இந்திய இலக்கியம் என்னும் நவீனச்செவ்வியல் திரண்டு வரும் கூட்டுவிவாதத்தில் எவ்வகையிலும் தமிழ் ஒரு பொருட்டாக எடுக்கப்படுவதில்லை என்பதை முன்னர் இரு கட்டுரைகளில் விரிவாக எழுதியிருந்தேன். [செவ்வியலும் இந்திய இலக்கியமும் , கால்கள் பாதைகள் ]அதற்கான காரணங்களில் ஒன்று நம் பெரும்படைப்பாளிகள் ஞானபீடம் போன்ற தேசிய அளவிலான விருதுக்களை வெல்லவில்லை என்பது.
சென்ற சில ஆண்டுகளாகவே அசோகமித்திரன். கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி ஆகிய மூவரும் ஞானபீடப் பரிசுகளுக்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை நாம் போதிய அளவு முன்னிறுத்தாமையாலும், இங்குள்ள அரசியல் பின்னணி கொண்ட சில வெகுஜன எழுத்தாளர்களின் உள்ளடி வேலைகளாலும் அது தொடர்ந்து தள்ளிப்போகிறது. தமிழுக்கு அது மிகப்பெரிய இழப்பு. இத்தருணத்தில் நாம் செய்யவேண்டியதைச் செய்து ஞானபீடம் தமிழுக்கு வரச்செய்யவேண்டும்.
ஏன் ஞானபீடம்?
ஞானபீடப்பரிசு என்பது ஜெயின் அறக்கட்டளையால் அளிக்கப்படும் ஒரு தனியார்விருது. ஆனால் அது இதுவரை அளிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனேகமாக அனைவருமே முதன்மையான பெரும்படைப்பாளிகள். ஆகவே அவர்களின் தொகையையே இந்திய இலக்கியம் என இந்திய அறிவுலகம் பொதுவாக ஏற்றுக்கொள்கிறது. ஞானபீடப் பரிசுபெறாமையாலேயே நம் முதன்மையான படைப்பாளிகள் இந்திய அளவில் கவனிக்கப்படவில்லை. தமிழுக்கு இந்திய இலக்கியத்தின் செவ்வியல் தொகுப்பில் உரிய இடமும் இல்லாமலிருக்கிறது.
செவ்வியல் என்பது தனிப்பட்ட ரசனைகளும் தேர்வுகளும் ஒரு பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு தொடர்ச்சியான விவாதங்கள் முன்வைக்கப்பட்டு அதன் விளைவாக திரண்டு உருவாகி வந்து நிற்பது. அகவயமான ரசனையிலிருந்தும் தேர்விலிருந்தும் உருவாகி வரும் புறவயமான மதிப்பீடு என்று அதைச் சொல்லலாம். செவ்வியல் உருவாக்கம் தான் ஒவ்வொரு இலக்கியச்சூழலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அறிவுச் செயல்பாடு.
செவ்வியல் ஒரு பண்பாட்டின் அதுவரைக்குமான சாதனையை தொகுத்து அதன் மைய ஓட்டத்தை துலக்குகிறது. அதன் பின்னர் அதிலிருந்து மேலும் எழுந்து செல்லும்படி அடுத்த தலைமுறையை அறைகூவுகிறது. எழுந்து வரும் படைப்புகளை மதிப்பிடுகிறது.
