மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபமாக இணையதளங்கள் மூலம் அரசழிவு கோட்பாடு (Anarchism) பற்றி ஏராளமாக வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த சொல் கூட சரி தானா என்ற குழப்பத்தோடு எழுதுகிறேன். Anarchism என்பதை இங்கே அராஜகவாதம் என்று தான் பலருக்கும் தெரிந்திருக்கிறது.
அது ஏற்கனவே எனக்கிருந்த அரசாங்கம் ஏன் தேவை என்ற கேள்வியை மேலும் உறுதியாக்க செய்திருக்கிறது. George Woodcock என்பவர் Anarchism: a History of Libertarian Ideas and Movements எனும் நூலில் காந்தியை ஒரு அனார்க்கிஸ்டு என குறிப்பிடுகிறார். மேலும் Jason Adams என்பவர் எழுதிய Non-Western Anarchisms எனும் நூலில் காந்தியும் அனார்க்கிச சிந்தனைகளை கொண்டிருந்தார் என்பதை காந்தியே Young Indiaவில் எழுதிய வரிகளை குறிப்பிட்டு சொல்கிறார்.
தமிழ் அல்லது இந்திய சமூக அரசியல் அறிஞர்கள் யாரும் இதைப்பற்றி பேசியதாக தெரிவில்லை. ஒருவேளை என் வாசிப்பு வறட்சி ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அரசாங்கம் அற்ற சமூகம் சாத்தியம் தானா? உங்கள் பார்வைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. Jason Adamsன் Non-Western Anarchisms நூலை வாசிக்க
2. https://theanarchistlibrary.org/library/jason-adams-non-western-anarchisms
நன்றி
வே.நி.சூர்யா
***
அன்புள்ள சூர்யா
நான் anarchism என்பதை அரசின்மைவாதம் என்று மொழிபெயர்த்திருக்கிறேன். அது சிந்தனையில் ஒரு வாதம் மட்டுமே, ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டால் அரசின்மைநிலை எனச் சொல்லலாம்.
அரசு எதிர்ப்புவாதத்திற்கும் அரசின்மை வாதத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. அரசு எதிர்ப்புவாதமென்பது ஓர் அரசை எதிர்ப்பது. அரசென்பது ஒர் அமைப்பு என்பதனால் அதை எதிர்ப்பதற்கு பிறிதொரு அமைப்பு தேவையாக ஆகிறது. ஏதோ ஒரு வகையில் அந்த அமைப்பும் அரசுக்கு சமானமானது. அதை எதிர்அரசு என்று வேண்டுமானால் சொல்லலாம். அரசின்மைவாதம் என்பது முற்றிலும் அரசு இல்லாத நிலை.
மேலை நாட்டில் அரசின்மைவாதத்தைப்பற்றி விரிவாகவே பேசப்பட்டுள்ளது. பலநூல்கள் உள்ளன. ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முயல்கிறேன்.
ஐரோப்பா வரலாற்றின்போக்கில் இருவகையான முற்றதிகார அரசுகளை பார்த்திருக்கிறது. ஒன்று, சமூகவாழ்வில் வாழ்க்கையை முழுமையாக கட்டுப்படுத்தும் மதம்சார்ந்த அரசு. குறிப்பாக புனிதரோமப்பேரரசு. பத்தாம் நூற்றாண்டில் தொடங்கி ஆறு நூற்றாண்டுகாலம் ஐரோப்பாவின் பண்பாடு, சிந்தனை, பொருளியல், அரசியல் அனைத்தையும் அது கட்டுப்படுத்தியது. ஒவ்வொரு தனிமனிதனையும் தன் பிடியில் வைத்திருந்தது. [ஆனால் இனக்குழுக்களின் நெல்லிமூட்டையான ஐரோப்பாவைத் தொகுத்து ஒரே நிலப்பரப்பாக வைத்திருந்ததும் அதுவே]
அதற்கெதிரான பெரும்போராட்டத்திலிருந்து ஐரோப்பா தேசிய அரசு என்ற கருதுகோளை நோக்கிச் சென்றார்கள். தேசியஅரசு தொடக்கத்தில் பண்பாட்டு அடிப்படையிலான சிறியநாடுகளை உருவாக்கியது. அவற்றை ஆளும் சிறிய முடிமன்னர்களை நிலைநிறுத்தியது. அது பல்வேறுவகையான அரசியல் அலைகள் வழியாக நவீன ஜனநாயகம் என்ற வடிவத்தை வந்தடைவதற்கு முன்பு நவீனச் சர்வாதிகாரிகளை உருவாக்கியது. அவர்கள் வரலாற்றில் உருவாகிவந்த அடுத்தகட்ட முற்றதிகார ஆட்சியாளர்கள்.
