தற்செயல்பெருக்கின் நெறி

nithyachaithanyayathi.jpg.image.784.410

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலம் தானே…மிக நீண்ட நாட்களாகி விட்டது உங்களுடன் கடிதம் மூலமாக உரையாடி…

மற்றபடி உங்கள் தளத்தை முடிந்தவரை தினசரி வாசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்… வெண்முரசின் வரிசையினை இரண்டு வருடம் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.. நடுவில் எதிர்பாராமல் விடுபட்டு போய் விட்டது மீண்டும் துவங்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதை உடனே உங்களிடம் சொல்லவேண்டும் எனத் தோன்றியது. அதான் கடிதம்.

நான் கடந்த ஒன்றரை மாதமாக திண்டுக்கல் வந்திருக்கிறேன் பணி மாறி. அலுவலகத்துக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய மெஸ்ஸில் தான் மதிய உணவு. (பட்ஜெட் சிக்கல்கள்!!). ஒரு வாரம் முன்பு மதியம் உணவருந்தி விட்டு பணம் கட்ட கல்லா அருகே சென்றேன். கல்லாவில் ஆள் இல்லாததால் அருகே பார்சல் மடிக்க கிடந்த பழைய பேப்பர்களை சற்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு பேப்பரை கையில் எடுத்து பார்த்தேன். மூன்று வருடங்களுக்கு முந்தைய ஆனந்த விகடன். முன்பக்கம் ஒரு விளம்பரம் இருந்தது. பின்பக்கத்தில் விகடன் மேடை பகுதியில் “அ. முத்துலிங்கம்” அவர்களின் கேள்வி பதில். என்னால் நம்ப முடியாத ஆச்சர்யமாய் அதில் அப்போது நான் கேட்டிருந்த என் கேள்வியும் இருந்தது.

என் பெயரை என் படைப்பை (கேள்வியெல்லாம் படைப்பில் சேருமா எனத் தெரியவில்லை மன்னிக்கவும்) பார்த்ததும் எனக்கு ஒரு நொடி என்ன செய்வது என்றே தெரியவில்லை. சோர்வினையும் அயர்ச்சியினையும் மட்டுமே பார்த்து பார்த்து சலித்துப் போகவே நிறைய வாய்ப்புகள் இருக்கும் இந்த நடுத்தர பொருளாதார வாழ்வில் மிகத் துல்லியமாக ஒரு மேஜிக்கல் மொமெண்ட்.

அந்தக் கேள்வி இதுதான்.

“நெருக்கடிகள் தான் கலைகளை தீர்மானிக்கும் என்றால் நெருக்கடிகளும் வேண்டாம் கலையும் வேண்டாமென்கிறாரே சுந்தர ராமசாமி. நீங்கள் சொல்லுங்கள் நெருக்கடிகள் தான் கலையை தீர்மானிக்கிறதா?”

சுந்தர ராமசாமி அவர்கள் இதனை சொன்னதாக எப்போதோ உங்கள் தளத்தில் படித்ததாக தான் ஞாபகம். இந்தக் கேள்வியினை 2013 டிசம்பர் போல எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். அந்தக் கேள்வியினை எத்துணையோ கேள்விகளுக்கு மத்தியில் போஸ்ட் கார்டில் எழுதும் போது நான் நினைத்தும் பார்க்கவில்லை இன்னும் மூன்று வருடங்களுக்கு பிறகு புதிதாய் போகும் திண்டுக்கல் ஊரில் ஒரு மிகச் சிறிய மெஸ்ஸில் இதே கேள்வி பழைய காகிதத்தில் என்னிடம் வந்து சேரும் என…

இன்னும் ஆச்சர்யமாக 2013 டிசம்பரில் நான் திருச்சியில் இருந்தேன்…அதன் பிறகு 2014 செப்டம்பர் போல மதுரை மாறி வந்து 2016 பிப்ரவரி யில் புதிய நிறுவனம் ஒன்றில் சேர்ந்து திண்டுக்கல் வந்திருக்கிறேன்.

உண்மையிலேயே வாழ்வு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டது தானா. இல்லை தற்செயல் நிகழ்வு ஒன்றை நான் மிகைப்படுத்துகிறேனா. ஏன் எனில் ஒரு ஐந்து நிமிடம் முன்னே பின்னே சென்றிருந்தாலும் இந்த கடிதத்துக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும் அதான் கேட்கிறேன் உங்களிடம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் அளித்தால் மகிழ்வேன்.

அன்புடன்

ரா.பிரசன்னா

 

அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம்

 

அன்புள்ள பிரசன்னா,

இப்படி பல நிகழ்ச்சிகளால் ஆன ஒரு தொகுப்பாக என் வாழ்க்கையைச் சொல்லிவிடமுடியும். மிக இளம் வயதில் இலாரியா என்ற சிறுகதையை வாசித்துவிட்டு நான் அவ்வாசிரியரைப்பற்றி அவ்விதழுக்கு ஒரு கடிதம் எழுதினேன் – குமுதம் என நினைக்கிறேன். பின்னர்தான் அவர் அசோகமித்திரன் என்றே தெரிந்தது.