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பண்டைய இலக்கியங்கள் சார்ந்த செவ்வியல் ஒன்று பல நூற்றாண்டுகால இலக்கிய விவாதத்தின் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்திருப்பதைக் காணலாம். தமிழிலும் அத்தகைய ஓர் செவ்வியல்தொகை இன்று நமக்கு உள்ளது. அதில் கம்பனும் வள்ளுவரும் இளங்கோவும் முதன்மை இடம் வகிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
சென்ற நூறாண்டுகளாக நவீன இந்திய இலக்கிய சூழலில் இவ்வாறான ஒரு பொது விவாதம் நடந்து அதன் விளைவாக ஒரு நவீன இந்தியச் செவ்வியல் ஒன்று திரண்டு வந்துள்ளது. அதில் தாரா சங்கர் பானர்ஜியும், மாணிக் பந்தோபாத்யாயவும், விபூதி பூஷன் பந்தோபாத்யாயவும், பிரேம் சந்தும், யஷ்பாலும், அம்ரிதா ப்ரீதம் இஸ்மத் சுக்தாயும், சிவராமகாரந்த்தும், பைரப்பாவும் அனந்தமூர்த்தியும் எம்.டி.வாசுதேவன் நாயரும், பஷீரும். தகழியும் .இருக்கிறார்கள். அதில் தமிழ் படைப்பாளிகளில் எவரும் இடம்பெறவில்லை, ஜெயகாந்தன் பெயர் மட்டும் சொல்லப்படும்.
இந்திய நவீன இலக்கியத்தில் தமிழ் இலக்கியத்தின் அளவுக்கு நுட்பமான படைப்புகள், வெவ்வேறுவகையான புனைவுவெளிகள் பிறமொழிகளில் இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் வங்க இலக்கியமும் மலையாள இலக்கியமும் கன்னட இலக்கியமும் இன்று பெற்றுள்ள அங்கீகாரத்தின் ஒரு துளியையேனும் தமிழ் பெற்றதில்லை. நவீன இந்தியச் செவ்வியல் விவாதங்களில் தமிழின் கொடை என ஏதுமில்லை.
அதற்கான முதன்மையான காரணம் நம்முடைய தகுதியான படைப்புகள் தேசிய தளத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதே. முன்வைக்கப்பட்டவை எந்த வகையிலும் மதிப்பை ஈட்டாத வணிகப்படைப்புகளும் கல்வித்துறைக் குப்பைகளும் தான்.
இவ்வாறாக சென்ற நூறாண்டுகள் நமக்கு நாமே ஒரு பேரிழிவைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவிலான எந்த ஒரு அரங்குக்குச் செல்லும் தமிழ் எழுத்தாளனும் அங்கு தனக்கு ஓர் இடமே இல்லாமல் இருப்பதை, தன்மொழி அங்கு எந்த வகையிலும் மதிப்படாமல இருப்பதை, அந்த மதிப்பின்மையின் ஒரு பகுதியே தனக்குக் கிடைப்பதை உணர்வான். அதே சமயம் அங்கு வந்திருக்கும் அனைவரை விடவும் தனது தகுதி மேலானதென்றும் அவனுக்குத் தெரியும். இந்த உளக்குறுகலைத் தொடர்ந்து நவீன எழுத்தாளன் முன்வைத்துக்கொண்டே இருக்கிறான்.
இச்சூழலில்தான் ஞானபீடம் போன்ற விருதுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
செய்யாப்பிழையும் செய்தபிழையும்
இலக்கிய விவாதங்கள் உருவாகும் விதம். செவ்வியல் திரண்டுவரும் முரணியக்கம் எதையும் அறியாமல் மிக எளிதாக வடவர்களால் தமிழுக்கு விருதுகள் மறுக்கப்படுகின்றன என்று சொல்பவர்கள் இங்கு உண்டு. எதையும் நாம் நம் தாழ்வுணர்ச்சியால்தான் அணுகுகிறோம். ஆகவே உலகமே நம்மை எதிர்ப்பதாக கற்பனை செய்துகொள்கிறோம். முதலில் நாம் நமது படைப்பாளிகளை மதித்து கொண்டாடும்போதுதான் பிறர் அவர்களை மதிப்பார்களா என்ற கேள்விக்கு இடமிருக்கிறது.
சர்வதேச அளவில் நாம் கொண்டு சென்று வைக்க வேண்டிய படைப்பாளிகள் இங்கு எந்த மரியாதையும் இல்லாமல் வாழ்ந்து மறைந்தார்கள் என்பது தான் உண்மை. இங்கிருந்து தான் அவர்கள் எழுந்து தேசிய அளவுக்கும் சர்வ தேசிய அளவுக்கும் செல்ல முடியும். அவர்கள் காலூன்றி நின்றிருக்கும் பீடம் நம் பண்பாட்டுச்சூழல். இதை நாம் அவர்களுக்கென அமைத்து அளிக்கத் தவறிவிட்டோம்.
