‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–84

84. பிறிதொரு சோலை

தேவயானி தன்னை உணர்ந்தபோது ஒரு கணம் சோலையில் இருந்தாள். ஹிரண்யபுரியா என வியந்து இடமுணர்ந்து எழுந்தமர்ந்தாள். பறவையொலிகள் மாறுபட்டிருந்ததை கேட்டாள். உடல் மிக களைத்திருந்தது. வாய் உலர்ந்து கண்கள் எரிந்தன. சாளரத்தினூடாகத் தெரிந்த வானம் கரியதகடு போலிருந்தது. சாளரத்திரையை விலக்கி தொலைவை நோக்கியபோது விடிவெள்ளியை கண்டாள். எண்ணியிராத இனிய சொல் போன்று அது அவளை உளம்மலரச் செய்தது. விழியசைக்காது அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு முத்து. ஓர் ஊசித் துளை. ஒரு விழி. ஒரு யாழ் நரம்புத்துடிப்பு. ஒற்றைச்சிறுமணியோசை.

மொத்தப் புவியையும் ஒரு பெருங்கலமென உந்திக்கவிழ்த்து அதில் நிறைந்திருக்கும் இருளனைத்தையும் உருகி ஓடசெய்கிறது. இருள் கரைவதை அவள் நோக்கிக்கொண்டிருந்தாள். முதற்பறவை ஒலியை தொடர்ந்தெழும் ஒலிக்கலவை. முதல் செந்தீற்றல். பெருஞ்சோர்வுக்குப் பின் விடிபவை புத்தம்புதிய காலைகள். ஒரு சிறு சாம்பல்நிறக் குருவி சிறகடித்து வந்து சாளரத்தினூடாக பாய்ந்து உள்ளே நிறைந்த விடிகுளிர்காற்றில் தாவித் தாவி சுழன்று மீண்டும் சாளரத்தை அடைந்தது. சட்டத்தில் அமர்ந்து இருமுறை சிறகடுக்கியபின் மணிக்கண்களை உருட்டி சிறு அலகைத் திறந்து ரிப் ரிப் என்றது. துடித்தெழுந்து காற்றில் ஏறி அரையிருளைக் கிழித்து அப்பால் சென்று மறைந்தது.

காலடி ஓசை கேட்டு கிருபர் வருவதை அவள் உணர்ந்தாள். வாயிலுக்கு அப்பால் நின்று அவர் வாழ்த்துரைக்க உள்ளே வரும்படி கையசைவால் ஆணையிட்டாள். கிருபர் உள்ளே வந்து தலைவணங்கி “அனைத்தும் சித்தமாகிவிட்டன, பேரரசி. முதல்ஒளி எழுகையில் குடித்தெய்வங்களுக்கு பூசனைகள் தொடங்குகின்றன. அதன் பின்னர் படையலும் கூட்டுணவும். தொடந்து இளையோரின் போர்விளையாடல்கள். உச்சிப்பொழுதில் உணவுக்கும் ஓய்வுக்கும் பின்னர் அந்தியில் பெண்களும் இளையோரும் ஆடல்நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள்” என்றார். “நான் சித்தமாக வேண்டும். சேடியரை அனுப்பச் சொல்லுங்கள்” என்றாள். கிருபர் எந்த மாற்றமும் தெரியா விழிகளுடன் “நேற்று அந்தியிலேயே சாயாதேவி தனிப்புரவியில் கிளம்பிச் சென்றார். தங்கள் ஆணை என்று தெரிவிக்கப்பட்டது” என்றார். அவள் ஆம் என்று தலையசைத்தாள். மீண்டும் ஒருமுறை தலைவணங்கி அவர் வெளியே சென்றார்.

எழ எண்ணம் இருந்தும் உடல் அசையாமலிருந்தது. வெளியே வானம் ஒளிக்கசிவு கொண்டு வருவதை எண்ணமில்லாது ஒழிந்த உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தாள். கல்வளையல்களின் ஒலி கேட்டது. தொல்குடியைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளே வந்து கதவருகே நின்றனர். ஒருத்தி கதவை அசைத்து ஒலியெழுப்பினாள். புன்னகையுடன் தேவயானி எழுந்தபோது ஒருத்தி “நீங்கள் எங்களைவிட மிக உயரமாக இருக்கிறீர்கள், பேரரசி” என்றாள். அவர்களுக்கு முறைமைச்சொல் உரைக்கவும் வணங்கவும் தெரிந்திருக்கவில்லை.

