60. கனவுக்களப் பகடை
அன்றும் தேவயானி பின்காலையில் படுத்து உச்சிப்பொழுதுக்குப் பிறகுதான் துயின்றெழுந்தாள். முந்தைய நாள் துயின்ற பொழுதை உடல் நினைவில் பதித்திருக்க வேண்டும். அந்த நேரம் வந்ததுமே இனியதோர் சோர்வு உடலில் படர்ந்தது. முந்தையநாள் துயின்றபோதிருந்த இனிமை நினைவில் எழுந்தது. வெளியே ஒளியென, காட்சிகளென, அசைவுகளென வண்ணங்களெனப் பரந்திருந்த புற உலகை முற்றிலும் வெளித்தள்ளி அனைத்து வாயில்களையும் அடைத்துக்கொண்டு தன் உள்ளே இருக்கும் மிக நுண்மையான ஒன்றை வருடியபடி தனித்திருக்க வேண்டுமென்று தோன்றியது.
அது ஒரு கூரிய முள். அதன் முனையில் தன்னுணர்வின் மிக மென்மையான பகுதியொன்றை வைத்து உரசிச்செல்லும்போது ஏற்படும் சிலிர்ப்பூட்டும் நெகிழ்வு. முற்றிலும் இருள் நிறைந்த விரிந்த வெளியொன்றில் தனித்து வைக்கப்பட்டிருக்கும் அருமணியின் ஒளித்துளி. பிறிதொன்றும் வேண்டியதில்லை என்று தோன்றியது. எழுந்து சென்று மஞ்சத்தில் படுத்து கண்களுக்கு மேல் துணியொன்றைக் கட்டி இமைகசிந்து வரும் வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு உடல் சுருட்டி படுத்துக்கொண்டாள். வைரமுனையுடன் எழுந்து வந்தது அந்த முள்நுனி. அதன் நீல நிற நச்சு. மயக்குவது.
கூர்மையைச் சூழ்ந்து படபடத்துப் பறந்தது வண்ணத்துப்பூச்சி. தன் ஒற்றைக்காலை அதன் முனையில் ஊன்றி நின்று சிறகடித்தது. பறப்பதும் நிலைப்பதும் ஒன்றேயான அசைவு. அந்த இனிமை அவள் உடலுக்கும் பரவியது. நாவில் மட்டுமே அதற்கு முன் இனிமையை உணர்ந்திருந்தாள். நெஞ்சில் உணர்ந்தது இனிமையென்று கற்பனை செய்துகொண்டிருந்தாள். அப்போது இடது உள்ளங்கால் தித்தித்தது. தொடைகள் வழியாக அத்தித்திப்பு படர்ந்தேறியது. அது வெளிக்கசிந்து வீணாகிவிடக்கூடாதென்பதைப்போல உடலை இறுக்கிக்கொண்டாள். உள்ளத்தைக் கொண்டு உடலை கவ்வ முயல்வதுபோல. மெல்லிய புல்லரிப்புடன் உடல் எழுந்தெழுந்து அமைந்துகொண்டிருந்தது. புரண்டு படுத்து முகத்தை மென்சேக்கையில் அழுத்திக்கொண்டாள்.
பின் இனிமை ஓர் அலையென அவளை கடந்து சென்றது. காற்றலையில் சுடரென அவள் உடல் துடித்து அலைபாய்ந்து நீண்டெழுந்து ஒருகணம் வெட்டவெளியில் நின்று பின்பு வந்து இணைந்துகொண்டது. மெல்ல தளர்ந்து தன் வியர்வையின் மணத்தை தானே உணர்ந்தபின் கண்களுக்குள் அலையும் குருதிக் குமிழிகளை நோக்கியபடி படுத்திருந்தாள். ஒவ்வொரு சொல்லாக உதிர்ந்து மறைய வெளியே காற்று அடிப்பதை சித்தம் உணர்ந்தது. காற்று எனும் ஒற்றைச்சொல்லாக தன் இருப்பை உள்ளுணர்ந்தாள். பின்பு அதுவும் மறைந்தது.
காற்றின் ஒலிகேட்டே விழித்துக்கொண்டாள். அறைக்குள் அனைத்து துணிகளும் பறந்து கொண்டிருந்தன. சாளரம் வழியாக வந்த இலைகளும் சருகுகளும் உள்ளே சுழன்று சுவர் மூலைகளில் சுழிவளையங்களாயின. தன் முகத்திலும் உடம்பிலும் படிந்திருந்த மெல்லிய தூசியையும் சருகுப்பொடிகளையும் உதறியபடி எழுந்து அமர்ந்தாள். காற்று அடங்கி துணிகள் தங்கள் இயல்வடிவில் வந்தமைந்தன. இறுதியாக அவளுடைய மெல்லிய பட்டுமேலாடை புகையென தவழ்ந்திறங்கி நுனிமட்டும் சற்றே அலையடித்து அமைந்தது. அதை எடுத்து இடை செருகிச் சுழற்றி தோளிலிட்டபடி வெளியே வந்தாள்.
