உத்தராயணம் முடிந்து மாசி-பங்குனி மாதங்களில் தமிழ் நிலம் கொள்ளும் மாற்றத்தை காண்பது ஒரு வித கொண்டாட்டம். வெப்பம் ஏறினாலும் அதனுடன் புது வாசங்களும் சுவைகளும் சேர்ந்து வருவது உற்சாகம் அளிக்கக்கூடிய ஒன்று. மாமரங்கள் தளிர்த்து பூத்து காய்க்கத் தொடங்கும். அம்மா ஜாடி ஜாடியாக மாவடு போடுவார்கள். வீட்டுக்குப்பின்னால் உள்ள கொன்றை மரமும் மாதுளை மரமும் தோட்டத்து மல்லிச்செடிகளும் மொட்டும் அரும்பும் மலருமாக நிற்கும். காகமும் கொண்டாலத்தியும் மரங்கொத்தியும் தண்ணீர் அருந்த வரும். பள்ளி-கல்லூரி நாட்களில் பெரும்பாலும் பரீட்சைக்கு படிக்கும் பெயரில் மொட்டைமாடியில் அமர்ந்து இந்த குதூகலத்தை வேடிக்கை பார்ப்பதே எனக்கு வாடிக்கை.
பின் வெளிநாடு சென்ற பிறகு இந்த பருவத்தின் கொண்டாட்டம் வேறுவகையாக மாறியது. பனி விலகி, குளிர் பிரிந்து, பசும்புல்லும், இளஞ்சிவப்பும் மஞ்சளும் ஊதாவுமாக பலவித வாசமற்ற சிறிய மலர்களும் மண்ணில் முளைக்கத் தொடங்கியதும் இளவேனில் வந்துவிட்டதாக அறியலாம். வானில் சாம்பல் விலகி நீலம் குடியேறும். மாதக்கணக்கில் பார்த்திராத சூரியன் ஒருவழியாக வெளிவருவான். வேலையிருந்தாலும் வெய்யில் காய பகலில் கொஞ்சநேரமாவது வெளிவந்துவிடுவோம். “தீமையெல்லாம் அழிந்துபோம், திரும்பி வாரா” என்று மனது முரசு கொட்டும். அப்போதெல்லாம் நினைவுக்குள் மல்லியின் மென்மையும் மரங்கொத்தியின் கூப்பாடும் மாங்காயின் மணமும் இணையாக ஓடும்.
இந்தப்பருவதின் இயல்பான உற்சாகத்தோடு, தஞ்சையில் நிகழ்ந்த எழுத்தாளர் ஜெயமோகனுடனான சந்திப்பு மிக இனிய ஒரு தருணமாக அமைந்தது.
பிப்ரவரி இருபதாம் தேதி என்னிடம் யாராவது வந்து, மார்ச் இருபதாம் தேதிக்குள் நீ ஜெயமோகனை சந்தித்திருப்பாய் என்று சொன்னால் சிரித்திருப்பேன். இதற்கு பல காரணங்கள். ஒன்று, மார்ச் மாதம் இந்தியா செல்லவே திட்டமில்லை. இரண்டாவது, எழுத்தாளர்களை சந்திக்க வேண்டுமா என்பதை பற்றி நான் அதிகம் யோசிக்கக்கூடியவள்.