தேவயானி புன்னகையுடன் ஒருத்தியின் அருகே சென்று தோளைத்தொட்டு “ஆம், ஆனால் என்னளவு உயரமிருந்தால் உங்களால் காடுகளுக்குள் எளிதில் புகுந்து செல்ல முடியாதல்லவா?” என்றாள். “ஆம்” என்றாள் அவள். “ஆகவே உங்கள் உடல் உங்களுக்குப் பொருத்தமானதே. இருவருமே இளமான்களைப்போல் அழகிகள்” என்றாள். இருவரும் நாணி உடல் வளைத்து பின் கைகளால் வாய்பொத்தி ஓசையிட்டு சிரித்தனர். “நான் நீராடவேண்டும். எனது ஆடைகளை எடுத்துக்கொண்டு வருக!” என்றாள். முதல்பெண் “இதோ, எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்றபின் குழம்பி “எந்த ஆடை என்று எங்களுக்குத் தெரியவில்லை, பேரரசி. தாங்களே எடுத்துத் தந்தால் நாங்கள் கொண்டுவருகிறோம்” என்றாள்.

சிரித்தபடி தேவயானி சென்று பேழையைத் திறந்து தன்னுடைய அணியாடைகளையும் உள்ளாடைகளையும் எடுத்து வைத்தாள். அவர்கள் அதை மூங்கில் கூடைகளில் அடுக்கி எடுத்தபடி அவளுடன் வந்தனர். முற்றத்தைக் கடந்து சுனைக்குச் செல்லும்போது இருவரும் அவளுடன் இடைவெளி அழிந்து அணுகிவிட்டிருந்தனர். “பேரரசி என்று சொன்னபோது நாங்கள் தெய்வங்களைப்போல என்று கற்பனை செய்துகொண்டிருந்தோம். ஏனென்றால் கதைகளில்தானே தெய்வங்களும் பேரரசிகளும் வாழ்கிறார்கள். ஆனால் நேரில் பார்த்தபோதுதான் நீங்கள் மானுடர் என்று தெரிந்து கொண்டோம்” என்றாள் ஒருத்தி. “ஆனால் தேரில் வருகையில் உண்மையில் தெய்வம் போன்றே தெரிந்தது. நீங்கள் பேசி சிரித்தபோதுதான் மானுடப்பெண் என்று தெளிந்தது” என்றாள் இன்னொருத்தி.

“இங்கெல்லாம் பெண்கள் இவ்வாறு நிமிர்ந்து அமர்வதற்கு ஆண்கள் ஒப்புவதில்லை. நாங்கள் மீறினால் எங்கள் ஆண்கள் அடிப்பார்கள்” என்றாள் முதல் மலைப்பெண். “ஆண்கள் ஒருபோதும் நம்மை அடிக்க ஒப்புக்கொள்ளக்கூடாது” என்றாள் தேவயானி. “ஏன்?” என்று அவள் கேட்டாள். “உடல்மேல் அவர்கள் செல்வாக்கு செலுத்தினார்கள் என்றால் உள்ளத்திலும் எண்ணத்திலும் அவ்வாறே ஆகிவிடும். பிறகு அவர்களின் அடிகளை நாமே கேட்டு பெற்றுக்கொள்வோம்” என்றாள் தேவயானி. “ஆம், உண்மைதான். ஆனால் அவர்கள் அடிக்கும்போது என்ன செய்வது?” என்றாள் இரண்டாமவள். “கண்ணில் மண்ணை வாரி வீசிவிட்டு அப்படியே ஓடிவிடவேண்டியதுதான்” என்றாள் முதலாமவள்.

இருவரும் அந்தச் சிறு நகைச்சுவைக்கு உடல்குலுங்க சிரித்தனர். சிரிப்பை நிறுத்தி கண்களைத் துடைத்தபின் மீண்டும் வெடித்துச் சிரித்தனர். முகம் சிவந்து உடலே அதிர சிரித்து பின் மூச்சிரைக்க ஓய்ந்தனர். தேவயானி தன் முகம் மலர்ந்திருப்பதை உணர்ந்தாள். ஒரு சிரிப்பில் மிக எளிதாக ஒதுக்கித் தள்ளக்கூடியவைதானா இவையனைத்தும்? முகில்களைத்தான் மலையென எண்ணிக்கொண்டிருந்தோமா? அவ்வெண்ணம் வந்ததும் அவள் மீண்டும் சோர்வடைந்தாள்.

நீர் விளிம்பருகே அரசமரத்தின் வேர்களில் ஆடைக்கூடையை வைத்தனர். முதலாமவள் “தாங்கள் நீராடும்போது ஆண்கள் அனைவரும் வெளியே சென்றுவிட வேண்டுமென்று சொல்கிறார்கள்” என்றாள். “யார்?” என்று தேவயானி கேட்டாள். “உங்கள் அமைச்சர்” என்று அவள் சொன்னாள். “எவருமே பார்க்கவில்லையென்றால் பெண்களுக்கு வருத்தமாக இருக்காதா என்று நான் அவரிடம் கேட்டேன். நான் கேட்டதே அவருக்குப் புரியவில்லை” என்றாள். இரண்டாமவள் சிரிப்பை அடக்கி பின் கையைத் தட்டியபடி உரக்க நகைத்தாள்.

