அடைய ஒரு நாள் இருக்கையில்தான் யயாதி குருநகரியிலிருந்து கிளம்பி தன்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை தேவயானி அறிந்தாள். அவன் பெயர் நீண்ட இடைவேளைக்குப்பின் காதில் விழுந்ததும் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள். உடலே நாவென கசப்பை உணர்ந்தவள்போல. உடலே முகமென சுளிப்பு கொண்டவள்போல. ஏழு நாட்களாக சுடரொன்றை அணையாது காப்பதுபோல் அவள் தன் வஞ்சத்தை உள்ளத்தில் பொத்திக்கொண்டு சென்றாள். புரவிமேல் உடலை எளிதாக அமைத்துக்கொண்டு சீரான விரைவுடன் சென்றாள். புரவியின் தாளத்தை உடல் அடைந்த பின்னர் உடல்வலி குறைந்தது. ஆனால் இரவில் படுத்ததுமே துயில்வந்து மூடியது.
நன்கு துயின்றமையால் காலையில் விழிகள் துலங்க உடல் புத்துயிர்கொள்ள எழுந்தாள். சுனைநீராட்டும் குறைந்த உணவும் அவளை விடுவித்துக்கொண்டே இருந்தன. பசு ஒன்று மானாகி பின் கொக்கென்று எழுந்ததுபோல. உடலின் எடை குறையும்தோறும் உள்ளம் விடுதலைகொள்வதன் விந்தை என்ன? உடலசைவுகளை உள்ளம் எங்கோ நடிக்கிறது போலும். உடலே எடைகொள்கிறது. அவள் பின் மேலும் பின் என சென்று துழாவும் எண்ணங்கள் இயல்பாக விலகி தூயவிழிகளுடன் சூழ்ந்திருக்கும் காட்டையும் ஒளிர்ந்து ஊடுசென்ற ஓடைகளையும் சாலைமுன் எழுந்து மருண்ட விழிகளுடன் நோக்கிய மான்கணங்களையும் இருளலையென மலைச்சரிவொன்றில் எழுந்து குறுக்காகக் கடந்துசென்ற காட்டுயானைக் கூட்டத்தையும் நோக்கியபடி சென்றாள். பின்னர் எண்ணிக்கொண்டு தன்னுள் இருந்து வஞ்சத்தை மீட்டெடுத்தாள். துயிலும் குழந்தையை உலுக்கி உலுக்கி விழிக்கச்செய்வதுபோல அதை திகழச்செய்தாள்.
ஹிரண்யபுரி ஒரு நாள் பயணத்தில் இருக்கிறதென்று உணர்ந்தபோது அவள் தன் வஞ்சத்தை மேலும் பெருக்கும் பொருட்டு நடந்த அனைத்தையும் சொல் தொட்டு தீட்டிக்கொண்டாள். நிகழ்வின் காட்சிகளும் உளப்பதிவின் ஓவியங்களும் தன்னுள் சொற்களாகவே அங்கிருப்பதை உணர்ந்தாள். ஒவ்வொரு நிகழ்வையும் நோக்கையும் அசைவையும் சொல்லென மாற்றிக்கொள்ள முடியும், பொருட்களை பணமென ஆக்கிக்கொள்வதுபோல. அந்தப் பணத்தை மீண்டும் பொருளென்றாக்கினால் அது பிறிதொன்று.
அச்சொல்லை நானே தெரிவு செய்ய முடியும் என்பது எத்தனை பெரிய வாய்ப்பு! இழந்ததை பறிகொடுத்தது என்றும் பழிசூடியதை சிறுமைசெய்யப்பட்டது என்றும் சொல்மாற்றம் செய்துகொண்டால் அது அவ்வண்ணமே ஆகிவிடுகிறது. மானுடனுக்கு உளமென்ற ஒன்றை அளித்த தெய்வங்கள் பயந்தது நற்கொடையா தீச்சொல்லா? தனிமையை கைவிடப்படுதல் என்றும் இயலாமையை வெறுமை என்றும் சினத்தை அறச்சீற்றம் என்றும் வஞ்சத்தை நெறியுணர்வு என்றும் மாற்றி அங்கே சேர்த்து வைத்திருக்கிறேன். நான் என நானுணரும் அனைத்தும் சொல் சொல்லென தேர்ந்து நான் அடுக்கிப் பின்னி படைத்தெடுத்தவை.
பதினேழாண்டுகால வாழ்விலிருந்து தன் வஞ்சத்திற்குரிய நிகழ்வுகளை மட்டுமே திரட்டி ஒற்றைப்பெரும்பரப்பென ஆக்கி அதில் தன் பிறிதொரு உருவை கொண்டுசென்று நிறுத்தினாள். அங்கு மீண்டும் வஞ்சம் ஊடென சினம் பாவென பின்னிய வாழ்க்கையொன்றை வாழ்ந்தாள். மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டவளாக புறக்கணிக்கப்பட்டவளாக சிறுமை செய்யப்பட்டவளாக. நச்சு மட்டுமே நெய்யெனக் கரைந்த சிறுகடல். அதைக் கடைந்தெடுத்த ஆலகாலம்.
