பறக்கை – கடிதம்

1
லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை வாசிக்கிறார். அருகே ரோஸ் ஆன்றோ

அன்புள்ள ஆசிரியருக்கு,

மஞ்சள் ஒளிவிளக்குகளின் வெளிச்சம் சூழ்ந்திருக்கும் அதிகாலையின் நிசப்தத்தினூடே தூத்துக்குடியை விட்டு என் பயணத்தை தொடங்கினேன். திருநெல்வேலியிலிருந்து நண்பர் ஜானும் வருவதாக சொல்லியிருந்தார். அதிகாலை விடிந்த போது திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நண்பருக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். எல்லா காகங்களையும் போல அந்த ஒற்றைக்காலுடைய காகம் தன் கூட்டத்துடன் சேர்ந்திருக்க வில்லை. விடியலின் துவக்கத்தில் தன் உணவு சேகரிக்கும் பணியில் சற்றே எச்சரிக்கையுடன் தன் கிராபைட் பளபளப்பு அலகை திருப்பி திருப்பி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இரண்டு கால்களில் ஒன்றை ஏதாவது விபத்தில் அது இழந்திருக்க கூடும் அல்லது வேறு ஏதாவது சாத்தியக் கூறுகள் இருக்கவும் கூடும். என்னதான் பறவைகளுக்கு சிறகுகள் இருந்தாலும் கால்களும் தேவைப்படுகின்றன. பறவை என்பதை பறக்கும் இறகுகளோடு மட்டுமே நாம் தொடர்பு படுத்திக்க கொள்கிறோம் அதன் கால்களை பற்றிய கவலை நமக்கு ஏன் இல்லாமல் போனது? நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மட்டுமே பறவைகளுக்கு கால்கள் அவ்வளவு முக்கியமில்லை என்பதல்ல. பூமியில் சிதறிக்கிடக்கும் உணவுகளை பெற, கிளைகளின் அமர்ந்து இளைப்பாற வானத்தில் பறக்கும் சிறகுகளால் மட்டுமே அடைந்து விட முடியாது அல்லவா?

niza9

நம்மிடம் இல்லாத ஒன்று தான் நம் கவனத்தை அதிகம் பெறுகிறது. பறவையின் சிறகுகளும் அவ்வாறு தான் மேலதிக கவனத்தை பெற்றிருக்க கூடும். அதற்குள் ஜான் வந்து விட்டார். நாகர்கோவில் பேருந்தில் இருவரும் பயணத்தை தொடங்கினோம். எப்போதும் பாலைவனத்திலிருந்து மரங்கள் அடர்ந்த பகுதிக்கு வருவதை போலத்தான் தூத்துக்குடியிலிருந்து நாகர்கோவிலுக்கு வருவதும் வழிமுழுக்க மரங்களை கண்டாலும் கோடையின் தாக்கம் அங்கும் பிரதிபலிக்கத்தான் செய்தது. நண்பரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டே வந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் அமைதியாகி நிலத்தின் காட்சியை பார்த்துக் கொண்டே வந்தேன். பெரிய பெரிய ராட்சச காத்தாடிகளில் சில சுழன்றுகொண்டும் சில அமைதியாகவும் நின்றிருந்தன. வாழை தோப்புகள் மரங்கள் என எல்லாவற்றிலும் கோடை தன்னை பிரதிப்பலித்துக் கொண்டிருந்தது. இவை எவற்றைப் பற்றியும் எனக்கு கவலையில்லை என நிமிர்ந்து வானம் தொட்டுக்கொண்டிருந்த மலைகள் என ஒவ்வொன்றாக பின்செல்ல நாகர்கோவிலை வந்தடைந்தோம்.

2nizal

நாங்கள் வரும்போது 15 நிமிடம் தாமதமாகியிருந்தது. அதற்குள் ஜெ வந்து விட்டிருந்தார் பல வாசகர்களும் முன்னரே வந்து விட்டிருந்தனர். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பற்றி ஜெ பேசிக்கொண்டிருந்தார். துவக்கத்தைப் போலவே பெரும்பாலான உரையாடல்கள் கல்வியைப் பற்றியே சுழன்று கொண்டிருந்ததது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி முறைகள் வாசிப்பு புத்தகங்கள் என ஜெ தான் பல்வேறு நாடுகளில் பெற்ற அனுபவங்களுடன் இணைத்து ஒரு சித்திரத்தை அளித்துக் கொண்டிருந்தார். ஜப்பானின் வீழ்ச்சி, அதன் கல்வி முறையின் குறைபாடுகள் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஐரோப்பிய நாடுகளை போல படைப்பூக்க முடைய கல்வியை தனது குடிமக்களுக்கு அளிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அதிலுள்ள சவால்கள் என தொடர்ந்து ஆழமாக பேசிக்கொண்டிருந்தார். ஐரோப்பா உலகிற்கு அறிவியல் ஐடியாக்களை வழங்குவதின் மூலம் தான் உற்பத்தி துறையை விட அதிக வருமானம் ஈட்டுகிறது. பின் மெல்ல மெல்ல இயற்கையை பற்றியும் தோரா, எமெர்ஸன் பற்றியும் உரையாடல் நீண்டது. தனிமனிதன் இயற்கை அரசு என மிக மெல்ல உரையாடல் தத்துவத்தை நோக்கி செல்ல தொடங்கியது.