முடிமன்னர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் வேறுபாடு உள்ளது. முடிமன்னர்கள் ஆசாரங்களாலும் நம்பிக்கைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு கொள்கையளவில் வரம்பில்லா அதிகாரம் உண்டு என்றாலும் கூட நடைமுறையில் அதைத் தடுக்கும் விசைகளும் அதிகம். மேலும் அன்றைய சூழலில் பெரும்பாலான தேசிய அரசுகள் குறுநிலமன்னர்களாலும், நிலப்பிரபுக்களாலும் தாங்கி நிறுத்தப்படுபவை. இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பிய தேசிய அரசுகள் என்பவை குறுநில மன்னர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் கூட்டான அதிகாரமாகவே அமைந்தன. அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரே அரசராக அமைந்தார். அவர்களின் அங்கீகாரம் இல்லாதபோது அவர் அரச பதவியை இழக்கவும் செய்தார்.
பிரிட்டனில் முதலாம் சார்ல்ஸ், பிரான்சில் பதினாலாம் லூயி ருஷ்யாவில் சக்ரவர்த்தி பீட்டர் போன்றவர்கள் அந்த நிலப்பிரபுத்துவக் கூட்டு அரசியலை உதறி முற்றதிகார அரசர்களாக ஆனவர்கள். ஆனால் அக்காலகட்டம் குறுகியது. அவர்கள் அவ்வாறு முற்றதிகாரம் கொள்ளத் தொடங்கியதுமே குடியுரிமைகளுக்கான கிளர்ச்சிகளும் தொடங்கின. அவர்களின் முற்றதிகாரம் உருவாகிக் கொண்டிருக்கையிலேயே அழியவும் தொடங்கிய ஒன்று.
ஆனால் நவீன சர்வாதிகாரி என்பவர் இரண்டு வகையான மேலதிக சாதக அம்சங்கள் கொண்டவர். ஒன்று அவரிடம் அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் அமைந்த முழுமையான ராணுவம் உள்ளது. இத்தகைய ராணுவம் முன்பிருந்த அரசர்களுக்கு இல்லை. அவர்களின் ராணுவமானது சிற்றரசர்களாலும் பிரபுக்களாலும் திரட்டி அளிக்கப்பட்டது. நவீன ராணுவம் என்பது ஒரு எந்திரம். அதன் மையப்பொத்தானால் இயக்கப்படுவது. நவீனத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. ஆகவே முழுமையாகவே ஒரு சர்வாதிகாரிக்கோ அரசமைப்புக்கோ அதை ஆளமுடியும். நவீன ராணுவம் உருவான பிறகே நவீனச் சர்வாதிகாரம் உருவானதென்று குறிப்பாக சொல்லலாம்.
இரண்டாவதாக நவீனச் சர்வாதிகாரி தொன்மையான ஆசாரங்களாலும் நடைமுறைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல. பிற அரசுகளின் உறவுகள்கூட அவரைக் கட்டுப்படுத்துவதில்லை. முழுக்க முழுக்க தன்னுடைய தனியாளுமையினாலேயே உருவாகி எழுகிறான். அவ்வாளுமையை உருவாக்கி நிலைநிறுத்தும் அமைப்பே நவீனக்கருத்தியல். அது சென்றகாலத்தைய மதங்களுக்கு நிகரானது.
கருத்தியலும் மதங்களின் அதே வடிவில் செயல்படுகிறது. தீர்க்கதரிசி, மையத்தரிசனம், தத்துவார்த்த விளக்கம், அதை பிரச்சாரம்செய்யும் அமைப்பு, பொது எதிரி என அதற்கும் ஐந்து அலகுகள் உள்ளன. ஆனால் மதங்கள் மேலுலகை வாக்களிக்கின்றன. தனிமனித மீட்பை முன்வைக்கின்றன. குறிப்பாக அவை சென்றகாலத்தை தொகுத்து மறுஆக்கம் செய்து அளிக்கின்றன. கருத்தியல் எதிர்காலத்தை நோக்கிப் பேசுகிறது. சென்றகாலத்தில் இருந்து ஒரு சரடை அது பற்றிக்கொண்டாலும் நடைமுறையில் சென்றகாலத்தை அது நிராகரிக்கிறது. மார்க்சியமோ, பாசிசமோ, நாசிசமோ மிக வலுவான அடித்தளத்தை அமைத்து ஒரு சர்வாதிகாரியை அரசு மையத்தில் அமர்த்துகிறது. ஒருபக்கம் கருத்தியல் மறுபக்கம் நவீன ராணுவம். நவீனச் சர்வாதிகாரியின் வரம்பற்ற அதிகாரம் என்பது முன்பு வரலாற்றில் எப்போதும் இருந்திராதது.