இறுதிச் சாவடியில் இருந்து அவள் கிளம்பும்போதுதான் குருநகரியிலிருந்து வந்த ஒற்றன் குதிரை வியர்வை மணமெழுப்ப சாலையில் இருந்து புழுதிமூடிய மீசையும் தாடியுமாக முற்றத்திற்குள் நுழைந்தான். அவனை முன்னரே அறிந்திருந்த தேவயானி கூர்ந்து நோக்கியபடி நின்றாள். அவளைக் கண்டதும் புரவியிலிருந்து இறங்கி அருகணைந்து முறைப்படி தலைவணங்கி முகமன் சொன்னபின் “செய்தியுடன் வந்துள்ளேன், பேரரசி” என்றான். அவள் திரும்பிப்பார்க்க குரல் கேட்கா தொலைவுக்கு காவலர்கள் விலகி நின்றனர்.
“குருநகரியிலிருந்து அரசரும் அமைச்சர் பார்க்கவரும் சிறு காவல்படையுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். அவள் சொல் என விழியொளி காட்ட “சரபஞ்சரத்தில் நிகழ்ந்தது அனைத்தையும் கிருபர் பறவையோலை வழியாக அரசருக்கு அறிவித்துவிட்டார். செய்தியறிந்ததுமே கிளம்பிவிட்டார்கள். அவர்கள் வரும் செய்தியை வழியிலிருந்த ஒற்றர்கள் எனக்கு பறவையோலை வழியாக அறிவித்தனர்” என்றான். தேவயானி “சிறைப்படுத்திச் செல்ல விழைகிறாரா என்ன?” என்றாள். அவ்வினாவின் பொருளின்மையை உணர்ந்தாலும் உள்நிறைந்த வஞ்சம் அதைக் கேட்டு நிறைவுகொண்டது.
“இல்லை அரசி, சிறிய காவல்படையுடன்தான் வருகிறார். தங்களைச் சந்தித்து மன்றாடும்பொருட்டு, பிழை பொறுத்தல் கோரும்பொருட்டுதான்” என்றான் ஒற்றன். “தாங்கள் இளைய அரசியைக் குறித்த செய்தியை அறிந்ததை பார்க்கவர்தான் அரசரிடம் சென்று சொன்னார். அப்போது தன் தனியறையில் நூலாய்ந்துகொண்டிருந்த அரசர் அஞ்சி உளம் உடைந்து குரல் எழுப்பினார். கைகால்கள் நடுங்க எழுந்து நின்றபின் சுவடியை வீசிவிட்டு ஓடிச்சென்று தன் மஞ்சத்தறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். பார்க்கவர் அக்கதவைத் தட்டி நெடுநேரம் அவரை அழைத்துக்கொண்டிருந்தார். பின்னர் அரசர் கதவைத் திறந்தபோது மூக்கு வழிவார மது அருந்தி நிலையழிந்திருந்தார். நாம் காட்டுக்குச் செல்வோம், காட்டில் வாழ்வோம் என திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.”
“பார்க்கவர் உள்ளே நுழைந்து அவர் கையை பற்றிக்கொண்டு சொன்ன சொற்களை அவர் கேட்கவில்லை. பீடத்தில் அமர்ந்து தன் தலையை தானே அறைந்தபடி அழுதுகொண்டிருந்தார். பார்க்கவர் அவரது இரு கைகளையும் பிடித்து தடுத்து கடுஞ்சொல் சொல்லி சொல்நிலைக்கச்செய்து பின்னர் இனிய தாழ்ந்த குரலில் தேற்றினார். அதன் பிறகு இருவரும் அங்கிருந்தே பாய்ந்து வெளிவந்து புரவிகளில் ஏறிக்கொண்டு தங்களைத் தொடர்ந்து வரத்தொடங்கினர்” என்றான் ஒற்றன். “மூன்று குறுக்கு வழிகளினூடாக விரைவில் அவர்கள் அணுகமுடிந்தது. வழியில் இரு ஆறுகளில் படகுகளில் ஏறிக்கொண்டு விரைவுகொண்டனர். இன்னும் ஏழெட்டு நாழிகையில் அவர்கள் இங்கு வந்துவிடக்கூடும்.”
தேவயானி நீள்மூச்சுடன் படியிறங்க “தாங்கள் இங்கு காத்திருப்பது நன்று. அரசரின் சொற்களைக் கேட்டுவிட்டு தாங்கள் முடிவெடுக்கலாம் என்பது அமைச்சரின் சொல்” என்றான் ஒற்றன். அவன் செல்லலாம் என்று இடக்கை காட்டிவிட்டு திரும்பி காவலரிடம் “செல்வோம்” என்றாள் தேவயானி. அவர்கள் புரவியிலேறிக்கொண்டு விரைந்து சாலைகளில் குளம்புகள் தொட்டுப்பறக்க தாவிச்சென்றனர். அந்த இடத்தை விட்டு நீங்கியபோதிருந்தே தன் பின்னால் யயாதி வந்துகொண்டிருப்பதாக ஓர் உணர்வு இருந்துகொண்டிருந்தது அவளுக்கு. விலக விலக அது வலுத்தபடி வந்தது.