இளமையில் நிலையழிந்து அலைந்துகொண்டிருந்த நாட்களில் ரயிலில் நான் அமர்ந்திருந்த பெட்டியில் ஏறி ஒருவர் அமர்ந்தார். காவி ஜிப்பாவும் பாண்டும் அணிந்த நீண்ட நரைத்த தாடிகொண்ட நாடோடி மனிதர். அவரிடம் ஒரு சுண்டல்பொட்டலம் இருந்தது. அதைத் தின்றுவிட்டு தாளை நீவி வாசித்தார். சிலமாதம் முன்பு ஓர் இதழில் நான் வேறு ஒரு பெயரில் ஹம்பி பற்றி எழுதிய தொடர்கட்டுரை ஒன்றின் பகுதி அதில் இருந்தது. “கொஞ்சமாத்தான் எழுதியிருக்கான். ஆனா மெட்டஃபிஸிக்கலா இருக்கு” என்றார். அந்தத்தாளை எடுத்துப்பார்த்தபோதுதான் அவர் சொன்னது புரிந்து மெய்ப்பு கொண்டேன். எனக்கு ஒரு பெரிய திறப்பாக அமைந்த தருணம் அது. நான் எழுதியது அது என அவரிடம் சொல்லவில்லை.

நெடுங்காலம் கழித்து காசியிலிருந்து டெராடூன் செல்லும் ரயிலில் என் முன் வந்து அமர்ந்தார். நான் அப்போது காவி அணிந்திருந்தேன். என்னை அவருக்குத் தெரியவில்லை. எங்கே செல்கிறாய் என்றார். அலைகிறேன் என்றேன். “India, a land of million ways and thousand million lights” என்றார். உடனே படுத்துத் தூங்கிவிட்டார். அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

நித்ய சைதன்ய யதி இரண்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு படம் நாளிதழில் வந்தது. அதை வெட்டி எடுத்து ஓர் இடத்தில் ஒட்டிவைத்திருந்தார். அதை மறந்தும்விட்டார். பின்னர் நடராஜ குருவின் மாணவராக ஆனார். ஒருமுறை வீட்டுக்குச் சென்றபோது தற்செயலாக அந்தப் படத்தைப் பார்த்தார். அது நடராஜகுரு சார்போன் பல்கலையில் பட்டம் பெற்ற செய்தியுடன் வெளிவந்த படம். அந்த படம் குருவின் அறையில் கடைசிவரை சுவரில் தொங்கியிருந்தது.

சுந்தர ராமசாமியை முதலில் சந்தித்தபோது நான் சொன்னேன் “சார் நடுநிசிநாய்கள்னு ஒரு கவிதைத்தலைப்பு. பாத்ததுமே ஊளை காதிலே கேட்டது. தலைப்புவச்சா அப்டி வைக்கணும்” அவர் உதடுகள் விரிய புன்னகைத்தார்.

sura

அ முத்துலிங்கம் பற்றியே ஒரு சுவாரசியமான தற்செயல் உண்டு. என் நண்பரான ஆர்.டி.குலசிங்கம் எனக்கு ஈழ எழுத்தாளர்களின் நூல்களை தொகுத்து அளித்திருந்தார். அதில் அக்கா என்னும் தொகுப்பு இருந்தது. அதைப்பாராட்டி நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். ஆனால் அதை எழுதிய அ.முத்துலிங்கம் எழுத்தை நிறுத்திவிட்டு ஆப்ரிக்காவில் பல்வேறு உயர்பதவிகளில் இருந்தார். பின்னர் ஓய்வுபெற்று மீண்டும் எழுதத் தொடங்கினார். அவர் மீண்டும் எழுதிய முதற்கதை, ஆப்கானியப் பின்னணி கொண்டது, இந்தியா டுடேயில் வெளிவந்தது. நான் அவருக்கு அக்கதையைப் பாராட்டி மறுமொழி இட்டிருந்தேன். அவர் கென்யாவிலிருந்து அதற்கு பதில் எழுதியிருந்தார். அப்போதுதான் அக்கா தொகுதியை எழுதியவர் அவரே என அறிந்தேன்.

ஆகவே, இவையனைத்தும் முன்தீர்மானிக்கப்பட்டவை என்று சொல்லமுடியுமா? அதுவும் ஐயமே. தற்செயல் பெருக்காகவே வாழ்க்கை இருக்கிறது. மனிதனின் இறப்புதான் அதுவரை அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் தொகுத்து ஒரு கட்டுக்கோப்பை அளிக்கிறது என்று காம்யூ ஓரிடத்தில் சொல்கிறார். இந்த விவாதத்தை தொடங்கியவர்கள் மனிதசிந்தனையின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்கள். இன்னும் முடியவில்லை. நாம் வேடிக்கை பார்க்கவே முடியும்- நம் வாழ்க்கையை வைத்து.

ஜெ

***

முந்தைய கட்டுரைபாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69