குளிர்ந்த சுனை மரக்கூட்டங்களுக்கு நடுவே வானில் கசிந்த மெல்லிய ஒளியை தான் வாங்கி மான்விழிபோல் உள்ளொளிகொண்டு சருகுகள் உதிர மெல்ல சிலிர்த்தபடி கிடந்தது. ஆடைகளைக் களைந்து இடையில் மட்டும் சிற்றாடை அணிந்து நீரில் இறங்கினாள் தேவயானி. குளிர் கால்களைத் தழுவியபோதுதான் உடல் எத்தனை வெம்மை கொண்டிருக்கிறதென்று தெரிந்தது. கைநீட்டி பாய்ந்து நீரில் நெடுந்தொலைவு சென்று மூழ்கி முகத்தில் விழுந்த கூந்தலை தலைக்குப் பின்னால் சுழற்றி முடிந்தபடி எழுந்தபோது உடலிலிருந்து வெப்பம் ஒழுகிச் செல்வதை உணரமுடிந்தது. உள்ளே இருந்து ஒரு வெம்மை எழுந்து காதுமடல்களை சிவக்கச் செய்தது.

சேடியர்போல் தரையில் நின்று பொருட்களுக்கு காவல் இருக்காமல் இரு மலைப்பெண்டிரும் ஆடை களைந்து நீரில் பாய்ந்து நீந்தி அருகே வந்தனர். முதலாமவள் “மறுஎல்லை வரை சென்று வருவோமா?” என்றாள். “ஆம்” என்றபடி தேவயானி நீந்தினாள். நீண்ட கைகளைத் தூக்கி வைத்து அவள் நீந்தியபோதிலும்கூட ஒரு மலைப்பெண் கால்களால் நீரை உந்தி மீன்போல துள்ளித் துள்ளி விழுந்து அவளை முந்திச் சென்றுவிட்டாள். மறுகரையில் சரமலர் சிலிர்த்த நாணல்கள் நடுவே நின்ற பாறை ஒன்றில் ஏறி நின்று கைகளை அசைத்து வெண்பற்களைக் காட்டி உரக்க நகைத்தாள். தொடர்ந்து நீந்திச்சென்ற தேவயானி அப்பாறையில் ஏறிக்கொண்டாள்.

“உங்கள் முலைகள் பெரியவை, அரசி. யானை மத்தகம் போலிருக்கின்றன அவை” என்றாள் அவள். தேவயானி நகைத்து “ஆம், எங்களுக்கு அப்படித்தான்” என்றாள். “உங்கள் குழந்தைகளும் பெரிதாக இருக்குமோ?” என்றாள் தொடர்ந்து நீந்தி அவளருகே வந்து நின்ற இன்னொரு பெண். “ஆம், அவர்கள் அரசர்கள் அல்லவா?” என்று கரையில் நின்ற முதலாமவள் சொன்னாள். தேவயானி “வருக!” என்று சொல்லி மீண்டும் நீரில் பாய்ந்து நீந்தி முதற்கரைக்கு   செல்லலானாள். கூவிச் சிரித்தபடி அவர்கள் தொடர்ந்து வந்தனர். ஒருத்தி தேவயானியின் முடியைப்பற்றி இழுத்து மூழ்கடித்த பின் தாவி விலகிச்சென்றாள். தேவயானி சிரித்தபடி அவளை அணுகி பிடித்து நீரில் மூழ்கடித்து தலைக்குமேல் தாவி அப்பால் சென்றாள்.

நீராடும்போது முழுக்க அவர்கள் இடைமுறியாது பேசிக்கொண்டே இருந்தனர். சிட்டுக்குருவிகளைப்போல களிப்பு இயல்பாக சொற்களாகி சிந்திக்கொண்டே இருந்தது. அச்சிற்றூருக்கு வெளியே மனிதர்களையோ நிலங்களையோ அவர்கள் பார்த்ததில்லை. ஆனால் மொழி வழியாக அவர்களுக்கு பாரதவர்ஷம் முழுமையும் தெரிந்திருந்தது. அணிகளைப்பற்றி ஆடைகளைப்பற்றி அவர்கள் அவளிடம் உசாவிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு செய்திக்கும் மகிழ்ந்து சிரித்து குலுங்கி மீண்டும் வினாக்களை எழுப்பினர். அணிகளைப்பற்றிய பேச்சில் சலித்து உறவுகளைப்பற்றிய பேச்சுக்கு சென்றனர். அதில் குன்றா ஆர்வம் அவர்களுக்கு எழுந்தது. ஆண்களைப் பற்றித்தான் அவர்கள் கேட்டனர். வீரர்களை, பயணிகளை.

