அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
தினமும் மாமலர் படிப்பதால் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப் 16 – வியாழன் அன்று தங்கள் இணையதளம் அபிடேட் ஆக தாமதம் ஆனது. பிறகு நேற்று இரவு. இதன் பொருட்செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சந்தாவாக கட்டணம் நிர்ணயிக்கப்படுமாயின் மகிழ்வேன். தஞ்சை சந்திப்பின் போதும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. மாமலர் நூலாக வரும் முன்னரே அதை முழுவதுமாக படித்து முடித்திருப்பேன்.
இது உங்கள் உழைப்பு. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகம் படித்து வருகிறேன். ஒவ்வொரு நூலையும் புதிதாகவே வாங்குகிறேன். இணையத்தில் நீங்கள் கட்டணம் அற்று வழங்கினாலும் ஓசியில் படிக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படவே செய்கிறது – அத்துடன் கேபிள் டிவிக்கு கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டு எழுத்து இலக்கியம் இலவசம் வேண்டும் என்பது எழுத்துக்கு ஒரு அவமதிப்பாகவும் தோன்றுகிறது. பத்திரிகைகள் – வார இதழ்கள் பெரும்பாலும் தரமுடையவையாக இல்லை. தேடுபவர்கள் இயல்பாக வந்தடையும் இடமாக உங்கள் இணையதளம் உள்ளது. கட்டணம் நிர்ணயிக்க விருப்பம் இல்லாவிட்டால் விருப்பமுடையவர்கள் நன்கொடை அளிக்கலாம் என்று அறிவியுங்கள் என்று கோருகிறேன். உங்கள் இணையதளம் எப்போதும் நிலைநின்று (உங்களுக்குப் பிறகும் கூட) தொடர்ந்து வளர்ந்து செல்லவேண்டும் என்பது என் பிரார்த்தனை.
அன்புடன்,
விக்ரம்
கோவை
***
திரு. ஜெ,
நான் கணபதி கண்ணன்.
தங்களது “இணையதளம் வருவாய்” படித்தேன். தங்களது தளம் எக்காலத்திலும் அழியாது நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவருக்கும் விருப்பமாக இருக்கும் என்று கருதுகிறேன். தாங்கள் மிக நேர்மையானவர் என்பதிலும், தங்களுக்கு சரி என்று தோன்றும் கருத்தை எடுத்துரைக்க தயங்காதவர் என்பதிலும் எனக்கு எப்பொழும் மிக நம்பிக்கை உண்டு. தங்களது எழுத்துக்களில் தாயின் கனிவும், தந்தையின் கண்டிப்பையும் நான் காண்பதுண்டு. தங்களுக்குப் பின் இத்தளம் நிச்சயம் முடங்கிவிடக் கூடாது. என்றும் இணையவெளியில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தற்போது சிங்கப்பூரில் நடுத்தரமான சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு குடும்பக் கடமைகள் பலவுண்டு. 2019 வருட ஆரம்பத்தில் எனது பணி இங்கு முடிவடைந்துவிடும். இந்தியா வந்து விடுவேன். அதன்பின் வரும் காலத்தைப் பற்றிய கவலைகளும் உண்டு.
இருப்பினும் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வெளிநாடுகளில் உங்களின் வாசகர்கள் அதிகம் உள்ளனர், 60 வாசகர்கள் சேர்ந்து, ஒரு நபர் ரு50,000 அளித்தால் மொத்தம் ரூ30 இலட்சம் ஆகிறது. அதை நம்பிக்கையான ஏதேனும் வழியில் நிரந்தர வைப்பாக வைத்து, அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு எக்காலமும் இத்தளம் முடிவுறாமல் காக்கலாம் அல்லவா. அவ்வாறு துவங்கும்பட்சத்தில் நான் முதல் ஆளாக ரு50,000 இவ்வருட அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அனுப்பி வைக்க இயலும்.
