யோகி

yogi-adityanath-

அன்புள்ள ஜெமோ

இருகட்டுரைகளில் சமகால அரசியல் பேசியிருக்கிறீர்கள். ஒன்று, மகாபாரதம் பற்றிய அரசியல். இரண்டு, முஸ்லீம்களிடையே வளர்ந்துவரும் மதஅடிப்படைவாதம். அந்த தளத்தில் இந்த வினாவுக்கு தவிர்க்காமல் பதில் சொல்வீர்கள் என நினைக்கிறேன். உபியில் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்

செந்தில்குமார்

***

அன்புள்ள செந்தில்குமார்,

பெரும்பாலான கருத்துக்களை நான் என் சொந்த அனுபவத்தில் சொந்த சிந்தனையில் இருந்தே சொல்கிறேன். அவை தவறாக இருக்கலாம், நான் நம்புவதால் அதைச் சொல்கிறேன், அவ்வளவுதான். செய்தித்தாள்களை நம்பிக் கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதில்லை.

சென்ற ஆண்டு உ.பி சென்றேன். கணிசமான இடங்களில் இருந்த போஸ்டர் யாகூப் மேமனுக்கு இஸ்லாமியர் பல்லாயிரக்கணக்கில் திரண்டுவந்து அஞ்சலி செலுத்திய காட்சி – ஒட்டியவர்கள் பாரதியஜனதாக்காரர்கள். வட இந்தியாவில் பாரதிய ஜனதாக்கட்சிக்கு ஆதரவாக நிகழ்ந்த மாபெரும் பேரணி என்பது யாக்கூப் மேமனுக்கு இஸ்லாமியர் அஞ்சலி செலுத்திய நிகழ்வுதான் என்றார் ஒருவர்.

இத்தனை அப்பட்டமாக, இத்தனை ஆவேசமாக மும்பையை குண்டுவைத்து அழித்த தீவிரவாதிக்கு ஆதரவாக ஒரு பேரணியை நிகழ்த்துவது இஸ்லாமியர் மேல் என்ன சித்திரத்தை உருவாக்கும் என்பதைப்பற்றி அவர்களில் மிதவாதிகள் கூட யோசிக்கவில்லை. அவர்களைத் தூண்டிவிட்ட இடதுசாரிகள் யோசிக்கவில்லை.

 [உடனே யாக்கூப் நிரபராதி, இந்திய நீதித்துறை ,காவல்துறை, அரசு, பொதுமக்கள் அத்தனைபெரும் குற்றவாளிகள் என ஆரம்பிப்பார்கள். யாக்கூப் மேமன், அப்சல் குரு,அஜ்மல் கசாப் எல்லாருமே நிரபராதிகள், தியாகிகள் என வாதிடுவதன் உளவியல்தான் பாரதியஜனதாவின் வளர்ச்சிக்கு வேர்நீர்] உபியில் இந்து வாக்குகள் ஒருங்குதிரள்வதை நானே கண்டேன். திரட்டியவர்களில் ஒருவர் யோகி ஆதித்யநாத்

தேசப்பிரிவினையை, மதவெறியை ஆதரிக்கும் ஓர் அமைப்பால் எதிர்க்கப்படுவதுபோல பாரதியஜனதாவை வளர்க்கும் விசை வேறில்லை. அவ்வெறுப்பை அவர்கள் கக்கவேண்டும் என்றே அவர்கள் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள் என்றுகூடத் தோன்றுகிறது. இந்நாட்டின் எளிய மக்கள் இத்தேசம் ஒன்றாக திகழவேண்டும், வளரவேண்டும் என்றே விழைகிறார்கள்.

கொரக்பூர் பகுதிக்கு நான் இருமுறை சென்றிருக்கிறேன். என் நேரடி காட்சிப்பதிவைக்கொண்டு இதைச் சொல்கிறேன். இந்தியாவின் மிகமிகப்பிற்பட்ட பகுதிகளில் ஒன்று. சென்ற ஐம்பதாண்டுக்கால இந்தியவளர்ச்சிக்கும் அப்பகுதிக்கும் தொடர்பில்லை. இந்தியாவின் வளர்ச்சி என்பது எத்தனை விரைவில் நிலப்பிரபுத்துவ அமைப்புகள் அதிகாரமிழந்து நவீன முதலாளித்துவ ஜனநாயக அமைப்புக்கள் உருவாகின்றன என்பதைச் சார்ந்துதான் உள்ளது. நூறாண்டுகளுக்குமுன் சைவ மடங்களுக்கும் நிலக்கிழார்களுக்கும் உரியதாக நிலம் முழுக்க இருந்த தஞ்சையை நினைத்துக்கொள்ளுங்கள், அதுதான் கொரக்பூர் பகுதி.

