குதிரைவால் மரம்

nitya

 

நித்யாவிடம் அஜிதனைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தேன். அப்போது அவனுக்கு நான்கு வயது. குருகுலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டு விடுமுறை முடிந்தபிறகு கூட்டிச் செல்வதுண்டு. விடுமுறையில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும். குருகுலத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடிக்கக் கூடாது என்பது தவிர எந்தவிதமான சட்ட திட்டங்களும் இல்லை என்பதனால் ஒரே ரகளையாக இருக்கும். நித்யா குழந்தைகளிடம் முடிவின்றி விளையாடுவார். அஜிதனைக் கூட்டிவரச் சொன்னார்.

‘உங்களுக்குத்தான் தமிழ் தொியாதே ‘ என்றேன்.

‘ ‘அதனாலென்ன ? இங்கே ஒரு பஞ்சாபி குழந்தைகூட நின்றது ‘ ‘ என்றார் நித்யா.

அஜிதனைக் கூட்டி வந்தேன். குருகுலத்தின் அழகிய சூழல் அவனைப் பரவசமடையச் செய்தது. உள்ளே கூட்டிச் சென்றேன். ‘ ‘இவங்கதான் குருவா ? குண்டா இருக்காங்க ? ‘ ‘ என்றான் அஜிதன். குரு என்றபோது அவன் மாந்திரீகமாக கற்பனை செய்திருக்கவெண்டும்.

‘ ‘கும்பிடுடா ‘ ‘ என்றேன்.

‘ ‘எதுக்கு ? ‘ ‘

அதற்குள் நித்யா அவனை அருகே அழைத்தார். அழுத்தம் திருத்தமான தமிழில் – அதை அவர் மனப்பாடம் செய்திருக்கவேண்டும் – ‘உன் பெயர் என்ன ? ‘ என்றார்.

‘அஜிதன். உங்க பேரு ? ‘

‘நித்யா. ‘ என்றார் நித்யா. தொடர்ந்து இருவரும் பேசிக் கொண்டார்கள்.

‘உங்கள் அம்மா வரவில்லையா ? ‘ என்றார் குரு

‘இல்லை. உங்க அம்மா எங்கே ? ‘

அப்போது சில விஷயங்களைக் கவனித்தேன். பிறகு நித்யா குழந்தைகளிடம் பேசும்போது அந்த விஷயங்கள் எப்போதும் கடைப்பிடிக்கப்படுவதைப் பார்த்தேன்.ஒன்று நித்யா ஒருபோதும் குழந்தைகளிடம் அவர்களுடைய படிப்பு பற்றி ஒரு சொல்கூட பேசுவதில்லை. ‘என்ன படிக்கிறாய் ? ‘ என்று குழந்தையிடம் கேட்காத முதல் பொிய மனிதர் அவர்தான்.

இரண்டு. நித்யா குழந்தைகளிடம் பொியவர்கள் காட்டும் விசேஷமான கொஞ்சல்குழைவு உற்சாகம் கனிவு எதையுமே காட்டுவதில்லை. சமகால அறிஞன் ஒருவனிடம் தீவிரமாகப் பேசுவதுபோல பேச ஆரம்பித்துவிடுவார். குழந்தை தன்னிச்சையாக எதைப் பற்றியாவது கேட்கும். அதைப்பற்றி பேச ஆரம்பிப்பார்.தான் பேசுவதைவிட அதிகமாக குழந்தையைப் பேசவிடுவார். யோசனைகள் கேட்பார், விவாதிப்பார். சற்று விலகி நின்று பார்க்கும்போது சிாிப்பு கும்மாளம் எதுவுமே இருக்காது. தீவிரமாக ஏதோ வேலை நடப்பது போலத் தோன்றும்.

நித்யாவும் அஜிதனுமாக பல நுால்களைப் பிாித்து படங்களைப் பார்த்தார்கள். படங்கள் உள்ள பக்கங்களில் அடையாளம் வைத்தார்கள். பொிய நுால்களைக் கீழே வைத்து சிறிய நுால்களை மேலே வைத்து அடுக்கி குப்பைகளைப் பொறுக்கி குப்பைக் கூடையில் போட்டு முடித்ததும் நான் சாப்பிட அழைத்தேன். கையைத் தட்டிக் கொண்டு வந்தான். ‘தாத்தா நான் சாப்பிட்டுட்டு வரேன். நீ அதுக்குள்ள படங்களை எடுத்து வச்சிடு. நான் வந்து அடுக்கித்தரேன் ‘

போகும்போது ‘என்னடா பண்னே ? ‘ என்றேன்.

