அறம் -கடிதங்கள்

Aram-Jeyamohan-1024x499

வணக்கம் ஜெயமோகன் அய்யா,

எனக்கு தங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. பள்ளியில் எனது தமிழ் ஆசிரியரினை இவ்வாறு அழைத்தது உண்டு. நான் உங்களின் அறம் எனும் புத்தகத்தினை படிக்க நேர்ந்தது. எனக்கு அதிகமாக தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லை. சிறு வயது முதலே ஆங்கில புத்தகங்கள் படிப்பது வழக்கமானது. அம்மாவும் அப்பாவும் நிறைய தமிழ் புத்தங்கள் வாசிப்பார்கள். கல்கி,சாண்டில்யன்,சுஜாதா, இந்திரா சௌந்தரராஜன் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் எப்பொழுதும் வீட்டில் இறைந்து கிடைக்கும்.

நான் சில சுஜாதா நாவல்களைப் படித்து இருக்கிறேன். ஒன்று இரண்டு வேறு எழுத்தாளர்களும். மொத்தமாக நான் படித்த தமிழ் புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்த பள்ளி முறையினால் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்றாக படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எப்பொழுதும் நல்ல ஆங்கில நூல்களை தேர்வு செய்து படிக்கச்சொல்லும் மாமா ஒரு நாள் எனக்கு அறம் புத்தகத்தினை அளித்தார்.

முதலில் தமிழ் நடையினை கண்டு மிகவும் கடுமையாக இருக்கும் படிக்க என எண்ணினேன். நெல்லை வழக்கு முறைகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே கண்டது உண்டு. ஒரு வாக்கியத்தினை முழுமையாக ஆங்கில கலப்படம் இல்லாமல் பேசத்தெரியாத என் போன்ற தலை முறைக்கு இப்புத்தகத்தின் நடை ஆரம்பத்தில் மிக கடினமாக இருந்தது. ஆனால் போக போக உங்கள் நடை எனக்கு பழகிப்போனது. எனக்கு கவிதைகள் எழுதும் பழக்கம் உண்டு. எனக்கு உங்கள் நடை உரையை விட கவிதை போல தான் இருந்தது.

எனக்கு ஏற்பட்ட மாற்றங்களை எனக்கு சொல்ல தெரியவில்லை. என்னை மிக வியக்க வைத்தது என்னவென்றால், எப்படி ஒருவர் அன்றாட வாழ்வியல் கதைகளை துப்பறியும் நாவல்களின் துடிப்புடன் எழுதி உள்ளார் என்பதுதான். ஆங்கிலத்தில் இதனை “பேஜ் டர்னர் “என்பர். ஒவ்வொரு கதையும் என்னை ஆழமாக தாக்கியது. யானை டாக்டர் கதையின் இறுதியில் யானைகள் எல்லாம் ஒன்றாக நின்று தும்பிக்கை தூக்கி நன்றி செலுத்தியக் காட்சியினில் என்னையே அறியாமல் கண்ணீர் விட்டேன். என்ன பிறப்பு இந்த மானுடம் என்ற கேள்வி தோன்றியது. ஒவ்வொரு கதையும் என்னுள் வேறு வேறு உணர்ச்சிகளை எழுப்பியது. ஆனால் மனம் உருகாத கதை என்று ஏதும் இல்லை. அது சோற்று கணக்காக இருக்கட்டும், மயில் கழுத்தாக இருக்கட்டும். ஒவ்வொரு கதாபாத்திரமும் கையாளப்பட்ட விதமும் என்னை கவர்ந்தது.

ஒரு கதை மனதில் ஆழமாக பதிய வாசகனால் அதனை ரிலேட் செய்ய முடிய வேண்டும் இல்லையெனில் அவனை அது பாதிக்க வேண்டும். எனக்கு இரண்டும் ஏற்பட்டது. சோகங்களை மட்டுமே முகத்தினில் அறையாமல், எதிர் நீச்சல் போட்ட மனிதர்களின் கதைகள் என்பதனால், ஒவ்வொரு கதையின் முடிவிலும் புத்துணர்வு பெற்றேன். அவர்களின் வெற்றிகள் எனது போன்று தோன்றியது.