“அங்கே தெற்கு முனையில் கடல் இருக்கிறது” என்றாள் முதலாமவள். “கடலென்றால் இந்தச் சுனைபோல ஆயிரம் மடங்கு பெரிது.” கைகளை விரித்து “அவ்வளவு பெரிது. அதன் முனையில் ஒரு சிறுமியை தெய்வமாக நிறுத்தியிருக்கிறார்கள். மெய்யான சிறுமி அல்ல. முன்பு மெய்யான சிறுமியாக இருந்தாள். அதன் பிறகு அவளை சிலையாக ஆக்கிவிட்டார்கள். அவளை கன்னித்தெய்வம் என்று தொழுகிறார்கள். அந்தத் தெய்வம் எப்படி இருக்குமென்று நான் கேட்டபோது பெரிய கண்களுடன் அஞ்சிய சிறுமி போலிருக்கும் என்று எங்கள் பூசகர் சொன்னார். அவள்தான் வெல்லப்படாத அரசி. ஏனென்றால் அவள் கன்னி” என்றாள்.

அவர்கள் உதவ தேவயானி அரசிக்குரிய ஆடை அணிந்து மணிமுடி சூடி ஒருங்கி வந்தாள். அவர்கள் “சென்றுவிடாதீர்கள் அரசி, இதோ நாங்களும் ஆடை மாற்றி வருகிறோம்” என்றபடி விரைந்து ஓடி தங்கள் குடி முறைப்படி இடைசுற்றி தோளிலிட்ட மான்தோல் ஆடை அணிந்து கல்மாலைகளும் கல்வளைகளும் குலுங்க ஓடி வந்தனர். “நீங்கள் இருவரும் என் அருகே நில்லுங்கள்” என்று தேவயானி சொன்னாள். “ஆம், நாங்கள் உங்கள் அருகே இருக்க வேண்டுமென்று அமைச்சர் சொன்னார். எங்கள் கல்மாலைகளைப் பார்த்துவிட்டு பொன்னணிகள் வேண்டுமா என்றும் கேட்டார். வேண்டாம் என்றோம்” என்றாள்.

“ஏன்?” என்று தேவயானி கேட்டாள். “அவற்றை நாங்கள் அணியலாமா என்று எங்கள் குடிமூத்தார் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் அதைப்பற்றி இன்னும் பேசி முடிக்கவே இல்லை. எந்த ஒரு செய்தியையும் அவர்கள் பேசி முடிப்பதற்கு பல மாதங்களாகும். நீங்கள் அந்த அணிகளை இங்கு கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். அவர்கள் முடிவெடுத்த பிறகு நாங்கள் அணிகிறோம்” என்றாள். “வேண்டாம் என முடிவெடுத்தால்?” என்று தேவயானி சிரித்தபடி கேட்டாள். “அப்படி முடிவெடுத்தால் நான் முதுதந்தையின் முடியைப்பிடித்து உலுக்குவேன். வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா என்ன?”

வெளியே சூதர்கள் தங்கள் இசைக்கலங்களுடனும் அணித்தாலங்களுடனும் காத்து நின்றிருந்தனர். காலையொளி சுழித்தும் வளைந்தும் மின்னும் கவச உடையணிந்த காவலர்கள் படைக்கலங்களுடன் நிரைவகுத்தனர். அவள் கைகூப்பியபடி வெளியே வந்ததும் வாழ்த்தொலிகளும் மங்கலஇசையும் ஒருங்கே எழுந்தன. குருநகரியின் செங்கோலுடன் கவசவீரன் முன்னால் செல்ல கொடிஏந்திய வீரன் தொடர படைக்கலமேந்திய வீரர்கள் நிரைவகுத்து முன்னேகினர். அவர்களுக்குப் பின்னால் தேவயானி இருபுறமும் மலைக்குடிச்சேடியர் தொடர அரசியருக்குரிய நீள்காலடிகொண்ட சீர்நடையில் சென்று மேடையை அடைந்தாள்.

பணிக்குறை தீர்க்கப்பட்டு மலர்களும் மாலைகளும் கொண்டு அணி செய்யப்பட்ட மேடையின் நடுவே தோதகத்தி மரத்தால் புதியதாக செய்யப்பட்ட அரியணை இருந்தது. அவள் அதில் அமர்ந்ததும் முற்றம் முழுக்க கூடிநின்ற குடியினர் கைகளைத் தூக்கி வாழ்த்தி குரலெழுப்பினர். பெண்கள் குரவையிட்டனர். அவர்களை முற்றிலும் புதியவர்களைப்போல அவள் நோக்கிக்கொண்டிருந்தாள் அவ்வாழ்த்தொலிகள் வேறெவருக்கோ அளிக்கப்படுவதுபோல் தோன்றியது. அத்தனை விரைவாக அனைத்திலிருந்தும் தன் உள்ளம் விலகிவிடுமென்று எண்ணியபோது அவளுக்கே விந்தையாக இருந்தது. விலகிநின்று நோக்குகையில் அவை எத்தனை வேடிக்கையாக பொய்யாகத் தெரிகின்றன என்று வியந்துகொண்டாள். அத்தனை அவைகளிலும் முற்றிலும் விலகிய சிலர் இருந்திருப்பார்கள். அவர்கள் முன் இளிவரல்நடிகையாக அமர்ந்திருந்திருக்கிறேன்.