ஜெயமோகன் வாழும், எழுதும் நிலத்திற்கு நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் சில முறை சென்றிக்குக்கிறேன். அவர் எழுத்துக்களின் மூலமாக அந்நிலத்தினுடனான என் உறவை மீண்டும் மீண்டும் புதுப்பித்திருக்கிறேன். 2015ல் நண்பர் பி.யுடன் நாகர்கோயில்-கன்னியாகுமாரி பயணத்தில் மூச்சுவிடாமல் மூன்று நாட்களுக்கு ஜெ.வின் ஆக்கங்களை பற்றியும் குமாரி நில எழுத்துக்களை பற்றியும் பேசினோம். சென்ற ஆண்டு ஜூலை மாதம் திருவனந்தபுரத்திலிருந்து மதுரைக்கு செல்லும் வழியில் இறங்கி திருவட்டாறு சென்று வந்தேன். நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து –
“மூன்று மணி நேரம் கோயிலை சுற்றிச்சுற்றி வந்தேன். வாயெல்லாம் பல்லு. ஊர்க்காரர்கள் இந்தப்பொண்ணு சரியான லூசு என்று முடிவுக்கு வந்திருக்கலாம். யாரோ ஒரு முதியவர் என்னை அழைத்து அமர வைத்து கோயிலின் ஸ்தலபுராணம் சொல்லி நம்மாழ்வார் இயற்றிய 11 பாசுரங்களையும் பாடிக்காண்பித்தார். முடித்து விட்டு, நான் மலையாளி, எவ்வளவு அழகா தமிழ் பேசறேன் கேட்டியா என்றார். ஆதிகேசவனை கண்குளிர கண்டேன். பாவை விளக்கு அம்மையார்களை பார்த்தவுடன் ஆயிரம் கால் மண்டபம் கதைக்குள் சென்றுவிட்டேன். கோதையாறு அருகில் அரை மணி அமர்ந்தேன். அந்த ஆலமரத்தை சுற்றி வந்தேன் (“‘போதி’ கதையில் வரும் ஆலமரம் இப்படித்தான் இருக்கும்” – மனக்குரல்). கதகளி மண்டபத்தில் அமர்ந்து வாழைப்பழம் தின்றேன். உண்மையில் அது விஷ்ணுபுரம் ஜெ.வுடன் நான் செலவழித்த நாள்.”
அதே நேரத்தில், அன்று கூட, எழுத்தாளர் என்ற மனிதரை சந்திக்க வேண்டுமா என்ற கேள்வி என் மனதில் எழும்பியது.
“வடசேரி பேருந்து நிலையத்துக்கு வண்டி பிடித்து செல்கையில் பார்வதிபுரம் நிறுத்தம் அருகில் ஒரு காட்சி. இதமான வெய்யில். ஆடிக்காத்து. அங்கு ஒரு வாவி. கரையில் ஒரு மரம், அதன் ஒரு கிளை மட்டும் மிகத்தாழ்வாக கிட்டத்தட்ட நீரை தொட்டுக்கொண்டு வளைந்திருந்தது. ஆனால் தொடவில்லை. இரண்டு கிளைகள், மரத்தில் ஒன்று, நீரில் ஒன்று. மரக்கிளை சிறு சலனப்பட்டு ஆடினால் உடனே நீர்க்கிளையும் ஆடியது. நீரில் குட்டிக்குட்டி அலைகள். மரக்கிளை எப்போது ஆடும் என்று நீர்க்கிளை சதா கவனித்துக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால் ஒரு புள்ளியில் கூட இரண்டும் தொட்டுக்கொள்ளவில்லை. இக்காட்சி எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவின் ஓர் வடிவமாக தோன்றியது.” – இப்படி எழுதியிருந்தேன்.
எழுத்தாளரும் வாசகரும் சந்திக்கவேண்டுமா என்று நினைத்த காரணம், எழுத்தில் தோன்றும் ஆளுமையைத் தாண்டி வெறும் மனிதரை கண்டால் ஏமாற்றம் அடைவோம் என்றெல்லாம் இல்லை. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சாதாரணத்தன்மை, அதைத் தாண்டிய மனபேதங்கள் இருந்தாலொழிய, அதை கலையில் sublimate செய்யால் ஒழிய, மனிதன் கலைஞன் ஆக முடியாது என்ற எண்ணம் எனக்கு. இதுவும் தங்கக்கீற்றுடைய பீங்கான் ஜாடி தான். அதுவல்ல என் ஐயம். அடிப்படையில், எழுத்தாளர்-வாசகர் உறவு ஒரு லட்சிய உறவாக புத்தகத்திலேயே தொடங்கி முடிந்துவிடுகிறது என்ற கற்பனாவாத எண்ணம் இன்னும் என்னை விட்டு விலகிய பாடு இல்லை. அதனால் எழுத்தாளர்களை, எழுத்திற்காக சந்திக்கவேண்டுமா என்று தோன்றுவதுண்டு.
