வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் அந்தரங்கமான கட்டுரை. அவர் என் நண்பர் என்பதனால் அது வருத்தம் அளித்தது. அவருக்கு வீடு கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உருவாகிவரும் இடைவெளியைப்பற்றி அச்சத்துடனும் ஆதங்கத்துடனும் நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். [வளரும் வெறி] சமூகவலைத்தளங்களில் கொதித்துக் கிளம்பினார்கள். இந்துக்களும் இஸ்லாமியரும் ஓருடல் ஈருயிராக மாமன்மச்சானாகப் பழகுவதாகச் சொல்லி பலநூறு கட்டுரைகள் வந்தன. அப்படி என்றால் நல்லதுதானே என நானும் எண்ணிக்கொண்டேன். இப்போது நான் சொன்னதையே வேறுவடிவில் ஹமீது சொல்லியிருக்கிறார்.
ஆனால் வாடகைக்கு வீடுகிடைப்பதைப் பற்றிய பிரச்சினையை இத்தனை எளிதாக இந்து -முஸ்லீம் பிரச்சினையாக ஆக்கிவிடமுடியுமா? உணர்ச்சிகரமாக அப்படி ஆக்கிக்கொண்டால் உண்மையான சிக்கலை நோக்கிச் செல்லமுடியுமா? மீண்டும் இந்துக்களைக் குற்றவாளிகளாக்க, இஸ்லாமியருக்கு இந்தத் தேசத்தில் இடமில்லை என்னும் வழக்கமான பாடலை இசைக்க, மட்டுமே அதனால் உதவும்
நான் நேரடியாக அறிந்த யதார்த்தத்தை மட்டுமே எழுதுகிறேன். வீடு வாடகைக்கு விடுவதில் ஏன் இத்தனை எச்சரிக்கை? ஏனென்றால் இங்குள்ள சட்டம் அப்படிப்பட்டது. அதில் வாடகைக்கு விடுபவருக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லை. ஒருவர் வாடகைக்கு எடுத்த வீட்டை திரும்பத் தரமாட்டேன் என உறுதியுடன் சொல்லிவிட்டால் வீடு வாடகைக்கு விட்டவர் பற்பல ஆண்டுகளுக்கு அந்த வீட்டை மீட்க முடியாது.
சட்டநடவடிக்கைகள் ஒரு பொருளை கையகப்படுத்தியவருக்கே சாதகமானவையாக உள்ளன இந்தியாவில். நிலமோ வீடோ. அதை மீட்க உரிமையாளர்தான் சட்டப்போர் செய்யவேண்டும். சட்டப்போர் என்பதை நீதிமன்றக் காத்திருப்பு என்றுதான் சொல்லவேண்டும். எந்த வழக்கையும் ஐம்பதாண்டுக்காலம் இழுத்தடிக்க முடியும் இங்கே.
நீதிமன்றம் சென்றால் ஒருதலைமுறைக்குள் தீர்ப்பு வராது. வாடகைப்பணம் நீதிமன்றத்தில் கட்டிவைக்கப்படவேண்டும். நான் அறிந்து நாகர்கோயில் மணிமேடைப்பகுதியில் உள்ள பலகடைகள் 1950 களிலிருந்தே ‘வாடகைக்கு’ எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. உள்வாடகைக்கு மாதம் இரண்டு லட்சரூபாய்க்கு விடப்பட்டுள்ள கட்டிடத்திற்கு நீதிமன்ற ரிசீவருக்கு மாதம் இருபது ரூபாய் வாடகை கட்டப்படுகிறது. நெல்லையில் நெல்லையப்பர் ஆலயத்தின் கட்டிடங்கள் ‘வாடகைக்கு’ எடுக்கப்பட்டு எழுபதாண்டுகள் கடந்துவிட்டன என்கிறார்கள்..
என் மாமா ஒருவர் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டார், கட்டி முடித்து ஒருநாள்கூட அதில் குடியேறவில்லை. எட்டுமாத வாடகைக்குப்பின் வாடகையும் வரவில்லை, வீடும் திரும்பவில்லை. நீதிமன்றம் சென்று வீட்டை மீட்டு எடுத்தபோது அவர் இறந்து அவரது மகனுக்கும் அறுபது வயது. வீடு பழையதாக ஆகி உதிர்ந்துகொண்டிருந்தது. இடிக்கவேண்டியிருந்தது.நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பல கதைகளை அறிவோம். .
