அன்புள்ள ஜெ,
என் கல்லூரி நண்பனிடம் விவேகானந்தர் குறித்து அவ்வப்போது பேசுவதுண்டு. மிகத் துடிப்பான, கூர்மையான அறிவும் நகைச்சுவை உணர்ச்சியும் கொண்டவன். ஒரு நாள் சுவாமிஜியின் ‘திறந்த ரகசியம்’ சிறு நூலை அவனிடம் வாசிப்பதற்காக அளித்தேன். ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என பின்னர் தான் தெரிந்தது. தர்க்கம் திகைத்து முன்னகர இயலா இடங்களை சுட்டி வேதாந்தம் எவ்வாறு அங்கிருந்து முன் செல்கிறது என சுவாமிஜி அழகாக விளக்கியிருப்பார்.
இளமை கொந்தளிக்கும் மனம் அவ்வாறான ஒரு முற்றிலும் புதிய கருதுகோளை சந்திக்கையில் ஏற்படும் மனக்கிளர்ச்சியும் ஆர்வமும் சொல்லற்கரியவை. ஆனால் அவனோ பலமாகக் குழம்பிப் போனான். தர்க்கம் அளிக்கும் தெளிவின் எல்லை தெரிந்து விட்டாலும் அதிலிருந்து அவனால் முன்னகர இயலவில்லை. மெல்ல அது நிகழ்வாழ்விலும் எதிரொலிக்க ஆரம்பித்து அனைத்திலும் ஆர்வமிழக்க ஆரம்பித்தான். ஒரு முழுமையான செயலின்மைக்குள் சென்றான். சாமான்யம் – விஷேசம் என்னும் வகைப்பாட்டை பலவகையில் சொன்னாலும் அவனால் அதை அறிய முடியவில்லை.
பொறியியல் கல்லூரிகளில் படித்து முடிக்கும் முன்பே வேலை பெறுவது பத்தாண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரண நிகழ்வு. கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அது தான் ஆதாரம். வேலை கிடைக்காவிட்டால் பெரும் அவமானமும் வசையுமே மிஞ்சும். மூன்றாம் ஆண்டு இறுதியிலேயே நாங்கள் அனைவரும் வேலைக்கான ஆணையை பெற்றுவிட்டாலும் அவனால் ஒரு நேர்முகத் தேர்விலிருந்தும் வெற்றி பெற இயலவில்லை. ‘அந்த புக்கை படிச்சததுக்கு அப்புறந்தான் இவன் இப்படி இருக்கான்’ அவன் அப்பா என்னிடம் சொன்னார். அது உண்மை. பிறகு அவன் தொடர்பில் இல்லை. ஆனால் பத்தாண்டுகளுக்கு பிறகு இப்போது விசாரிக்கையில் அவன் மிகுந்த அலைச்சலுக்குப் பின் வேலை, குடும்பம் என அமைந்து விட்டான் என அறிகிறேன்.
ஏன் அவன் அப்படிக் குழம்பிப் போனான் என பல நாள் யோசித்திருக்கிறேன். ஒரு நாள் உங்களின் கீதா முகூர்த்தம் கட்டுரையில் இருந்த ஒரு வரி – ‘நோயில்லாதவனுக்கு அளிக்கப் படும் மருந்து நோயையே உண்டாக்கும்’ அதற்கான ஒரு விடையை அளித்தது. அகஒருமை கலைக்கப்பட்டவுடன் அவன் ஆற்றல்கள் அனைத்தும் சிதறிவிடுகின்றன. அப்போது அதுவரை கட்டிலிருந்த உணர்ச்சிகள் பலவகையில் பீறிடும்போது அதைக் கட்டுப்படுத்த இயல்வதில்லை. நாம் அறிந்தே நம்மை மீறி செல்கிறோம். தன்னிலிருந்து தான் விலகி நின்று மனத்தை அவதானிக்கும் முறையான ஒழுக்கப் பயிற்சிகள் இல்லையென்றால் முற்றாக குழம்பிப் போய்விடுவதும் சாத்தியமே. மிக ஆபத்தான சுழற்சி இது.
பிறகு ஞானம் என்றால் என்ன? தன்னம்பிக்கையின், தன்ணுணர்வின் உச்சியில் நின்று தன்னையும் உலகையும் அவதானித்து அடைவதே ஞானம் என்றால், தன்ணுணர்வு எல்லைக்குட்பட்டது. எல்லையற்ற உலகை எல்லைக்குட்பட்ட அறிவால் வரையறைகள் இல்லாமல் எதிர்கொள்ள இயலாது. ஆனால் வரையறைகள் வகுக்கப்பட்ட கணமே விதிவிலக்குகளும் தோன்றி விடுகின்றன. பிறகு, இந்த பிரம்மாண்டத்தில் நாம் துளியினும் மிகச் சிறுதுளி என்னும் அறிதல் வருகையில் – நம்மைப் பற்றியே நமக்கு எதுவும் தெரியாது என்னும்போது – நேர் எதிரான- உணர்வு நிலைக்குச் செல்கிறோம். ஆனால் அதுவும் முழுமையானது அல்ல.
இறுதியாக இந்த இரு நிலைகளுக்கிடையில் ஊசலாடி, ஒரு சமநிலையை அடைகையில் உண்மையான பயணம் தொடங்குகிறது. இந்தப் பயணத்தில், முக்கியமாக பயணத்தை துவங்குவதற்கே கீதை ஒரு மகத்தான துணைவன்.
ஈராறு கால்கொண்டெழும் புரவி குறுநாவலை வாசிக்கும்போது இதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். ‘எங்கும் வெள்ளப் பெருக்கு நிறைந்திருக்கையில் ஏரி நீரால் என்ன பயனோ அதுவே உண்மையை அறிந்த சான்றோனுக்கும் வேதங்களினால் கிடைக்கும் பயன்’ என்னும் கீதை வரிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஞானமுத்தனும் நாடாரும் இயல்பாக முன்செல்லும்போது பிள்ளையால் செல்ல முடியவில்லை. சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறார். தற்போதத்தின் உச்சியிலேயே இருப்பதனால், தனக்குரிய வழியை தேர்ந்தெடுக்காது இரவல் வழியில் செல்வதனால் ஏற்படும் தோல்வியே அவருக்கும் நிகழ்கிறது. இறுதியில் தனக்கு வேண்டியது ஞானமல்ல என்னும் தெளிவையே அடைகிறார்.
இ.ஆர்.சங்கரன்
ஈராறுகால்கொண்டெழும் புரவி – விமர்சனம்
***