உங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ள திரு.சோதிப் பிரகாசம், அதில் ஸ்தாலினிசத்தை அரசு-முதலாண்மைவாதம் என்று வரையறுக்கிறார். அப்படிச் சொல்லிவிட்டுப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஸ்தாலினிசத்தின் கொடுமைகளைச் சமுதாய அக்கறையுடன் சித்தரித்து இருக்கின்ற ஒரு கதைதான் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ என்பது எனது கருத்து. இதில் உள்ள ஒரே குறைபாடு, மார்க்ஸியமும் ஸ்தாலினிசமும் இதில் வேறுபடுத்திப் பார்க்கப்படவில்லை என்பதுதான்! எனினும், ‘விஷ்ணுபுரம்’ கதையில் சில பகுதிகள் பின்னர் சேர்க்கப்பட்டு இருப்பது போல, மார்க்ஸியத்தையும் ஸ்தாலினிசத்தையும் வேறுபடுத்திக் காட்டுகின்ற வகையில் ‘பின் தொடரும் நிழலின் குரலி’லும் சில பகுதிகள் சேர்க்கப்படும் என்றால், உலகத் தரத்தின் முன்னணியில் நிற்கின்ற ஒரு கதையாக அது மிளிரும் என்பதில் எனக்கு ஐயம் எதுவும் இல்லை.”
அ) திரு.சோதிப் பிரகாசத்தின் இந்தக் கருத்தைப் பற்றிய உங்களின் எண்ணங்கள் என்ன? திரு.சோதிப் பிரகாசத்துடன் இதில் நீங்கள் மாறுபடுகிறீர்கள் எனில் அதற்கான காரணங்கள் என்ன?
ஆ) திரு.சோதிப் பிரகாசத்துடன் உடன்படுகிறீர்கள் என்றால் “பின் தொடரும் நிழலின் குரலில்” எதுவும் சேர்க்கிற எண்ணங்கள் உண்டா?
— பி.கே.சிவகுமார்.
ஒரு படைப்பு வாசகனுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எத்தனைபேர் எத்தனை முறை வாசிக்கிறார்களோ அத்தனைமுறை அது புதிதாகப் பிறக்கிறது. சோதிப் பிரகாசம் அவர்களின் வாசிப்பு என்நூலில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது. அதை சரி அல்லது தவறு என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை. அவர் கணக்கிலெடுக்கத் தவறிய விஷயங்களை, அவர் பார்க்காத கோணங்களை சகவாசகனாக நான் சுட்டிக் காட்டலாம். படைப்பாளி கூட படைப்புக்கு ஒரு வாசகனே. இனி நான் எதை சொன்னாலும் அது அந்நாவலின் பகுதி அல்ல. அது முடிந்துவிட்டது. [விஷ்ணுபுரத்தில் புதிதாக எழுதிச் சேர்க்கப்படவில்லை]
என் நோக்கில் அந்நாவலில் மார்க்ஸியத்தையும் ஸ்தாலினியத்தையும் துல்லியமாக வேறுபடுத்திப் பார்த்திருப்பதாகவே படுகிறது. அப்படி வேறுபடுத்திப் பார்க்கும் ஒருவரால் அதை மார்க்ஸிய எதிர்ப்பு நாவல் என்று சொல்லிவிடவும் முடியாது. அது ஸ்தாலினிய எதிர்ப்பு நாவலே. ஆனால் ஸ்தாலினின் தரப்புகூட வலிமையாகவே சொல்லப்படுகிறது. அதில் ஒற்றைப்படையாகக் கருத்துகள் முன்வைக்கப்படுவது இல்லை. எல்லா கருத்தும் ஒரு விவாதத்தன்மையுடன்தான் வருகின்றன. ஆகவே எல்லா கருத்தும் மறுக்கப்படுகின்றன. ஆனால் சில தரப்புகள் தன்னிச்சையான உக்கிரத்துடன் நிகழ்ந்துள்ளன. எஸ்.எம்.ராமசாமி சொல்லும் மாறாப்பேரறம் குறித்த தரப்பு அதில் ஒன்று. அதற்குச் சமானமான வலிமையுடன் வருவது ஜோணி என்ற கதாபாத்திரத்தால் முன்வைக்கப்படும் எதிர்கால மார்க்ஸியம் குறித்த பெருங்கனவு. அந்நாவல் மார்க்ஸியத்தின் அழிவைப் பற்றி பேசவில்லை, அதன் மறுபிறப்பைப் பற்றிப் பேசுகிறது
மார்க்சியம் ஸ்தாலினியமல்ல. ஆனால் அது ஸ்தாலினியத்தை முளைக்கவைத்தது. அரை நூற்றாண்டு காலம் அதை நியாயப்படுத்தும் கருத்தியல் சட்டகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதை எவருமே மறுக்க இயலாது. பின்தொடரும் நிழலின் குரலின் முக்கியமான வினாவே அங்குதான் உள்ளது. சில எல்லைகளை நாம் ஒருபோதும் மீறமுடியாது என எண்ணுகிறோம், சிலவற்றை கற்பனைகூட செய்யமுடியாது என நம்புகிறோம். ஆனால் உரியமுறையில் நியாயப்படுத்தப்பட்டால் மனிதன் எதையும் செய்வான் என்றுதான் வரலாறு நிரூபித்துள்ளது. நாஜி வதைமுகாம்களை நடத்தியவர்கள் மனிதர்களே. அவர்களுக்கு அவர்கள் செயல் நியாயமாக, இன்றியமையாததாகப் பட்டது. ஆகவே மனிதன் கருத்தியல்மீது மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்பதே நாம் இருபதாம் நூற்றாண்டில் கற்றுக் கொண்ட பாடம். கருத்தியல் எந்த அளவுக்கு வலிமையாகவும் துல்லியமாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு மேலும் கவனமாக இருக்கவேண்டும். எந்த அளவுக்கு முற்போக்காக, எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு மேலதிகக்கவனம் தேவை. தர்க்கமல்ல, மனசாட்சியே நம் அளவுகோல்களைத் தீர்மானிக்கவேண்டும். புத்தியல்ல கனிவே நம்மை வழிநடத்தவேண்டும். அந்நாவலில் உள்ளதாக எனக்குப் படுவது இதுவே.