ஆகவே வேறுவழியில்லாமல் வன்முறைக்கு செல்லவேண்டும். தமிழகத்தின் குற்றக்குழுக்களில் பெரும்பகுதி ‘காலிசெய்ய’ வைக்கும் தொழிலையே செய்துகொண்டிருக்கின்றன. வாடகைக்கு விடுபவர் வன்முறைப் பின்னணி கொண்ட சாதி அல்ல என்றால், அவருக்கு பெரிய அமைப்புபலம் இல்லை என்றால் வன்முறைப் பின்புலம் கொண்ட சாதிக்கு அமைப்புபலம் கொண்ட சாதிக்கு வீட்டை வாடகைக்கு விடமாட்டார்.
இஸ்லாமியருக்கு மட்டும் அல்ல, இங்கே வீடு வாடகைக்கு பெறுவதில் பல்வேறு தொழிற்பிரிவினருக்குச் சிக்கல் இருப்பது இதனால்தான். டாக்டர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வீடு கிடைப்பது மிகக்கடினம். டாக்டர்கள் அந்த இடத்தை கிளினிக் ஆக ஆக்கிக்கொண்டார்கள் என்றால் அதன்பின்னர் அந்த இடமே அவர்களின் அடையாளம். காலிசெய்ய மாட்டார்கள். வழக்கறிஞர்களுக்கு சட்டம் என்ன செய்யும் என தெரியும். நிறுவனங்களுக்கு வீடு கிடைப்பது மிகக்கடினம். கொடுத்தால் மீட்பது அதைவிடக்கடினம்.
தென்மாவட்டங்களில் போர்க்குணம்கொண்ட சாதியினருக்கு பிறர் வீடு வாடகைக்குக் கொடுக்கமாட்டார்கள். கட்டைப்பஞ்சாயத்துக்கு வருவார்கள் என்னும் ஐயம். குமரிமாவட்டத்தில் பெந்தெகொஸ்துகளுக்கு கொடுக்கமாட்டார்கள். மிகவிரைவிலேயே அந்த வீட்டை ஜெபவீடாக ஆக்கிக்கொண்டு பேரம்பேச வந்து அமர்வார்கள். எங்குமே அரசியல் கட்சிப்பின்னணி கொண்டவர்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காது
இலங்கைக்காரர்களுக்கு வீடு அளிக்க சென்னையில் எவருமே தயாராக மாட்டார்கள். இலங்கைப் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களுக்காக மனம் பொங்குபவர்கள் கூட. இதை இலங்கைக்காரர்களாகிய பல நண்பர்கள் என்னிடம் கண்ணீருடன் சொல்லியிருக்கிறார்கள்
ஹமீது அவருக்கு வீடு கிடைப்பதைப்பற்றிச் சொல்கிறார். பாரதிய ஜனதாக் கட்சியின் பொறுப்பில் இருப்பவருக்கு மட்டும் பிறர் வீடு கொடுத்துவிடுவார்களா? ’அரசியல் ஆளுங்க, நமக்கு எதுக்கு வம்பு’ என்று பின்வாங்குவார்கள். இது என் இன்னொரு நண்பரின் அனுபவம்.
சென்னையில் சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்காது. தனியாக வாழும் பெண்களுக்கு வீடு கிடைக்காது. இதெல்லாமே ஒழுக்கக் கவலைகள் அல்ல, ஏதேனும் பிரச்சினை வருமா என்னும் நடுத்தரவர்க்க பதற்றம், அவ்வளவுதான்.