அப்போது எதற்கு எழுத்தாளரை சந்திக்க வேண்டும்? என் வரையில், நான் சந்தித்து, அவர்களின் உரையாடல் உலகத்தினுள் நுழைந்து, கேள்விகேட்டு, பேசி, கற்றுக்கொள்ள நினைத்த எழுத்தாளுமைகள் அனைவரும் ஏதோ ஒருவகையில், “எனக்கான” எழுத்தாளர்கள் என்று நான் வகுத்துக்கொண்டவர்கள். என்னுடைய தேடல்களைக் கொண்டவர்கள். அனைவரும் ஏதோ ஒருவகையில் ஆசிரியர்கள். பெரும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் கூட, ஆனால் மிகச்சிறந்த ஆசிரியர்கள். அது ஒரு ஆதர்ச பட்டியல் – காந்தியும் தாகூரும் எமர்சனும் தல்ஸ்தோயும் யுங்கும் ரஸ்ஸலும் வில்லியம் ஜேம்ஸும் அடங்கியது.
இரண்டாவது, எனக்கு படைப்பிலக்கியத்தில் ஆர்வமும் எழுதவேண்டும் என்ற உந்துதலும் உள்ளது. படைப்புத்திறனையும் மொழித்திறனையும் சிந்தனைத்திறனையும் பழகிக்கொள்ள, தீட்டிக்கொள்ள ஆசிரிய-மாணவ உறவு உதவும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தர ராமசாமியை பற்றி ஒரு ஆவணப்படம் கண்டேன். அவர் பேசுவதை கேட்கையில் அவரை சந்திக்காமல் போய்விட்டோமே என்று ஏக்கமாக இருந்தது. சு.ரா. இறந்தது 2005-இல். அப்போது எனக்கு 17 வயது. நாகர்கோயில் மதுரையிலிருந்து ஒரு எட்டு. தாராளமாக சென்று சந்தித்திருக்க முடியும். ஆனால் நான் வளர்ந்த வட்டத்தில், எனக்கு எழுத்தில் ஆர்வம் உண்டு என்று தெரிந்த நெருங்கிய பள்ளி ஆசிரியர்கள் கூட, நீ சுந்தர ராமசாமியை சந்திக்கலாமே என்று பரிந்துரைக்கவில்லை. உள்ளூரில் வாழ்ந்த எழுத்தாளர்கள் பெயர் கூட பரிந்துரைக்கவில்லை. பாவம், அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று இப்போது நினைத்துக்கொள்கிறேன்.
இந்தப்பின்னணியில், எழுத்தாளர் ஜெயமோகனை சந்திப்பதை விட, ஆசான் ஜெயமோகனை சந்திக்கும் ஆவலே எனக்கு அதிகம் இருந்ததென்று திரும்பிப்பார்த்தால் இப்போது புரிகிறது. ஜெ. எனக்கான எழுத்தாளர், என்னுடைய தேடல்களை அவர் எழுத்தில் கையாள்கிறார் என்று நண்பர்களிடம் சொல்லும் போது, நமக்கான எழுத்தாளர் என்ற எண்ணம் வந்துவிட்டால் சந்தித்தே ஆகவேண்டும் என்பார்கள். அந்த முகூர்த்தம் அமையும்போது அமையட்டும் என்று நான் இருந்துவிட்டேன்.
