ஆணவமும் சோம்பலும்

dog

ஜெ,

இந்த மாதிரியான தருணங்களில் தான் உங்கள் மேல் மதிப்பு கூடுகிறது. எல்லா தரப்பிலிருந்தும், இது தான் வாய்ப்பு என்று தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்கொள்ளும் உங்கள் மன உறுதி தான் பிரமிப்பு கொள்ளச் செய்கிறது. Howard Roark தான் நினைவுக்கு வருகிறான்.

அன்புடன்
ரியாஸ்

***

அன்புள்ள ரியாஸ்,

இது என்னிடம் பலரும் கேட்கும் கேள்விதான். முதல் விஷயம், நான் என் தொடர்செயல்பாட்டுக்கு உதவாத எதையும் சென்று வாசிப்பதே இல்லை. வாசிக்க ஆரம்பித்தால் ஆற்றலில் பெரும்பகுதி உறிஞ்சப்பட்டுவிடும். உண்மையிலேயே பெரிய விஷயங்களைச் செய்யவிரும்புபவர்கள் பெரிய விஷயங்களில்மட்டும்தான் ஈடுபட்டிருக்கவேண்டும்.

இன்னொன்று இவர்களெல்லாம் எவர் என்னும் உணர்வு. மிகமிகச்சிறிய மனிதர்கள். மிகச்சிறிய குரல்கள். இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள். இவர்களின் பங்களிப்பு என்ன? இவர்கள் சிறியவர்கள் என இவர்களே கொண்டிருக்கும் தன்னுணர்வு இவர்களைப்போட்டுப் படுத்தி எடுக்கிறது.

அதேசமயம் என்னைப்பற்றி நான் அறிவேன். நான் வரலாற்றில் வாழ்பவன். என் காலகட்டத்தின் ஒட்டுமொத்தத்தைவிட நான் பெரியவன். என் சாதனைகள் மிகப்பெரியவை. ஆகவே என் வலிகளும் தத்தளிப்புகளும் பரவசங்களும் மிகப்பெரியவை. ஆம், என் அசட்டுத்தனங்களும் வீழ்ச்சிகளும் கூட பெரியவையாகவே இருக்கும்

எனக்கு அலைந்து திரிய இந்த மாபெரும்தேசம் போதவில்லை. உலகம்போதவில்லை. Howard Roark கிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது இந்தத் தன்னுணர்வைத்தான். தான் யார் என அவனுக்கு நன்றாகவே தெரியும்.

நான் Howard Roark என உணர்வது ஒற்றைப்புள்ளியில் இருந்தே, நான் உலகுக்கும் பண்பாட்டுக்கும் கொடுப்பவன், உலகிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்பவன் அல்ல. எங்கே முரண்படுகிறேன் என்றால் கொடுக்கமாட்டேன் என முடிவெடுக்கும் உரிமை ரோர்க்குகளுக்கு இல்லை என்பதே.

என்னால் ஈர்க்கப்பட்டு வரும் இளம்நண்பர்களுக்கும் இதையே சொல்வேன், நீங்கள் எவர் என உணருங்கள். அந்த ஆணவம் உங்களை நிமிரச்செய்யட்டும். சமகாலச் சிறுமைகளைக் கடந்துசெல்லமுடியும்

ஜெ

***

 

dog

அன்பு ஜெ.மோ அவர்களுக்கு,

உங்கள் எழுத்தை விட உங்களிடம் நான் பெரிதும் வியப்பது உங்கள் அயராத உழைப்பை. இளையராஜா அவர்கள் சொன்னது போல், கமலஹாசன் அவர்களும், இளையராஜா அவர்களும் தத்தம் துறையில் சாதித்ததை விட, நீங்கள் உங்கள் துறையில் தொட்ட சிகர நுனிகளின் எண்ணிக்கை அதிகம்.

நீங்கள் உங்கள் சோம்பலை எப்படி களைந்தீர்கள், அநேகமாக ஒவ்வொரு இளைஞனையும் ஒரு சராசரி மனிதனாக அழுத்தி வைப்பது இந்த சோம்பல். உதாரணத்திற்கு,

காலை 7 மணிக்கு எழ முயல்கிறேன், 9 ஆகிவிடுகிறது, பிறகு நாளிதழ், தேநீர், குளியல், காலை உணவு என அப்படியே 12.00 ஆகிவிடும், பிறகு இணையத்தில், யூ டியூப்பில் அப்படியே 2.30 பிறகு மத்திய உணவு, அப்படியே உறக்கம் என 5.30 வரை ஓடிவிடும். மறுபடியும் தேநீர் இணையம், தொலைக்காட்சி, வெட்டி அரட்டை, ஸ்மார்ட் போன்.

குறிப்பாக 3மாதங்களாக இந்த சோம்பல் என்னை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இளம் வயதில் இப்படி நேரத்தை வீணடிக்கிறது. எப்படி நம்மை நீண்ட உழைப்புக்கும், அயராத உழைப்புக்கும் ஒப்புக் கொடுப்பது. இந். உளச் சோர்வை எப்படி களைவது/

உணவு உறக்கம் உழைப்பை நீங்கள் எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள், எப்படி கடைப்பிடிக்கிறீர்கள்.

உங்கள் இளவயது சோம்பலை எப்படி கடந்து வந்தீர்கள், 50+ வயதிலும் சோர்வின்றி இயங்குவது எப்படி.

இது எனக்கு மட்டுமல்ல, இந்த இளம் தலைமுறையை முடக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வியாதி இந்த சோம்பல்.

இப்படிக்கு

கார்த்திக்.

***

அன்புள்ள கார்த்திக்

சோம்பல் என்பது பெரும்பாலும் இலக்கில்லாமல் இருப்பதிலிருந்து வருவதுதான். என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துவிட்டால் சோம்பல் குறைந்துவிடும். உங்கள் தன்னறத்தை, எதற்காக நீங்கள் வந்தீர்கள் என உணர்கிறீர்களோ அதை, உணர்ந்துகொண்டால்போதும். அது மிகமிக எளிய ஒரு செயல்.

வீண்செயல்பாடுகளை நம்மைச் சூழ வைத்திருக்கிறது நம் சமூகவெளி. அவற்றுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கக் கூடாது. தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்கள், பலவகையான அரட்டைக்கான அமைப்புக்கள், வெறும் உபச்சாரச் சந்திப்புகள், சம்பிரதாயமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மூர்க்கமாகத் தவிர்த்தாகவேண்டும்.

நான் இளம்வாசகர்களைச் சந்திக்கையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகவலைத்தளங்களில் முழுமையாகவே இல்லை என்பதை, தொலைக்காட்சி ஈடுபாடே இல்லை என்பதைக் கண்டு வியந்தேன். அல்லது அவர்கள் மட்டுமே என்னைத்தேடிவருகிறார்கள்.

இதற்கும் அப்பால் ஒன்றுண்டு. சோம்பல் என்பது ஓர் இயல்பான உளநிலை.சும்மா இருக்கத்தான் உள்ளம் விரும்பும். அதை உந்திச்செலுத்தித்தான் செயலுக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதை எப்போதும் செய்துகொண்டிருக்கவேண்டும். இயல்பாகவே மனம் சுறுசுறுப்பாக ஆகட்டும் என விட்டால் அது அசையவே அசையாது. சோம்பல் என்பது என்ன? மனம் தன்னைத்தானே அளைந்தபடி தன்னில் மூழ்கியிருப்பதுதானே?

கடைசியாக ஒன்று, முற்றிலும் சோம்பல் இல்லாமல் இருப்பதும் நல்ல விஷயம் அல்ல. முழுக்கமுழுக்க சுறுசுறுப்பாக இருப்பவர்கள் படைப்பூக்கம் இல்லாதவர்கள். கனவு காணாதவர்கள். சோம்பல்நிலை என்பது ஒருவகையில் நாம்நம்மை இயல்பாக நிகழவிடுவதும்கூட. சோம்பலுக்கும் வாழ்க்கையில் முக்கியமான இடம் உண்டு

ஜெ

***

முந்தைய கட்டுரைகாஷ்மீரும் ஊடகங்களும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60