இரு தேவதாருமரத்தில் செதுக்கப்பட்ட இரு குலக்குறித்தூண்கள் நின்றிருந்த ஹிரண்யபுரியின் எல்லை வாயிலை அடைந்தபோது அவள் வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிந்து எல்லைக்காவலர்தலைவனும் பன்னிரு காவலரும் காத்து நின்றிருந்தனர். காவலர் தலைவன் தன் கையிலிருந்த அமுதகலசக் கொடியைச் சுழற்றி மும்முறை தாழ்த்தி வணங்கினான். அவன் அருகே புரவி வந்து நிற்க மூச்சிரைத்தபடி தேவயானி “தந்தை எங்கிருக்கிறார்?” என்றாள். அந்த நேர்வினாவால் அவன் திகைத்து பின் மீண்டு “அவர் ஹிரண்யபுரிக்குத் தெற்கே அமைந்துள்ள காகவனம் எனும் சோலையிலிருக்கிறார். மாணவர்கள் மட்டுமே உடனிருக்கிறார்கள். சென்ற ஏழாண்டுகளாக சொல்லவி நோன்பு கொண்டிருக்கிறார்” என்றான்.
புரவி கடிவாளத்தின் இழுப்புக்கு தலைதிருப்பி கால்தூக்க அவன் “பேரரசி, தாங்கள் அவரை பார்க்க வேண்டுமெனில் முன்னரே செய்தி அனுப்புவது நன்று. அறிவிப்பின்றி எவரையும் அசுரப்பேராசிரியர் பார்ப்பதில்லை” என்றான். தேவயானி அவனை திரும்பி நோக்கியபின் மறுமொழி சொல்லாமலேயே புரவியை தட்டினாள். மாந்தளிர் உடலில் வியர்வை வழிந்து உப்புமணத்துடன் புழுதிசுருட்டி மணிகளாகி உருள, மூச்சில் குருதியின் அனல் வெம்மை எழ, குஞ்சி உலைய தலை குலுக்கி வாயில் தொங்கிய நுரையை உதறித்தெறிக்கவிட்டு புரவி முன்னங்காலால் தரையை மும்முறை தட்டியது. நீரிலிருந்து எழுந்ததுபோல மூச்சுசீறி, காதுகளை முன் கோட்டி, விழிகளை உருட்டி ஒருமுறை கனைத்தபின் தாவி ஹிரண்யபுரியின் எல்லையென அமைந்த பாலத்தை துடிதாளத்துடன் கடந்து அப்பால் சென்றது.
வழிகளனைத்தும் மாறிவிட்டிருந்தபோதிலும்கூட தன் உள்ளத்தில் அவை மிகத் தெளிவான அடையாளத்துடன் எழுவதை அவள் உணர்ந்தாள். அனைத்தும் மாறுகையிலும் மாறாமல் இருக்கும் ஒன்றை ஆழம் அறிந்திருக்கிறது. சுக்ரரின் குருநிலை அணுகுந்தோறும் அவள் புரவி விரைவுகொண்டது. அதன் தாளம் சூழ்ந்திருந்த காட்டுக்குள் பசுமையின் துடிப்பென ஒலித்தது. சிற்றோடை ஒன்றின் கரையில் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து அதை நிறுத்தினாள். வந்தடைந்துவிட்ட உணர்வு அவள் உள்ளத்தில் எழுந்ததும் அதுவரை செலுத்தி வந்த விசை முற்றிலும் தீர்ந்துவிட்டிருந்தது.
புரவியிலிருந்து இறங்கி எருமைத்தோல் காலணிகளை கழற்றி வீசிவிட்டு வெற்றுக்கால்களுடன் நடந்து சிற்றோடைக்குள் இறங்கி நீர் தழுவிச்சென்ற கரிய பாறையொன்றில் அமர்ந்தாள். கால்களை ஓடும் நீருக்குள் விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தபோது உடலெங்கும் எரிந்தெழுந்த வியர்வை குளிர்ந்து தோல் சிலிர்க்கத் தொடங்கியது. குளிர்ந்த தெளிநீரை அள்ளி முகத்திலும் உடலிலும் விட்டுக்கொண்டாள். உடல் குளிரக் குளிர உள்ளே கிழிந்து பறந்து துடித்துக்கொண்டிருந்த எண்ணங்களும் மெல்ல நனைந்து படியத்தொடங்கின. கண்களை மூடிக்கொண்டு தன்னைச் சூழ்ந்திருந்த நீரோசையை மட்டும் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள். காட்டின் காற்றோசை அதனுடன் இணைந்துகொண்டது.
