குறளில்.. கடிதம்

kural

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். வயது 67 முடிந்துவிட்டதால் இரவு 6 மணிநேரமே தூக்கம். நேற்று இரவு 2 மணிக்கு விழித்துக் கொண்டுவிட்டேன்.

‘குறளினிது’ காணொலியை மீண்டும் கேட்டேன்/ பார்த்தேன்.

செல்விருந்து, வருவிருந்து பற்றிய விளக்கம், அதற்குக் கூறிய வாழ்க்கை உண்மை நிகழ்வு ஆகியவை மனதைக் கவர்ந்ததுடன், சிந்திக்கவும் தூண்டின.

பிராமணர் வீட்டுத் திருமணங்களில் மறுநாள் மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பி வைக்கும் போது கட்டுசோறு (கட்டுசாதக் கூடை) கட்டி அனுப்புவார்கள்.புக்ககம் செல்லும் பெண் ‘பத்தோடும் (பற்றோடும்) பசையோடும் (பாசத்துடனும்) சென்று சேரவேண்டுமாம.அந்த கட்டுசாதக் கூடையை வெண்துணியால் சுற்றிக்கட்டும் பழக்கம் உள்ளது.இப்போதெல்லாம் பிளாஸ்டிக் வாளிகளில் உணவினை இட்டாலும், அதையும் வெண்துணியால் கட்டுகிறார்கள்.

நீத்தார் கடன், திவசத்திலேயும் ‘பாதயம்’ அளித்தல் என்பது ஓரு சடங்கு.அதிலும் தயிர் சாதத்தினை ஒரு வெண்துணியில் பொதிந்து ஒரு சவுண்டி பிராமண‌னுக்கு தட்சணையுடன் அளிக்கும் வழக்கம் உள்ளது. பாதசாரி, வழிப்போக்கர்களுக்கு (செல் விருந்து?) அளிப்பது தான் பாதயம்?!பாதயம் பெற்றுக்கொண்டவனுக்கு வீட்டினுள் அமர்ந்து உணவுண்ண உரிமையில்லை!!!

அதிதி என்ற சொல்லே திதி குறிப்பிடாமல் திடீரென வரும் விருந்தினரைக் குறிக்கிறது. அதிதிதான் வருவிருந்தும், செல்விருந்தும்.

“அதிதிதேவோபவ!’என்ற வேத மந்திரத்தின் உள்ளுறைப்பொருள். டார்ஜிலிங்கில் பூனைக்கறியும், மீன் சோறும் கொடுத்த தாயின் உள்ளத்தில் ஊறியிருப்பது. அதுவே இத்தாய்த் திருநாட்டின் ஆன்மா!

அன்புடன்,

கே.முத்துராமகிருஷ்ணன்.

***

ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண

குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
அடுத்த கட்டுரைஏழாம் உலகம் – கடிதம்