இதுவே பின் தொடரும் நிழலின் குரல் பேசும் விஷயம். அதைப்பேசும்பொருட்டு இக்காலகட்டத்தில் மிக வலிமையனதாக இருந்த ஒரு கருத்தியலான மார்க்ஸியம் உதாரணமாக்கப்பட்டுள்ளது, அவ்வளவுதான். அதன் பிரச்சினை அறத்துக்கும் தர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடு குறித்ததே. மார்க்ஸியமா ஸ்தாலினியமா என்பதல்ல அதன் சிக்கல். எப்படி ஸ்தாலினியத்தையும் போல்பாட்டின் கொடூரங்களையும் மகத்தான மனிதாபிமானிகளாக இருந்தவர்கள் கூட பலவருடம் நியாயப்படுத்தினார்கள் என்பதுதான். [இன்னும் சொல்லப்போனால் இ.எம்.எஸ் என்ற மேதை, பெருங்கருணையாளன் எப்படி அதைச்செய்தான் என்பதே என் தனிப்பட்ட சிக்கல்]. எப்படி எந்த ஒரு இலட்சியவாதமும் ஸ்தாலினியம் போன்ற வன்முறைக்களத்தை உருவாக்கக் கூடும் என்ற சாத்தியக்கூறுதான் அதன் இலக்கு. இலட்சியவாதம் எதிர்நிலை நோக்குகளை வன்முறையை உருவாக்குமென்றால் அது மெல்ல தன்னை வன்முறைக்குப் பலிதந்துவிடும் என்பதே. வன்முறைக்கு அதற்கே உரிய இலக்கணமும் வழிமுறையும் உண்டு என்பதே. அவ்வகையில்தன் ஆத்மாவின் ஆழத்திலிருந்து பின் தொடரும் நிழலின் குரலின் வரிகளை வாசித்த பலநூறு ஈழவாசகர்களை நான் அறிவேன்.
ஸ்தாலினியம் தவறாயிற்று என இன்று சாதாரணமாகச் சொல்லலாம். ஆனால் கொல்லப்பட்ட உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களை மீட்டெடுக்க இயலுமா என்பதே அந்நாவல் எழுப்பும் வினா. வன்முறை எங்கு எப்படி நிகழ்ந்தாலும் இந்த அபாயம் உள்ளது. அதை நிகழ்த்தும்போது உள்ள நியாயங்கள் மாறலாம். நிகழ்ந்தவற்றைச் சரிசெய்ய இயலாது. அப்படியானால் தியாகங்களுக்கு மதிப்பே இல்லையா? போல்ஷெவிக் புரட்சியில் இறந்துபோனவர்களின் மரணம் வரலாற்றின் கேலிக்கூத்துதானா? [அதே வினாவை அப்படியே ஈழத்தைப் பற்றியும் எழுப்பலாம். என்றாவது அவ்வினா எழுந்துவரும், மிகவலிமையாக. அப்போது என் நாவல் எதைப்பற்றியதென்ற கேள்விக்கே இடமிருக்காது]. அக்கேள்விக்கே கிறிஸ்து வந்து பதில் சொல்கிறார்- திருச்சபையின் கிறிஸ்து அல்ல படைப்பின் ஆன்மாவில் விளைந்த கிறிஸ்து.
ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம், தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை இயல்பாகக் கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின் மையம். அதை எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து அளவுக்கே முக்கியமான குரல்.