70. மணற்சிறுதரி
விருஷபர்வன் மகளிர்மாளிகையின் கூடத்தில் இருக்கையில் கால் தளர்ந்தவன்போல் விழுந்து இரு கைகளையும் நெஞ்சின் மேல் கோத்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். வாயில் மெல்லத் திறந்து உள்ளே வந்து தலைவணங்கிய சிற்றமைச்சர் பிரகாசர் “அவர்கள் சென்றுவிட்டார்கள், அரசே” என்றார். அவன் விழிதூக்கி எங்கிருக்கிறோமென்றே தெரியாதது போன்ற நோக்கை அவர்மேல் ஊன்றி “என்ன?” என்றான். மீண்டும் “அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார் சிற்றமைச்சர். “ஆம்” என்றபடி அவன் எழுந்து “நான் அரசு மாளிகைக்கு செல்கிறேன். சம்விரதரை அங்கு வரச்சொல்க!” என்றான்.
“ஆணை” என்று சொல்லி தலைவணங்கி சிற்றமைச்சர் திரும்பியதும் பின்னிருந்து “அமைச்சரே…” என்று அழைத்தான். அவர் நின்றதும் “இளவரசியின் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்கும்படி எனது ஆணை. இதை தனியோலைகளாக அமைச்சர்கள் படைத்தலைவர்கள் நகர்க்காவலர்கள் அனைவருக்கும் அறிவியுங்கள். இன்று மாலை நிகழவிருந்த குடிப்பேரவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை அதற்குரிய தருணம் அறிவிக்கப்படும்” என்றான். அமைச்சர் விழிகளில் எதையும் காட்டாமலிருக்கப் பயின்றவர். எனினும் அவரது உள்ளம் பதறுவது எவ்வண்ணமோ தெரிந்தது. கண்களைத் தாழ்த்தி “ஆணை” என்றபின் வெளியே சென்றார்.
விருஷபர்வன் அகத்தளத்திற்குச் சென்றபோது அங்கு மகளிர் குரல்கள் ஒன்றாகிக் கலைந்த பறவைக்கூட்டம்போல் ஒலித்துக்கொண்டிருந்தன. அவனை நோக்கி எழுந்து சிலம்புகள் ஒலிக்க ஓடி வந்த சர்மிஷ்டை “எங்கு சென்றீர்கள், தந்தையே? அன்னை ஐம்பது கலிங்கப்பட்டாடைகள் எடுத்து வைத்திருக்கிறார். ஐம்பதுமே பொன்னூலில் முத்துக்கள் கோத்து அணிசெய்யப்பட்டவை. யானையின்மேல் போடும் பாவட்டாபோல் மின்னுகின்றன. அவற்றை நான் அணியமாட்டேன் என்று சொன்னால் என்னை கடிகிறார்” என்றாள். அவன் அவள் தோளில் கை வைத்து புன்னகையுடன் “நன்று குட்டிமுயலே, நீ விரும்பியதை தேர்ந்தெடு” என்றான்.
ஆனால் அவன் சொற்களைக் கடந்து அவனை உணர்ந்து “என்ன ஆயிற்று? ஏதேனும் தீய செய்தியா?” என்று அவள் கேட்டாள். அவன் ஒருகணம் தயங்கி பின் துணிந்து அவள் கண்களை கூர்ந்து நோக்கி “ஆம்” என்றான். அவள் படபடப்பு கொள்வது தெரிந்தது. நிற்கமுடியாதவள்போல சற்று பின்னால் நகர்ந்து கைகளைத் துழாவி தூணைத் தொட்டு அத்தொடுகையிலேயே நிலைகொண்டாள். “நான் அறியலாமா?” என்றாள். “உன்னிலிருந்துதான் அது தொடங்குகிறது. நீ சுக்ரரின் மகளை…” என்றதுமே அவள் “இல்லை” என்று உரக்க கூவினாள். “ஓசையிடாதே! இளவரசிகள் ஓசையிடும் வழக்கமில்லை” என்றான் விருஷபர்வன். அவள் நன்றாகத் தூணில் சாய்ந்து முகத்தை அதில் பதியவைத்தபடி தோள்கள் குலுங்க அழத்தொடங்கினாள்.