ஐரோப்பாவின் அரசியல் வரலாறு பதினாறாம் நூற்றாண்டு வரை அரசு என்னும் மையத்தை மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே இருந்துள்ளது. சொல்லப்போனால் பிளேட்டோவின் குடியரசு அனைத்தையும் கட்டுப்படுத்தும் மையவல்லமையான அரசைப்பற்றியே பேசுகிறது. அதிலிருந்து வலுவான அரசு குறித்த தேடல் தொடங்கி மூவாயிரம் ஆண்டுகளில் நவீன ஜனநாயக அரசு வரை வந்துசேர்ந்தது. அந்தப் போக்கில் அவர்கள் அடைந்த வல்லரசுகள் அவர்களின் வெற்றிக்கும் இழப்புகளுக்கும் காரணமாயின.
அதாவது இந்தியர்களாகிய நாம் நம் நீண்ட வரலாற்றில் எப்போதும் உணர்ந்திராத இருவகையான முற்றதிகாரத்தை ஐரோப்பியர்கள் கண்டிருக்கிறார்கள். மதஅதிகாரம், நவீனச் சர்வாதிகாரம். ஆகவே அதற்கெதிராக ஓர் உச்சநிலையாக அரசின்மைவாதத்தை அவர்கள் அடைந்தார்கள். முற்றிலும் அரசு இல்லாத ஒரு நிலையை அவர்கள் கற்பனை செய்தார்கள்.
பல கோணங்களில் பல அறிஞர்கள் அரசின்மைவாதத்தை பேசியிருக்கிறார்கள். நாம் அறிந்த முதன்மையான அரசின்மைவாதம் என்பது காரல் மார்க்ஸால் முன்வைக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸைப் பொறுத்தவரை அரசு என்பது தனியுடைமையின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. தனியுடைமையை பேணுவதற்கும் அதன் உற்பத்தி- வினியோக முறைகளை நிர்வாகம் செய்வதற்கும்தான் அரசு உருவாகி வந்தது. ஆகவே அது அரசு வன்முறையால் நிலைநிறுத்தப்படுகிறது. முதலாளித்துவ அரசை புரட்சி மூலம் தோற்கடித்து வீழ்த்தும் தொழிலாளர்வர்க்கம் முதலாளித்துவ அரசு உருவாக்கிய உற்பத்தி-வினியோக முறையை அழித்து புதிய பொதுவுடைமை உற்பத்தி-வினியோக முறையை கட்டமைக்கும் வரைக்கும் ஒரு தொழிலாளிவர்க்கச் சர்வாதிகார அரசை அமைக்கும். அந்த அமைப்பு எப்போது பொதுவுடைமை சமூகம் கட்டி நிறுத்தப்படுகிறதோ அப்போதே தன்னளவில் நோக்கமோ தேவையோ இன்றி உதிர்ந்து மறையும். அரசு உதிர்ந்து மறைந்த பிறகு மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொண்டு வாழ்வார்கள். ஆக வரலாற்றின் தொடக்கத்திலும் அதன் மறு இலட்சியஎல்லையிலும் மார்க்ஸ் அரசின்மைநிலையை முன்வைத்தார். இங்கே அது மிகவிரிவாக பேசப்பட்டுள்ளது.
இதைத் தவிர ஐரோப்பாவில் பல்வேறு வகையான இலட்சியநோக்குள்ள அரசின்மைவாதங்கள் பேசப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் இப்படி ஒரு அரசின்மைவாதத்தின் குரலாக ஒலித்தது தோரோவுடையது. ஐரோப்பாவில் பிரான்ஸிலும் பிரிட்டனிலும் உருவாகி வந்த இயற்கைமையவாதம் என்னும் கருதுகோளின் நீட்சி அது. அமெரிக்காவில் அது ஆழ்நிலைவாதமாக தத்துவ உருவம் கொண்டது. ஐரோப்பா பதினாறாம் நூற்றாண்டில் உருவாக்கி முன்வைத்த தனிமனிதவாதத்தின் ஓர் இலட்சிய உச்சம் அது எனலாம். அது தனிமனிதன் X அரசு என்னும் முரண்பாட்டை முன்வைத்தது. தனிமனிதன் X மதம் என முன்னர் அடையாளம் காணப்பட்ட முரண்பாட்டின் வேறொரு வடிவம் இது.