தஞ்சையில் மடங்களைச் சார்ந்தவர்களாலும் நிலக்கிழார்களாலும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு தேக்கநிலையில் வைக்கப்பட்டிருந்த மக்கள் பலவகையான முற்போக்குப்போராட்டங்கள் வழியாக விடுதலை அடைந்தனர். அந்த விடுதலை தொடங்கப்படாத இடம் கொரக்பூர். கொரக்பூர் மடத்தைச் சார்ந்தே அங்கே வாழ்க்கை. அது நிலப்பிரபுத்துவ அடிமைவாழ்க்கை. சராசரி மக்களின் நிலை மிகப்பரிதாபகரமானது. உடனே மடம் செய்யும் சேவைகளை பட்டியலிடவேண்டியதில்லை, அதெல்லாம் ஓரளவு இருக்கும். உண்மையில் தேவையானது முந்தைய காலகட்டத்தில் இருந்து அடுத்தகட்டத்திற்கான வளர்ச்சி. அதாவது யதார்த்தமான நிலச்சீர்திருத்தம், சாமானியர்களின் நேரடி அதிகாரம்.

கொரக்பூரில் அனைத்தையும் மடம் , மடத்தைச்சேர்ந்தவர்கள் ஆள்கிறார்கள். நான் சென்றபோது மடத்தைச் சேர்ந்த ஓர் அடியாள்படை அமைப்பைப்பற்றி மிக எதிர்மறையான கருத்துக்களைச் சொன்னார்கள். சொன்னவர்களில் ஒருவர் ஒர் ஆர்.எஸ்.எஸ்காரர். அத்தனைபேரையும் அச்சமே ஆள்வதைக் கண்டேன்.

யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகமிக எதிர்மறையான விளைவுகளை இந்திய அரசியலில் உருவாக்கும் என்றே நான் அஞ்சுகிறேன். ஒன்று, இப்படி வெளிப்படையான மத அடையாளத்துடன் ஒருவர் அரசுப்பதவியை வகிக்கக்கூடாது. ஏனென்றால் உண்மையில் அரசுப்பதவி என்பது ஒரு குறியீடு. அக்குறியீடு மதச்சார்பின்மைகொண்டதாக, நவீனமானதாகவே இருக்கவேண்டும். அவ்வகையில் நாட்டை அதன் அடிப்படைவிழுமியங்களில் இருந்து பின்னுக்குக் கொண்டுசெல்லும் செயல் இத்தெரிவு.

இரண்டாவதாக யோகி ஆதித்யநாத் ஓர் அரசியலாளுமை என்னும் வகையில் நிதானமோ, அரசியல்சட்டம் மீது மதிப்போ, ஜனநாயக நம்பிக்கையோ கொண்டவராக இதுவரை வெளிப்படவில்லை. நவீனப்பொருளியலில், ஜனநாயகரீதியான வளர்ச்சியில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் மிகத்தொன்மையான ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பின் முகம். ஆகவே பொருளியலில் மாபெரும் பின்னடிவைப்பு அவருடைய தெரிவு என்பதே தெரியவரும்

என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? இருமுனைகளும் கூர்மைகொள்கின்றன. உச்சகட்ட கசப்பு வெறுப்பு வசைபாடலுக்கு அப்பால் அரசியலே இல்லாமலாகிவிட்டிருக்கிறது. இரு சாராரும் மறுதரப்பை தங்கள் கசப்புக்கும் வெறுப்புக்கும் காரணமாகச் சுட்டுவார்கள். இரண்டுக்கும் நடுவே நிற்பவர்கள் இருவருக்கும் பொது எதிரிகளாக ஆவார்கள்.

தேசத்துக்கு எதிரான போரை தொடுப்பவர்களை, பிரிவினைவாதிகளை, மதவெறியர்களை தழுவிக்கொண்டு யோகி போன்றவர்களை எதிர்ப்பது அவர்களை மேலும் மேலும் வலுப்பெறவே செய்யும் என்பதை நம் சுதந்திரஜனநாயக நோக்கு கொண்டவர்களும் முற்போக்கினரும் உணர்வதில்லை. காஷ்மீர் பிரிவினைவாதிகளை, இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மேடையில் வைத்துக்கொண்டு யோகி ஆதித்யநாத்தை வாயார வசைபாடுவார்கள் இவர்கள். அதன்மூலம் இவர்களே அவரை இந்தியப்பிரதமராக ஆக்காமல் ஓயமாட்டார்கள்.

இவ்விரு கும்பலாலும் எதிர்க்கப்படும் கூட்டம் இங்கே மிகமிகக்குறைவாக இன்றுள்ளது. அவர்களின் எண்ணிக்கை பெருகும்வரை மீட்பில்லை. சோர்வுடன் மட்டுமே அதைச் சொல்லவேண்டியிருக்கிறது

ஜெ

***

முந்தைய கட்டுரைஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63