“உன் சினம் புரிந்துகொள்ளக்கூடியது. அது நம் குலத்தின் இயல்பு. அதிலிருந்து எளிதாக வெளிவர இயலாதுதான்” என்றான் விருஷபர்வன். “இல்லை தந்தையே, அது என் கீழ்மை. பிறர் என்னிடம் அவளைப்பற்றி சொல்லும்போதெல்லாம் இல்லையில்லை என்று மறுத்தேன். எனக்குள்ளிருந்து ஏதோ ஒரு தீய தெய்வம் அச்சொற்களை ஏற்று மகிழ்ந்தது. என்ன நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. திரும்பும் வழி முழுக்க நான் பதறி அழுதுகொண்டிருந்தேன். இங்கு அரண்மனைக்கு மீண்ட பின்பு எதுவுமே நிகழவில்லை என்று வலிந்து எண்ணிக்கொண்டு மிகையான உவகையுடன் நடித்துக்கொண்டிருந்தேன்” என்றாள் சர்மிஷ்டை. குரல் மேலும் தழைய “கீழெல்லை வரை சென்றுவிட்டேன். அனைத்தும் என்னிடமிருந்து தொடங்குகிறது என்றீர்கள். அது உண்மை. என்ன நிகழும் என்று என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை” என்றாள்.
விருஷபர்வன் “அனைத்தும் உன்னிடமிருந்து தொடங்குகின்றன என்று நான் சொன்னேன். நீ பொறுப்பு என்று சொல்லவில்லை. என் செல்ல முயல்குட்டி அல்லவா நீ?” என அவள் தோளை தொட்டான். “இளவரசி, தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போரும் சரி, அசுரர்களுக்கும் மானுடர்களுக்குமான போரும் சரி, நீயோ நானோ நடத்துபவையோ திருப்புபவையோ அல்ல. மலையிறங்கி கடல்சேரும் பெருநதிபோல பல ஆயிரம் ஆண்டுகளாக சென்றுகொண்டிருக்கிறது இவ்வூழ்ப்பெருக்கு. நாம் வெறும் குமிழிகள் மட்டுமே. எது வருகிறதோ அதை எதிர்கொள்வோம். வெற்றியோ இழப்போ எதுவாயினும் அதை அப்பெருக்கின் நெறியென்றே கொள்வோம்.”
அவள் கண்களைத் துடைத்துவிட்டு தலைநிமிர்த்தாமல் தந்தை மேலே சொல்வதை கேட்டு நின்றாள். “குருநாட்டு யயாதி உன்னை பிறர் அறியாமல் பார்த்துச் செல்லும்பொருட்டு இங்கு வந்திருக்கிறான். இன்று காலை நம் காவல்காட்டின் எல்லைக்குள் நுழைந்திருக்கிறான்” என்றான் விருஷபர்வன். “காட்டிற்குள் நுழைந்து வழிதவறி நீங்கள் விளையாடிக்கொண்டிருந்த மலர்வனத்தருகே வந்திருக்கிறான். அவன் குரலைக் கேட்டுதான் நீங்கள் அஞ்சினீர்கள்.” அவள் கண்ணீர் துளிகள் நின்ற இமைகளுடன் மெல்லிய உதடுகள் ஓசையின்றி பிளந்து திறக்க நெஞ்சின் துடிப்பு கழுத்திலும் தோள் நரம்புகளிலும் அதிர்வெனத் தெரிய அச்சொற்களைக் கேட்டு நின்றாள்.
“அங்கு கிணற்றிலிருந்து சுக்ரரின் மகளை யயாதி மீட்டிருக்கிறான். தன்னை மணந்து பட்டத்தரசியாக்கும்படி அவள் அவனிடம் சொல்லுறுதி பெற்றிருக்கிறாள். பின்னர் அங்கேயே தங்கி தன் தந்தைக்கு செய்தி அனுப்பியிருக்கிறாள். அச்செய்தியுடன் இப்போது கிருதரும் தேவயானியின் தோழியும் வந்து சென்றனர்.” அவள் தலையசைத்தாள். “நீ தேவயானிக்கு வாழ்நாளெல்லாம் பணிப்பெண்ணாக செல்லவேண்டும் என்பது அவள் கோரிக்கை. அவளை யயாதி மணக்க வேண்டுமென்றும் அசுரர்களும் ஷத்ரியர்களும் இணைந்து உருவாக்கும் பேரரசின் சக்ரவர்த்தினியாக அவளே அமரவேண்டுமென்றும் விரும்புகிறாள்.”
அவள் அழத்தொடங்குவாளென்று தான் எதிர்பார்த்திருப்பதை விருஷபர்வன் உணர்ந்தான். ஆனால் அவள் அத்தூணை நன்றாக அணைத்து முகத்தை அதில் பொருத்தியபடி அசைவற்று நின்றாள். அவள் ஏதேனும் சொல்லக்கூடும் என்று அவன் எதிர்பார்த்தான். பின்னர் “நான் ஒப்புதல் அளித்துவிட்டேன். அசுரகுலத்திற்கு வேறு வழியில்லை. சுக்ரரின் பகை அமையுமென்றால் நமது குலம் முற்றழியும். தன் மகளின்பொருட்டு அனைத்து நெறிகளையும் மீறிச்செல்ல ஆசிரியர் சித்தமாகிறார். என் மகளின்பொருட்டு என் குலத்தை அழிக்க என்னால் இயலாது” என்றான்.