நன்றாக பசித்தது. கூரைவிளிம்பு நிழல் விழுந்திருந்ததைக் கொண்டு பொழுதென்னவென்று கணித்தாள். உச்சிப்பொழுது தாண்டி மூன்று நாழிகை ஆகியிருந்தது. அடுமனைக்குச் சென்று உணவுண்ணலாம் என்று எண்ணி செல்லும் வழியிலேயே மரத்தொட்டியிலிருந்து நீரள்ளி முகம் கழுவி ஈரக்கையால் குழலைத் தடவி அள்ளி கொண்டையாக முடிந்துகொண்டு நடந்தாள். தன் காலடி வைப்பிலும் இடையசைவிலும் இருந்த இனிய தளர்வையும் குழைவையும் அவளே உணர்ந்தாள். பிற பெண்களிடம் பல முறை அவளே கண்டதுதான் அது. அப்போதெல்லாம் ஏனிப்படி காற்றில் புகைச்சுருள்போல் நடக்கிறார்கள் என்ற ஏளனம் நெஞ்சிலெழுந்ததுண்டு. அப்போது அவ்வாறு ஒரு நடை அமைந்ததற்காக உள்ளம் நுண்ணிய உவகையையே கொண்டது.
அடுமனையின் படிகளில் ஏறி ஓசையுடன் கதவைத் திறந்து தலைநிமிர்ந்து உள்ளே நுழையும் வழக்கம்கொண்டிருந்த அவள் அன்று வாயிலுக்கு முன்னால் ஒரு கணம் தயங்கி மெல்ல கதவைத் தொட்டு சற்றே திறந்து உள்ளே பார்த்தபின் நுழைந்தாள். அவளைக் கண்டதும் அங்கு அமர்ந்து சிரித்து நகையாடிக்கொண்டிருந்த அடுமனைப்பணியாளர்கள் அனைவரும் எழுந்தனர். “வருக, தேவி! குடிலுக்குள் வந்து பார்த்தேன். தாங்கள் துயின்றுகொண்டிருந்தீர்கள். துயிலெழுந்து வரட்டும் என்று காத்திருந்தோம். இன்று உணவு சூடாகவே உள்ளது. அருந்துகிறீர்களா?” என்றாள் அடுமனைப்பெண். “ஆம், பசிக்கிறது. அதற்காகத்தான் வந்தேன்” என்றபடி அவள் அடுமனைக்குள் சென்றாள்.
ஊன் சோறின் மணம் எழுந்தது. “ஊன் சோறா?” என்று அவள் கேட்டாள். “ஆம், காட்டுஆடு” என்றபின் “சக்ரனும் அவர் தோழர்களும் ஆட்டுக்குட்டியொன்றைக் கொன்று அதன் ஊனை கொண்டுவந்தனர். அது ஆசிரியருக்கு மட்டுமே என்றனர்” என்றாள். “ஏன்?” என்றபடி அவள் மணையிலமர்ந்தாள். “நேற்று அவர் இளம்கன்றின் இறைச்சியை கேட்டிருக்கிறார்.” தேவயானி “ஆம், அதை பிறரும் உண்ணலாமே?” என்று கேட்டாள். “அவருக்கென்று அதை வேட்டையாடியிருக்கிறார்கள். அவருக்கான காணிக்கை அது. பிறர் உண்ணலாகாது என்றார்கள்.”
அவள் நிமிர்ந்து பார்த்தாள். மிகத் தொலைவில் காற்று எழுந்து சுழன்று மரக்கிளைகளை உலுக்கியபடி அணுகும் ஓசைபோல ஒன்று கேட்டது. “யார் கொண்டு வந்தார்கள்?” என்று கேட்டாள். “சக்ரன்” என்றாள் அடுமனைப்பெண். “அந்தக் கன்றையே கொண்டு வந்தார்களா?” அவள் “இல்லை, நன்றாகக் கழுவித் துண்டுபோட்ட ஊனைத்தான் கொண்டு வந்தார்கள்” என்றாள். தேவயானி மணை புரண்டு பின்னால்விழ பாய்ந்து எழுந்து கைகளை உதறியபடி “அந்த ஊனுணவு எங்கே?” என்றாள். “அதை சமைத்து ஆசிரியருக்கு அளித்துவிட்டோம். அவர் உண்டு ஒரு நாழிகை கடந்துவிட்டது” என்றாள்.