தாங்கள் இவ்வாறு பிறரிடம் கேட்க சங்கடப்படுவீர்கள். ஆனால் எதிர்கால நம் தமிழ் சமுகத்திற்காக நம் கடமை என்று நான் நினைக்கிறேன். எனவே என்னுடைய இந்தக் கடிதத்தையே, தங்கள் நண்பர்கள் வழி, வெளிநாடுவாழ் வாசகர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள். 60 என்ற எண் ஒன்றும் மிகப் பெரிது அல்ல. விரைவில் அடைந்து விடலாம் என்றே தோன்றுகிறது.
முயற்சிப்போம். நல்லதே நடக்கட்டும்.
இப்படிக்கு,
கணபதி கண்ணன்
***
அன்புள்ள ஜெ
தளம் முடக்கம் கட்டுரை வாசித்தேன். தளத்திற்கு ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் செலவென்று அறிந்தேன். நானும் என்னாலான சிறுதொகை தரலாம். தங்களை இணையம் மூலமே வாசிக்கிறேன், தாங்களுக்கு எந்த தடை என்றாலும் எனக்கும் தடை என்ற உணர்வே.
அன்புள்ள
பகவதிராஜன்
***
மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
அய்யா நான் கடந்த நான்காண்டுகளாக உங்கள் தளத்தின் வாசகன். அதன் கட்டுரைகளின் உள்ளடக்கம் உண்மையிலேயே உலகில் வேறெங்கும் இல்லாதவை. இதனைப் பெரிய அறிவுக்களஞ்சியம் உங்கள் ஒருவரின் முயற்சியால் ஒருங்கமைக்கப்பட்டிருப்பது எங்கும் எவரும் செய்திராத விஷயம். மாமனிதர்கள் புராணங்களிலும் வரலாறுகளிலும் மட்டும் இல்லை சமகாலத்திலும் இருக்கிறர்கள் என்பததற்கு வாழும் உதாரணம் நீங்கள் என்றே கருதுகிறேன். நான் அறிந்த பலரிடமும் அதையே கூறிவருகிறேன்.
எனக்கு 35 வயது ஆகிறது. உங்கள் இந்த தளத்தின் மூலம் நான் இந்த நான்கு ஆண்டுகளில் கற்றுக்கொண்டவை என் ஒட்டுமொத்த வாழ்வில் கற்றுக்கொண்டவற்றிலேயே மிக அதிகம். இதை வெறும் புகழ்ச்சியாக சொல்லவில்லை – என் உள்ளம் அறிந்த சத்தியம்.
என்னை உங்களுக்கு தெரிந்திருக்காது – ஆனால் உங்களை நான் உங்கள் எழுத்தின் மூலம் சற்று அணுக்கமாகவே அறிவேன்.
வெறும் நாளிதழ்கள், வாரஇதழ்கள், கட்டுரை நூல்கள் என்றே வாசித்து வந்த நான் உங்கள் மூலமே இலக்கியம் பால் ஈர்க்கப்பட்டேன். நீங்கள் வெண்முரசை உங்களுக்குத் தந்திருப்பது மிகப்பெரிய சேவை. உங்களாலேயே சில வாரங்களாக தமிழில் எழுதிப்பார்க்கவும் முயல்கிறேன். எனக்கு பள்ளிக்கூடப் பருவத்தில் வாசிப்பிலும், எழுதுவதிலும் இருந்த ஆர்வம் மெல்ல மெல்ல குடும்பச்சூழ்நிலையாலும் பொறுப்புகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தே வந்தது. உங்களாலேயே மீண்டும் கொஞ்சம் துளிர்விட முயல்கிறேன். பாலை நிலத்தில் விழும் மழைத்துளி போன்ற அபூர்வமானது உங்கள் எழுத்து.
அறிவே உயிரென்றால் உங்களாலேயே உயிர்த்தெழுந்தேன் எனலாம். ஞானமே வீடுபேறென்றால் உங்களாலேயே அதை நோக்கி கொஞ்சம் அடியெடுத்து வைக்கிறேன் எனலாம்.