“ஆம் தந்தையே, தங்கள் முடிவு உகந்ததுதான்” என்று அவள் தலைதூக்காமல் சொன்னாள். விருஷபர்வன் அச்சொற்களால் அதுவரை கொண்டிருந்த அனைத்து உறுதிகளையும் இழந்து உளம் கரைந்து மெல்லிய விம்மல் ஓசை ஒன்றை எழுப்பினான். அது எங்கிருந்து வருகிறதென அவன் செவி வியந்துகொண்டது. “நீ அழுதிருந்தால், எனை நோக்கி கடுஞ்சொல் ஏவியிருந்தால் சிறிதேனும் எனக்கு ஆறுதல் அமைந்திருக்கும்” என்றான். “இல்லை தந்தையே, இன்று நான் இழைத்துவிட்டு வந்த பிழைக்கு என்ன மாறு செய்வதென்றறியாமல் உள்ளூர எரிந்துகொண்டிருந்தேன். எட்டாவது உப்பரிகைக்குச் சென்று கீழே குதித்துவிட்டால் என்ன என்று கூட எண்ணினேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும். ஏழு நிலை வரை ஏறிச்செல்லவும் செய்தேன். என்னால் இயலவில்லை. இப்போது உளம் நிறைவடைகிறேன். என் பிழைக்கு ஈடுசெய்யப்பட்டுவிட்டது. இக்குலத்திற்குப் பழி கொணர்ந்த பெண்ணாக என்னை இனி எவரும் சொல்ல மாட்டார்கள். இக்குலம் வாழ தன்னை இழந்தவளாகவே சொல்வார்கள்.”
விருஷபர்வன் அவளை நோக்காமல் சாளரத்தை நோக்கி சிலகணங்கள் நின்றபின் “செய்தியை நீயே உன் அன்னையரிடம் சொல். உங்களிடமிருந்து இது அகத்தளத்திற்கு பரவட்டும். இந்நகரம் களிவெறி கொண்டுள்ளது. இக்களிவெறியின் உச்சியிலிருந்து கழிவிரக்கத்தின் ஆழத்திற்கு அது விழுந்தாக வேண்டும். நன்று, மானுட உணர்வுக்கு இத்தனை எல்லைகள் உள்ளன என்பதை அவர்கள் அறியட்டும்” என்றான். மேலும் ஏதோ சொல்ல கை எழ நா செயலிழக்க அவன் வெளியே சென்றான்.
அன்னையிடம் அச்செய்தியை எப்படி சொல்வது என்பதுதான் தன் உள்ளத்தில் முதன்மையாக உள்ளது என்பதை சற்று விந்தையுடன் சர்மிஷ்டை உணர்ந்தாள். அத்தருணத்தைக் கடப்பது எப்படி என்பதைப்பற்றித்தான் எட்டுத்திசையிலும் சித்தம் முட்டி மோதி நின்றது. மூன்றாவது அன்னையிடம் சொன்னாலென்ன என்றுதான் முதலில் எண்ணினாள். மூவரில் ஒப்புநோக்க சற்றே சொல்லெண்ணிப் பேசத்தெரிந்தவர், உணர்வுகளை ஆளத்தெரிந்தவர் அவர். இரண்டாவது அன்னை எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் தன் தனியுலகில் வாழ்பவர். மூன்று சேடியரன்றி பிறர் அவரை அணுகவே முடியாது. அவள் அன்னையோ அவளுக்கென எண்ணமோ சொல்லோ இருக்கக்கூடுமென்பதையே உணர்ந்தவரல்ல. எண்ணியும் கற்றும் அடைந்தவை அனைத்தையும் சொல்லி அவளில் நிறைத்துவிடவேண்டும் என்பதற்கப்பால் அவர்களுக்குள் உரையாடலே நிகழ்ந்ததில்லை.