nizal4
அருட்தந்தை யுடன்

இலக்கியவாதிகளுக்கு தத்தவர்த்தமான பார்வை வேண்டும் என்பதை ஜெ வெண்முரசில் எழுதியிருந்த முள் உவமையின் மூலமும், ஒரு தாய் தன் குழந்தையை கொல்வது உதாரணத்தின் மூலமும் விளக்கினார். வேத சகாய குமார் அவர்களும் போகன் சங்கர் அவர்களும் வந்திருந்தனர். வேதசகாயகுமார் அவர்கள் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களின் மாணவர் என்பதையும் விமர்சகர் என்பதையும் ஜெமோவின் தளத்தின் வாயிலாகவே அறிந்திருந்தேன். இடையிடையே உரையாடலை அவரும் ஆழமாக இழுத்துச்சென்றார். பெண்ணியம் தலித்தியம் போன்றவற்றைப் பற்றியும் டி ஆர் நாகராஜ், பி கே பாலகிருஷ்ணன், பின்நவீனத்துவம், தெரிதாவின் கட்டுடைப்பு அதை நம் இலக்கியக்கோட்பாட்டாளராகள் படுத்தியபாடு போன்றவற்றைப் பற்றியும் செறிவான உரையாடலாகவும் இருந்தது. கவிதைகளில் இன்றைய காலகட்டத்தின் தேக்க நிலை லட்சியவாதம், அடுத்த கட்டம் என போகன் சங்கரோடும் ஜெ உரையாடினார்.

ni1

நூலக பூதங்கள்  உ வே ச சேகரித்த சுவடிகளில் 25% தான் அவரால் பயன்படுத்தப் பட்டது, மீதமுள்ள சுவடிகளை எந்த விதமான உபயோகமும் இல்லாமல் அப்படியே வைத்திருப்பது போன்றவையும் சாதிய, கருத்தியல் பாகுபாடுகளால் ஆவணங்களை மற்ற ஆய்வாளர்களுக்கு கிடைக்க விடாமல் செய்வது மதுரை அலெக்ஸின் ஆய்வு எப்படி வெள்ளையானைக்கு அடிப்படையாக அமைந்தது என உரையாடல் செறிவாக சென்றது

nizal88

மதிய உணவு இடைவெளியிலும் நண்பர்களோடு ஜெ தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். நல்ல மதிய உணவை படிகம் சிலேட் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். சாப்பிட்ட பின் விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் உருவாகி வந்த வரலாறு மற்றும் சிற்பங்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என வாசகர் கேட்ட கேள்விக்கு அவருடைய பயணத்தில் உடன்வந்த இஸ்லாமிய வாசகரைப் பற்றியும் பின்னர் அவருக்கு சிற்பங்களில் ஈடுபாடு வந்ததை பற்றியும் நகைச்சுவையோடு சொல்லிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்த நண்பர் சிவக்குமார் அவர்களையும் உணவு இடைவேளையில் தான் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.

vishnu

மதிய அமர்வு லட்சுமி மணிவண்ணன் அவர்களின் ஒரு கவிதை வாசிப்போடு தொடங்கியது. மெக்காலே பற்றிய கற்பிதங்கள் அதுபோல நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஏராளமான கற்பிதங்கள் பற்றியும் அவற்றுக்கான ஆதாரங்கள் எவையும் இல்லையென்பதையும் ஜெ விரிவாக பேசினார். தகவல் சார்ந்த கற்பித்தலுக்கு  எந்தவித பயனும் இனி இல்லை எனவும் கருத்துக்களை பற்றிய கல்வியே இனி பயனளிக்க கூடியது எனவும் கூறினார். ஜெ சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் பொது  அறிவியலை தவறாக பயன்படுத்துவதை (frankenstein) பற்றி கற்றுக் கொடுக்கும் போது  அதன் அடிப்படையில் அமைந்திருக்கும் ஏராளமான ஹாலிவுட் படங்களை அவர்களே கண்டறிந்ததையும் அதிலுள்ள அடிப்படையை குழந்தைகள் கண்டடையும் போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டார். இறுதியாக ஜெ தன் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களில் சுமார் 200 புத்தகங்களை வாசகர்களுக்காக கொண்டுவந்திருந்தார். அவரவர்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக்கொண்டோம். நான் டால்ஷ்டாயின் காசாக்குகள், அசோகமித்திரனின் அப்பாவின் சிநேகிதர்கள், தேவதேவனின் விண்வரையும் தூரிகைகள், வரலாறு பற்றிய ஒரு புத்தகம் ஒரு ஆப்பிரிக்க சிறுகதை புத்தகம் போன்றவற்றை எடுத்துக் கொண்டேன். நிகழ்வு இனிதாக முடிந்தது.

