வி.எஸ்.ராமச்சந்திரன்

vs

வி எஸ் ராமச்சந்திரன் புத்தகம் பேசுது

வி எஸ் ராமச்சந்திரன் – ஸ்வராஜ்யா

இனிய ஜெயம்,

இந்த ஆண்டு நான் வாசித்த நல்ல நூல்களில், மூளை நரம்பியல் ஆய்வாளர் விளையனூர் ராமச்சந்திரன் அவர்களின் இரு நூல்களும் அடக்கம். அவரது the emerging mind நூல் உருவாகிவரும் உள்ளம் எனும் தலைப்பில் ஆயிஷா நடராஜன் மொழிபெயர்ப்பிலும், brain-the tell tale நூல் வழிகூறும் மூளை எனும் தலைப்பில் கு வி கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பிலும் பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது.

உண்மையில் ரிச்சட் டாக்கின்ஸ், வி எஸ் ஆர் இவர்களை எனது தாய்மொழியில் வாசித்து அறிய முடிந்தது எத்தனை பரவசமான அனுபவம் என விளக்கவே இயலாது. டாக்கின்ஸ் நாத்திகர் மனித குல ஆதார கேள்விகள் அனைத்தையும் பரிணாமவியல் தொட்டு மரபணுவில் வரை என இரண்டுக்குள் வைத்து தர்க்கபூர்வமாக பதில் அளிக்கிறார். எனினும் மனிதத் தன்னுணர்வு எனும் நிலையின் அடுக்குகளில் பல அவரது தர்க்கங்களுக்கு வெளியில்தான் நிற்கிறது. வி எஸ் ஆர் தன்னை சந்தேகவாதி என சொல்கிறார். அந்த எல்லையில் அவர் டாக்கின்சைக் காட்டிலும் உண்மையானவராக இருக்கிறார்.

புறத்தில் இயங்கும் அனைத்து தர்க்க அலகுகளையும் இணைத்து ஒரு முழுமையான இழைக் கோட்பாட்டை உருவாக்க அறிவியலாளர்கள் முயன்றுவரும் அதே பொழுதில் அகத்தில் இலங்கும் அனைத்தையும் மரபியல், மூளை நரம்பியல் கொண்டு விடை கண்டு விட யத்தனங்கள் நடந்து வருகிறது. வி எஸ் ஆர் அவர்கள் மூளை இயங்கும் அடிப்படை விதிகளை சிறிது சிறிதாக பகுத்து ”தன்னுணர்வு” எனும் இருத்தல் உணர்வுக்கு காரணமான மூளையின் நியூரான்களின் வரிசையை அணுக முடியும் என கருதுகிறார்.

அந்த ஆய்வில் அவர் கண்ட ”மூளை பாதிப்பாளர்கள்” வழியே அவர் நடத்திய ஆய்வுகள், அதில் அவரது அறிவியல் பூர்வமான கண்டடைதல்கள், மொழி, நடத்தை, ஆளுமை, ஆட்டிசம், கலையின் தன்மை இவற்றை இவர் மூளை நரம்பியல் வழியே வகுத்து வைக்கும் விதம் என, சுவாரஸ்யமான நடையும் மொழியும் கொண்ட நூல்கள் இவை இரண்டும். மறு வாசிப்புக்குப் பிறகு இந்த நூல்கள் குறித்து எழுத வேண்டும். வி எஸ் ஆர் அவர்களின் முழுமையற்ற பேட்டி புத்தகம் பேசுது தளத்தில். நண்பர் அரவிந்தன் நீலகண்டன் எடுத்த முக்கியமான பேட்டி. சந்தாதாருக்கு மட்டும் முழுமையாக கிடைக்கும் என நினைக்கிறேன்.

”நான் யார்” என்பது தத்துவக் கேள்வியா? அறிவியல் கேள்வியா? எனும் நிலையில் துவங்கி அக் கேள்வியை அறிவியல் புலத்துக்கு நகர்த்தி, அதற்க்கு மூளை நரம்பியல் வழியே விடை தேடும் வி எஸ் ஆர் ”பிரம்மம்” என ஒன்றிருக்க வாய்ப்பு உண்டு என்றே அனுமானிக்கிறார். ஆகவேதான் நான் நாத்திகன் அல்ல. சந்தேக வாதி என்கிறார். அப்துல் கலாமின் நூல்கள் மாணவர்களை நோக்கி படை திரண்டு தாக்கியது போல, வி எஸ் ஆர் அவர்களுக்கும் நிகழவேண்டும் என்பது என் பெரு விருப்பம்.

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
அடுத்த கட்டுரைகடிதங்கள்