எழுந்து சென்று சுக்ரரை பார்க்கவேண்டுமென்று ஒரு சிறு உளப்பகுதி அவளை அழைத்தது. முரண்டு பிடிக்கும் யானையை செவி பற்றி இழுப்பதுபோல். அவள் தன்னிலை அங்கேயே நின்றிருக்க விழைந்தது. வந்தது அதற்காகத்தான் என்பதுபோல. சென்று செய்ய வேண்டியது என்னவென்று அறியாதது போல. தந்தையிடம் சொல்ல தன்னில் சொற்கோவை ஏதும் இல்லையென்பதால்தான் அந்தத் தயக்கம் என்று உணர்ந்தாள். ஐந்து சொற்றொடர்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தால் அங்கிருந்து கிளம்ப முடியும். நிகழ்ந்த அனைத்தையும் அவ்வைந்து சொற்றொடர்களில் சொல்ல வேண்டும். அதற்குள் உணர்வுகள் கிளர்ந்து அனைத்தும் கட்டற்று எழுந்துவிடும்.
எண்ணி எண்ணி நோக்கினும் சொல்லென ஆகாமல் விரிந்து கிடந்தது அந்தப் பதினேழாண்டுப் பெருவெளி. வழிநெடுக சொல்லெடுத்துக் கோத்து அவள் தீட்டிக்கொண்டிருந்த அனைத்தும் பிறிதொரு வெளியாக அப்பால் பரந்து கிடந்தன. ஒன்றையொன்று அறியாதவை. இரண்டும் அவளுடன் தொடர்பற்றவை என்று தோன்றியது. பலமுறை அவள் அங்கிருந்து உள்ளத்தால் எழுந்தாள். உடல் அங்கேயே அமர்ந்திருந்தது. நெடுநேரமாயிற்றென்று தோன்றியது. நீரருந்தி பிடரி சிலிர்க்க காற்றில் நின்று உடல் ஆற்றிக்கொண்ட அவள் புரவி அவள் எழாது அமர்ந்திருப்பதைக் கண்டபின் இருமுறை மெல்ல கனைத்து தலையை உலுக்கி காதுகளை அடித்துக்கொண்டபின் சென்று அப்பால் புல் மேயத்தொடங்கியது. தங்கள் புரவிகளை நீரூட்டி மேயவிட்டபின் வெவ்வேறு மரநிழல்களிலாக அவளது காவல்வீரர்களும் படுத்துக்கிடந்தனர். புரவிகளின் தும்மலோசையும் செருமலோசையும் கேட்டுக்கொண்டிருந்தன. சிறு குருவிகள் வந்து அவற்றின்மேல் அமர்ந்து விளையாடத்தொடங்கின.
தொலைவில் வண்ண அசைவுகளாக அவள் யயாதியும் பார்க்கவனும் பிறரும் வருவதைக் கண்டாள். அவள் தலைக்குப் பின்னால் புரவிக்குளம்படி ஓசை ஒலித்துக்கொண்டிருக்க சரடில் சிலந்தி பறந்து அணுகுவதுபோல் அவர்கள் ஓசையின்றி வந்தனர். வண்ணங்கள் வடிவக்கூர் கொண்டன. முகமென்றாயின. விழிகள் என்று தெளிந்தன. யயாதி தன்னைப் பார்த்துவிட்டதை அவள் உணர்ந்தாள். அவன் புரவி விரைவழிந்தது. புரவியின் காதுகளின் மயிர்கூடத் தெரியுமளவுக்கு அணுகி வந்தனர். பிற காவலர்கள் நின்றுவிட பார்க்கவனும் அவனும் மட்டும் புரவிகளின் மேலிருந்து இறங்கி நடந்தனர்.
நீரைப் பார்த்ததும் யயாதியின் புரவி தலையைச் சிலுப்பி நீள்மூச்சு விட்டது. அவன் கடிவாளத்தை விட்டதும் ஆணை பெறாமலேயே புரவி நீரைநோக்கிச் சென்று குனிந்து குடிக்கத் தொடங்கியது. நீர் உள்ளே சென்றதும் உடல் சிலிர்த்து வால்சுழற்றி பசுஞ்சிறுநீர் கழித்தது. அச்சிறுநீரின் மணத்தை உணர்ந்து மேய்ந்து கொண்டிருந்த புரவிகள் தலைதூக்கி செவிகோட்டி மூக்கை நீட்டிச் சுழித்து விரித்து கனைத்தன. யயாதி தன் தோல்காலணிகளுடன் சில அடிகள் எடுத்து வைத்தபின் குனிந்து அவற்றைக் கழற்றிவிட்டு அவளருகே வந்தான். ஓடைக்கப்பால் மணற்சரிவில் நின்று அவளை நோக்கினான்.