அணிச்சொல் கோத்து அமைத்த வாழ்த்துக்கள் நகைகள் போலிருந்தன. நகைகள் எத்தனை பொய்யானவை! மானுடனின் ஆணவமே நகைகள். எனக்கு மலர் போதவில்லை தளிர் திகையவில்லை என அவன் தெய்வங்களிடம் சொல்கிறான். முகமனுரைகள். உணர்வெழுச்சியால் சொல்லப்படுவனவற்றைச் சேர்த்து உணர்வை நீக்கி அணிமொழிகளென்று ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். பொய்மலர்கள்போல. எவரை புகழ் பாடுகிறார்கள்? மண்ணாளும் அனைவருக்கும் ஒரே புகழ்மொழி என்றால் புகழப்படுவது மண்ணாள்வதென்னும் செயல்பாட்டை அல்லவா? வணக்கமுறைமைகள். நடனங்களிலிருந்து எடுக்கப்பட்ட அசைவுகளை நடனமறியாதோர் நிகழ்த்தும் பகடிக்கூத்து. காணிக்கைகள். இவற்றிற்கு இருமடங்கு தாங்கள் கொள்ளப்போவதில்லை என்றால் இவற்றை எவர் கொண்டுவருவார்கள்? இது விலை. சொல்லில்லா வணிகம். அடிபணிதல்கள். பணிபவன் அதைக்கொண்டு ஆற்றலை ஈட்டி பிறிதொரு இடத்தில் ஆணையிடமுடியும்…

ஒவ்வொரு சடங்காக கடந்து செல்லும்தோறும் அவள் முற்றிலும் விலகி வேறெங்கோ இருந்துகொண்டிருந்தாள். போர்விளையாட்டு பயின்ற இளைஞர்கள் புலிகளையும் சிம்மங்களையும் குரங்குகளையும் கரடிகளையும் நடித்தனர். கலைவிளையாடிய பெண்கள் மான்களையும் மயில்களையும் மரக்கிளைகளையும் உடலில் காட்டினர். மொழி முதிராத தொல்குடியினர் என்பதனால் தலைமுறைகளாக அனைத்தையும் உடலசைவுகளாகவே அவர்கள் காட்ட வேண்டியிருந்தது. நகரங்களில் அவைகளில் நிகழும் பயின்று தேர்ந்த கூத்தரின் நடன அசைவுகளுக்கு இல்லாத இயல்புத்தன்மையும் ஒத்திசைவும் அவர்களின் ஆடலுக்கு இருந்தது. அது விழியசைவுபோல, நா நெளிவுபோல சொல்லெழுப்பும் உடலின் நடனம்.

அவை தொடர்புறுத்தும் சொற்களனைத்தையும் பிரித்தபின் நகரங்களில் நடனத்தையும் போர்க்கலையாடல்களையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் பொருளிழக்க வைத்த பின்னர் அவற்றை கலையென்று பயின்று நுண்மையாக்கிக்கொள்கிறார்கள் போலும். பின் மேலும் மேலும் நுண்மை. மேலும் மேலும் பொருளிழப்பு. அது ஒரு பூசல். தெய்வங்களிடம் அறைகூவுகிறான் மானுடன். நீ அளித்த மூவகை ஊழின் ஆயிரம்கோடி உணர்வுகளை விலக்கி எங்கள் அசைவுகளை தூய்மை செய்துகொண்டிருக்கிறோம். ஒன்பது மெய்ப்பாடுகள். மலையில் ஒரு கல்லை எடுத்து வைத்து தெய்வமெனக் கும்பிடுவதுபோல. இதோ, ஒவ்வொன்றும் பொருளிழக்கிறது. ஒவ்வொன்றும். ஆம், ஒவ்வொன்றும் பொருளிழக்கின்றது.

அச்சொல்லாகவே அவள் நாள் முழுக்க எண்ணச்சுழல் கொண்டிருந்தாள். உச்சிப்பொழுது குடிலுக்கு வந்து உணவுண்டு சற்று இளைப்பாறி தோழியருடன் சொல்பரிமாறி மீண்டும் அரங்குக்குச் செல்லும்போது ஆழம் அச்சொல்லாக இருந்தது.  இரவில் நிகழ்வுகள் முடிந்து குடிலுக்கு வந்து ஆடைகளை மாற்றி அமர்ந்தபோது கிருபர் வந்து தன் நிழல் உள்ளே விழும்படி வெளியே நின்றார். மெல்லிய கனைப்போசையால் அவரை உள்ளே அழைத்து “நாளை புலரியிலேயே நான் கிளம்பவேண்டும், அமைச்சரே” என்றாள்.