இதை சென்ற ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் வெங்கட் சாமிநாதனும் சொல்லி வந்திருக்கிறார்கள். இச்சூழலிலும் மீண்டும் அதை வலுவாக சொல்ல வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். ஏனென்றால் அன்று அவர்கள் சொன்னபோது அது எச்சரிக்கை. இன்று அது கண்கூடான பேரிழப்பு.
இரண்டு வகையில் இந்த மாபெரும் துரோகம் தமிழுக்கு இழைக்கப்படுகிறது. ஒன்று கல்வித்துறையால். தமிழக பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளும் சரி, ஒட்டுமொத்தமாக நமது கல்வித்துறையும் சரி, அறிவார்ந்த தகுதியை இழந்து ஊழலை அன்றி எதையும் அறியாதவர்களின் கூட்டமாக மாறிவிட்டிருக்கின்றன. அங்கு அதிகார அரசியலும் சாதி அரசியலும் ஊழலும் அன்றி பிறிதெதற்கும் இடமில்லை என்ற நிலை இருக்கிறது.
ஆகவே எவர் இந்த எதிர்மறை அம்சங்களை பயன்படுத்திக் கொண்டு தன்னை முன்னிறுத்துவதற்கு கல்வித்துறையை பயன்படுத்திக் கொள்கிறாரோ அவர் வெற்றி பெறுகிறார். இக்காரணத்தால் நமது இலக்கிய மேதைகளை நோக்கி கல்வித்துறை வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறது. அங்கு ரசனையும் அறிவார்ந்த தன்மையும் கொண்ட சிலர் இருக்கலாம். அவர்களுக்குக் குரலோ அதிகாரமோ இல்லாமல் இருக்கிறது.
இரண்டாவதாக தமிழக அரசு சென்ற அறுபதாண்டுகளுக்கும் மேலாக எவ்வகையிலும் தமிழ் இலக்கியத்தின் உண்மையான சாதனையாளர்களை மதிப்பதற்கோ ஊக்குவிப்பதற்கோ ஒட்டு மொத்தமாக நவீன இலக்கியத்தை அங்கீகரிப்பதற்கோ முன்வரவில்லை. தங்கள் அரசியலுடன் ஒத்துப்போகிறவர்களை இலக்கியவாதிகளாக முன்வைப்பதை மட்டுமே அவர்கள் செய்துவருகிறார்கள். இந்த இழிந்த போக்கு திராவிட இயக்கத்தில் மட்டும் அல்ல அதற்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் இருந்தது.
மலையாளத்தில் கேரள சாகித்ய அகாடமி என்ற அமைப்பு கேரள அரசால் நடத்தப்படுகிறது. ஆனால் அது ஒரு தன்னிச்சையான இலக்கிய அமைப்பாக சென்ற அறுபது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அளிக்கும் விருதுகள் தேசிய அளவில் கேந்திர சாகித்ய அகாடமியின் விருதுகளை வழிநடத்தும் தன்மை கொண்டிருக்கின்றன. கேரள அரசு அளிக்கும் இந்த கௌரவமும் முக்கியத்துவமும் ஏதோ ஒரு வகையில் தேசிய அளவில் எழுத்தாளர்களை மேல் கொண்டு முன்நிறுத்துகிறது.
இவ்வாறு அரசுசார்ந்த ஒர் அமைப்போ ஒரு விருதோ தமிழில் இல்லை. இங்கு இலக்கியத்துக்கு இருப்பது தமிழ் வளர்ச்சிக்கழக விருதுகள். அவை கிட்டத்தட்ட ஏலமிடப்பட்டு பெறும் நிலையில் இருக்கின்றன. அரசியல் எடுபிடிகளான ஏடறியாக் கும்பலுக்கு அளிக்கப்பட்ட அவ்விருதுகளை பெறுவதே இழிவு என்னும் மனநிலை படைப்பாளிகளிடம் உருவாகிவிட்டிருக்கிறது.