அவள் பாய்ந்து கதவைத்திறந்து முற்றத்தில் இறங்கி சுக்ரரின் குடில் நோக்கி ஓடினாள். அவளுக்குப்பின்னால் ஓடிவந்த அடுமனைப்பெண் திகைத்து நோக்கி நின்றாள். சுக்ரரின் குடிலுக்கு முன் சத்வரும் கிருதரும் அமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர் ஓடிவருவதைப்பார்த்து கிருதர் எழுந்தார். “என்ன ஆயிற்று, தேவி?” என்றார். “தந்தை! தந்தையை எழுப்புங்கள்!” என்றாள். “அவர் உணவுண்டபின் ஓய்வெடுக்கிறார்” என்றார் கிருதர். “இல்லை, இப்போதே நான அவரை பார்த்தாகவேண்டும்” என்றபின் படிகளில் ஏறி கதவுப்படலைத் தள்ளி குடிலுக்குள் நுழைந்தாள்.
இறகுச்சேக்கையில் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த சுக்ரரின் கால்களைப்பற்றி உலுக்கி “தந்தையே! தந்தையே!” என்று கூவினாள். அவர் கையூன்றி மெல்ல எழுந்து “என்ன?” என்றார். “அவரை மீண்டும் கொன்றுவிட்டார்கள். இம்முறை அவர் திரும்ப வரமுடியாது!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றார் சுக்ரர். “தந்தையே, அவரைக்கொன்று அந்த ஊனை உங்களுக்கு உணவாக்கிவிட்டார்கள்” என அவள் கூவினாள். தொண்டை அடைத்து அழுகை எழ விம்மினாள். சுக்ரர் அறியாது தன் வயிற்றில் கையை வைத்தார். ”உங்களுக்கு மட்டும் என ஊன் அளிக்கப்பட்டுள்ளது. அது அவர்தான், ஐயமே இல்லை! நானறிவேன், அவர்தான்” என்று சொன்னாள்.
“ஆம், எனக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள். இரு, நான் நூல்கணித்து பார்க்கிறேன்” என்றபடி சற்றே நிலைபெயர்ந்த காலடிகளுடன் நடந்து மணையை இழுத்துப்போட்டு அமர்ந்து கண்களை மூடினார் சுக்ரர். அவள் எழுந்து வாயில் வழியே வெளியே ஓடி கிருதரிடம் “சென்று சக்ரனும் அவனுடைய தோழர்களும் இங்கிருக்கிறார்களா என்று பாருங்கள். இருந்தால் தடுத்து வையுங்கள்” என்றாள். ”ஏன்?” என்றார் கிருதர். “இன்று அவர்கள் தந்தைக்கு ஊன் காணிக்கை அளித்திருக்கிறார்கள்” என்றாள். கிருதர் உடனே புரிந்து கொண்டு “பாவிகள்!” என்றார்.
சத்வர் “அவர்கள் மீண்டும் காட்டுக்கு சென்றுவிட்டார்கள்” என்றார். “மீண்டுமா?” என்றாள். “ஆம், மீண்டும் காட்டுக்குச் சென்று ஊன்தேடி வருவதாக சொன்னார்கள்.” கிருதர் “இப்பொழுது காட்டின் எல்லையைக் கடந்து ஊருக்குள் நுழைந்துவிட்டிருப்பார்கள். அவர்கள் ஒற்றர்கள், ஐயமே இல்லை. இருமுறையும் கசனைக் கொன்றவர்கள் அவர்கள்தான்” என்றார். “என்ன செய்வது? அவரை மீட்டாக வேண்டும்” என்றாள் தேவயானி. “இம்முறை மீட்கஇயலாது, தேவி. ஆசிரியரின் வயிற்றைப்பிளந்து அவர் வெளிவந்தாக வேண்டும்” என்றார் கிருதர்.
அப்போதுதான் முழு விரிவையும் உணர்ந்து மெல்ல பின்னடைந்து சுவரில் சாய்ந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழியத்தொடங்கியது. உடலை அழுத்தியபடி நடுங்கும் கைகளால் மரச்சுவரைப்பற்றியபடி நின்றாள். “இருமுறை தோற்றபின் தெளிவாக திட்டமிட்டிருக்கிறார்கள். ஆசிரியர் அவனை மீட்டெடுக்க முடியாமல் செய்துவிட்டார்கள்” என்றார் கிருதர். “இல்லை, மீட்டெடுத்தாகவேண்டும். அவர் எனக்கு வேண்டும்” என்றபடி அவள் உள்ளே ஓடி சுக்ரரின் அருகே விழுந்து முழங்கால்களில் அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டு “தந்தையே, அவர் வேண்டும். அவர் திரும்பி வந்தாக வேண்டும். இல்லையேல் எனக்கு வாழ்க்கையில்லை” என்றாள்.