 

nizal
அஞ்சலிக்கூட்டம்

 

மாலை 6.00 மணிக்கு நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பற்றிருந்த அசோகமித்ரனுக்கான அஞ்சலியில் கலந்துகொண்டேன். இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்குப் வேதசகாய குமார் அவர்கள் முதலில் பேச தொடங்கினார். அசோகமித்ரனுக்கும் அவருக்குமான முதல் சந்திப்பிலிருந்து அசோகமித்திரனின் மீதான அன்றைய காலகட்டத்தின் விமர்சனங்கள், சிறு பத்திரிகை உலகத்தின் செயல்பாடுகள், சமரசங்கள் என கடந்த காலத்தின் தமிழ் இலக்கிய உலகம் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்துச் சென்றார். இறுதியாக அசோகமித்திரனின் மீதான தன் மதிப்பீடுகளில் ஏற்பாட்டை மாற்றத்தையும் பதிவு செய்து தன் அஞ்சலியை நிறைவு செய்தார்.

அதன் பின் பேசியவர்களில் போகன் சங்கர், அனீஸ் கிருஷ்ணன், லட்சுமி மணிவண்ணன், கார்த்திகை பாண்டியன் போன்றோர்கள் பேச இறுதியாக  ஜெ பேசினார். தான் அசோகமித்ரனை தொடர்ந்து 25 ஆண்டுகளாக முன்னிறுத்தி வருவதையும் அதற்காக தான் செய்த பணிகளையும் தொகுத்து அளித்தார் .  அசோகமித்திரனின் இயல்புகள் பற்றியும், கருணாநிதி அவர்களின் புத்தக வெளியீட்டிற்கு அசோகமித்திரன் அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வையும் அந்த மேடையில் அசோகமித்திரனின் பேச்சை தெலுங்கு கவிக்கும் என் டி ராமராவிற்கும் இடையே நடந்த நிகழ்ச்சியையும் ஒப்பிட்டு  ஒரு கலைஞனின்  எதிர்ப்பை பற்றியும் நகைச்சுவையாக கூறி நிறைவு செய்தார். ஒரு எழுத்தாளர் தன் காலத்தால் கவனிக்கப் படாமல் அங்கீரிக்கப்படாமல் இருப்பது பற்றி, அவனை சாதியால் அடையாளப்படுத்துவதுபற்றி எல்லோருக்கும் விமர்சனம் இருந்தது.

 

ml

ஜெவின் இணையத்தில் தான்  முதன்முதலாக அசோகமித்திரனைப் பற்றி நான் அறிந்துகொண்டேன். அதன் பின்தான் அவரின் எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கினேன் என்பதை நினைத்துக்கொண்டேன் .தமிழ் சமூகம் அவரைக் கைவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மையேயாகவும் மாற்ற முடியாத உண்மையாகவும் இதுவரை தொடர்கிறது இனியும் அவ்வாறு தொடர்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக ஒவ்வொரு தமிழனிடமும் தெரிகிறது. நிகழ்வின் முடிவில் போகன் சங்கர் அவர்களை அறிமுகம் செய்துகொண்டேன். இறுதியாக கூட்டம் கலைய நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தூத்துக்குடியை நோக்கிப் பயணமானேன்.

 

எல்லா நாட்களும் செறிவான நாட்களாக அமைவதில்லை. ஆசிரியரின் அருகாமையினால் அவரின் சொற்களால்  இந்த நாள் செறிவாக்கப்பட்டது.  அவ்வகையில் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த படிகம் நண்பர்களுக்கும் லட்சுமி மணிவண்ணன் அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.

 

விஷ்ணுபிரகாஷ்

***

முந்தைய கட்டுரைதீர்த்தமலை தூய்மைப்பணி
அடுத்த கட்டுரைகாட்டிருளின் சொல்