மொத்தத்தில் இந்த கதைகள் எல்லாம் எனக்கு ஊக்குவித்தல் தந்தது. உங்களது வேறு படைப்புகளையும் படிக்க ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றேன். இத்தகைய படைப்பினை தந்ததற்கு மிக்க நன்றி. எழுத்துப் பிழைகள் இருந்தால் கனிவோடு மன்னிக்கவும்

பூஜ்யா ரவிசங்கர்

***

அன்புள்ள பூஜ்யா,

நீங்கள் அதிகமாகத் தமிழில் வாசிக்காதபோதே நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழில் வாசிப்பதற்குரிய முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் பல உள்ளன. ஆங்கில வாசிப்புக்கும் தமிழ் வாசிப்புக்கும் பல முக்கியமான வேறுபாடுகள் உண்டு. ஆங்கில வாசிப்பு உலகத்தை காட்டும். தமிழ்நூல்களே நாம் வாழும் பண்பாட்டுச்சூழலை, நம் சமூகத்தை, நம் வரலாற்றின் உள்ளடக்கத்தை காட்டுபவை

அறம் ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். வாழ்த்துக்கள்

ஜெ

***

அன்புள்ள ஜெ

அறம் சிறுகதைத் தொகுதியை மூன்றாம் முறையாக இப்போது வாசித்தேன். முதல்முறையாக உங்கள் தளத்தில் வாசித்தேன். இந்த மூன்றாவது வாசிப்பில்தான் உண்மையில் கதைகளின் ஆழத்துக்குச் சென்றிருக்கிறேன் என நினைக்கிறேன்.

ஆரம்பவாசிப்பில் அவை உணர்ச்சிகரமான கதைகள் என்னும் எண்ணம் வந்தது. ஆனால் இரண்டாம்வாசிப்பில் கதைகளில் உணர்ச்சிகரமான எந்த நிகழ்ச்சிகளும் இல்லை என்பது ஆச்சரியப்படுத்தும் வகையில் தெரிந்தது. மிகுந்த உணர்ச்சிகரமான கதைகள் என்றால் நூறுநாற்காலிகள், வணங்கான் இரண்டும்தான். இரண்டு கதைகளுமே எல்லா நிகழ்ச்சிகளையும் மிகச்சுருக்கமாக, விட்டேத்தியாகச் சொல்கின்றன. நூறுநாற்காலிகளில் அம்மாவை காப்பன் அடிக்கும் காட்சியில்கூட ஒரு வகையான உணர்ச்சிகரமும் இல்லை. அசோகமித்திரன் மட்டும்தான் இப்படி தமிழில் அண்டர்பிளே பண்ணி எழுதுவார்

அப்படியென்றால் என்ன வகையான உணர்ச்சிகரம் எனக்கு ஏற்பட்டது என்றால் அது கதையிலே இருக்கும் உணர்ச்சிகரம் அல்ல. எனக்கு அப்படித்தோன்றியதுதான். நான் அடைந்ததுதான். இந்த வேறுபாடு எனக்கு பயங்கரமான ஆச்சரியமாக இருந்தது. அதுகூட உணர்ச்சிகரம் அல்ல. அதாவது சோகம் கோபம் ஒன்றுமல்ல. கதைகளில் இருந்த அந்த இலட்சியவாதம் அளிக்கிற மன எழுச்சிதான்.  அது துக்கம் இல்லை. ஒரு வகையான நெகிழ்ச்சி. நல்லவற்றைப்பார்க்கையில் வருகிற ஒரு கண்ணீர் அவ்வளவுதான். செக்காவின் பல கதைகளிலே இந்த நெகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன். டாஸ்டாயெவ்ஸ்கியின் கிரைம் ஆண்ட் பனிஷ்மெண்டிலே அடைந்திருக்கிறேன். சமீபத்தில் ஆஞ்சலாஸ் ஆஷஸ் அப்படி என்னை நெகிழவைத்த நாவல்.

ஆனால் மூன்றாம்முறையாக வாசிக்கும்போது நிறைய நுட்பங்கள் இருக்கின்றன என நினைத்தேன் .இது இலட்சியவாதத்தின் கதைகளா என்றால் பல கதைகள் இலட்சியவாதத்தின் தோல்வியைப்பற்றிய கதைகள் என நினைக்கிறேன். கோட்டி எல்லாம் அடிப்படையான தோல்வியைத்தான் பேசுகின்றன இல்லையா? அதேபோல யானை டாக்டர். அதுவும் இலட்சியவாதம் எப்படி கிரேஸ்ஃபுல் ஆக தோற்கிறது என்றுதான் சொல்கிறது. உலகம்யாவையும்கூட அப்படித்தான்

அதோடு கவித்துவம். யானைடாக்டர் யானையைப்பற்றிய கதையா? இல்லை, அது புழுவைப்பற்றிய கதையும்தான். யானை முதல் புழு வரை. கோட்டி என்பது பூமேடை பற்றிய கதையா? இல்லை புதியபூமேடை உருவாவதைப்பற்றிய கதை.

நிறைய எழுதவேண்டும். தயக்கமாக இருக்கிறது. நன்றி

எஸ்.ஆர்.பூமிநாதன்

***

அன்புள்ள பூமிநாதன்,

அறம் தொகுப்பின் கதைகள் ஒரு பொதுவாசிப்புக்கான முதல்தளம் முதல் ஆழமான வேறு ஒரு உணர்வுத்தளம் வரை செல்பவை என்பதே என் எண்ணமும்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
அடுத்த கட்டுரைவாசகர்களின் நிலை -கடிதங்கள்