ஒரு தனிமனிதன் அரசுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு இருப்பவன் அல்ல. அரசின் இன்றியமையாத அலகாக அவன் இருக்க வேண்டியதில்லை. தன்னுடைய ஆன்மீகப் பயணத்தை தன்னந்தனிமையில் நிகழ்த்த முடியும். அரசு அவனுக்கு ஒரு நிபந்தனையாக ஆக வேண்டியதில்லை. புகழ்பெற்ற வால்டன் குடில் குறிப்புகள் வழியாக தோரோ இச்செய்தியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். எனக்குத் தெரிந்து தமிழிலேயே பல கவிஞர்கள் தோரோவின் வால்டன் குறிப்புகளால் ஆழமான பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் –தேவதச்சன், தேவதேவன் இருவரையும் குறிப்பாகச் சொல்வேன்.
மூன்றாவதாக, ஐரோப்பாவில் உள்ள முக்கியமான அரசின்மைவாதிகள் பல்வேறு குறுமத குழுக்கள். அவர்கள் தங்களுக்கென்று ஒரு நிர்வாக அமைப்பையும் கருத்தியல் கட்டமைப்பையும் உருவாக்கிக் கொண்டவர்களானார்கள். அவற்றுக்கு மேலாக ஒரு அரசு இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த அரசின் குறைந்த பட்ச நிர்வாகத்தையும் குறைந்த பட்ச பாதுகாப்பையும் ஏற்றுக் கொண்டு அதற்கு குறைந்த பட்ச வரியை அளிப்பதில் அவர்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அரசு தீர்மானிக்கக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அத்தகைய பல மதக்குழுக்கள் ஆரம்பகாலத்தில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறினார்கள். அத்தகைய குழு ஒன்றை என் நண்பர் அரவிந்தன் கண்ணையன் அவர்களுடன் சென்று பார்த்தேன். அங்கு அவர்கள் அதை ஒருவிதமான சடங்காக மாற்றிவிட்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஐரோப்பிய அரசின்மைவாதம் அங்குள்ள தத்துவ சிந்தனையில் ஆன்மிகத்தில் இலக்கியத்தில் ஆழமான பாதிப்பை உருவாக்கியுள்ளது. அச்சொல்லை இன்று பலநிலைகளில் நுண்ணிய பொருள் மாறுபாட்டுடன் பயன்படுத்துகிறார்கள். தத்துவத்தில் அரசின்மைவாதம் என்பது முன்பு சொல்லப்பட்ட விஷயங்களுக்கு முற்றிலும் ஆட்படாத சுதந்திரப்போக்கு என்று சொல்லலாம். சிந்தனையில் கட்டின்மை என்று அதை விளக்கலாம். அதுவரை சிந்தனை என்பது அதுவரை இருந்து வந்த அமைப்புகளை சீர்திருத்துவது அல்லது மேம்படுத்துவது என்றுதான் கொள்ளப்பட்டது. மாறாக அதை முற்றிலுமாக விலக்கி புதிய ஒன்றை நோக்கித் தாவுவதே தத்துவத்திலுள்ள அரசின்மைவாதம் என்று கொள்ளலாம்.
அவ்வகையில் முதற்பெருமுகமாக இந்தியாவில் அறியப்படுபவர் நீட்சே. நீட்சேயை இங்கே அரவிந்தர் வழியாகவே பலர் அறிமுகம் செய்து கொண்டிருப்பார்கள். அரவிந்தர் தன்னுடைய முழுமனிதன் என்னும் கருத்தை நீட்சேயின் அதிமனிதன் என்னும் கருத்துடன் விவாதித்து, ஓரளவு நிராகரித்து உருவாக்கிக் கொண்டார். அந்த முழுமனிதன் அரசின் குடிமகன் அல்ல, தன்னளவில் விடுதலை அடைந்தவன். அத்தகைய முழுமனிதர்களால் ஆன முழுமைச் சமூகம் உருவாகும்போது அங்கே அரசு என்பது இருந்தாக வேண்டுமென்பதில்லை. ஆனால் நீட்சேயின் அரசின்மைவாதம் ஒருவகையில் இனமேட்டிமையை நோக்கிச் சென்றதாக இங்குள்ள இடது சாரிகளால் குறை சொல்லப்பட்டது. எண்பதுகள் வரை நீட்சே பேரைச் சொல்வதே தமிழ்ச் சிந்தனையுலகில் தர்மஅடி வாங்கித்தருவது. ஆனாலும் மு.தளையசிங்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இலக்கியத்தில் அரசின்மைவாதம் டால்ஸ்டாய் வழியாக வந்து சேர்ந்ததென்று தோன்றுகிறது. டால்ஸ்டாய் தனிமனிதனின் அறவுணர்வு, ஆன்மீகம் ஆகியவற்றை நம்பி அரசு எனும் பொதுக்கட்டுப்பாடு இல்லாத ஒரு சமுதாயத்தை கனவு கண்டார். அவருடைய சிறிய பண்ணைக்குழு அரசிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்ட ஒரு சிறு சமுதாயம்தான். ஐரோப்பிய அரசின்மை வாதத்தை டால்ஸ்டாயிடம் இருந்தும் தோரோவிடமிருந்தும் தான் காந்தி கற்றுக் கொண்டார்.