ஏனென்றால் எந்த ஒரு பிரச்சினைக்கும் வீட்டு உரிமையாளரை காவல்துறை இழுத்தடிக்கும். குறிப்பாக அந்த வீட்டு விலாசம் பாஸ்போர்ட் எடுக்கவோ ரேஷன் கார்டு வாங்கவோ அளிக்கப்பட்டிருந்தால் பெரிய சிக்கல்கள் வரும். போலிபாஸ்போர்ட் எடுக்க ஒருவர் தன் வாடகைவீட்டு விலாசத்தை அளிக்க அந்த வீட்டு உரிமையாளர் கிட்டத்தட்ட வீட்டையே விற்குமளவுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருந்ததை ஒருமுறை கேட்டறிந்தேன்
இஸ்லாமியர்களில் இன்றுள்ள வலுவான வன்முறை அமைப்புகளை அனைவரும் அறிவார்கள். அவ்வமைப்புகளில் கணிசமானவர்கள் கட்டைப் பஞ்சாயத்தைத்தான் தொழிலாகச் செய்கிறார்கள். இஸ்லாமியர் மீது ஐயமோ விலக்கமோ எவருக்கும் இல்லை, இருந்திருந்தால் பொதுவெளியில் எல்லா தளங்களிலும் அது வெளியாகும் அல்லவா? விலகிச்செல்வது இஸ்லாமியர்தான், உடைகளால் பேச்சுகளால் மதவெறியால். இஸ்லாமியர் மேல் அச்சம் கண்டிப்பாக உள்ளது. அந்த அச்சமே வீட்டு விஷயத்தில் வெளியாகிறது
என்னை எடுத்துக்கொள்வோம், எனக்கு இஸ்லாமியர் மேல் அச்சம் உள்ளதா? கண்டிப்பாக ஆழமான அச்சம் உள்ளது. ஓர் இஸ்லாமியர் இஸ்லாமிய அமைப்புகளின் பின்புலம் உள்ளவரா என பலமுறை சோதித்துப்பார்க்காமல் நான் நெருங்கவே மாட்டேன். ஒருமுறை நான் பேசவிருந்த மேடைக்கு ஜவஹருல்லாவையும் அழைக்கலாமா என என்னிடம் கேட்டனர். என் முதுகுத்தண்டில் ஓர் அச்சம் சிலிர்த்தது. பதறி விலகிவிட்டேன்..
ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய ஒரு சாதாரணமான கருத்தை நான் எழுதியபோது நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் எனக்கு, ஜாக்ரதையாக இருங்கள், இதையெல்லாம் எழுதவேண்டுமா என. இந்தியப் பொதுச்சமூகம் இந்த நவவஹாபிய அமைப்புக்களை எண்ணி அஞ்சிக் கிடக்கிறது. அதை வலுப்படுத்துவது போலவே நாளும் செய்திகள் வருகின்றன. அதை காணாதது போல நடிப்பதில் பொருளே இல்லை. அது ஓரு சமூக உண்மை
அந்த அச்சத்தைப் பொதுச் சமூகத்தின் உள்ளத்தில் விதைத்த அமைப்புக்கள் எவை? பொதுச் சமூகத்தில் இத்தனை அச்சத்தை உருவாக்குபவர்களை விட்டுவிட்டு அஞ்சுபவர்களை மீண்டும் கூண்டிலேற்றுவதில் என்ன பொருள்?
இருபதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது இது, ஓர் இஸ்லாமியர் [மரைக்காயர்] சிறிய அளவிலான லஞ்சம் வாங்கிய செய்தி வந்தது. லஞ்சம் சாதாரணமாகப் புழங்கிய அலுவலகச்சூழலே அதிர்ச்சி அடைந்தது. “மரைக்காயர்களெல்லாம் இப்படிச் செய்வார்களா என்ன?” என பலர் கேட்டனர்.. ஏனென்றால் நேர்மையற்ற, பண்பற்ற மரைக்காயர்களை பலர் கேள்விப்பட்டே இருக்கவில்லை.
மனுஷ்யபுத்திரன் தொழில்துறையில் கொஞ்சம் விசாரித்துப் பார்க்கவேண்டும், இன்று முஸ்லீம்களுக்கு முழு முன்பணமும் பெற்றுக்கொள்ளாமல் முஸ்லீம்கள் அல்லாத எவரேனும் சரக்கு கொடுப்பார்களா என்று. அந்த மாற்றம் எங்கே வந்தது? இஸ்லாமியர்கள் நட்பானவர்கள், சொன்ன சொல்லுக்குள் நிற்பவர்கள் என்னும் பிம்பம் எப்படிச் சிதைந்தது? அதற்கு எவர் பொறுப்பு?
இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்.
ஜெ
***
பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி