நீலஜாடி -கடிதம்

blue jar

ஜெ வணக்கம்

நீல ஜாடி கதை படித்தேன். கச்சிதமான மொழியாக்கம். முன்னரே தெரிந்து இருந்தால், படித்து, அருண்மொழி மேடம் நேரில் பார்த்த பொழுது வாழ்த்து சொல்லியிருக்கலாம். வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.

தஞ்சை சந்திப்பு போன்ற தீவிர இலக்கிய கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஆசை. அமைகிறதா என்று பார்ப்போம்.

இரண்டு வாரம் முன்பு தான் தான், சிறு கதை என்பது, என்று பதிவிட்டீர்கள்.

//வளர்ச்சிப்போக்கில் அது இன்று சிறிய எல்லைக்குள் ஆழமான உருவக உலகை உருவாக்கும் கலை என மாறியிருக்கிறது. வெறும் அன்றாடவாழ்க்கையின் ஒரு படச்சட்டகம் இன்று கலையென ஆவதில்லை//

1942ல் எழுதப்பட்ட கதை. அன்றே நீங்கள் மேலே குறிபிட்ட வடிவத்தை அடைந்து விட்டது.

ஒன்பது நாட்கள், அந்த மாலுமியுடன் தனித்து பயணம் செய்திருக்கிறாள். அந்த ஒன்பது நாட்களின் நிகழ்ந்தது, வாசக கற்பனைக்கே விட்டு விடுகிறார் எழுத்தாளர்.

அந்த ஒன்பது நாட்களின் நினைவை மீட்க, உலகமெங்கும் சுற்றுகிறாள், ஒரு நீல ஜாடியை வாங்க. ஜாடியை விட, அந்த நீல நிறம் தான் முக்கியம். தன் தந்தையிடம் பூடமாக கூறுகிறாள்

//Surely there must be some of it left from the time when all the world was blue.// .

உலகமே நீலமாக இருந்த காலத்தில் இருந்து கண்டிப்பாக கொஞ்சமாவது மிச்சம் இருக்கும் என்கிறாள்.அந்த ஒன்பது நாட்களில் வானிலும் நீலம், நீரிலும் நீலம், அனைத்திலும் நீலம். அவள் வாழ்ந்த அந்த நீலத்தை தேடுகிறாள்.கதையின் முடிவில் அவள் தேடிய நீலத்தை கண்டு அடைகிறாள். தான் இறந்தவுடன் அந்த நீலத்தின் நடுவே தன் இதயத்தை வைக்க கோருகிறாள்.

சொல்லமால் காற்றில் விட்ட காதல் அல்லாமல், இதுவரை பூடமாக இருந்த அவள் காதலை சொல்லும் தருணம். எழுத்தாளர் மிக அருமையாக வடித்திருக்கிறார். காதலின் உச்சத்தில் இருக்கும் உணர்ச்சிகளை கச்சிதமாக எழுதியிருக்கிறார்

//in the midst of the blue world my heart will be innocent and free, and will beat gently, like a wake that sings, ..//

அந்த நீலத்தின் நடுவிலே, எனது இதயம், களங்கமற்றும், கட்டற்ற விடுதலையோடும், மிதமான துடிப்போடும், (படகின்) பின்னால் போகும் அலையின் பாடல் போலும்…

இதற்கு எடுத்த வரிதான் எனக்கு மிகவும் முக்கியமான வரியாக பட்டது. முதன் முறையாக ஹெலனா நேரடியாக அந்த ஒன்பது நாட்களை குறிப்பிடும் தருணம். நேரடியாக தன் காதலை வெளி படுத்தும் தருணம்.

//like the drops that fall from an oar blade//

துடுப்பின் முடிவில் உள்ள கத்தியில் இருந்து சிதறும் நீரின் துளியை போல.

அந்த ஒன்பது நாட்களும், அந்த துடுப்பில் இருந்து சிதுறும் நீரின் துளிகளை எத்தனை மணி நேரம் பார்த்திருப்பாள். ஒரு சீரான வேகத்தில், தாலாட்டு போன்று, உலகத்தில் எல்லாவற்றையும் வென்று எடுத்து விடலாம், நீயும் நானும் இருந்தால், என்று மிதமான திமிரோடு, முற்றிலும் தூய்மையான, நிறங்களற்ற நீர் துளி வழியாக அவளை சுற்றி இருந்த நீலத்தை பார்த்து, பார்த்து, மனதில் சூடு போட்ட தடயம் போன்று அந்த நிறம் பதிந்திருக்கும்.

அந்த நீலத்தை கண்டவுடன் நிறைவுடன் மறைகிறாள்.

படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த உங்கள் தளத்துக்கும். இந்த கதைக்கு விமர்சனம் எழுதிய சுசித்ராவுக்கும் நன்றி.

சதிஷ்குமார் கணேசன்

***

முந்தைய கட்டுரைசெய்திக்கட்டுரை -கடிதம்
அடுத்த கட்டுரைகருத்துக்கெடுபிடி