அரசின்மை வாதத்தின் தீவிரமான செல்வாக்கு அதன் பின்னர் வியட்நாம் போரையும் அதையொட்டி அமைந்த் ஹிப்பி அலையையும் சார்ந்து உலகமெங்கும் சென்றது. ஹிப்பிகள் தங்களை அரசுக்கு அப்பாற்பட்டவர்களாக அறிவித்துக் கொண்டார்கள். எல்லைகள் அற்றவர்களாக, தேசமற்றவர்களாக .ஹிப்பிகளின் முதன்மை நூலாக இருந்த சோர்பா தி க்ரீக் அரசற்ற ஒரு தனிமனிதனின் சித்தரிப்பு, அல்லது எதற்கும் கட்டுப்படாத ஒருவனின் கோட்டுச் சித்திரம்.
இன்று அரசின்மைவாதம் பேசுபவர்கள் பழைய ஹிப்பி இயக்கத்தின் உணர்வுரீதியான நீட்சிகொண்டுள்ள நாடோடிகள் மற்றும் சூழியலாளர்கள். அவர்கள் ஓருலகம் என்னும் கனவை முன்வைக்கிறார்கள். அரசு, தேசம் இரண்டுமே தனிமனிதனை உலகம்நோக்கி, இயற்கைநோக்கி விரிவதை தடுப்பவை என நினைக்கிறார்கள்.
நான் ஹாரி டேவிஸ் என்னும் அமெரிக்க அரசின்மைவாதியைப்பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறேன். ஊட்டி நித்யா குருகுலம் வழியாக நான் அறிந்தவர். நடராஜகுருவின் மாணவர். உலகை ஒட்டு மொத்தமாக ஏற்கும் பொருட்டு தேசம் என்னும் அடையாளத்தைத் துறந்தவர். தன் பாஸ்போர்ட்டை தானே உருவாக்கிக் கொண்டவர்.
*
இந்தியாவிலும் கீழைநாடுகளிலும் இருந்த தொன்மையான அரசின்மை நிலைகளை ஐரோப்பிய ஐரோப்பிய அரசின்மைவாதத்துடன் இணைத்துக் கொள்ளாமலிருப்பதே நாம் சிந்திப்பதில் தெளிவை உருவாக்கும். ஐரோப்பிய அரசின்மைவாதம் என்பது அரசு என்னும் கருதுகோளுக்கு எதிராக உருவாகி வந்த ஓர் அரசியல் – தத்துவக் கோட்பாடு. இங்கிருந்த அரசின்மைநிலை என்பது அரசு உருவாவதற்கு முன்னரே உருவாகி அரசுடனேயே நிலைகொண்ட ஒரு தத்துவ- ஆன்மிக நிலை. இரண்டும் வேறுவேறு.
இந்தியமரபில் மொத்த மக்களும் அரசனுக்கும் அரசுக்கும் முற்றாகக் கட்டுப்பட்டிருக்கும் நிலை உருவானதே இல்லை. பல நாடோடி இனக்குழுக்கள் அரசென்பதையே அறியாமல் வாழும் அளவுக்கு இந்நிலம் பெரியது. பல மதக்குழுக்கள் அரசின்மை நிலையில் நீடிக்க இங்குள்ள மதநம்பிக்கை அனுமதித்திருந்தது. இன்றைய நவீன அரசில்கூட நாகா சாதுக்கள் முற்றான அரசின்மை நிலையில் வாழ்வதை கண்டிருக்கிறேன். அவர்களிடையே நிகழும் கொலைகூட அரசால் கண்டுகொள்ளப்படுவதில்லை.
சமணர்கள் அரசின்மை நிலை ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய ‘அஞ்சினான் புகலிடம்’ என்பது எந்த அரசதிகாரமும் செல்லுபடியாகாத இடம். அங்கே அவர்களின் சொந்த அறமே நீடித்தது. காந்தி அவர்களிடமிருந்தே அறத்தின் அதிகாரம் என்னும் கருதுகோளைப் பெற்றுக்கொண்டார். அதையே அவர் ஐரோப்பிய அரசின்மைவாதத்துடன் இணைத்துக்கொண்டு அரசியல் தரிசனமாக வளர்த்தெடுத்தார்.