சென்ற காலங்களில் தமிழ் வளர்ச்சிக்கழக விருது பெற்றவர்களின் பட்டியலை நீங்கள் எடுத்துப்பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்ற சந்தேகம் வரும். தமிழ் இலக்கியத்துக்காகக் கூச்சலிடுபவர்கள் செம்மொழிக்காக கோடிக்கணக்காக நிதி பெற்றவர்கள் என்ன செய்தார்கள், எவரை முன்னிறுத்தினார்கள் என்று பார்த்தால் தெரியும் நாம் எங்கிருக்கிறோம், நமது அவலநிலையின் ஊற்று என்ன என்று.
மூன்றாவதாக இங்கிருக்கும் ஊடகங்கள். சென்ற பலகாலங்களாக நாம் வணிக ஊடகங்களில் எழுதும் வணிக எழுத்தாளர்களையே இலக்கிய வாதிகளாக முன்நிறுத்தும் ஒரு பேதைத்தனத்தை செய்து கொண்டிருந்தோம். மலையாளத்திலும் கன்னடத்திலும் வங்கத்திலும் இவர்களைவிட பலமடங்கு ஆற்றலும் செல்வாக்கும்கொண்ட வணிக எழுத்தாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் எழுதிய பத்திரிக்கைகளேகூட எம்.டி.வாசுதேவன் நாயரையோ அனந்தமூர்த்தியையோ அதீன் பந்த்யோபாத்யாயோவையோதான் முன்நிறுத்துவார்கள்
வணிக அளவிலும் இந்தியாவின் முதலிடத்தில் இருக்கும் வெகுஜன இதழான மலையாள மனோரமா வார இதழ் கூட அதிலெழுதும் வணிக எழுத்தாளர்களின் படங்களை அட்டையில் வெளியிட்டதில்லை. எம்.டி.வாசுதேவன் நாயரையும் ஓ.வி.விஜயனையும்தான் வெளியிட்டது. இந்தச் சிறு வேறுபாடு நமது ஊடகங்களுக்கு இல்லாத காரணத்தால்தான் திரும்ப திரும்ப வணிக எழுத்துகளை இலக்கியமென முன்நிறுத்திக் கொண்டாடினோம். இந்திய இலக்கியச் சூழலுக்கும் அவர்களைக் கொண்டு சென்று நிறுத்தி நம்மை நாமே இழிவுசெய்தோம்.
செய்யவேண்டியது என்ன?
தேசிய அளவிலான விவாதங்களில், இந்திய செவ்வியல் தொகையில் தமிழிலக்கியம் இடம்பெற நாம் செய்ய வேண்டியதென்ன? நம் படைப்பாளிகளை முன்னிறுத்துவதற்கான வழி என்பது தேசிய விருதுகளை வெல்வதே. அதற்கான வழி என்ன?
ஓர் இலக்கிய மேதை அச்சமூகத்தில் பரவலாக அறியப்படுவது முக்கியமானது. அவரது வாசகர்கள் மட்டும் அறிந்தால் போதாது. அச்சமூகத்தில் வாசிக்காதவர்களாலும் அறியப்பட்டிருக்க வேண்டும். அவர்களைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்தமான கருத்தை அச்சமூகம் தொகுத்து உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறுதான் அவர் ஒரு பண்பாட்டு அடையாளமாக மாறுகிறார். அந்த மொழியின் பதாகையாக அவர் ஆகிறார். அதன் பிறகுதான் அவருக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் வருகிறது. இந்திய இலக்கிய விவாதங்களில் தமிழ் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மை அவருக்கு வருகிறது. ஞானபீடம் போன்ற விருதுகள் அவரைத் தேடி வருகின்றன.
தமிழகத்தில் ஓரளவுக்கு அறிவார்ந்த துறைகளுக்குள் நுழைந்தவர்களிலேயே எத்தனை பேருக்கு தமிழகத்தின் இலக்கிய மேதைகளின் பெயர்கள் தெரியுமென்று பார்த்தால் வருத்தமாக இருக்கும். இன்று அசோகமித்திரனையோ கி.ராவையோ இந்திரா பார்த்தசாரதியையோ நமது இளைஞர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?