அவள் அவன் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கைகூப்பி “நான் பிறிதொன்றும் சொல்வதற்கு இல்லாதவன். என்னை வெறுமொரு உடல் மட்டுமே என்று இப்போது உணர்கிறேன். குருதி விந்து சீழ் மலம் இவையே நான். அரசி, நான் விழிநீரும்கூட. உடலின் விசைகளால் இயக்கப்பட்டவன். நிகழ்ந்தவை அனைத்திற்கும் என் விழைவன்றி பிறிதெதையும் விளக்கமென சொல்லமாட்டேன்” என்றான். அவள் கண்களைத் தாழ்த்தி நீரோடையை பார்த்துக்கொண்டிருந்தாள். “அறியா இளமைந்தனாக பிழைசெய்து மீண்டு அன்னையின் முன் வந்ததுபோல் இங்கு நின்றிருக்கிறேன்” என்று யயாதி சொன்னான்.
அவள் தன்னுள் எங்கெங்கோ தத்தளித்துக்கொண்டிருந்தாள். ஓடையில் மிதந்து வந்த சருகொன்று காலைத் தொட்டதும் திடுக்கிட்டு எங்கிருக்கிறோம் என வியப்பவள்போல திகைத்து பின்னர் நிமிர்ந்து அவனை நோக்கியபோது அவளுக்குள் சொல் முளைத்திருந்தது. “இது உன் மீதான வஞ்சம் மட்டும் அல்ல” என்றாள். பற்களைக் கடித்தபடி “ஆணென்பதாலேயே நீ பழி சுமந்தாகவேண்டும்” என்றபின் எழுந்து திரும்பி நடந்தாள்.
கிருதர்தான் தேவயானியை முதலில் பார்த்தார். அவரால் அவளை அடையாளம் காண முடியவில்லை. பதினேழாண்டுகளில் ஒன்பது முறை அவர் குருநகரியின் அரண்மனைக்கு வந்து சக்ரவர்த்தினியாக அவைவீற்றிருந்த தேவயானியை பார்த்திருந்தார். அத்தோற்றம் அவர் உள்ளத்தில் பதிந்து இளமை முதல் அவர் அணிந்த மற்ற தோற்றங்கள் அனைத்தையும் முற்றாக அழித்துவிட்டிருந்தது. குடிலுக்கு முன் சிறு கோடரியால் வேள்விக்கென சமதையை வெட்டிக்கொண்டிருந்தவர் விழி சுருக்கி மண்சாலையில் நடந்து வரும் பெண்ணை பார்த்தார். எளிய வெண்ணிற ஆடை அணிந்து நீண்ட குழல் காற்றில் அலையடிக்க வெற்றுக்கால்களுடன் வந்தவள் நிமிர்ந்த நடையும் சீராகச் சுழலும் கைகளும் கொண்டிருந்தாள். அவர் அறிந்த வேறெவரையோ அவள் நினைவுறுத்தினாள். பின் உள்ளம் பற்றிக்கொண்டு வியப்புக்குரலுடன் அவர் எழுந்தார்.
தேவயானி குடில் வாயிலை அடைந்ததும் அவர் படிகளில் இறங்கி அவளை நோக்கி கைவிரித்தபடி ஓடி “வருக! வருக தேவி! என்ன இது? ஏன் எளிய தோற்றம்?” என்றார். “தந்தையைப் பார்ப்பதற்காக” என்று அவள் சுருக்கமாக சொன்னாள். “ஆம். தாங்கள் அரச உடையில் வராமல் இருந்தது நன்றே” என்றார் கிருதர். அவளுடன் நடந்தபடி “ஏன் என்று தெரியவில்லை. ஒருகணம் தொலைவில் உங்கள் அன்னை ஜெயந்தி என்று எண்ணிவிட்டேன். அதே நடை, அதே நோக்கு. நடுவயதில் பெண்டிர் தங்கள் அன்னையைப்போல் ஆவது எண்ணியிராத வியப்பளிப்பது” என்றபின் படலை விலக்கி உள்ளே சென்று நின்று புன்னகையுடன் “வருக!” என்றார்.
தொலைவில் சுஷமரும் சத்வரும் அவளைப் பார்த்து சிரித்து உவகைக் குரல் எழுப்பியபடி விரைந்து வந்தனர். சத்வர் அவளருகே வந்து “அரச அணிகளால் உங்கள் அழகும் நிமிர்வும் உருவாகவில்லை என்பது இப்போது தெரிந்தது. கலையமர் செல்வி வெண்கலை உடுத்து வந்ததுபோல் இருக்கிறீர்கள், தேவி” என்றார். தேவயானி புன்னகைத்து “நான் தந்தையை பார்க்கவேண்டும்” என்றாள். “அவர் சொல்லெழா நோன்பு கொண்டிருக்கிறார். நெடுநாட்களாகிவிட்டமையால் இப்போது விழிகளிலும் சொற்களின்றி ஆகிவிட்டிருக்கிறது. உங்களை அவர் சந்திக்க விழைகிறாரா என்று தெரியவில்லை” என்றார் சுஷமர்.