அவர் கண்களைத் திறந்து “அவன் உடல் என் வயிற்றுக்குள்தான் இருக்கிறது” என்றார். “அவன் ஊனின் எஞ்சிய பகுதியை அவர்கள் காகங்களுக்கு இரையாக்கிவிட்டார்கள். அவனை மீட்டெடுப்பதென்றால் நான் இறந்தாக வேண்டும்.” அறியாது நெஞ்சில் கூப்பி பதிந்த கைகளோடு தேவயானி விம்மினாள். “நீ விழைந்தால் நான் இறந்து அவனை மீட்டெடுக்கிறேன்” என்று சுக்ரர் அவர் விழிகளைப் பார்த்து சொன்னார். அவள் இல்லை இல்லையென்று தலையசைத்தாள். “அத்தனை பெண்களுக்கும் வாழ்வில் ஒருமுறை வந்தணையும் தருணம் இது. மகளே, இருவரில் ஒருவரை தெரிவு செய்தாகவேண்டும்” என்றார் சுக்ரர்.
அவள் நிமிர்ந்து அவர் விழிகளைப்பார்த்து “ஆசிரியரென தாங்கள் எனக்கு எதை பரிந்துரைப்பீர், தந்தையே?” என்றாள். “தந்தை உனது இறந்த காலம். கணவனே எதிர்காலம். நீ இளையோள். இளையோர்கள் எதிர்காலத்தையே தெரிவு செய்யவேண்டும்” என்றார். “நான் உங்களை, உங்கள் இறப்பிற்குப்பின்…” என்றாள். சொல்ல சொற்கள் நெஞ்சுக்குள் திமிற “என்னால் எப்பக்கமும் திரும்ப முடியவில்லை, தந்தையே” என்றாள். “இன்று வரை இவ்வுலகில் இத்தெரிவை செய்த அத்தனை பெண்களும் கணவனையே முன் வைத்திருக்கிறார்கள். நீ பிறிதொன்றாக ஆகவேண்டியதில்லை” என்றார் சுக்ரர்.
அவள் விரல்களால் கண்களை அழுத்தியபடி தலை குனிந்து தோள்களைக் குறுக்கி உடலை இறுக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தாள். கண்ணுக்குள் ஒளிமின்னிச் சென்றதுபோல அவன் சிரித்தமுகம் வந்து சென்றது. சீண்டும் நகைப்பு கொண்ட விழிகள். அவள் கண்களைத் திறந்து “அவர் வேண்டும் எனக்கு. அவர் மட்டும் போதும், இவ்வுலகே அழிந்தாலும் சரி. மூன்று தெய்வங்களும் அழிந்தாலும் சரி. அவர் மட்டும் வேண்டும். நான் இறந்தாலும் அவர் வாழ வேண்டும்” என்றாள். “நன்று, நீ அவ்வாறே சொல்வாய்’ என்றபின் சுக்ரர் “அவ்விளக்கை அருகே கொண்டு வா!” என்றார். அவள் சரிந்தமர்ந்து கை நீட்டி அகலை தரை வழியாக நகர்த்தி அவர் அருகே கொண்டு வந்தாள்.
குடிலுக்குள் வந்து நின்ற கிருதர் “தாங்கள் இறக்காமலேயே அவனை மீட்க முடியும், ஆசிரியரே” என்றார். “என்ன சொல்கிறீர்?” என்று சுக்ரர் கேட்டார். “தங்கள் வயிற்றில் வாழும் கசனை மைந்தனென ஏற்றுக்கொள்ளுங்கள். அங்கே அவன் கருவடிவு அடையட்டும். கருவுக்கு முதன்மை நுண்சொற்களை பயிற்றுவிக்கமுடியுமென்று நூல்கள் சொல்கின்றன. அக்கருவிலேயே சஞ்சீவினியை கற்றுக் கொண்டபின் அவனை உயிருடன் எழுப்புங்கள். உங்கள் வயிறு திறந்து அவன் வெளியே வந்தபின் நான் அவனிடம் நிகழ்ந்ததை சொல்கிறேன். அவன் உங்களை உயிர்ப்பிக்க முடியும். தேவிக்கு கணவனும் தந்தையும் திரும்ப கிடைப்பார்கள்.”
தேவயானி திகைப்படைந்து எழுந்து கிருதரின் கைகளை பற்றிக்கொண்டு “ஆம், அதை செய்யலாம். அது ஒன்றே வழி. தந்தையே, அது ஒன்றே வழி” என்றாள். சுக்ரர் புன்னகைத்து “இப்போது இந்த மாபெரும் நாற்களத்தின் வரைவும் இலக்கும் தெரிகிறது. இத்தனை நாட்கள் இதற்காகத்தானா என் சிறு சித்தத்தைக் கொண்டு துழாவிக்கொண்டிருந்தேன்? நன்று!” என்றபின் கிருதரிடம் “அவ்வாறே செய்கிறேன்” என்றார். தன் வயிற்றின் மீது கைவைத்து ஒலியாக ஆகாத உதடசைவுகளால் பீஜமந்திரத்தை சொன்னார். உயிர்த்துளி என அவர் வயிற்றுக்குள் உருக்கொண்ட கசனை ஆத்மாவின் வடிவாக எழுப்பி அவனை நோக்கி கர்ப்ப மந்திரத்தை உரைத்தார். பின்பு தாரண மந்திரத்தை சொன்னபோது அவர் வயிற்றுக்குள் அவன் சிறிய கருவாக உருவானான்.
அவர் வயிறு பெருத்து வருவதை தேவயானி கண்டாள். அச்சமும் உளவிலக்கமும் ஏற்பட்டு அங்கிருந்து எழுந்து வெளியேறி மீண்டும் தன் குடிலுக்குள் சென்று சேக்கையில் படுத்துவிட வேண்டும் என்று தோன்றியது. அதிலிருந்து எழும்போது அனைத்தும் வெறும் கனவென்றாகி இருக்கும் என்பது போல. கிருதர் கைகளைக்கூப்பியபடி மலைத்த நோக்குடன் நின்றார். சுக்ரரின் வயிறு பெருத்து வந்தது. கருமுழுத்த பெண்ணின் வயிறுபோல பளபளப்பையும் வலம் சாய்ந்த குழைவையும் கொண்டது. கிருதர் அவளிடம் “நீ வெளியே செல்லலாம்” என்றார். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இது எப்போதும் தனிமையிலேயே நிகழ்கிறது. அவர் சஞ்சீவினியை அதற்கு உரைக்கட்டும். அவன் பிறந்தெழுந்த பிறகு நீ உள்ளே வரலாம்” என்றார்.
அவள் கையூன்றி எழுந்து தூணைப்பற்றியபடி தயங்கி நின்றாள். “நாம் இருவருமே வெளியே செல்வோம், தேவி” என்றார் கிருதர். இருவரும் வெளியே வந்ததும் அவர் படல் கதவை மெல்ல மூடினார். “சஞ்சீவினியை உரைத்து அவன் பிறந்தெழ சற்று பொழுதாகும். அதுவரை காத்திருப்போம்” என்றார். அவர்கள் வெளியே காத்து நின்றிருந்தனர்.
சற்று நேரத்திற்குப் பிறகு உள்ளே காலடியோசை கேட்டது. “யாரங்கே?” என்று கசனின் ஓசை கேட்டது. “அவர்தான்! அவர்தான்!” என்று அவள் படலை அகற்ற பாய்ந்து சென்றாள். “இரு, நான் திறக்கிறேன்” என்று கிருதர் கதவை திறந்தார். உள்ளே நின்றிருந்த கசன் “நீங்களா? என்ன நிகழ்ந்தது இங்கே?” என்றான். “ஆசிரியர் அங்கே வயிறு திறந்து இறந்து கிடக்கிறார்.” கிருதர் தேவயானியிடம் “இங்கிரு” என்று தாழ்ந்த குரலில் சொல்லி குடிலுக்குள் சென்று கதவை மூடினார். அவள் கால் தளர்ந்தவளாக கையூன்றி மெல்ல திண்ணையிலேயே அமர்ந்தாள். முழங்காலை மடித்து முட்டுகளில் முகத்தை அமிழ்த்தியபடி பேரெடையுடன் தன்னை அழுத்திய காலத்தை கணம் கணமாக உணர்ந்து அமர்ந்திருந்தாள்.
மீண்டும் படல் ஓசையுடன் திறந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்தபோது தலை சுற்றி பக்கவாட்டில் விழப்போனாள். சுவரைப்பற்றியபடி “கிருதரே…” என்றாள். கிருதர் “எழுந்து உள்ளே வாருங்கள், தேவி. அனைத்தும் நன்றாகவே முடிந்துவிட்டன” என்றார். “என்ன? என்ன?” என்று அவள் கேட்டாள். “உங்கள் தந்தையும் கணவரும் முழு உடலுடன் முழுச்சித்தத்துடன் முன்பெனவே இருக்கிறார்கள். வருக!” என்றார். உவகையென எதுவும் அவளுக்குள் தோன்றவில்லை. இன்னதென்றறியாத அச்சம் மட்டுமே நெஞ்சை அழுத்தி கைகால்களை தளரவைத்தது.
கைகளைக் கூப்பியபடி கண்களில் நீர் வழிய மெல்ல குடிலுக்குள் நுழைந்து மேலும் முன்னகராமல் அப்படியே நின்றாள். மணை மேல் சுக்ரர் அமர்ந்திருக்க அருகே கசன் கால் மடித்து மாணவனுக்குரிய முறையில் அமர்ந்திருந்தான். சுக்ரர் அவளை நோக்கி “நீ விரும்பியதுபோல அதே பேரழகுடன் மீண்டு வந்திருக்கிறான், பார்!” என்றார். கிருதர் “அத்துடன் உன் தந்தைக்கிணையான மெய்யறிவையும் பெற்றிருக்கிறான்” என்றார். அவள் கண்ணீர் வழிய புன்னகைத்தாள்.