அகத்தளம் நோக்கி நடக்கையில் ஒவ்வொரு அடிக்கும் அவள் விரைவு குன்றினாள். அவளைக் கண்டதும் அணுக்கச்சேடி எழுந்து ஓடி அருகே வந்து “உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள், இளவரசி. பீதர்நாட்டு அருமணிவணிகர் இருவர் வந்திருக்கிறார்கள்” என்றாள். அப்பால் இருந்து அன்னையின் உரத்த குரல் “வந்துவிட்டாளா? இங்கு வந்து அவளுக்கு வேண்டியதை எடுக்கச் சொல். நான் எதையாவது எடுத்தபின்னர் ஒவ்வொன்றிலும் அவள் குறை சொல்லிக்கொண்டிருந்தால் நன்றாக இருக்காது” என்று ஒலித்தது. மூன்றாவது அன்னை வெளியே வந்து “என்னடி இங்கு நின்றுகொண்டிருக்கிறாய்? ஏன் முகம் மாறுபட்டிருக்கிறது? தந்தை என்ன சொன்னார்?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றபின் அணுக்கச்சேடியின் கைபற்றி “வா! உன்னிடம் பேச வேண்டும்” என்றாள். திகைப்புடன் “என்ன…?” என்று அவள் கேட்டாள். “வாடி” என்று அவள் கைபற்றி தன் அறை நோக்கி அவளை அழைத்துச்சென்றாள்.
அறைக்குள் சென்று கதவை மூடியதும்தான் அச்செய்தியின் மொத்த எடையும் அவள்மேல் அழுந்தியது. மெல்ல சென்று மஞ்சத்தில் அமர்ந்தபின் “அன்னையிடம் சென்று சொல், தந்தை திருமணத்தை நிறுத்திவிட்டார்” என்றாள். “என்ன சொல்கிறீர்கள், இளவரசி?” என்றாள் சேடி. தான் சொன்ன சொற்களை சர்மிஷ்டை சித்தத்தால் மீட்டு எடுத்தாள். மொத்தப் பழியும் தந்தைமேல் போடுவதுபோல் அவை அமைந்திருந்ததைக் கண்டு அவளே துணுக்குற்றாள். இச்சொற்சேர்க்கைகளை உள்ளிருந்து உருவாக்குவது யார்? இத்தருணத்தில் இதை இப்படி திருப்ப வேண்டுமென்று எப்படி அது முடிவெடுத்தது?
“தந்தை சுக்ரருக்கு சொல்லளித்துவிட்டார்” என்று சர்மிஷ்டை சொன்னாள். சேடி “அவர் மகள் மீண்டுவந்துவிட்டார்களா?” என்றாள். விரிவாக சொல்ல தன்னால் இயலாது என்று சர்மிஷ்டைக்கு தோன்றியது. “என்ன நடந்தது என்று அறியேன். சுக்ரர் தந்தையிடம் இரு ஆணைகளை பிறப்பித்திருக்கிறார். அவள் குருநாட்டரசனின் பட்டத்தரசியாக வேண்டும், நான் அவளுக்கு அணுக்கச்சேடியென்று உடன் செல்ல வேண்டும். இரண்டையும் தந்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்.”
“என்ன இது…? தங்களை எப்படி…?” என்று அவள் தடுமாறி ஒரு கணத்தில் உளம் பற்றிக்கொள்ள உரத்த குரலில் “வீணன்போல் முடிவெடுப்பதா? அரசர் என்றால் என்ன, அறமென்று ஒன்றில்லையா? நான் சென்று கேட்கிறேன். என் சொல் நிற்க அவர் முன் சங்கறுத்து செத்து விழுகிறேன்” என்று கூவியபடி திரும்பினாள். சர்மிஷ்டை பாய்ந்தெழுந்து அவள் கையைப்பற்றி “நில்! அருள்கூர்ந்து நில்! உன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்!” என்றாள். “என்ன இது, இளவரசி? அவர்கள் எவரை வேண்டுமானாலும் மணக்கட்டும். எங்கு வேண்டுமானாலும் அமரட்டும். அசுரர்குல இளவரசியான தாங்கள் அடிமைப்பெண்ணாக செல்வதா…?” என்றாள் சேடி. “இது நடக்கக் கண்டு நாங்கள் உயிர்வாழ்வதா?”
“நான் சொல்வதை கேள். தந்தையின் ஆணை” என்றாள் சர்மிஷ்டை. சேடி அவள் கையை உதறி “தந்தையின் ஆணை உங்களை கட்டுப்படுத்தும். அவர் முன் சென்று சங்கறுத்து விழுவதிலிருந்து என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது” என்றாள். சர்மிஷ்டை ஆழ்ந்த குரலில் “நான் கட்டுப்படுத்த முடியும்” என்றாள். “ஏனென்றால் நீ என் பகுதி. உன் உணர்வுகள் என் உணர்வுகளாகவே பிறரால் காணப்படும். நீ என் உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த முடியும். புரிந்துகொள்!” என்றாள். அவள் மெல்ல தளர்ந்து “ஆம், நான் பிறிதல்ல. எனக்கென்றொரு எண்ணம்கூட இந்நாட்களில் உருவானதில்லை” என்றாள்.