கர்நாடகத்தில் ஒரு சின்னக் கிராமத்தில் ஆரம்பப்பள்ளி சுவரில் இலக்கிய மேதைகளின் படங்கள் வரையப்பட்டிருப்பதை பார்த்தேன். இந்தப் படத்தால் என்ன பயன் என்று கேட்கலாம். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் எவரும் இலக்கிய மேதைகளின் நூல்களை உடனே வாங்கி படிக்கப்போவதில்லை. அங்கும் அந்த இலக்கிய மேதைகளின் நேரடி வாசகர்கள் எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் சீரிய இலக்கியம் அதற்கான அறிவுத்தகுதியும் பயிற்சியும் பொறுமையும் தேடலும் கொண்டவர்களால்தான் வாசிக்கபப்டும். ஆனால் அந்த ஒட்டு மொத்த சமுதாயமும் தங்களுடைய பண்பாட்டு அடையாளமாக தங்களுடைய குரலாக அந்த எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறது என்பதுதான் அந்த ஓவியங்களின் பொருள்.
அவ்வாறு அவர்கள் எழுந்து வந்தபின் அவர்களை எந்த தேசிய விவாதத்திலும் உதாசீனம் செய்துவிடமுடியாது. அவர்களுடைய இடம் இந்திய பண்பாட்டு வெளியில் இந்திய செவ்வியல் தொகையில் எப்போதும் உறுதி செய்யப்படுகிறது.
இதைத் தான் நாம் செய்யத் தவறிவிட்டோம். இன்னும் சொல்லப்போனால் இங்கு படித்தவர்கள் விவரம் அறிந்தவர்களிடம் கூட இப்படி ஒரு விஷயம் உண்டு என்பதைச் சொல்லி புரிய வைப்பது கடினமாக இருக்கிறது. ‘கி.ரா. ஒருவகையில் எழுதுகிறார், அசோகமித்திரன் இன்னொரு வகையில் எழுதுகிறார், இந்திரா சௌந்தரராஜனும் ராஜேஷ்குமாரும் இன்னொரு வகையில் எழுதுகிறார்கள். எல்லாமே எழுத்துதானே, சுவாரசியமானதை படிக்கவேண்டியதுதானே?” என்று வாதிடும் மொண்ணைக் கூட்டம்தான் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறது. இந்த மொண்ணைகளை வென்றுதான் நாம் உலகமெங்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு அடிப்படை மனநிலையை இங்கு நிறுவ வேண்டியுள்ளது.
ஞானபீடம் எனும் அரசபாதை
முதன்மைப் படைப்பாளி ஒருவருக்கு ஞானபீடம் அளிக்கப்படும்போது அவருடைய படைப்புகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்குமென்றால் இந்திய இலக்கியம் என்னும் விவாதத்திற்குள் அவர்கள் சென்று சேர்கிறார்கள். விவாதங்கள் வழியாக அவருடைய இடம் அங்கு அமைகிறது. அவ்வாறுதான் தமிழின் இடம் இந்திய நவீன இலக்கியச் செவ்வியலில் வென்றெடுக்கப்படமுடியும்.
ஆனால் பரிசுபெறுபவர் தகுதியான படைப்பாளி என்றால் மட்டுமே இது நிகழும். ஞானபீடம் பெற்றதனால் அகிலன் மேலும் இழிவுக்குள்ளாகி பிறமொழிகளில் எள்ளிநகையாடப்பட்டு தமிழுக்கும் இழிவைக் கொண்டுவந்தார். ஒருவேளை முயற்சிகள் வென்றால் மேலும் இழிவைக் கொண்டு வருவதனூடாக வைரமுத்து அகிலனை பரவாயில்லை என ஆக்கிவிடக்கூடும். ஞானபீடவிருதுகளில் இதுவும் அபூர்வமாக நிகழ்கிறது. சிறந்த இன்னொரு உதாரணம் அசாமிய நாவலாசிரியரான இந்திரா கோஸ்வாமி. நம்மூர் சிவசங்கரியைப்போன்றவர் அவர்.