தேவயானி மீண்டும் தன் குடில் நோக்கி செல்கையில் அடுமனைப்பெண்ணும் பணியாளர்களும் அவள் குடில் வாயிலில் அவளுக்காக காத்திருந்தனர். புன்னகையுடனும் தளர்நடையுடனும் அவள் அருகே சென்று “ஒன்றுமில்லை” என்றாள். அவர்கள் கண்களில் குழப்பம் மாறவில்லை. “ஒன்றுமில்லை. பிரஹஸ்பதியின் மைந்தர் எங்கோ தொலைந்துவிட்டார் என்று எண்ணினேன். அவர் அங்கே தந்தையின் குடிலுக்குள்தான் இருக்கிறார்” என்றாள். அவர்கள் ஐயம் முற்றும் விலகவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் நோக்கியபின் “நன்று தேவி. தாங்கள் ஓடியதைக் கண்டு அஞ்சிவிட்டோம்” என்றனர்.
“ஆம், இங்கு ஏதோ விரும்பத்தகாத ஒன்று நிகழ்கிறது என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது” என்றாள். “அந்த ஐயம் எங்களுக்கும் இருக்கிறது, தேவி. அதை எங்கு சொல்வது என்று தெரியவில்லை. இங்கே விறகுப்புரை அருகே அசுரமாணவர்கள் சக்ரனின் தலைமையில் கூடிநின்று பேசுவதை நாங்கள் பலமுறை கண்டிருக்கிறோம். வஞ்சமோ சூழ்ச்சியோ செய்கிறார்கள் என்று தோன்றியது. எங்களில் ஒருவன்தான் அவர்கள் பிரஹஸ்பதியின் மைந்தருக்கு எதிராகவே அதை செய்கிறார்கள் என்றான். அது அவன் கேட்ட ஓரிரு சொற்களில் இருந்து உய்த்தறிந்தது. அதை எங்கு சொல்வதென்று தெரியாமல் இருந்தோம்” என்றாள் அடுமனைப்பெண்.
தேவயானி “நன்று! தந்தையிடம் நானே பேசுகிறேன். அவர்களைப் பிடித்து விசாரிப்போம்” என்றாள். தலையசைத்தபடி அவர்கள் கலைந்து சென்றனர். தன் குடில் வாயிலில் அமர்ந்தபடி அவள் கசன் வருவதற்காக காத்திருந்தாள் முதலில் உடலெங்கும் இருந்த களைப்பு மெல்ல விலக உள்ளம் இனிய காற்று பட்டதுபோல புத்துணர்ச்சி கொண்டது. தன் உதடுகள் மெல்லிய பாடல் ஒன்றை மீட்டிக்கொண்டிருப்பதை தானே கேட்டு புன்னகையுடன் மூங்கில் தூணில் தலை சாய்த்தாள். கன்னங்களில் கை வைத்தபோது கண்ணீரின் பிசுக்கு இருப்பதை உணர்ந்து எழுந்து சென்று முகம் கழுவி ஆடி நோக்கி குழல் திருத்தி ஆடையை உதறி நன்றாக அணிந்து மீண்டும் திண்ணைக்கு வந்தாள்.
கிருதரும் கசனும் சுக்ரரின் குடில்விட்டு பேசியபடி வெளியே வந்தனர். கிருதர் ஏதோ சொல்ல கசன் சிறுவனைப்போல் சிரித்துக்கொண்டிருந்தான். படியிறங்குகையில் அவனுடைய அசைவு அவளை திடுக்கிடச் செய்தது. ஏனென்று தன்னையே உசாவியபடி மீண்டும் அவன் உடலசைவுகளையே கூர்ந்து நோக்கினாள். நடந்து அவளருகே வந்ததும் கிருதர் அவன் தோளைத் தட்டியபின் “பார்ப்போம்” என்று கடந்து சென்றார். அவன் அருகே வந்து “வணங்குகிறேன், தேவி” என்றான். அவள் உள்ளம் மீண்டும் திடுக்கிட்டது. “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்றாள். “தெரியவில்லை. இன்று நான் எங்கு சென்றேன் என்று நினைவில்லை. இறுதியாக நண்பர்களுடன் காட்டுக்கு ஊன் தேடச் சென்றேன். அங்கு மயங்கிவிட்டிருப்பேன் போலும். விழிப்பு வந்தபோது இங்கே ஆசிரியரின் அறைக்குள் இருந்தேன். என்னை இங்கு கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள்” என்றான்.