“இத்தருணத்தில் நான் உன்னையே சார்ந்திருக்கிறேன். என்னால் நிமிர்ந்து நிற்கவோ நிலைபெயராது இந்நிகழ்வுகளை எதிர்கொள்ளவோ முடியாது போகலாம். என் பின்னால் என்றும் தளராத கால்களுடன் நீ நிற்க வேண்டும்” என்றாள் சர்மிஷ்டை. சேடி “இளவரசி…” என்று உடைந்த குரலில் அழைத்தபடி சர்மிஷ்டையின் கைகளை பற்றினாள். “சேடியாவதென்றால் என்ன என்று அறிவீர்களா?” என்றாள். சர்மிஷ்டை “அறியேன். இப்போதுதான் அச்சொல்லின் பொருளையே என் உள்ளம் எதிர்கொள்கிறது. இவ்வரண்மனையில் ஆயிரத்துக்குமேல் சேடிகள் இருக்கிறார்கள். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அவர்கள் நடுவிலேதான். ஆனால் அவர்களின் வாழ்க்கை என்ன, உணர்வுகள் என்ன, எதுவும் எனக்குத் தெரியாது என இப்போதுதான் அறிகிறேன்” என்றாள்.
“ஓரிருவரின் பெயர்கள் மட்டுமே தெரியும். பிற அனைவரும் ஒரே முகமாகவும் ஒரே சொல்லாகவும் ஒரே தோற்றம் கொண்டவர்கள்” என்றாள் சர்மிஷ்டை. சேடி விழிகள் ஈரத்துடன் விரிய “ஆம் இளவரசி, சேடி என்பவள் தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக்கொள்பவள். பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள். துயரங்களில் பெருந்துயரென்பது தன்னுள் தானென ஏதும் இல்லாமலிருப்பது, பிறிதொருவரின் நிழலென வாழ்வது” என்றாள். மூச்சிரைக்க தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “பெண்ணுக்கு இறுதியாக எஞ்சுவது தன்னகம் மட்டுமே. சேடிக்கு அதுவும் இல்லை” என்றாள்.
சர்மிஷ்டை அவள் கண்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் தன் கண்ணீரைத் துடைத்தபடி எழுந்து “அன்னையிடம் சென்று சொல். தந்தை அளித்த சொல்லுறுதிக்கு நான் கட்டுப்பட்டவள்” என்றாள். நீள்மூச்சுடன் சேடி கண்ணீரைத் துடைத்தபடி “ஆம், இத்தருணத்தில் எனது பணி என்பது உங்களின்பொருட்டு இவர்கள் அனைவரிடமும் பேசுவதுதான். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள். பின்னர் அவள் விழிகளுடன் தொடுக்காமல் திரும்பி “சேடியென்று போக தாங்கள் முடிவெடுத்துவிட்டீர்களா, இளவரசி…?” என்றாள். “ஆம், பிறிதொரு வழியில்லை” என்றாள் சர்மிஷ்டை. “அவர் முன்…?” என்றாள் சேடி. “அது ஒரு கணநேர இறப்பு. அதை கடந்துவிட்டேன் என்றால் பின்னர் அனைத்தும் மிக எளிது” என்ற சர்மிஷ்டை மெல்ல புன்னகைத்து “மறுபிறப்பு” என்றாள்.
செய்தியைக் கேட்டதும் நெஞ்சில் அறைந்து உரக்க அழுதபடி அவள் அறைக்கு ஓடி வந்த அன்னை சேக்கையில் புதைந்து கவிழ்ந்து கிடந்த அவளை அறைவதுபோல பற்றி இழுத்து வெறியுடன் தன் நெஞ்சோடணைத்தபடி “என் மகளே! என் செல்வமே! உன் ஊழ் இப்படி ஆகியதே! இனி ஏன் உயிர்வாழவேண்டும்? இக்குலம் இருந்தாலென்ன, அழிந்தாலென்ன?” என்று கூவி அழுதாள். தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து “வாடி, சென்று நெஞ்சு பிளந்து இவ்வரண்மனை முற்றத்தில் வீழ்வோம். மூதன்னையருக்கு நெறியென்று ஒன்று இருந்ததென்றால் நம் குருதியினால் இவர்களின் விழி திறக்கட்டும்” என்று அலறினாள்.