இன்று வரை இந்திய நவீன இலக்கியச் செவ்வியல் தொகை சார்ந்த விவாதங்களில் தமிழில் வெகுஜன வாசிப்பு எழுத்தும் மார்க்ஸிய நோக்கு கொண்ட வெகுஜன எழுத்தும் மட்டுமே உண்டு என்றும் அதற்கப்பால் தமிழில் நவீன இலக்கியம் எதுவும் இல்லை என்றும்தான் சொல்லப்படுகிறது. என்னிடமே என் ஒரு சிறுகதையை வாசித்துவிட்டு “ஆச்சரியம், தமிழில்கூட இப்படி எழுதுகிறார்கள்” என்றார் ஒரு வங்க விமர்சகர். ‘நீங்கள் எவரை வாசித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அகிலன், சிவசங்கரி, நா.பார்த்தசாரதி என்றார்.
லா.ச.ராமாமிருதமும், சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனும், கி.ராஜநாராயணனும் இந்திரா பார்த்தசாரதியும் ஞானபீடம் வென்றிருந்தார்கள் என்றால் இந்த வினா எழுந்திருக்காது. தமிழில் வெவ்வேறு வகையான இலக்கிய மரபுகள் இருக்கின்றன என்று தேசிய அளவில் மறுக்க முடியாதபடி நிறுவப்பட்டிருக்கும். பல அரிய வாய்ப்புகளை நாம் தவறவிட்டுவிட்டோம். இன்றிருக்கும் முதன்மை வாய்ப்பு கி.ராஜநாராயணன். அடுத்து இந்திரா பார்த்தசாரதி.
.
ஏன் கி.ரா?
இத்தருணத்தில் நாம் முழுமையாக முயன்று கி.ராவை முன்னிறுத்துவது மிகமிக இன்றியமையாத ஒரு செயல். கி.ராஜநாராயணன் முறைப்படி முன்னிறுத்தப்பட்டால் எளிதாக ஞானபீடம் வெல்வார். அதற்கான காரணங்கள்
- அவரது எழுத்து முற்றிலும் தமிழ்த்தன்மை கொண்டது. நாட்டாரியலையும் நவீன இலக்கியத்தையும் இணைப்பது. அந்தத் தனித்தன்மை கவனிக்கப்படும்.
- எளிமையான நேரடியான நடையும் கூறுமுறையும் மொழியாக்கத்தில் பெரிய இழப்புகள் இல்லாமல் அவருடைய படைப்புக்களைக் கொண்டுசென்று சேர்க்கும் மேலும் அவர் கதைகள் கதை என்னும் வடிவத்தை கொண்டிருப்பதனால் மொழியாக்கத்தின் குறைவுகளை கடந்தும் நிற்கும்
- இந்திய அளவில் ‘முற்போக்கு’ என்னும் அம்சம் முக்கியமாக கருதப்படுகிறது கி.ரா கதைகள் முற்போக்கு உள்ளடக்கம் கொண்டவை
- கி.ரா கதைகள் காலம் கடந்த தன்மை கொண்டவை. அவை கொண்டுள்ள ‘நாட்டார்கதை’ என்னும் வடிவமே அதற்குக் காரணம். அறிவியக்கங்களுடன் இணைந்து எழும் கதைகளைப்போல அவை பழைமை கொள்ளவில்லை.
கி.ராவுக்கு ஞானபீடம் அளிக்கப்படும் என்றால் அதன் நன்மைகள் என்ன?
கி.ராவுக்கு அதனால் பெரிய நன்மை இல்லையென்றே நினைக்கிறேன். அந்தப்பணம் கூட பெரிய அளவில் அவருக்கு இன்று உதவாது. அவரைப்போன்று முதிய வயதில் இருக்கும் ஒருவருக்கு அங்கீகாரங்களும் புகழும் பொருளற்றுப்போய் நெடுங்காலமாகியிருக்கும். ஒரு பிரியமான சிரிப்புடன் அவர் ஏற்றுக்கொள்ளக்கூடும் அவ்வளவுதான்.