கிருதர் “நான் உள்ளே சென்று நீங்கள் வந்திருப்பதை சொல்கிறேன்” என திரும்ப தேவயானி அவர் தோளைத் தொட்டு “வேண்டியதில்லை. நானே சென்று அவரை பார்க்கிறேன். தீச்சொல்லிட்டு என்னை அழிப்பார் என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றபின் அவர்களைக் கடந்து பின் மையக்குடில் நோக்கி சென்றாள். நெடுநாட்களுக்குப்பின் தங்கள் தவக்குடிலுக்கு வந்திருந்தபோதிலும்கூட நலம் உசாவவோ முகமன்கள் உரைக்கவோ அவள் முற்படவில்லை என்பதைக் கொண்டே அவள் நிலையழிந்திருக்கிறாள் என்பதை கிருதர் உய்த்துணர்ந்து கொண்டார்.
அவள் உள்ளே சென்றதும் “என்ன ஆயிற்று?” என்றார் சத்வர். “அவள் பாரதவர்ஷத்தின் பேரரசி. ஒவ்வொரு புயலும் விசை பெருகி மையம்கொண்டு தேடி வரும் மலைமுடி போலிருக்கிறாள்” என்றார் கிருதர். “போர்க்களத்தில் யானைமேல் அமர்ந்திருப்பது போன்றது அரசனின் இடம் என்றொரு கவிச்சொல் உண்டு” என்றார் சுஷமர். “இது அரசுமுறைப் பயணமல்ல. தனிப்பட்ட முறையில் இடரோ துயரோ கொண்டிருக்கிறார்கள்” என்றார் சத்வர். “பார்ப்போம்” என்று கிருதர் குனிந்து தன் கைக்கோடரியை எடுத்துக்கொண்டார்.
மையக்குடிலில் வாயிலில் நின்றிருந்த இளம்மாணவன் தேவயானியைக் கண்டதுமே அடையாளம் கண்டுகொண்டு தலைவணங்கி விலகினான். அவள் குடிலின் கதவென அமைக்கப்பட்டிருந்த மூங்கில் படலைத் திறந்து உள்ளே சென்றாள். தரையில் விரிக்கப்பட்ட புலித்தோல் மீது மலரமர்வில் கால் மடித்து கைகளை மார்பில் கட்டியபடி விழிமூடி அசைவிலாது அமர்ந்திருந்த சுக்ரரைக் கண்டு ஒருகணம் நின்றாள். அவர் இறந்து சிலையாக்கப்பட்டு அங்கிருக்கிறார் என்னும் எண்ணமே முதலில் எழுந்தது. “தந்தையே…” என்றாள். அவர் விழிகள் அதிர்ந்து இமைகள் மேலெழுந்தன. கண்கள் குருதிச் செம்மை கொண்டிருப்பதை அவள் கண்டாள். ஒருகணம் உளம் நடுங்கி பின்னடைந்தாள்.
திரும்பி வந்த உள்ளம் உந்தி முன்செலுத்த காலடி எடுத்து வைத்து அவர் அருகே சென்று முழந்தாளிட்டு அவரை நெற்றிநிலம்பட வணங்கி “தங்களைப் பார்ப்பதற்கென்று வந்திருக்கிறேன், தந்தையே” என்றாள். சுக்ரர் செவ்விழிகளால் அவளை நோக்கியபடி அசைவிலாது அமர்ந்திருந்தார். கொடுஞ்சின மூதாதைத் தெய்வமொன்றின் முன் நின்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். “நான் உங்களிடம் துயர் ஒன்றை முறையிடும்பொருட்டு வந்துள்ளேன், தந்தையே” என்றாள் தேவயானி.
அவள் மேலும் சொல்ல வாயெடுப்பதற்குள் அவர் கைகாட்டி “போதும்” என்றார். நெடுங்காலத்திற்குப் பிறகு நாவிலெழுந்தமையால் அவரது சொல் வெறும் மூச்சொலியாக இருந்தது. “நான் என்ன நிகழ்ந்ததென்று சொல்லவேண்டியுள்ளது. எவரிடமேனும் சொல்லும் பொருட்டே இத்தனை தொலைவு வந்தேன்” என்றாள். “அவன் சர்மிஷ்டையிடம் மைந்தரை ஈன்றுளான், அதுதான் இல்லையா?” என்றார் சுக்ரர். “ஆம், தங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் தேவயானி. சுக்ரர் “விருஷபர்வனின் ஒற்றர் அதை அறியாமல் இருப்பரா? அவனறிந்தால் என்னிடம் உரைக்காமலிருப்பானா? அம்மைந்தர் அரசகுடி பிறந்தோர். மானுடரின் வஞ்சங்களும் துயர்களும் குடிப்பிறப்பையும் ஊழையும் மாற்ற முடியாது” என்றார்.