உங்களை நான் எப்போதும் உங்கள் அறம் சிறுகதையின் கெத்தேல் சாகிபு போலவே நினைப்பேன். என்னைப்போல எத்தனையோ பேர் உங்களால் உயித்தெழுந்திருப்பார்கள்.
நீங்கள் இன்று உங்கள் இணையதளம் வருவாய் குறித்து போட்டிருந்த பத்திவைப் படித்ததிலிருந்து மனது தவிக்கிறது. அதனாலேயே இதை எழுதுகிறேன். நீங்கள் இரண்டு நாட்களுக்கு முன்னால் தளம் முடக்கம் குறித்து போட்ட பதிவைப்பார்த்தே கேட்கவேண்டும் என்று இருந்தேன்.
நான் பணம் படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல – அனால் என் குடும்பச்செலவுகள் தவிர்த்து என்னால் மாதாமாதம் 2000 ரூபாய் வரை உங்கள் தளத்துக்காக தரமுடியும். இன்னும் கொஞ்சம் பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டேன் என்றால் இன்னும் சில ஆண்டுகளில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே தர முயல்கிறேன். நன்கொடையாக எல்லாம் கருதவேண்டாம். ஒரு account number அனுப்புங்கள் உடனே recurring transfer அமைக்கிறேன்.
சில ஆண்டுகளுக்குள் சிறுக சேர்த்து ஒரு fixed deposit செய்துவிட்டால் தளத்தை அது பார்த்துக்கொள்ளும் என்று தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டது போல் தொழில்நுட்பம் வளர வளர இந்த தளத்துக்கான செலவு சில ஆண்டுகளில் பெருமளவு குறையும் என்றே நம்புகிறேன். உங்கள் தளம் முழுக்க text தான் என்பதால் இன்னும் கொஞ்சம் வேகமாகவே சுருக்கிவிடலாம்.
இதை நீங்கள் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம். ஒரு புரவலன் என்ற எண்ணத்திலோ, தளத்தின் வாசகன் என்ற எண்ணத்திலோ சொல்லவில்லை. நான் உங்கள் மாணவன், உங்களால் பெரிய அளவில் பண்பட்டவன் – நீங்கள் என் ஞானசரிரியர், தந்தையப்போன்றவர். உங்களுக்காகக் கூட இதைச் செய்யவில்லை. உங்கள் தளமும் எழுத்தும் என்போன்ற இன்னும் எத்தனையோ விதைகளை முளைக்கச் செய்யவேண்டும்.
மழை தருவது இயற்கையின் கருணை உண்மைதான். ஆனால் இன்றைய காலத்தில் மரம் நடுவது மனிதரின் கடமை. இந்தக்கடமை எனக்கும் இருக்கிறது என்றே உணர்கிறேன்.
விக்கிபீடியா போன்ற தளங்களே நன்கொடையில் தான் இயங்குகின்றன.
இலக்கியமும், ஆன்மீகமும் குறித்த ஒரு கட்டுரையின் தொடக்கத்தில் மாடுகள் அனைத்தையும் உண்டு பால் தருவதையும். தேனீக்கள் மலரின் தேனை மட்டுமே உண்டு அதை சேர்த்துத் தருவதையும் ஒப்பிட்டு எழுத்தியிருந்தது நினைவுக்கு வருகிறது.
விக்கிபீடியா ஒரு பால் பண்ணை என்றால் – உங்கள் தளம் ஒரு தேன் கூடு. சிறுகச் சிறுக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் இந்தத்தேன் தலைமுறைகள் தாண்டி சுவைக்கப்படவேண்டும் என்ற சுயநலத்தோடே இதை சொல்கிறேன்.
நீங்கள் சூழியல் அறிந்தவர். உங்களுக்குத் தெரிந்திருக்கும் தேனீக்கள் அழிந்தால் உலகம் அழியும் என்று. என்னால் முடிந்தது ஒரு மலர்ச் செடியையாவது நட்டு வைக்க முயல்கிறேன்.
பணிவுடன்,
கணேஷ்