“இங்கு நாம் மூன்று நாட்கள் இருப்பதாக சொல்லியிருந்தோம், அரசி” என்றார் கிருபர். “ஆம், ஆனால் நான் சென்றாகவேண்டும். இன்று காலையே நான் கிளம்பவேண்டியிருந்தது. இவர்களின் கலைநிகழ்வுகள் இத்தனை ஒருங்கிணைக்கப்பட்டபின் ஏமாற்றத்தை அளிக்கவேண்டாம் என்றுதான் இங்கு தங்கினேன். நாளை இங்கு வேட்டையும் விருந்தும் மட்டும்தான் அல்லவா?” என்றாள். “ஆம் அரசி, நாளை மறுநாள் முற்றோய்வு. அதன் பிறகு கிளம்புவதாக இருந்தது.” தேவயானி “நன்று! நீங்கள் இங்கிருந்து விருந்தையும் பிறவற்றையும் சிறப்பியுங்கள். நான் கிளம்புகிறேன். எனக்கு இரு புரவிகள் வேண்டும்” என்றாள்.

கிருபரின் விழிகள் எதையும் காட்டவில்லை. “ஆணை!” என்றார். “நான் ஹிரண்யபுரிக்கு செல்வதாக இருக்கிறேன். மாற்றுப் புரவிகளுடன் நான்கு புரவிவீரர்கள் மட்டும் துணை வந்தால் போதும்” என்றாள். “ஆணை!” என்று தலைவணங்கி கிருபர் வெளியே சென்றார்.

tigerசரபஞ்சரத்திலிருந்து கிளம்பியபோது இருந்த விரைவில் குதிமுள்ளால் புரவியை உதைத்து உதைத்து அதன் உச்ச விரைவுக்கு கொண்டு சென்றாள். சிறு செவிகளை பின்னுக்குச் சரித்து, விழிகளை உருட்டி, தலைதூக்கி மூக்கை விடைத்து, மூச்சு சீறி நுரைத்துளிகள் அவள்மேல் முன்மழைச்சாரலோ என தெறிக்க மலைச்சரிவில் கூழாங்கற்கள் உருண்டு சிதற பாய்ந்திறங்கியது புரவி. சிற்றோடைகளை தாவிக்கடந்தது. சேறுபதிந்த சாலைவளைவுகளில் குளம்புகள் உதைத்து பறக்கவிட்ட சேற்றுத்துளிகள் அவள் முதுகில் விழுந்தன. உரக்க கூச்சலிட்டு அதை மேலும் மேலும் தூண்டி மூச்சிரைக்க உடலெங்கும் அனல் பறக்க விரைந்துகொண்டே இருந்தாள்.

உச்சிப்பொழுதில் ஆலமரத்தடியில் சற்றுநேரம் இளைப்பாறியபோது அனைத்து எலும்புகளும் உடைந்து உடலுக்குள் ஒரு குவியலாகக் கிடந்து குலுங்குவதுபோல் உணர்ந்தாள். தொடைத்தசை இழுத்துக்கொண்டிருக்க வலியுடன் பல்லைக் கடித்தபடி நடந்தாள். மரத்தடியில் துணைவீரன் இலைபறித்துப் பரப்பி செய்த மெத்தையில் படுத்தபோது மேலே பசுந்தழைவெளி தலைக்குமேல் குவியம்கொண்டு சுழன்றது. துயின்ற அரைநாழிகைக்குள் உள்ளம் துடித்தெழுந்து அப்பாலென நின்று பொறுமையிழந்து அவளை உலுக்கியது. மீண்டும் பாய்ந்து புரவிமேல் ஏறிக்கொண்டாள். அவளுடன் வந்த காவல் வீரர்கள் மூச்சோசையுடன் மார்பில் தலைகவிந்து துயின்று கொண்டிருந்தனர். அவள் எழுந்து சென்ற ஓசைகேட்ட பிறகே அவர்கள் விழித்தெழுந்து பாய்ந்து புரவிகளில் ஏறிக்கொண்டு அவற்றைத் தூண்டி கூச்சலிட்டபடி உடன் வந்தனர்.