“ஆம், மயங்கிவிட்டீர்கள். பிற மாணவர்கள் தங்களை இங்கு கொண்டுவந்தார்கள். தன் ஊழ்க நுண்சொல் வழியாக தங்களை தந்தை எழச்செய்தார்” என்றாள். “ஆம், அந்த மயக்கு ஒரு பெரிய கனவு போல. அக்கனவில் நான் தேவருலகில் இருந்தேன். இதோ இங்கு இவை நிகழ்வதுபோலவே இத்தனை தெளிவான நிகழ்வாக இருந்தது அது. மாளிகைகளை தொட முடிந்தது. குரல்களை கேட்க முடிந்தது. ஒவ்வொரு விழியையும் விழிதொட்டு புன்னகைக்க முடிந்தது.”
நான் பிரஹஸ்பதியை கண்டேன். அவர் காலடிகளைப் பணிந்து “தந்தையே, மீண்டு வந்துவிட்டேன்” என்று சொன்னேன். முகம் சுளித்து “சென்ற செயல் முழுமையடையாமல் நீ மீள முடியாது. செல்க!” என்றார். “எங்கு செல்வது?” என்று கேட்டேன். “மீண்டும் மண்ணுக்கே செல்!” என்றார். “தந்தையே, நான் மண்ணிலிருந்து வரவில்லை. நான் எப்போதும் இங்குதான் இருக்கிறேன்” என்றேன். “நீ அங்குதான் இருந்தாய், இது உன் கனவு” என்று அவர் சொன்னார். அவர் குரலிலும் முகத்திலும் இருந்த சினத்தைக் கண்டு புரியாமல் திரும்பி அவர் அருகே இருந்த பிற முனிவர்களை பார்த்தேன்.
சௌம்யர் என்னிடம் “ஆம் இளையவனே, அது உன் கனவு. அக்கனவுக்குள் கனவாக இங்கு வந்திருக்கிறாய்” என்றார். “இல்லை, அது கலைந்து இங்கு எழுந்திருக்கிறேன்” என்றேன். சிருஞ்சயர் “இல்லை, இன்னமும் அக்கனவுக்குள்தான் இருக்கிறீர்கள். இக்கனவைக் கலைத்தால் மீண்டு அக்கனவுக்குள்தான் செல்வீர்கள்” என்றார். “அது எப்படி, கனவுக்குள் ஒரு கனவு நிகழமுடியும்?” என்றேன். “கனவுகள் ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த நூறாயிரம் உலகங்களின் முடிவிலாச் சரடு போன்றவை. இக்கனவை உதறுங்கள், அதில் எழுவீர்கள்” என்றார் சப்தமர்.
அப்போது எவரோ என் பெயர் சொல்லி அழைப்பதை கேட்டேன். “எவரோ என்னை பெயர்சொல்லி அழைக்கிறார்கள்” என்றேன். “உங்களை சுக்ரர் அழைக்கிறார்” என்றார் சுதர்மர். எனக்கு சுக்ரர் யாரென்று தெரியவில்லை. “எவர்? எவர் அழைக்கிறார்கள்?” என்றேன். “உங்கள் ஆசிரியர் சுக்ரர் அழைக்கிறார். உங்கள் தந்தை பிரஹஸ்பதியின் முதல் மாணவர்” என்றார் சப்தமர். “ஆம், நினைவிருக்கிறது. அவரை சென்று பார்க்கும்படி என்னிடம் சொன்னீர்கள். ஆனால் அவரை நான் என் கனவில் மட்டுமே கண்டிருக்கிறேன்” என்றேன்.
“ஆம், அக்கனவுக்குள் இருந்துதான் அவர் அழைக்கிறார்” என்றார் பிரஹஸ்பதி. “கனவுக்குள்ளிருந்தா?” என்று சொல்லும் போதே சுக்ரரின் குரல் மேலும் மேலும் வலுத்து வந்தது. மிக அருகிலென அவ்வழைப்பை கேட்டேன். பின்னர் அவர் கை வந்து என் தோளைப்பற்றியது. நான் திமிறுவதற்குள் என்னை இழுத்து ஒரு வெண்திரை கிழித்து அப்பால் கொண்டு சென்றது. அந்த விசையில் தடுமாறி உருண்டு விழுந்தேன். எழுந்து அமர்ந்தபோது ஆசிரியரின் அறையில் இருந்தேன். மிக அருகே அவரது உடல் கிடந்தது.
அவருடைய வயிறு யானையின் வாய் எனத் திறந்து உள்ளே சூடான தசை அதிர்ந்து கொண்டிருப்பதை கண்டேன். அவ்வுடலில் உயிர் இருந்தது. கால்களும் கைகளும் மெல்ல இழுத்துக் கொண்டிருந்தன. என் தலை சுழன்றது. இக்கனவுக்குள்ளிருந்து பிறிதொரு அறியா கொடுங்கனவுக்குள் நழுவி விழுந்துவிடுவேனென்று அச்சம் வந்தது. உடனே தூணைப்பற்றியபடி ஓடிவந்து உங்களை அழைத்தேன். கிருதர் வந்து என்னிடம் நான் கற்ற சஞ்சீவினி நுண் சொல்லைச் சொல்லி ஆசிரியரை எழுப்பும்படி சொன்னார்.