அவருக்கு விருதளிப்பதன் மூலமாக நாம் தமிழை ஒரு தேசிய அளவிலான விவாதத்தின் முன்னால் கொண்டு நிறுத்துகிறோம். அவர் எழுதிவரும் தனித்துவமான எழுத்து தமிழின் அடையாளமாக அங்கு சென்று சேரும். நாளை இந்திய இலக்கிய விவாதங்களில் கி.ராஜநாராயணனைப்பற்றி பேசும் போது அவ்வகையான ஒரு எழுத்து முறை தமிழில் இருப்பதை நாம் அடையாளப்படுத்த நேரும்.
கி.ரா.வின் எழுத்து இந்திய அளவில் ஞானபீடம் வழியாக சென்று சேரும் என்றால் கி.ரா எழுதிய ஒரு வகையான அழகியல் தமிழ் அடையாளமாக நிறுவப்படுகிறது. நாட்டார் பண்பாட்டிலிருந்து நவீன இலக்கியத்துக்கான ஒரு இணைப்புச் சாலை அது. முழுக்க முழுக்க நவீனத்துவ படைப்பாகவும் அதே சமயம் முழுக்க முழுக்க இந்திய தொன்மையான நாட்டார் மரபில் வேரூன்றியதாகவும் இருக்கும்.
கோபல்ல கிராமம் நாட்டார் மரபில் நின்று கொண்டே நவீன வரலாற்றை அணுகும் [அடைப்பு. கோபல கிராமத்து மக்கள் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தின் பின்னணியில் அங்குள்ள வாழ்க்கையைக் கொண்டே இந்தியாவின் அனைத்து பண்பாட்டு அசைவுகளையும் மதிப்பிடும் ஆக்கம். அவருடைய வலுவான சிறுகதைகள். நம்முடைய நாட்டார் மரபையும் அதிலிருந்து நவீன இலக்கியம் பெற்றுக் கொண்ட உயிர்த் துடிப்பையும் தேசிய அளவில் கொண்டு சென்று நிறுத்துபவை. நாட்டார் மரபு சார்ந்து எழுதக்கூடிய ஒரு எழுத்தாளரின் பட்டியல் போன்ற ஒரு விவாதம் வரும்போது சந்திர சேகர கம்பார் போல கி.ராவின் பெயரும் அதில் தவிர்க்க முடியாதபடி இடம் பெறும்.
.
வழிமுறைகள்
ஞானபீடம் என்பது கெஞ்சியோ கேட்டோ பெறுவது அல்ல. பெறுபவரின் தகுதி ஐயத்துக்கிடமின்றி அவர்களைச் சார்ந்தவர்களால் நிறுவப்பட வேண்டும். பலமுறை அசோகமித்திரனுக்காக இந்த முயற்சிகளை எடுத்தவன் என்ற முறையில் அதற்கான தேவைகளை இப்போது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
ஒன்று:- நமது கல்வித்துறை சார்ந்து கிராவுக்காக குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு கருத்தரங்குகள் நடத்தப்படவேண்டும். அவை தேசிய அளவிலான கருத்தரங்குகளாக இருக்குமென்றால் மிக நன்று. கன்னடத்திலும் மலையாளத்திலும் வங்கத்திலும் இந்தியிலும் இருந்து முக்கியமான படைப்பாளிகள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கு கி.ராவை மிக எளிதாக தேசிய அள்வில் கொண்டு நிறுத்தும்.