அன்று மாலை வழிவிடுதி ஒன்றில் தங்குகையில் அவள் தோளிலும் கையிலும் தொடையிலும் இழுதசைகள் அனைத்தும் அடிபட்டு வீங்கியவைபோலிருந்தன. எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி அனல் கொண்டு தேய்ந்தவை போலிருந்தன. புரவியிலிருந்து இறங்கிய பின்னரும் புரவியில் இருப்பதுபோலவே கால்கள் அகன்று உடல் அசைவு நீடிக்க அவளால் விடுதியின் படுக்கை அறை வரைகூட நடக்க முடியவில்லை. மரக்கிளைகளை பற்றிக்கொண்டு ஆங்காங்கே நின்று அவள் அச்சிறு மரக்கட்டடத்தை அணுகினாள். அதன் பொறுப்பாளன் தன் மனைவியுடன் அவளுக்காக காத்து நின்றிருந்தான். அவன் வணங்குவதை அறியாதவளாக உள்ளே சென்றாள்.

நீராடாமல் உணவருந்தாமல் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். விடுதிக்காவலன் அவள் ஆணைக்காக வாயிலில் காத்து நின்றிருக்க அவள் அப்படியே துயிலில் ஆழ்ந்தாள். சிறுமியாக எங்கோ சிறு காடு ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்தாள். மூன்று புலிகள் உடனிருந்தன. அவள் சிரித்தபடி ஓடி மல்லாந்து விழ அவள்மேல் கால்வைத்து எழுந்த வேங்கை ஆழ்ந்த கார்வைக் குரலில் “என்னால் உன்னை உண்ணமுடியும்” என்றது. அவள் சிரித்தபடி அதைப் பிடித்து தள்ளினாள். “நான் உண்ணவில்லை என்பதனால் நீ என் உணவல்லாமலாவதில்லை” என்றது அப்பால் நின்ற புலி. பிறிதொன்று “மூவரில் ஒருவர் எப்போதும் மீறவே விழைகிறோம்” என்றது.

அவள் காட்டுக்குள் ஊனுணவின் மணத்தை உணர்ந்தாள். “ஊனுணவு!” என்றாள். “எங்கள் குருளைகளில் ஒன்றைக் கொன்று சமைத்திருக்கிறார்கள்” என்றது இன்னொரு புலி. அவள் விழித்துக்கொண்டபோது ஏவலன் உள்ளே வந்து ஊனுணவை அவள் அறைக்குள் வைத்துவிட்டு அவள் எழுவதற்காக காத்து நின்றிருப்பதை கண்டாள். உணவை பார்த்த பின்புதான் எத்தனை பசி என்று புரிந்தது. ஆயினும் எழுந்து உணவருகே சென்று அமருமளவுக்கு உடலை உந்த முடியவில்லை. அவள் நோக்கியதைக் கண்டு “உணவை படுக்கைக்கு கொண்டு வரவா, அரசி?” என்று ஏவலன் கேட்டான். “வேண்டாம்” என்றபடி கையை ஊன்றி உடலை நெம்பித்தூக்கி துணியால் ஆனவைபோல் துவண்டிருந்த கால்களை மரத்தரையில் ஊன்றி நின்றாள்.

அறை படகென தள்ளாடியது. கண்களை மூடி நிலைகொண்டபின் சென்று பீடத்தருகே அமர்ந்து அவ்வுணவை உண்டாள். முதல் வாய்க்குப் பின் உணவை உள்ளம் மறுக்கத் தொடங்கியது. செலுத்திச் செலுத்தி மீண்டும் சற்று உண்டுவிட்டு எழுந்தாள். கைகழுவிவிட்டு மீண்டும் படுக்கைக்கு வரும்போது மரவுரி விரிக்கப்பட்ட அம்மெத்தை எத்தனை இனியதென்று உளம் மகிழ்ந்தது. இதில் விடியும்வரை படுத்திருக்கப்போகிறோம் என்னும் எண்ணமே இனித்தது. கையால் அதன் மென்மையை அழுத்தி உணர்ந்தாள். சிதையும் புதைகுழியும் சேக்கையென வந்து எப்போதும் உடனிருக்கின்றன. விழுந்து புதைந்துகொள்பவள்போல் தன்னை உள்ளே அழுத்திக்கொண்டாள். ஏவலன் கதவை சாத்தியபடி வெளியே சென்றான்.

அவள் துயிலில் ஆழத்தொடங்கியிருந்தாள். பாய்ந்து செல்லும் புரவியொன்றின்மேல் அப்படுக்கை அமைந்திருந்தது. மலைச்சரிவொன்றில் உச்சவிரைவில் அவள் இறங்கிக்கொண்டிருந்தாள். முதல் புள் ஒலிப்பதற்கு முன்னரே அவள் விழித்துக்கொண்டாள். ஆழ்ந்த துயில் உள்ளத்தை தெளிவடையச் செய்திருந்தது. எழுந்தபோதே முகத்தில் ஒரு புன்னகை இருப்பது தெரிந்தது. கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபின் வெளியே சென்று இருண்ட வானில் தெரிந்த விடிவெள்ளியை நோக்கினாள். அது ஒரு துண்டு இனிமையெனத் தெரிந்தது. நாவால் அதை வருடி அறியமுடியும். முதற்புட்குரல் அதை நோக்கி எழுந்தமைய அது மெல்ல அதிர்ந்தது. புட்குரல்கள் பெருகி எழத்தொடங்கின.