அரசின்மை என்பது ஓர் இலட்சியமாக அன்றைய மதத்திற்குள் இருந்திருக்கிறது. துறவிகள் அரசிலாதவர்கள். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்னும் அறைகூவல் அதிலிருந்து எழுவதே
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்
என்னும் கம்பராமாயணப்பாடலே ஒருவகை அரசின்மை குறித்த கனவுதான்.
இது ஒரு ஆன்மிகமான பெருநிலை. இந்நிலையை அரசின்மைவாதம் என்று கொள்ளவேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் ரமணரோ வள்ளலாரோ எல்லாம் அரசின்மைவாதிகள் என்று கொள்ளவேண்டியிருக்கும். பலலட்சம் துறவிகள் சொந்தமாக அடையாளமே இல்லாமல் இன்றும் இங்கே வாழ்கிறார்கள். அவர்களையெல்லாம் அப்படிச் சொல்ல வேண்டியிருக்கும். அரசுக்கு அப்பாற்பட்ட விடுபட்ட நிலைவேறு, அரசிலாத சமூகத்தை கனவுகாணும் நிலை வேறு. அந்த வேறுபாடு இருந்தால் ஜேஸன் நூல் உதவிகரமானதே.
*
கீழைச்சமூகங்களில் வரம்பில்லாத அதிகாரம் எப்போதும் அரசனுக்கு இருந்ததில்லை. தொன்மையான காலத்தில் சான்றோர் சபைகள், குலச்சபைகள் ஆகியவற்றின் கூட்டதிகாரமே இருந்தது. அரசனை அது வழிநடத்தியது. அரசனின் படை என்பது மக்களில் இருந்து திரண்டு வரவேண்டியது எனும் நிலை இருப்பது வரை அரசனின் அதிகாரம் பல்வேறு வகையில் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழக வரலாற்றை எடுத்துப்பார்த்தால் சோழர் காலத்தில்தான் நிலைப்படை இருந்தது. தமிழக வரலாற்றில் ஓரளவேனும் முற்றதிகாரம் கொண்ட முதல் மன்னன் என்பவன் ஒருவேளை ராஜராஜ சோழன்தான். ஆனால் அவனுடைய அதிகாரமே கூட பல்வேறு சிற்றரசர்களின் சபையால் கட்டுப்படுத்தப்பட்டது. அவனுடைய ராணுவம் சிற்றரசர்களின் ராணுவங்களின் கூட்டுத் தொகை என்பதை வரலாறு காட்டுகிறது.
அப்படியே இஸ்லாமிய, நாயக்கர் ஆட்சிகள் வழியாக காலனி ஆதிக்கத்திற்கு நாம் சென்றோம். காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று நவீன ஜனநாயகம் ஒன்றை வந்தடைந்தோம். முடியாட்சியிலிருந்து — காலனி ஆட்சி- குடியரசு என்று நாம் பயணம்செய்த பாதையில் நமக்கு அரசின்மைவாதம் பற்றி பேச வேண்டிய நிலைமை வந்ததே இல்லை. ஆகவே ஒரு அரசியல்கோட்பாடாக அது இங்கே பேசப்படவில்லை.
அத்துடன் நாம் அரசு பற்றி கொண்டிருந்த சித்திரமே வேறு. ஐரோப்பாவில் பல்வேறு கிளர்ச்சிகள் வழியாக அவர்கள் அரசதிகாரத்தை குறைப்பதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது நாம் வலுவான அரசதிகாரத்துக்காக ஏங்கிக்கொண்டிருந்தோம். காரணம், ஒரு குறுகிய காலகட்டத்தில் நாம் அரசில்லாத நிலையை அடைந்திருக்கிறோம். பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொகலாயப்பேரரசும் தெற்கேநாயக்கர்களின் பேரரசும் சிதைவுற்று உறுதியான இன்னொரு அரசுமுறை உருவாகி வருவதற்கு இடைப்பட்ட அரை நூற்றாண்டுகாலம் இருந்தது. அதை இந்தியாவின் அரசின்மைக் காலகட்டம் என்று சொல்லலாம்.