அவளைத் தொடர்ந்து ஓடிவந்த மூன்றாவது அன்னை அவள் முன் அமர்ந்து அவள் கால்களை தன் நெஞ்சோடு அணைத்தபடி அவள் முட்டுகளில் முகம் சேர்த்து குனிந்து அழுதாள். இரண்டாவது அன்னை வந்து தூண்சாய்ந்து நின்று பெருமூச்சுவிட்டாள். அணுக்கச்சேடி வெளியே இருந்து அறைக்கதவை மூடினாள். அவளை பற்றித் தூக்க முயன்றபடி “நாம் கிளம்பிச் சென்றுவிடுவோம். எங்காவது சென்று மறைந்துவிடுவோம்” என்றாள் அன்னை. “எங்கு சென்றாலும் நீங்கள் அசுரகுலத்து அரசரின் மனைவி. நான் அவர் மகள். அவர் சொல்லுக்கு நாம் கட்டுப்பட்டவர்களே” என்றாள் சர்மிஷ்டை.
“அறுத்தெறிந்துவிட்டு வருகிறேன் இந்த மங்கல நாணை. இதுதானே என்னை கட்டுப்படுத்துகிறது?” என்று அன்னை கூவினாள். “இல்லை அன்னையே, இருபதாண்டுகாலம் அரியணையில் அவருக்கு நிகராக இடம் அமர்ந்தீர்கள் அல்லவா? அரசிகளுக்குரிய ஆடம்பரத்தில் திளைத்து வாழ்ந்தீர்கள் அல்லவா? அதுவும் உங்களை கட்டுப்படுத்துகிறது” என்றாள் சர்மிஷ்டை. அச்சொற்களின் கூர்மை நெஞ்சை செயலிழக்கச் செய்ய வளையல்கள் ஒலிக்க அன்னையின் கை சேக்கைமேல் விழுந்தது. நீர் நிறைந்த கண்கள் விரிந்திருக்க அவளை நோக்கி, பின் இரண்டாவது அரசியை நோக்கினாள். அவள் விழிகளை தன் நீர் வழிந்த கண்களால் நோக்கி “என்னடி சொல்கிறாய்?” என்றாள்.
அதன் பொருள் நீயா பேசுகிறாய் என்பதே எனத் தெரிந்தபோது சர்மிஷ்டை புன்னகை புரிந்தாள். தன் உள்ளம் ஏன் இத்தனை எளிதாக இருக்கிறதென்று வியந்துகொண்டாள். உடைந்து செயலிழந்து உதிரிச்சொற்களுடன் தான் அரற்றிக் கொண்டிருக்கவேண்டுமென்று இவ்வன்னையர் எதிர்பார்க்கிறார்கள். அவளுக்கு அப்போது ஒன்று தெரிந்தது. அவ்வரண்மனையில் இளவரசியென அவளிருந்த அந்நாட்களில் எப்போதும் தன்னை இயல்பாக உணர்ந்ததில்லை. ஒவ்வாத உரு ஒன்றில் புகுந்து நடித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றிக்கொண்டிருந்தது. ஒருவேளை இயல்பிலேயே நான் ஒரு சேடிப்பெண்தானோ? எனக்குரிய வாழ்க்கையை நோக்கித்தான் செல்கிறேனோ? அவ்வெண்ணம் அவளை மேலும் புன்னகைக்க வைத்தது.
பற்களைக் கடித்தபடி “என்னடி சிரிக்கிறாய்? உனக்கென்ன உளம் நிலையழிந்துவிட்டதா?” என்றாள் அன்னை. “இல்லை, அன்னையே… அனைத்தும் நன்மைக்கே என எத்தனையோமுறை நூல்களில் பயின்றிருக்கிறேன். இக்கட்டுகளில் அச்சொல் உண்மையிலேயே பொருள் அளிக்குமென்றால் அதைவிட இனியது ஒன்றுமில்லை” என்றாள் சர்மிஷ்டை. “பித்திபோல பேசுகிறாய். சேடி என்றால் என்ன என்று தெரியுமா உனக்கு? அதிலும் நீ எங்கு எவருக்குச் சேடியாக செல்கிறாய், அறிவாயா? உனக்கென்று மணம் பேசப்பட்ட அரசனின் நாட்டுக்கு. நேற்றுவரை உன் காலடியில் அமர்ந்திருந்த அந்தணப்பெண்ணுக்கு தாலம் தூக்கப்போகிறாய்.”
