சுஜாதா அறிமுகம்
மகாபலி சுஜாதாவின் இந்தக்கதையை ஓர் இணைப்பினூடாக மீண்டும் வாசித்தேன். சுஜாதா ஏன் முக்கியமானவர் என்றும் எங்கே தவறுகிறார் என்றும் மீண்டும் காட்டியது இந்தக்கதை.என் மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றமுண்டா என்று பார்த்தேன். இல்லை.
முதல் ஒரு பத்தியில் மகாபலிபுரத்தின் ஒரு ஒட்டுமொத்தச் சித்திரத்தைக் கொண்டுவந்துவிடுகிறார். மிகச்சுருக்கமான வர்ணனைகள். மெல்லியகேலி கொண்ட விவரணைகள். சட்டென்று ஒலிக்கும் உடலிலிக் குரல். அந்த ’கொலாஜ்’ மிகத்திறன் வாய்ந்த கலைஞனால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியது. பிரித்து நீவி நோக்கினால் அதிலுள்ள தேர்வும் முரண்பாடுகளின் ஒத்திசைவும் சுஜாதா யார் என்பதைக் காட்டுகின்றன. ஒரு வங்காளி பயணக்குழு. உடனே ஒரு தமிழ்ப்பயணக்குழு. தமிழ் சினிமாவுக்கு நேர் எதிராக உளிச்சத்தம். சிலைகளின் வர்ணை கூர்மையாக வெட்டப்பட்டு அந்த லௌகீகாசாமியின் கல்லுரல் விசாரிப்பு.
மிகக்கூர்மையாக அந்தப் பேராசிரியரையும் அவரைத் தேடி வரும் இளைஞரையும் சித்தரிக்கிறார். சொல்வதில்லை, காட்டுகிறார். சுருக்கமான உரையாடல்களில் அவர் சொல்லும் நூல்களில் உள்ள தெரிவு வியக்கச்செய்வது. குற்றவியல்சட்டம் போன்ற கறாரான நூலுக்கு மறுபக்கமாக லயால் வாட்சனின் கற்பனைகலந்த அறிவியல்.
அந்தப் பட்டியலில் நான் மகிழும் ஒரு நினைவு உள்ளது. அவருக்கு லயால் வாட்சன், எரிக் வான் டேனிகன் கிரஹாம் ஹான்காக் போன்ற கொஞ்சம் புனைவம்சம் கொண்ட அறிவியல், தொல்லியளார்களை நான்தான் கொண்டுசென்று கொடுத்து பல்லுடையும்படிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் செவ்வியல் அறிவியலாளர். அடுத்த தலைமுறை உடைந்தபானைகளை வாசித்திருக்கவில்லை, பெயர் தெரிந்திருந்தது. ‘நாவல் எழுதணும்னா இவனையெல்லாம் வாசிக்கலாம்’ என்றார். ‘கிரைம்நாவலுக்கு’.
என்னிடம் மோதியின் தடயவியல் சட்டம் வாசித்திருக்கிறாயா என்று கேட்டார். நான் கேள்வியே பட்டிருக்கவில்லை. “அப்றம் என்ன மாடர்ன் வேர்ல்ட எழுதறது?’ என்றார். அதன்பின்னரே நான் இரண்டுமாதகாலம் எடுத்துக்கொண்டு அதை வாசித்தேன். கூடவே இந்திய குற்றவியல்சட்டம்.
அன்றுவாங்கிய என் நூல்களை இருபதாண்டுகளுக்குப்பின் இப்போதுதான் எடுத்துப்பார்த்தேன்.புழுதிபடிந்து. உள்ளே அஜிதன் நூற்றுக்கு இரண்டு , ஐந்து, எட்டு, ஏழு என மதிப்பெண் வாங்கிய ஒரு மதிப்பறிக்கை. [பிராக்ரஸ் ரிப்போர்ட் என்ற பெயர் அதற்குச் செல்லாது. ரிக்ரெஸ் ரிப்போர்ட் என்று சொல்லலாம்] சந்தடியில்லாமல் கொண்டு சென்று செருகியிருக்கிறான்].
இந்த கூர்மையே சுஜாதாவின் ஆற்றல். கூடவே அவர் படைப்புக்களின் கலை ஒரு மாற்று எப்போதுமே குறைந்திருப்பதற்கும் இதுவே காரணம். கலைப்படைப்பு உருவாகும்போது அதன் தோற்றத்திற்கு முன் ஒரு திட்டம் இருக்கும். அத்துடன் உளப்பழக்கமாக, ஆழத்தில் ஒரு வடிவத்தன்னுணர்வு தொழிற்படும். ஆனால் எழுதத் தொடங்கியதுமே எழுத்தாளன் அக்கனவுக்குள் சென்றுவிடுவான். அவ்வுணர்ச்சிகளில் வாழ்வான். அந்தவாழ்க்கையை கண்ணெதிரே பார்ப்பான், மொழியில் இயல்பாக நிகழவிடுவான்.
