கிளம்புதல் -ஒரு கடிதம்

suresh

அன்புடன் ஆசிரியருக்கு

எழுந்து அமர்ந்திருக்கிறேன். இன்னும் அண்ணனோ அம்மாவோ அப்பாவோ எழுந்திருக்கவில்லை. கிருட்டிகள் (சீவிடுகள்?) இன்னும் உயரழுத்த மின் கம்பியின் ஒலியை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரேயொரு நார்த்தங்குருவி தொடர்ந்து தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது. சீனு அண்ணனின் கிளம்புதலும் திரும்புதலும் பதிவினைப் படித்த கொந்தளிப்பு அடங்கவே இல்லை. எல்லா அம்மாவும் இப்படித்தானா?

நான்காண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த என் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு அப்பாவை கட்டாயம் வரக்கூடாது எனச் சொல்லி சண்டை போட்டேன். ஆயிரம் பேருக்கு நடுவே எந்த முக்கியத்துவமும் இல்லாமல் அமர்ந்திருந்து அந்த கெட்டித்தாளை யாரோ ஒருவர் கையில் இருந்து வாங்குவதை அவர் பார்க்கக்கூடாது என்று தான் அப்போது தோன்றியது. ஆனால் அப்பா வந்தார். பிடிவாதமோ மூர்க்கமோ ஏதோவொன்று உந்த அவர் வந்திருந்தார். என் நண்பன் முத்து குமரன் எங்கள் இருவரையும் புகைப்படம் எடுத்தான். நேற்று முழுக்க அந்த படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் வாக்கியமே இதுதான். “இந்த ஊரவிட்டு ஓடிப்போயிடணும். ஜென்மத்துக்கும் திரும்பக்கூடாது.”

என் வீட்டையும் ஊரையும் விட்டு ஓடவே முயன்று கொண்டிருக்கிறேன்.ஏதோவொன்று தடுக்கிறது. ஒருவேளை கூட நான் அங்கு இல்லையென்ற குற்றவுணர்வு இல்லாமல் ஒரு நல்ல உணவை அவர்களால் சாப்பிட முடிவதில்லை. எனக்கு உடனே அழைப்பு வரும். ஏதாவது நல்ல உணவகத்தில் சாப்பிடு எனச்சொல்லி. எனக்கு அது போன்ற சமயங்களில் கோபம் தான் தலைக்கேறும். புரிந்து கொள்ள முடியாத ஏதோவொன்று என் வீட்டுக்கும் எனக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறது. திருப்பி செலுத்த முடியாத ஏதோவொரு பெருங்கடனை (பிறவிக்கடனோ?)வலுக்கட்டாயமாக என் வீடு எனக்கு அளித்திருக்கிறது. அண்ணனை கேட்டதாகச் சொல்லுங்கள்.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–84
அடுத்த கட்டுரைதியடோர் பாஸ்கரன் – ஒரு கடிதம்