ஏவலன் அவளை அணுகி “ஒளிஎழும்போது கிளம்பிவிடுவோம், பேரரசி” என்றான். “ஆம்” என்று திரும்பி உள்ளே வந்து தன் மாற்று ஆடையை எடுத்துக்கொண்டு நீராடச் சென்றாள். குளிர்ந்த நீர் சிற்றலைகளுடன் கரை தொட்டுக்கிடந்த சுனையில் மென்மணலில் கால் புதைய இறங்கி இடைவரை நீண்டு சுருட்டிக் கட்டியிருந்த குழலை அவிழ்த்து நீட்டிவிட்டு பாய்ந்து மூழ்கி எழுந்தாள். குளிர்நீர் எண்ணங்கள் அனைத்தையும் நனைத்து படியச் செய்தது. மழைக்குப்பின் மணல் அலைகளென சித்தம் மென்மையாக பரவிக்கிடந்தது. ஒரு பறவைச் சுவடுமில்லா மென்கதுப்பு. சுனையின் விளிம்புகளில் இரவெல்லாம் நெளிந்த சுனையின் அலைவடிவுகள்.

சுற்றிலும் மரக்கிளைகளின் விளிம்புகள் தீட்டப்பட்ட வேல்முனைகள், வாள்கருக்குகள், அம்புநுனிகள் என ஒளிகொள்ளத் தொடங்கின. காடு குரங்குகளின் ஒலியால் எக்களித்துக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் புலரி அளிக்கும் நம்பிக்கைதான் மானுடனை வாழ வைக்கிறது. இருத்தல் என்பது இனிமை. அனைத்து துயர்களுக்கும் மாற்று அதுதான். உண்ணுதல், உறங்குதல், நீராடுதல். மரங்கள் நடுவே, ஓடைகளின் அருகே, விண்ணுக்குக் கீழே இனிய காற்றில், நறுமணத்தில், மெல்லோசைகளில் கரைதல். துயரென்பது இருத்தலை மறுத்தல். இருத்தல் பொருளிழந்துபோதல். இருத்தல் இனிமை என உறுத்து வந்து உரைக்கும் இயற்கை ஒன்றே அதற்கு மாற்று.

அப்போது அங்கிருந்தே கிளம்பி எங்கோ அவளுக்கென காத்திருக்கும் அந்த இனிய தவச்சோலை ஒன்றுக்கு சென்றுவிட வேண்டுமென்று தோன்றியது. இப்புவியில் எவரும் அவளுக்கு பகைவர்களில்லையென்பதுபோல, எவரிடமும் கடன்கள் இல்லையென்பதுபோல. எப்போதும் இருந்தது அச்சோலை அவளுக்குள். அவளுக்கு மட்டுமே உரியது. அங்கு ஆண்டு முழுக்க மலரும் கல்யாண சௌகந்திகம் ஒன்று நின்றிருக்கிறது. நினைத்த மணத்தை காட்டும் வானத்து மலர்ச்செடி. அதன் அருகே சிறு குடில் வளைத்தோடும் சிறு இன்சுனை. அங்கு சென்றுவிட வேண்டும்.

அவ்வெண்ணம் எழுந்ததுமே தன் வஞ்சத்தை சிக்கிமுக்கிக் கற்களென உரசி அனலெழுப்பிக் கொண்டாள். இல்லை, இவ்வெறுப்பை ஒருபோதும் அணையவிடலாகாது. என் ஆணவம் எஞ்சவேண்டும். எனக்கிழைக்கப்பட்ட தீங்கிற்கு நிகர்செய்யும் வரையாயினும். மீண்டும் மீண்டும் ஆண்களால் தோற்கடிக்கப்படும் பெண் நான். அவர்களைவிட உயர்ந்தவள் என்பதனாலேயே அஞ்சப்படுகிறேன். நுகர்ந்து துறக்கப்படுகிறேன். நல்லுணர்வால் ஏமாற்றப்படுகிறேன். பெண்ணின் பெருஞ்சினமென்ன என்று இவர்கள் அறியவேண்டும். அது சூதர் சொல்லில் என்றும் வாழவேண்டும். நிகர்செய்யப்படா பழி பெருகும். எரியை எரியே அணைக்கமுடியும் என்பது நெறி.

முந்தைய கட்டுரைகலைஞனின் தொடுகை
அடுத்த கட்டுரைகிளம்புதல் -ஒரு கடிதம்