கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு

C360_2016-05-06-12-37-25-417

இனிய ஜெயம்,

இன்றும் வழமை போல நான் சட்டை மாட்டுகையில் அம்மா மின்விசிறியை அணைத்தார்கள். பல வருட பழக்கம் அது அவர்களுக்கு. அவர்கள் என் பக்கம் நின்றால் இதை செய்யாமல் இருக்க மாட்டார்கள். முன்பு ஒரு சமயம் சட்டை மாட்ட கையை உயர்த்தி மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியில் விரல்கள் தட்டி, விரல்கள் வீங்கி ஒரு ஐந்து நாள் வலது கையால் புத்தகம் தூக்கவோ எழுதவோ இயலாமல் இருந்தேன்.

இன்று இக்கோடையில் சில நிமிட விசிறியின் ஓய்வு கூட என் வீட்டை கங்கு மேல் போர்த்திய சாம்பலின் வெம்மைக்கு அழைத்து சென்றுவிடும். அம்மாவைப் பார்த்தேன். நான் சட்டையை மாற்றியதும் விசிறி சுவிட்சைப் போட அதன் அருகிலேயே நின்றிருந்தார்கள். உள்ளே ஏதோ பொங்க, சட்டென கிளம்பி வெளியேறினேன்.

ஒவ்வொருமுறையும் வெளியேறித்தான் செல்கிறேன். அம்மாவை விட்டு. முந்தாநாள் என் தங்கை மகனை உக்காந்து படிடா என்றேன். அம்மா குறுக்கிட்டு ”அம்மா உன்னைய என்னைக்காவது படின்னு சொல்லிருக்கேனா? ஆனா பாரு இப்போ நீ எத்தனை தடி தடி புத்தகம் எல்லாம் படிக்கிற. அவனும் அப்படிப் படிப்பான் விடு ” என்றார்கள். ஆம் ஒருபோதும் என் படிப்பைக் கேட்டு என் உயிரை உருவாத அம்மா. இப்போது நான் படிக்கும், அதன் வழி கிடைத்த எல்லாம் ”சரஸ்வதி கடாக்ஷம் ” என மகிழும் அம்மா.

முன்பு ஒரு சமயம் வீட்டிலிருந்து காணாமல் போய் திரும்பி வந்தபோது கேட்டார்கள். அம்மாவை விட்டு எங்கடா போன? ஆம் அம்மாவிடம் இல்லாத ஒன்று ”வெளியே” இருக்கும் என்பது அவர்களால் நம்ப இயலா ஒன்று. வேறொருநாள் இரவு.நல்ல காய்ச்சல் என் தலை கோதியபடியே கேட்டார்கள். ”தம்பி அன்னைக்கு எங்கடா போன?”

இதோ இன்று தலைக்கு மேல் நின்றெரியும் சூரியனுக்கு சொல்லிக்கொண்டேன். ஏன் போகிறாய்? அம்மாவை விட்டு வெளியேற… எங்கே போகிறாய்? தலைக்கு மேல் நின்றெரியும் தனியன் அறிவான். நான் எங்கிருந்து வந்தேனோ அங்கே.

ஒவ்வொரு வெளியேற்றமும் அன்னையை நீங்கலே. ஒவ்வொரு பயணமும் என் ஆதியைத் தேடியே. ஊமை வெயில், அவிக்கும் மேகம் போர்த்தி ஒளிரும் சாம்பல் வானம். தலை மேல் தலைகீழாக ஒரு வெம்மைக் கடல். பாடலீஸ்வரர் கோவிலில் குளத்திலிருந்து கைமாறி ஆயிரத்து எட்டு குடம் நீர், அருகிலிருந்த சிறிய கோவிலுக்குள் சென்று பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் ஆகிக் கொண்டு இருந்தது. மழை வேண்டி. குளிர்வாளா பிடாரி? மழை மிக மிகப் பிந்தியது. தீதான் ஆதி. புவியின் மையத்திலும், புலரியின் ஆற்றலிலும். தீதான் மானுடத்தின் முதல் தொன்மம். தவம் தீ. எல்லா அன்னையரும் ஆளும் தீ. தீ கொண்டோர் யாவரும் தனியர்.

வழியில் கண்டேன் ஒரு அன்னை நாய் வெயில் தாளாமல் சாக்கடைக்குள் அமர்ந்திருந்தது. சாக்கடை திட்டில் அதன் குருளை ஒன்று, பசி முனகலுடன் அன்னையை நோக்கி கால் கால் மாற்றி தவித்தது. தவிப்பு உயர்ந்து குட்டி அன்னையை நெருங்க, தவறி சாக்கடைக்குள் விழுந்தது. அன்னை நாய் குட்டியை கவ்வி வெளியே போட்டு, தானும் வெளியேறி சாக்கடை திட்டில் ஒருக்களித்துப் படுத்தது. சாக்கடையில் குளித்து, கரும் பிசின் போர்த்திய உடலுடன் குட்டி மொச் மொச் ஒலி எழும் வண்ணம் முலையருந்தியது.

இம்முறையும் திரும்பிச் செல்வேன்.

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரைஅழகியே- ஒரு நகல்
அடுத்த கட்டுரைசெவ்வியலும் இந்திய இலக்கியமும்