இரண்டாவது அன்னை அழுத்தமான குரலில் “அதைவிட நீ நோக்க வேண்டியது நீ ஷத்ரிய நாட்டிற்கு அடிமையென செல்லும் அசுரகுலப்பெண் என்பதுதான். அங்கு நீ அரசியெனச் சென்றாலே உனது மதிப்பு எப்படி இருக்கும் என்பதைப்பற்றி ஐயம் கொண்டிருந்தோம். தாலம் எடுத்து பின்னால் நடக்கும் அடிமையெனச் சென்றால் உன் நிலை என்னவாக இருக்கும்?” என்றாள். சர்மிஷ்டை “எதுவாக இருந்தாலும் அறியாத ஒன்றை இங்கு நின்று எண்ணி எண்ணி விரித்தெடுத்து அச்சத்தை பெருக்கிக்கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை. வருவது வரட்டும். உயிரைப் போக்கிக்கொள்ளும் உரிமை நம்மிடம் இருக்கும் வரை நாமே ஏற்றுக்கொள்ளாத எத்துன்பமும் நமக்கு வருவதில்லை” என்றாள் சர்மிஷ்டை.
அவளுடைய இயல்பு நிலையும் சிரிப்பும் முதலில் அவர்களை குழப்பியது, பின்னர் எரிச்சல் கொள்ளச் செய்தது. அன்னை அவள் கையை அறைந்து “இத்தருணத்தில் இப்படியெல்லாம் நடந்துகொண்டால் உன்னை அனைவரும் போற்றுவார்கள் என்று எண்ணுகிறாயா? வென்றவர்களுக்காக மட்டும்தான் சொற்கள். தோற்று அழிந்த கோடிப்பேர் ஒரு நினைவால்கூட சென்று தொடப்படுவதில்லை. அவர்களுக்கு எஞ்சுவது முடிவிலா இருள் மட்டும்தான்” என்றாள். அதைவிட நேரடியாக அந்நிலையை சொல்லிவிட முடியாதென்று ஒருபுறம் தோன்றினாலும்கூட சர்மிஷ்டைக்கு அச்சொற்களும் எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. மாறாக அன்னையின் கைகளை பற்றிக்கொண்டு “இல்லை அன்னையே, நான் நடிக்கவில்லை. இயல்பிலேயே என் உள்ளம் துயர்கொள்ளவில்லை. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள்.
இரண்டாவது அன்னை “எப்போதுமே அவள் இங்கு ஒட்டாமல்தான் இருந்தாள். எதையும் பற்றிக்கொள்ளாதவர்கள் அனைத்தையும் விடுவதும் எளிதுதான்” என்றாள். அன்னை சீற்றத்துடன் அவளை நோக்கி திரும்பி “இத்தருணத்தில் உன்னைப்பற்றி நீ சொல்ல விரும்புகிறாயா?” என்றாள். மூன்றாவது அன்னை “இது என்ன நமக்குள் பூசலிடும் தருணமா? நாம் செய்வதற்கொன்றே உள்ளது. மூவரும் சென்று அரசரை பார்ப்போம். அந்த அந்தணப்பெண் குருநாட்டு அரசரை மணக்கட்டும். ஒருபோதும் அசுரர் அவளுடைய அரசுக்கு எதிராக எழமாட்டார்கள் என்று அரசர் அவளுக்கு சொல்லளிக்கட்டும். நம் அசுரகுடியிலிருந்து ஒருவரை மட்டுமே இளவரசி மணப்பாளென்றும்கூட நாம் உறுதிகூறலாம். இளவரசியை சேடி என்று அனுப்புவதிலிருந்து மட்டும் நமக்கு விலக்களிக்கட்டும். இது நாம் அழுத்திக் கோரினால் பெறக்கூடிய ஒன்றே” என்றாள்.
“ஆம், இதை நான் கேட்கிறேன். அவள் அன்னையாக இதையாவது அவர் எனக்கு அளித்தாகவேண்டும்” என்றபடி அன்னை எழுந்தாள். சர்மிஷ்டை அவள் கையைப்பற்றி “இல்லை அன்னையே, என்னிடம் தந்தை சொன்னதுமே நானும் தந்தைக்கு சொல்லளித்துவிட்டேன். அதிலிருந்து நான் பின்னடி வைக்கப்போவதில்லை” என்றாள். அன்னை “நீ பின்னடி வைக்கவேண்டாம். நீ ஒரு சொல்லும் கேட்கவும் வேண்டியதில்லை. நாங்கள் எங்கள் கணவரிடம் கேட்கப்போகிறோம்” என்றாள். சர்மிஷ்டை “என் பொருட்டு கேட்க வேண்டியதில்லை. நீங்கள் எச்சொல்லைக் கேட்டாலும் அது என் பொருட்டு கேட்பதாகவே பொருள். நீங்கள் கேட்டு அச்சொல்லை பெற்றுக்கொண்டாலும்கூட நான் எந்தைக்கு அளித்த சொல்லுக்கு ஏற்ப சேடியாக செல்லத்தான் போகிறேன்” என்றாள்.