மார்ச் 1ஆம் தேதி, எனக்கு மார்ச் மாதத்தில் ஏதாவது ஒரு வாரம் விடுப்பெடுக்க முடியும் என்று தெரியவந்தது. அதே தேதியில், தஞ்சை சந்திப்பை பற்றிய அறிவிப்பைக்கண்டு, முடிந்தால் போவோமே என்ற எண்ணம் வர, திரு. கிருஷ்ணனுக்கு கடிதம் எழுதி, இடமிருந்தால் விண்ணப்பிக்கலாமா என்று கேட்டேன். அவர் விண்ணப்பிக்கலாம் என்றார், இடமும் கிடைத்தது. சிறுகதை சமர்ப்பித்தால் அது விவாதிக்கப்படும் என்று தெரியவந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தாலும் என் சுற்றத்தில் நல்ல விமர்சனங்கள் வருவதில்லை. ஆகவே வளர இடம் தெரிவதில்லை. விமர்சனங்களையே எதிர்பார்த்து நான் வந்தேன். உண்மையில், சந்திப்பில் நான் மிகவும் ரசித்த பகுதியே அந்த “மின்சார நாற்காலி” அமர்வு தான்.
வெள்ளிக்கிழமை இரவு திருச்சியில் தங்கிவிட்டு சனி காலை சுமார் 8.30 மணிக்கு கிளம்பினேன். வரும் வழி தோறும், நான் இச்சந்திப்பின் வழி என்ன எதிர்பார்க்கிறேன் என்று நினைத்துக்கொண்டேன். பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை என்பதே உண்மை. ஜெ.யிடம், மற்ற நண்பர்களிடம் என்னை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். இரண்டு நாள் அவர் பேசுவதை கவனிக்க வேண்டும். “கொற்றவை” கொண்டுவந்திருந்தேன், கைய்யொப்பம் வாங்கவேண்டும். கதைக்கு எவ்வகை வாசிப்பு வந்துள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டும். விமர்சனங்களை கவனிக்க வேண்டும். அவ்வளவுதான். ஜெ.யிடம் கேட்க பல கேள்விகளை எழுதி வந்திருந்தாலும் ஒரு சந்திப்பு என்பது பல மனிதர்களின் கூட்டு செயல்பாடு, எல்லாவற்றையும் பேச முடியாது என்று நம்பி தான் வந்தேன்.
தமிழில் வாசிப்பதை, எழுதுவதை, உரையாடுவதை பொறுத்தவரை, எனக்கு ஒரு வித imposter syndrome உள்ளது. தமிழை முறையாக கற்றது கிடையாது, எனக்கு போதுமான வாசிப்புக்கிடையாது, பேசத்தெரியாது போன்ற பதட்டங்கள். உண்மை என்றாலும் இது ஆக்கப்பூர்வமான பதட்டம் கிடையாது, அப்படியே செயலிழக்கச்செய்யும். தேடலை முடக்கும். பல நேரங்களில் பேசுவதை விட, பேசாமலிருந்து கவனிக்கலாம், அல்லது அங்கு போகவே வேண்டாம் என்றே தோன்றும். தனிமைபடுத்தும். எழுத்தாளர்களை சந்திப்பதில் எனக்கிருக்கும் தயக்கத்திற்கு ஒரு காரணம் இதுவும் தான். ஆகவே அதிகம் பேச வேண்டாம் என்று நினைத்து தான் வந்தேன்.
ஆனால், அங்கு வந்து “சுசித்ரா தானே” என்று ஒரு மாமரத்தின் நிழலில் நின்ற ஜெ. என்னை கேட்டு, அதன் பின் நான் எல்லோருக்கும் வணக்கம் சொன்ன ஐந்தாவது நிமிடத்தில் என்னுள் ஒரு மடை திறந்தது. அதன் பின், அறிவுக்கும் கற்பனைக்கும் கலைக்கும் இயல்பான கொண்டாட்டத்திற்கு என்னை நான் ஒப்புக்கொடுத்துவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும். எனக்கு கிடைத்த இரண்டு நாட்களில் ஒரு நொடி கூட வீணாகக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. வேட்டைநாயை போல இரண்டு காதுகளும் சீவி தீட்டப்பட்டதாக உணர்ந்தேன். அதே நேரத்தில் இயல்பாக இருக்க முடிந்தது. சுத்தமாக எவ்வித தயக்கமும் இல்லாமல் பேசினேன், சிரித்தேன். அங்கு வந்திருந்த நண்பர்கள் அனைவரும் எனக்கு வெகு நாள் தெரிந்தவர்களைப்போல் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.