நீள்மூச்சுடன் மெல்ல கால்மடித்து அமர்ந்துகொண்டு “ஆம் தந்தையே, அவர்களை முறையான அரசகுடியினராக அறிவித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்” என்று தேவயானி சொன்னாள். “ஆனால் என் வஞ்சம் அரசன் மீது பெருகிக்கொண்டே இருக்கிறது. என் நெஞ்சு ஒழியாது நான் அமைதி கொள்ள இயலாது. இச்செயலின் பொருட்டு அவன் துயர்கொள்ள வேண்டும். இதை எண்ணி நொந்து அழிய வேண்டும்.” இத்தனை எளிதாகவா சொல்வது என்று ஓர் உள்ளம் வியந்தது. பிறிதொரு சொல் இல்லை தன்னுள் என உணர்ந்துகொண்டது.
சுக்ரர் “அவ்வஞ்சம் வெளிப்பட்டபின் உன் உளம் ஒழியுமென்று உறுதியாக எண்ணுகிறாயா?” என்றார். “ஆம், ஒழியும். ஒருவேளை ஒழியவில்லையென்றால்கூட நான் அதை வெல்லும்பொருட்டு தவம் மேற்கொள்ள முடியும். ஆனால் இவ்வஞ்சத்தை என்னுள் கரந்தபடி என்னால் வாழமுடியாது” என்றாள். சுக்ரர் “அவனை நீ ஏன் பொறுத்தருளலாகாது? எப்படி மணிமுடியைத் துறந்து மீண்டாயோ அதைப்போல அவனையும் துறந்து காடேகினால் நீ விடுதலை கொள்வாயல்லவா?” என்றார்.
“இனி குருநகரிக்குச் சென்று மணிமுடி சூடி அமர்ந்திருக்கும் எண்ணமெனக்கில்லை. எண்ணினாலும் அது இயல்வதல்ல. ஆனால் ஒருமுறை தீண்டாமல் நான் படம் சுருக்க இயலாது” என்றாள் தேவயானி. “அன்று என்னைத் துறந்து சென்ற கசன்மேல் தீச்சொல் இடுகையில் என்னுள் உறைந்த அன்னையொருத்தி எழுந்து வந்து சொற்களை பற்றிக்கொண்டாள். அன்றே நான் அவனை அழித்திருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் இன்று இத்தனை நஞ்சு கொண்டிருக்கமாட்டேன்.”
சுக்ரர் புன்னகைத்து “இதற்கு விளக்கமென எதையும் எவரும் சொல்லிவிடமுடியாது. இருந்தால்களும் ஆனால்களும் கொண்டதல்ல வாழ்க்கை. அது அவ்வண்ணமே அமைய வேண்டுமென்று ஊழால் வகுக்கப்பட்டது. ஊழுக்கு மானுடன் ஆற்றும் எளிய எதிர்வினைகளே இருந்தால்களும் ஆனால்களும். அவை வெற்றுச் சொற்கள். பொருளற்ற பொருமல்கள், ஏக்கங்கள்…” என்றார்.
தேவயானி பொறுமையிழந்து “நான் சொல்லாட விரும்பவில்லை. இதோ, அவன் வந்துகொண்டிருக்கிறான். இத்தருணத்தில் நம் குடில் வாயிலை அவன் அடைந்திருப்பான் என்று எண்ணுகின்றேன். உங்கள் தவச்சீற்றத்தால் அவனை பொசுக்குங்கள், தந்தையே! ஆயிரமாண்டு அவன் இருள் நரகில் திளைக்கட்டும்” என்றாள்.
சுக்ரரின் உதடுகள் ஏளனத்துடன் வளைந்தன. “நீ காவியங்களையும் தொல்கதைகளையும் முற்றும் மறந்துவிட்டாய் போலும். தீச்சொற்களின் வரலாறை அறிவாயா? முற்றழிக்கும் தீச்சொல்லிட தெய்வங்களுக்கும் உரிமையில்லை. புதுப்பிறவி கொண்டெழும் வாய்ப்பையே தீச்சொல்லெனும் பேரில் அளிக்கவேண்டும்” என்றார். “அதிலும் அன்னையரும் ஆசிரியர்களும் அந்தணரும் முனிவர்களும் தேவர்களும் தெய்வங்களும் அளிக்கும் தீச்சொற்கள் காலம் கனிகையில் நற்கொடைகளாகவும் அமைந்தாகவேண்டும்.”