“என்னடி இது?” என்று துயருடன் இளையவளைப் பார்த்து கேட்டாள் அன்னை. “இதோ பார்! நீ எடுக்கும் முடிவின் மறுதொலைவென்ன என்று உனக்குத் தெரியவில்லை. பேரரசரை கருவுறப்போகும் வயிறு உனதென்று சூதர்கள் இங்கு பாடிவிட்டார்கள். இன்று அங்கு சென்று அடுமனைப்பெண்ணாகவும் சமையல்பெண்ணாகவும் பணியாற்றப்போகிறாயா? சேடியின் வயிற்றில் பிறக்கும் மைந்தருக்கு தந்தை என எவரும் பொறுப்பேற்கவேண்டியதில்லை என்று அறிவாயா? அவர்கள் அடுமனைச் சூதர்கள் என்றே அறியப்படுவார்கள். அசுரரென்றோ ஷத்ரியர் என்றோ அல்ல” என்றாள் மூன்றாம் அன்னை.
“ஆம், அறிவேன்” என்றபின் சர்மிஷ்டை எழுந்தாள். “நானும் அவளும் ஊழை நேர்கொள்கிறோம். அவள் ஊழுக்கு எதிராக நிற்கிறாள். நான் ஊழை நம்பி அதன்மேல் ஊர்கிறேன். ஊழின் பெருவலியை நம்புகிறேன்.” அன்னை கசப்புடன் “இச்சொற்களனைத்துமே வீண். வாழ்க்கையின் பெருந்தருணமொன்றில் இப்படி கற்றவற்றையும் எண்ணியவற்றையும் சொற்களாக அள்ளிக்கொண்டு நிற்பதைப்போல் மடமை ஏதுமில்லை. எது உகந்ததோ அதை செய்யவேண்டும். இத்தருணத்தில் நீ செய்ய வேண்டியதொன்றே. சேடியாவதைத் தவிர்ப்பது. அதற்கு ஒரே வழி சுக்ரரிடம் கேட்டுப்பார்ப்பது மட்டும்தான்” என்றாள்.
சர்மிஷ்டை “உங்கள் அனைவரையும்விட தேவயானியை நான் நன்கறிவேன். ஒருபோதும் ஒரு சொல்லும் அவள் விட்டுக்கொடுக்க மாட்டாள். அவள் விட்டுக்கொடுக்காதவரை சுக்ரரும் இறங்கிவரமாட்டார். சுக்ரர் இறங்கி வரவில்லையென்றால் நம் பொருட்டு நமது அரசர் சென்று அங்கு இரந்து நின்று இழிவுகொண்டு திரும்பி வருவதொன்றே விளையும். இது தேவயானியின் முடிவென்றால் ஒரு சொல் குறையாமல் இது நிகழ்ந்தே தீரும்” என்றாள். அன்னையர் அவள் முகத்தை நோக்கி அதில் இருந்த மறுக்கமுடியாமையைக் கண்டு உளம் தளர்ந்தனர்.
அன்னை விம்மி அழுதபடி மஞ்சத்தில் மெல்ல சாய்ந்து “நான் என்ன செய்வேன்…? நான் எப்படி இங்கு வாழ்வேன்…? எங்கோ அறியா நாட்டில் இவள் சேடியாக இருக்கையில் இவ்வரண்மனையின் அரச இன்பங்களும் மணிமுடியும் எனக்கென்ன பொருளளிக்கும்…?” என்றாள். “அனைத்தும் சில நாட்களுக்கே, அன்னையே” என்றாள் சர்மிஷ்டை. “நான் அங்கு பழகுவதும் நீங்கள் இங்கு பழகுவதும்.” அன்னை சினத்துடன் தலைதூக்கி “என்னடி சொல்கிறாய்?” என்றாள். “நாம் எளியவர்கள். நம்மைச் சூழ்ந்திருப்பவற்றுடன் பின்னி கரந்து அவற்றில் ஒன்றாகவே நம்மால் வாழமுடியும். மிகச் சிறந்த சேடியாக நான் விரைவிலேயே மாறிவிடுவேன்” என்றாள் சர்மிஷ்டை.
புன்னகையுடன் “இன்றுவரை தனித்தும் தருக்கியும் நிற்கமுடியாத என் இழிவை எண்ணி வருந்தியிருந்தேன். இப்போது தெரிகிறது. திரளில் ஒருவராக இருப்பதென்பது எவ்வளவு பெரிய நல்லூழ் என்று. அனைவருக்கும் உரியதே நமக்கும். நமக்கென்று தெய்வங்கள் பெரிய துயரையோ ஆற்றாச்சிறுமையையோ சமைப்பதில்லை” என்றாள் சர்மிஷ்டை.