அதற்கு ஒரு காரணம், கடந்த இரண்டு-மூன்று வருடங்களாக ஒவ்வொரு நாளும் நான் ஜெ.தளத்தை வாசிக்கிறேன். அவருடைய பெரிய படைப்புகளை இவ்விரண்டு ஆண்டுகளில் வாசித்திருக்கிறேன். சில கதைகளை மொழியாக்கம் செய்து பார்த்திருக்கிறேன். அவர் பரிந்துரைத்த நூல்களை வாசித்திருக்கிறேன். எதை பற்றி படித்தாலும் ஜெ. இதை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று தளத்தில் வந்து தேடிப்பார்ப்பேன். அவர் கருத்துகளுடன் வேறுபடும் இடங்களில் நானே மற்ற ஆதாரங்களை தேடி வாசித்து ஒரு உரையாடல் நடத்தி முடிவுக்கு வருகிறேன். மிகச்சில கடிதங்கள் எழுதியிருந்தாலும் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், அவருடன் இச்செயல்பாடுகள் மூலம் உரையாடி வருகிறேன். இந்த இரண்டு நாள் சந்திப்புக்கு நான் இரண்டு வருடம் ஆயுத்தம் செய்து வந்தேன் என்று கூட இப்போது தோன்றுகிறது.
முதல் அமர்வு, சனிக்கிழமை மதிய உணவு வரை, கல்லூரியின் உள்ளறை ஒன்றில் நடந்தது. எழுத்தாளர்களுக்கு மொழியறிவின் முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டது. டீ.எஸ்.எலியட்டின் “எழுத்தாளர்களுக்கான விதிகள்” என்ற கட்டுரையில், “ஒரு நல்ல எழுத்தாளன் ஒரு செவ்வியல் மொழியையும், ஒரு நவீன மொழியையும் பயில வேண்டும்” என்ற வரி மேற்கோள்கட்டப்பட்டபோது, பரவாயில்லை, தமிழ்ச்சூழலில் ஆங்கிலமும் செவ்வியல் தமிழும் நன்கு தெரிந்தாலே அந்த விதி நிறைவேறிவிடும் என்று நினைத்துக்கொண்டேன். ஆரம்பகட்ட எழுத்தாளர்களில் சிலரின் (பாரதி, க.நா.சு. முதல் அசோகமித்திரன் வரை) ஆங்கிலப்புலமை தமிழ் மொழி நடையில் செய்த மாற்றம் பற்றியும் பேசப்பட்டது. அதன் பின் சில அடிப்படை கோட்காடுகளை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆரம்பகட்ட மாணவர் எளிதில் குழப்பிக்கக்கூடிய Modernism (நவீனத்துவம்) vs. modernity (நவீனம்) க்கான வேறுபாடும், modernism (நவீனத்துவம்) vs. post-modernism (பின்-நவீனத்துவம்) போன்ற கோட்பாடு வித்தியாசங்களை பற்றியும், அவை உருவான வரலாற்று பின்னணியும், கோட்பாடுகளின் தேவைகளையும் விளக்கினார் ஜெ..
சிந்தனை வளர்ச்சியை பற்றி பேசும்போது “முன்னால போன யானையை பின்னால போற யானை குத்தித்தான் முன்னகர முடியும்”என்ற ஜெ.வுக்கே உரித்தான உவமையுடன் விளக்கப்பட்டது. ஆசான் ஜெ.யின் அறிவுபூர்வமான விவாதங்களின் மத்தியில் எழுத்தாளர் ஜெ.வின் ஆதார கவித்துவம் தலைகாட்டுவதைப்போல அழகு வேறில்லை. (வேறொரு இடத்தில், காட்டில் யானையை பார்த்தால் பூத்தமரம் நிற்பதை போலவே இருக்கும் என்று காட்டின் சித்திரத்தையும் யானையின் பூப்பூத்த தும்பிக்கையின் சித்திரத்தையும் அளித்தார். காடுகளில் அலைந்த தன் அனுபவங்களை பற்றி அவர் பேசி கேட்க வேண்டும் என்ற ஆவல் இருந்த எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.)