சுஜாதாவில் அந்தத் திட்டமும் வடிவத்தன்னுணர்வும் முதன்மையாக நீடிக்கின்றன.மிகமிகத் திறமையாக உருவாக்கப்பட்டாலும்கூட இது ஒருவகைப் பின்னல்பணிதான். பேராசிரியர், இளைஞன், பேராசிரியரின் மகள் எல்லாமே மெல்லிய செயற்கைத்தன்மையுடன் [ஆங்கிலத்தில் புரிந்துகொள்பவர்களுக்காக பிளாஸ்டிக் தன்மை] இருந்துகொண்டே இருப்பது அதனால்தான்.
கணிசமான சுஜாதாக் கதைகள் இறுதியில் கதைத்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் முடிச்சில் நிறைவடையும். மூன்றுசீட்டு வித்தைக்காரனின் திறன்தான் அது. சுஜாதாவால் படைப்பாளியாகப் புனைவில் அமிழமுடியவில்லை. அதற்குத்தேவையான ஒரு கட்டற்றதன்மை, பேதைத்தனம் என்றுசொல்லத்தக்க ஒருவகை எளிமை அவரிடம் இருக்கவில்லை. அதை அவரே சுபமங்களாவின் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
ஆனால் இக்கதையில் உண்மையான சுஜாதா வெளிப்படுகிறார். அந்தபேராசிரியரின் கேள்வி உண்மையில் சுஜாதாவுடையது. அவர் எழுதிய பல கட்டுரைகளில் இந்தக் குரல் எழுந்திருக்கிறது. அதிலுள்ள தவிப்பும் ஆதங்கமும் அவருடைய ஆளுமையில் எப்போதுமிருந்தது.
இந்தக்கதையை ஒட்டி நினைவுக்கு வருவது இன்னொன்று. 1988 என நினைக்கிறேன். நான் நக்ஸலைட் கவிதைகள் என்னும் ஆங்கிலத் தொகுதியில் இருந்து இருபது கவிதைகளைத் தெரிவுசெய்து மொழியாக்கம் செய்தேன். அது [வேறு பெயரில்] கோணங்கியின் கல்குதிரையில் வெளியாகியது.
அவ்விதழை நான் சுஜாதாவுக்கு அனுப்பியிருந்தேன். சுஜாதாவிடம் நான் பேசியபோது [அன்றெல்லாம் அனைவரிடமும் தொலைபேசித் தொடர்பில் இருந்தேன்] கலைஞர்கள், அறிவியலாளர்கள், தத்துவவாதிகள் என ஒரு ஐம்பதாயிரம்பேரை நக்ஸலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பேரில் இந்திய அரசுநிர்வாகம் கொன்று ஒழித்துவிட்டது; இந்தியாவின் மிகச்சிறந்த மனங்கள் அவை; இந்தியாவின் அறிவியக்கத்தின் மீதான பெரிய தாக்குதல் அது என்றார்.
மேலும் இருபதுநாட்களுக்குப்பின் பேசியபோது ‘நினைச்சுப்பாத்தா தூங்கவே முடியலை….எல்லாருமே சின்னப்பசங்க… கண்ணில வெளிச்சத்தோட எதையாவது செய்யணும்னு துடிப்பா இருப்பானுங்களே அந்தமாதிரி பையன்ங்க” என்றார். மீண்டும் நீண்டநாள் கழித்து அவரை வண்ணதாசன் மகள் திருமணத்தில் பார்த்தபோதுகூட “அந்தக் கவிதைகளை மறக்கவே முடியலை. என்ன ஒரு பிரில்லியண்ட் மைன்ட்ஸ்” என்றார். அந்த சுஜாதா இக்கதையில் வெளிப்படுகிறார்.
கலைப்படைப்பில் நேரடியாக எழும் குரலென்பது குறைபாடே. ஆனால் அதன் உண்மைத்தன்மை அதை கலையாக ஆக்கி நிறுத்துவதும் உண்டு, அத்தகையது அந்த இறுதிவரி., சென்றதலைமுறையைச் சேர்ந்த நுண்ணுள்ளம் ஒன்றின் ஏக்கம் அது. நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் இல்லாதசூழலில் வாசிக்கையில் அது துயரளிக்கிறது.
இதுவே சுஜாதா. சித்தரிப்பின் திறனால்,மொழிநடையின் கூர்மையால் தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத படைப்பாளி. ஆனால் எப்போதுமே ஒரு படி முன்னரே நின்றுவிடும் கலைஞர். சுஜாதாவை வணிக எழுத்தாளர் என ஒதுக்குபவர் தமிழ்நடையின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை இழக்கிறார். ஆனால்அவருடைய கலைக்குறைபாட்டை நுண்மையாக உணர்ந்துகொள்பவர் மட்டுமே நவீன இலக்கியத்தின் மையப்பெருக்கில் நுழைகிறார்.
***