இந்தியா முழுக்க கொலையும் கொள்ளையும் அன்றாடச் செயல்பாடாக இருந்தது. ஆரம்பகால வெள்ளையர்கள் பதிவுகளை வைத்துப்பார்த்தால் கொள்ளை ஓர் உச்சகட்டத்தை அடைந்து இரும்பு அல்லாத உலோகம் என்பதே எங்குமில்லாத நிலை ஏற்பட்டது. அறுவடை செய்வதற்கு அஞ்சி மக்கள் விவசாயத்தை கைவிட்ட காலம் ஆண்களையும் பெண்களையும் சிறைபிடித்து அடிமைகளாக விற்பதற்கு கொள்ளைக்கூட்டங்கள் நாடெங்கும் சுற்றியலைந்த காலம். தடியெடுத்தவன்தண்டல்காரன் போன்ற பழமொழிகள் அந்தக் காலகட்டத்தை சுட்டிக் காட்டுகிறது. பல்வேறு குட்டிக் குட்டி ஆட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சூறையாடி வாழ்ந்தனர். அவர்களை அவர்களைவிடப் பெரிய அரசர்கள் சூறையாடினர். எவரும் எதற்கும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
அச்சூழலிலேயே ஆங்கில ஆட்சி இங்கே வந்தது. வெள்ளையர்கள் இங்கு வலுவான அரசொன்றை உருவாக்கினார்கள்.இந்தியா வெள்ளையர்களுக்கு அளித்த மிகப்பெரிய அங்கீகாரம் அவர்கள் அளித்த அந்த நிலையான அரசின் மீதுகொண்ட மதிப்பினால்தான். ஆகவே அரசின்மைவாதத்தை நோக்கி அல்ல, வலுவான அரசை நோக்கி ஆவலுடன் செல்லும் மனநிலையே நம் நவீனகால வரலாற்றில் காணக்கிடைக்கிறது. ஆகவே சராசரி இந்தியனின் மனநிலை என்பது இன்றும் நிலையான, வலுவான அரசே தேவை என்பதாக உள்ளது. வலுவான அரசை வாக்களிக்கும் அரசியல்வாதியை மக்கள் இங்கு விரும்புகிறார்கள். கருத்து சுதந்திரமோ விவாதமோ கூட கட்டுப்பாடின்மை என்று இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது. உட்கட்சி ஜனநாயகத்தையே இங்குள்ள மக்கள் இன்று ஒத்துக்கொள்ளவில்லை.
அதைப்புரிந்து கொள்வது எளிது. இந்தியாவைச் சூழ்ந்து ஏறத்தாழ இதே காலத்தில் சுதந்திரம் அடைந்த பிற நாடுகளைப்பார்த்தால் அங்கெல்லாம் வெவ்வேறு வகையான கிளர்ச்சிகளும் அதிகார மாற்றங்களும் நிகழ்ந்து நீண்ட அரசின்மை காலகட்டங்களை அவர்கள் அனுபவித்திருப்பதை பார்க்கலாம். உள்நாட்டுப் போர், பஞ்சம் போன்றவை அரசு செயலிழந்த நிலையை உருவாக்குகின்றன. அவை உருவாக்கும் பேரழிவுகளைக் கண்டவர்கள் ஓர் அரசின் கீழ் வாழ்வதையே விரும்புவார்கள்.
அரசின்மை வாதம் என்பது இருவகையானது அரசு உருவாகாத நிலை அல்லது அரசு தோற்றுப்போன நிலை ஒன்று. அந்நிலை பேரழிவை உருவாக்குவது. சமூகத்தின் ஒவ்வொரு எதிர்மறைச் சக்தியும் முழு வீச்சைக் கொண்டு எழுந்துவருகிறது.சுரண்டலும் கொலையும் கொள்ளையும் மட்டுமே அங்கு நிகழ முடியும். பிறிதொன்று, ஒரு சமூகம் இயல்பான முதிர்ச்சி அடைந்து அரசு தேவையற்ற நிலையை அடைவது. மார்க்ஸ் கனவு கண்டது அதைத்தான். லட்சியவாதிகள் வாதிடுவது அந்த அரசுக்காகத் தான். காந்தி அந்த அரசைத்தான் விரும்பினார்.