திகைப்புடன் “நான் எதையும் கற்கவில்லையே?” என்றேன். “நீங்கள் கற்றிருக்கிறீர்கள். கருவில்… உங்களுக்கு தெரியும்” என்றார். “இல்லை, எதுவுமே நான் கற்கவில்லை” என்று பதறியபடி சொன்னேன். “கற்றீர்கள். ஐயமே இல்லை. உங்கள் கருநினைவுக்குள் அது இருக்கிறது. அமர்ந்து கண்களை மூடுங்கள். ஊழ்கத்திலிருந்து அதை மீட்டெடுங்கள்” என்று கிருதர் சொன்னார். கால்களை மடித்தமர்ந்து நெற்றிப்பொட்டில் நெஞ்சமர்த்தினேன். பின்கழுத்தில் ஓர் அறை விழுந்ததுபோல முன்னால் உந்தப்பட்டு பிறிதொரு கனவுக்குள் சென்று விழுந்தேன். அங்கு மிகச்சிறிய அறையொன்றுக்குள் நான் உடல் ஒடுக்கி படுத்திருந்தேன். அது அதிர்ந்து கொண்டிருந்தது. என்னைச் சுற்றி இளம்குருதி நுரைக்குமிழிகளுடன் அசைந்தது. நான் கைக்குழந்தையாக, இல்லை கருக்குழந்தையாக, இருந்தேன். குழந்தையென்று சொல்லமுடியாது. ஊன் துண்டு.
வெளியே எங்கோ ஒரு குரல் கேட்டது. அக்குரல் குருதிக் குமிழ்களாக விழிக்கு தெரிந்தது. தசையதிர்வாக உடலுக்கு தெரிந்தது. உப்புச் சுவையாக நாவுக்கும் குருதி மணமாக மூக்குக்கும் தெரிந்தது. திரும்பத் திரும்ப ஒரே சொல். வெவ்வேறு ஒலி அமைதிகளுடன் வெவ்வேறு ஒலி இணைவுகளுடன் ஒற்றைச் சொல். என் வலப்பக்கம் நானிருந்த அச்சிறிய அறையின் தோல்பரப்பு கிழிந்தது. என்னைச் சூழ்ந்த குருதியனைத்தும் கிழிசலினூடாக வெளியே சென்றது. நான் அதை நோக்கி கையை நீட்டியபோது மொத்த அறையும் சுருங்கி அப்பிளவினூடாக என்னை வெளியே துப்பியது.
விழித்து ஆசிரியரின் அறைக்குள் எழுந்து “ஒரு சொல்! எனக்குத் தெரியும்!” என்றேன். “அதை சொல்லுங்கள்” என்றார் கிருதர். “அச்சுடரை நோக்கி கை நீட்டி அதை சொல்லுங்கள்” என்றார். அகல் விளக்கை என் அருகே கொண்டு வந்தார். நான் அதை நோக்கி கைநீட்டி அச்சொல்லை சொன்னேன். துயிலில் இருந்து விழித்தெழுந்ததுபோல் ஆசிரியர் தன்னுணர்வு கொண்டார். அவரது வயிறு முன்பெனவே ஆயிற்று. கையூன்றி எழுந்தமர்ந்து “என்ன நிகழ்ந்தது?” என்றார். “நீங்கள் எழுந்துவிட்டீர்கள். சஞ்சீவினி உங்களை மீட்டுவிட்டது” என்றார் கிருதர்.
“இவையனைத்துமே கனவா என உள்ளம் மயங்குகிறது” என்றான் கசன். “பித்துநிலை என்பது எத்தனைபெரிய துயர் என இப்போது உணர்கிறேன். முடிவின்மையிலிருந்து செதுக்கி எடுக்கப்பட்ட சிறிய இடம்தான் தன்னிலை. அவ்வெல்லைக்குள் மட்டுமே நாம் வாழமுடியும். உணர்வு அறிவு இருப்பு அனைத்துக்கும் அங்குமட்டுமே பொருள்… அவ்வெல்லை அழியுமென்றால் காற்றில் கற்பூரநிலைதான்.” அவள் அவன் கைகளைப்பற்றி “சென்று படுத்து இளைப்பாறுங்கள். இன்னீர் கொண்டுவரச்சொல்கிறேன், அருந்துங்கள். நாளை பார்ப்போம்” என்றாள். “ஆம், படுத்தாகவேண்டும். கனவுகளின்றி துயின்றாகவேண்டும்” என்று சொன்னபின் கசன் தலைகுனிந்து நடந்து சென்றான். அந்த நடை மீண்டும் அவள் அகத்தை சுண்டியது. அவள் நன்கறிந்த சுக்ரரின் நடை அது.