இரண்டு:- அவருக்காக மூன்றோ நான்கோ மலர்கள் போடப்பட வேண்டும். அந்த மலர்களில் அவரைப்பற்றி வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதக்கூடிய கட்டுரைகள் இடம் பெற வேண்டும். பல்வேறு வாழ்க்கையின் பகுதிகளைச் சார்ந்தவர்கள் எழுதும் கட்டுரைகள் இடம் பெறலாம். அம்மலர்கள் ஆங்கிலத்திலும் அமையவேண்டும்
மூன்று:- அவர்களுடைய படைப்புகளின் சரியான ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாக வேண்டும். அந்நூல்களைப்பற்றி தொடர்ச்சியான கட்டுரைகள் ஆங்கில இதழ்களில் வெளிவர வேண்டும். இந்தியிலும் அவரைப்பற்றிய கட்டுரைகள் வெளிவர வேண்டும். ஒரு ஆண்டுக்குள் குறைந்தது பத்து அல்லது இருபது கட்டுரைகள் அவரைப்பற்றி எழுதப்படவேண்டும்.
இது மிகக்கடினமானது. ஏனெனில் தமிழகத்தில் வெளிவரும் ஆங்கில நாளிதழ்களான தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை தமிழ் எழுத்தாளர்களை மிக இளக்காரமான பார்வையுடன்தான் பார்க்கின்றன. நாலாந்தர ஆங்கில வணிக எழுத்துக்களை நமது தலையில் கட்டுபவர்கள் நமது படைப்பாளிகள் எவ்வகையிலும் வெளியே செல்ல உதவுவதில்லை. ஆயினும் அவர்களை நயந்தோ கெஞ்சியோ எவ்வாறாயினும் கிராவைப்பற்றி கணிசமான அளவு கட்டுரைகள் எழுதப்படவேண்டும்.
தி ஹிந்து எந்த வகையிலும் அதற்கு ஒத்துழைக்காது என்பது உண்மை. ஆனால் வடக்கிலிருந்து வரும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பயனீர் போன்ற பத்திரிக்கைகள் இலக்கியத்திற்கான இடத்தை அளிக்கக்கூடியவை. ஒரு காலகட்டத்தில் வெங்கட் சாமிநாதன் ஆங்கிலத்தில் வரக்கூடிய பயனீர் போன்ற நாளிதழ்களில் தமிழில் உள்ள எழுத்தாளர்களைப்பற்றி தொடர்ந்து எழுதி வேறொரு வகையான எழுத்து இங்கு இருக்கிறது என்பதை ஓரளவு நிறுவ முடிந்திருக்கிறது. அந்தப்பாணியில் எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இன்று நமக்குத் தேவை.
சென்ற தலைமுறையில் எழுதிய இங்கிருந்து சென்று தேசிய அளவில் பேசியவர்கள் இலக்கிய நுண்ணுணர்வற்றவர்களும் சுயமுன்னேற்ற அரசியல் தந்திரசாலிகளுமான கல்வியாளர்கள் மட்டுமே. அவர்கள் தங்கள் வெற்றிகளை அன்றி எதையும் பொருட்டாக எண்ணவில்லை. இன்று உருவாகி வரும் இளைய தலைமுறையில் ஆழமான நடையில் ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிராவையும் தமிழ் இலக்கிய மேதைகளையும் குறித்து ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக எழுத வேண்டும்.
இவை நிகழுமென்றால் அதன் பிறகு கிராவை நாம் ஞானபீடம் போன்ற விருதுகளுக்குக் கொண்டு சென்று சேர்க்க முடியும். கிராவின் இடம் இந்திய இலக்கியத் தொகையில் மறுக்க முடியாதபடி நிறுவப்பட்டுவிட்டபின் அவருக்கு ஞானபீடம் கொடுத்தே ஆகவேண்டும்.
இப்போதும் பிந்தி விடவில்லை. கிரா நம்முடன் இருக்கிறார். கிராவுக்காக இந்த விருதை வென்றெடுக்கவேண்டும் என்பது நமது கடமை நமது கல்வியாளர்கள் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் சற்றே மனம் வைக்கலாம் அவர்களில் இன்னமும் கூட அடிப்படை ரசனையும் குறைந்த பட்ச மனசாட்சியும் தமிழ்ப்பண்பாட்டு ஆர்வமும் கொண்டவர்கள் சிலர் உண்டு என்று நான் நம்புகிறேன். அந்நம்பிக்கையில் இந்த வார்த்தைகள்.