தேவயானி பெருஞ்சினம் எழ தன் கையை ஓங்கி தரையில் அறைந்தபடி “அவ்வண்ணமெனில் நான் தீச்சொல்லிடுகிறேன். அவனை இக்கணமே மீளா இருளுக்கு அனுப்புகிறேன்” என்றாள். சுக்ரர் “தீச்சொல் என்பது என்ன? அம்பை தொடுப்பவன் நிகர் விசையுடன் கையை தன்னை நோக்கி இழுக்கிறான். துலாவின் ஒரு தட்டில் தீச்சொல்லை வைக்க மறுதட்டில் நீ வைப்பதென்ன என்பதுதான் முதன்மையான வினா. அன்னை தன் கடனை, ஆசிரியன் தன் கொடையை, அந்தணன் தன் நோன்பை, முனிவர் தன் தவத்தை, தேவர்கள் தங்கள் மேன்மையை, தெய்வங்கள் ஊழை அங்கே வைக்கலாம். நீ உன் வஞ்சத்தையே வைக்க முடியும். மகளே, நிகராக உன் துலா தட்டும் தாழும். அவனுக்கு நீ அளிப்பதை நீயும் அடைந்தாலொழிய உன்னால் தீச்சொல்லிட இயலாது” என்றார்.
தேவயானி தொண்டையில் குருதிக்குழாய்கள் புடைக்க நரம்புகள் நீலமென முடிச்சுவிழ விழிகளில் நீர்மையொளிர “நான் அழிகிறேன். நானும் இருளில் உழல்கிறேன். இனி இந்த இரு கால் மாக்களின் இழிவை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. தந்தையே, இக்கணம் நான் எழுந்து கசந்து நோக்குவது என் கையைப்பற்றிய இக்கீழ்மகனை அல்ல. ஆணெனத் தருக்கியபடி வெற்றுக்காமம் மட்டுமே உளமென்றாகி அலையும் மானுடரில் பாதியை. அனைவருக்குமான ஒரு தீச்சொல்லை இட்டு அமையாமல் இந்த அகஇருளில் இருந்து எழ என்னால் இயலாது” என்றாள்.
“நீ கசனுக்கு அளித்த தீச்சொல்லின் மறுவிசையாலேயே இப்பெருந்துயரை இன்று அடைந்தாய். இத்தருணத்திலாவது அதை நீ உணர்ந்தாக வேண்டும். இன்றளிக்கும் தீச்சொல்லின் விசையை எங்கு சென்று முடிப்பாய்? ஒரு முடிச்சு பிறிதொரு முடிச்சாவதை உணரவில்லை என்றால் வாழ்க்கையில் நீ எதை கற்றாய்? அறுத்து விடுபடுவதன்றி அவிழ்த்து மீள்வது வாழ்வில் எவருக்கும் இயல்வதல்ல” என்றார் சுக்ரர். “நன்று, என்னை நீங்களும் கைவிடுகிறீர்கள். இச்சொல்லுக்கு அது ஒன்றே பொருள். இறுதிப் புகலிடமென நான் வந்த தந்தையின் நாவிலிருந்து உன் துயர் உன்னுடையது மட்டுமே என்று கேட்கையில் என் ஊழுறவு வலையின் இறுதிக் கண்ணியும் அறுபடுகிறது போலும்” என்றபடி தேவயானி திரும்பினாள்.
வாயிலில் தோன்றிய கிருதர் தலைவணங்கி “யயாதி” என்றார். “அவனை வரச்சொல்” என்றார் சுக்ரர். “இங்கு அவன் வரவேண்டியதில்லை. தங்கள் முன் வந்து விழிநீர் சிந்தி இரந்து கருணை பெற்று திரும்பவிருக்கிறான். ஆணிலி, கோழை, சிறுமதியாளன்” என்று தேவயானி கூவினாள். “பிழை இயற்றாத மானுடர் எவர்? மாமுனிவரும் காமத்தால் நடை தவறியவர்களே” என்றார் சுக்ரர்.
தேவயானி “கரந்து ஒன்று செய்பவன் தான் செய்யும் அனைத்தையும் கரந்தே செய்யும் சிற்றுயிராகிறான். தெய்வங்கள் பறவைகளை விண்ணிலும் விலங்குகளை மண்ணிலும் உலவும்படி செய்தன. அரவுகளையும் முயல்களையும் எலிகளையுமே ஆழங்களுக்குள் வாழச்செய்தன. பறக்க எண்ணி விண்நோக்குவதே விலங்கின் மீட்பு. மண்ணுக்குள் புக விழைவது கீழ்நெறி. அவன் கீழ்மகனாக தன்னை ஆக்கிக்கொண்டவன். தந்தையே, மறுஎண்ணமின்றி அவனை தீச்சொல்லிட்டு எரித்தழித்தால் மட்டுமே நீங்கள் என் தந்தை. இல்லையேல் நீங்கள் எனக்களித்த ஒவ்வொரு சொல்லையும் மறப்பேன். என் உள்ளத்திலிருந்து இறுதி ஆண்மகனென எஞ்சியிருக்கும் உங்களையும் கழற்றி வீசுவேன்” என்றாள்.
“அணிந்தவை அனைத்தையும் கழற்றி வீசினால் மட்டுமே துறவு நிகழும். துறவு இன்றி கல்வி இல்லை. எத்தனை துறக்கிறோமோ அத்தனை கற்கிறோம். முழு துறவு முழுமை அறிவிற்கான வழி” என்றார் சுக்ரர்.