‘தாத்தாவுக்கு புக் அடுக்கி குடுத்தேன் ‘ என்றான். அது எனக்கு முக்கியமான பாடமாக அமைந்தது. இன்றும் என் குழந்தைகளுடன் உற்சாகமான உறவு இருப்பதற்கு அந்த நாளே காரணம். குழந்தைகளை நான் செய்யும் எல்லா வேலைகளிலும் ஈடுபடுத்துவேன். பாத்திரம் கழுவினால் இருவரும் எடுத்து அடுக்குவார்கள் துணிதுடைத்தால் கிளிப் போடுவார்கள். வேலைப் பகிர்வு மிக ஆழமான ஒரு நட்பை உருவாக்குகிறது. உள்ளார்ந்த சமத்துவஉணர்விலிருந்து உருவாகும் நட்பு அது.

நித்யா நடக்கப்போகும்போது கூடவே அஜிதனும் போனான். நித்யா வழியில் ஏதாவது அழகிய கூழாங்கற்களைப் பார்த்தால் பொறுக்கி பையில் போடுவார். அழகாக பிாிக்கப்பட்ட கூழாங்கற்களை வேறுவேறு பீங்கான் ஜாடிகளில் போட்டு வைத்திருந்தார். அஜிதனும் ஓடி ஓடி பொறுக்கினான்.

‘என்ன கல் அது காண்பி ‘ என்றார் நித்யா.

அது சாதாரணமான கூழாங்கல் ‘இது சாதாரணமான கல் தானே ? ‘ என்றார்.

‘ஏன் சாதாரண கல்லை பொறுக்கக்கூடாதா ? ‘ என்றான் அஜிதன்.

நித்யா அயர்ந்து போனார். அவன் தலையைத் தடவியபடி என்னிடம் ‘குழந்தைகள் நம்மை தோற்கடிக்கும் விதங்களுக்கு முடிவே இல்லை ‘ என்றார்.அஜிதன் முன்னால் ஓடி பொறுக்கும்வரை பார்த்தபடி ‘எத்தனை முடிவற்ற சாத்தியங்கள் உள்ள உயிர் மனிதன். எப்படி மெதுவாக செக்குமாடுபோல ஆகிவிடுகிறான். கலாச்சாரம் என்று சொல்லி நாம் இதுவரை உருவாக்கியதெல்லாம் ஒரு செக்கு, ஒரு வட்டத்தடம் அவ்வளவுதான் ‘ என்றார்.

‘ஆமாம். குழந்தைகள் பேசுவதை கவனிக்கும்போது மொழி எப்படி புதிதுபுதிதாக உருவாகிறது என்ற வியப்பு ஏற்படுகிறது ‘ என்றேன்.

‘நாம்சாம்ஸ்கி சொல்லியிருக்கிறார் குழந்தைகள் தான் மொழியைப் புதிய இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன என்று. கவிஞர்கள் கூட குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும் ‘ என்றார் நித்யா

ஒரு பழையபடம். 1996 என நினைக்கிறேன். பாம்பன்விளையில் சுந்தர ராமசாமி கூட்டிய கூட்டத்தில் பௌத்த அய்யனார் என்னை ஒரு பேட்டி எடுத்தார். அது புதியபார்வை இதழில் வெளியானது. அந்த பேட்டிக்காக எடுக்கப்பட்ட படம்
ஒரு பழையபடம். 1996 என நினைக்கிறேன். பாம்பன்விளையில் சுந்தர ராமசாமி கூட்டிய கூட்டத்தில் பௌத்த அய்யனார் என்னை ஒரு பேட்டி எடுத்தார். அது புதியபார்வை இதழில் வெளியானது. அந்த பேட்டிக்காக எடுக்கப்பட்ட படம்

அன்றுமாலை குருகுலத்தின் முன்னால் நின்ற மரத்திலிருந்து கிளையை ஓடித்துத் தரச் சொன்னான் அஜிதன். அதன் இலைகள் சரம்சரமாக தொங்குபவை. ஒடித்து கையில் வைத்து குலுக்கி விசிறினான்.

‘குரு இது என்ன மரம் ? ‘ என்றேன்.

நித்யா சிாித்தார் ‘உன் பையனிடம் கேள் ‘

அஜிதன் அந்த கிளையைத் தன் பிருஷ்டத்தில் செருகி வைத்து வாயால் டொக்கு டொக்கு ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருந்தான். ‘அப்பா குதிரை பாத்தியா ‘

‘இது என்ன மரம் ? ‘ என்றார் நித்யா.

‘குதிரைவால் மரம் ‘ என்றான் அஜிதன் சற்றும் யோசிக்காமல்.

‘பார்த்தாயா ? ‘ என்றார் நித்யா. ‘சாியான பெயர். பெரும்பாலான பெயர்களை இப்படி ஏதோ குழந்தைதான் போட்டிருக்கவேண்டும்”

பிறகு வெகுநாள் கழித்து ஒரு கட்டுரையில் நித்யா ‘குதிரைவால் மரம் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் 2003 திண்ணை இணையதளம்

நித்யா வகுப்புகள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
அடுத்த கட்டுரைநித்யா காணொளிகள்