இரண்டாவது அரசின்மைவாதம் பற்றிப் பேசும்போதெல்லாம் மக்கள் முதல் அரசின்மைவாதத்தை எண்ணி நிராகரிக்கிறார்கள். அரைவேக்காட்டுச் சிந்தனையாளர்கள் ஐரோப்பாவின் இரண்டாவது வகை அரசின்மைவாதத்தை நோக்கி கீழைநாடுகளிலுள்ள முதிராச்சமூகங்களில் முதல்வகை அரசின்மைவாதத்தை உருவாக்க முயல்கிறார்கள்.ஜனநாயகம்,தனிமனிதன்,சுதந்திரசிந்தனை, சமூக ஒத்திசைவு ஆகியவை உருவாகாத சமூகங்களில் அரசின்மைவாதம் என்பது முதல்வகையாக மட்டுமே அமையமுடியும். பத்துநாட்கள் போலீஸ்நிலையம் மூடப்படுமென்றால் முழுமையான அழிவை அடையும் நிலையிலேயே இந்தியா உள்ளது என்பது என் எண்ணம்
காந்தியின் அரசின்மைவாதத்தைப்பற்றி மிக விரிவான கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். 1909ல் தனது நாற்பதாவது வயதில் தனக்கான ஓர் அரசியல் எழுச்சியை கனவை ஹிந்து ஸ்வராஜ்யா என்னும் நூல் வழியாக காந்தி உருவாக்கிக் கொண்டார். 1918-ல் அந்த முன் வரைவுடன் தான் இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் அவர் நடத்திய சுதந்திரப் போராட்டமென்பது வெள்ளையரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி ஒரு நவீன ஜனநாயக அரசை அமைப்பதற்காக மட்டுமல்ல. சிறிய பொருளாதார அலகுகள் தங்களைத் தாங்களே முழுமையாக ஆட்சி செய்து கொள்ளும் ஓர் அரசற்ற அல்லது மிகக்குறைவான அரச நிர்வாகம் கொண்ட ஒரு வட்டாரமாக இந்தியா உருவெடுப்பதே அவருடைய லட்சியமாக இருந்தது.
ஒவ்வொரு கிராமமும் பொருளியல், பண்பாட்டுச் சுதந்திரம் கொண்ட தனித்த நிர்வாக அமைப்பாக தன்னைத்தானே ஆண்டுகொண்டு முழுமை பெற்றிருக்கும் நிலையை காந்தி கனவு கண்டார். அதுதான் காந்தியின் சுயராஜ்யம். அவை தங்களுக்குள் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும். ஒற்றை அமைப்பாக அவை தொகுக்கப்ப்ட்டிருக்கக்கூடாது. அவற்றுக்கு மேல் முற்றதிகாரம் கொண்ட ஓர் அரசு அமையவும் கூடாது என்று அவர் எண்ணினார். இதை அவரைச் சூழ்ந்துள்ள எவரும் ஏற்றுகொண்டதில்லை. வினோபா போல அவரை நம்பிய மிகசிலர் தவிர அனைவருமே அதை ஒருவகை நகைச்சுவையாகவே எண்ணினர். ஏனென்றால் அங்கு உலகமெங்கும் மிக வலுவான அரசுகள் உருவாகிக் கொண்டிருந்தன.
வலுவான மையஅரசே வளர்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கை நேருவுக்கும் அம்பேத்காருக்கும் பட்டேலுக்கும் இருந்தது. அவர்கள் பின்னர் உருவாக்கியதும் அத்தகைய ஓர் அரசையே ஆகவே காந்தியின் அந்தக் கனவு ஒரு முதியவரின் விருப்பமென்றே அவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. காந்தி அதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா சுதந்திரத்தை நெருங்கும்போது காந்தி நேருவுக்கு எழுதிய தொடர்கடிதங்களில் வருங்காலத்தில் இந்தியாவில் கிராம சுயராஜ்யம் உருவாக்கப்படவேண்டுமென்று திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.
ஆனால் அது வெறும் அரசின்மைவாதம் என்றே நேருவால் புரிந்துகொள்ளப்பட்டது. ஒருவேளை அதை அப்போது உருவாக்கத் தொடங்கியிருந்தால் முதல்வகையான அரசின்மை நிலை உருவாகியிருக்கவும்கூடும். இந்தியக்கிராமங்கள் சுதந்திரமான தன்னிறைவான பொருளியல் அலகுகள் என காந்தி எண்ணினார். அவை தேங்கிப்போனவை என நேருவும் அம்பேத்கரும் எண்ணினர். இருவகை நோக்குகள்.
அரசு கடந்த நிலை அரசு உதிர்ந்த நிலை என்பது எதிர்காலத்தில் சாத்தியமான ஒரு கனவு. இன்று திரும்பிப் பார்க்கும் போது உலகில் எங்கும் அத்தகைய ஒரு அரசின்மைநிலைக்கான வாய்ப்பு தெரியவில்லை. மாறாக அரசுகள் வலுப்பெறுவதே காணக்கிடைக்கிறது.அரசின்மை நிலை என்பது ஒருவேளை வரலாற்றில் நிகழாமலே கூடப்போகக்கூடும். ஆயினும் அக்கனவு என்றும் மனித குலத்தை செலுத்தும்.
***
- காந்திய தேசியம் – 6
- காந்திய தேசியம் 5
- காந்திய தேசியம் 4
- காந்திய தேசியம் 3
- காந்திய தேசியம் 2
- காந்திய தேசியம் 1
சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதத்தின் சிரிப்பு
சார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்
***