நான் கண்டிராத ஜெ.வின் மகளிர் தின பேட்டியைப்பற்றி ஒரு கேள்வி வர, அவர் பிரிட்டிஷ் பெண்ணியத்திற்கும் பிரெஞ்சு பெண்ணியத்திற்குமான வேறுபாட்டை முன்வைத்து, பெண்கள் ஆண்களைப்போலவே நடந்துகொள்ளவேண்டும் என்று முன்வைக்கும் பிரெஞ்சு-அமெரிக்க பெண்ணியத்தை தான் மறுப்பதாக சொன்னார். இது கொஞ்சம் எளிமைப்படுத்தப்பட்ட, தட்டையாக்கப்பட்ட கருத்தாக எனக்குத் தோன்றியது. அதேபோல் இசை/இலக்கியத்திற்கான திறன் பிறவியிலேயே உருவாகிறது என்ற கருத்தும். இவற்றை பற்றி இன்னும் நீண்ட விவாதம் நடந்திருந்தால் மேலும் கற்றுக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. ஆயினும் ஆழமான விவாதத்திற்கு போக மனம் தயங்கியது, மற்றவர்களின் கேள்விக்கான நேரத்தை பறித்துவிடுவோமோ என்ற ஐயத்தில். சந்திப்பு முடிந்து கடிதம் எழுதலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரு நாவலை முழுமையாக வாசித்து உள்வாங்க வரலாற்றறிவு, வரலாற்று நோக்கு தேவை என்ற கருத்து பெரிய திறப்பாக அமைந்தது. Gothic Horror வகையறா நாவல்களில் வரும் இருட்டு ஐரோப்பாவின் 12ஆம் நூற்றாண்டின் இருட்டின் மறுவடிவம் என்ற விளக்கம் (“Skeletons in the closet of Europe” என்ற சொல்லாட்சி), அதிலிருந்து நூறு வருடத் தனிமை, 2666 நாவல்களை வாசிக்கும் விதம் பற்றிய விவாதம் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. “ட்ரீனா நதியின் பாலம்” நாவலை பற்றி சொல்லும் போது, துருக்கியை நீரில் படுத்திருக்கும் முதலையைப்போல உருவகம் செய்ததும் (பாதி உடல் ஆசியாவில், மீதி ஐரோப்பாவில்) செறிவாக இருந்தது.
“அடுத்து எதை வாசிப்பது” என்ற கேள்விக்கு அவர், அப்போதைக்கு தேவைப்படுவதை வாசிப்பதும், தற்போது பிரபலமாக இருக்கிறது என்பதனால் வாசிக்க தேவையில்லை என்றும், அது தீவிரத்தை குறைக்கும் என்றார். பதிப்புக்கு வந்து பத்து வருடங்களுக்குப் பிறகும் மிதந்தால் அதை வாசிக்கலாம், முங்கிவிட்டால் வாசிக்கத் தேவையில்லை என்ற தேர்வு முறையை முன்வைத்தார்.
இருநாள் விவாதங்களில் மிகமுக்கியமான அம்சமாக எனக்குப்பட்டது, எப்படி விவாதிப்பது, கேள்விகளை எப்படிக் கேட்பது என்று ஒவ்வொருவருக்கும், அடிப்படைகளைக்கொண்டு ஜெ. கற்பித்தது தான். கேள்விகேட்பதில் பாய்ச்சல்கள், non-sequiturs போன்றவற்றின் அபத்தம், திண்ணைப்பேச்சுக்கும் விவாதத்திற்குமான வேறுபாடு, பொதுவாக உலகத்தையே பதிலாக சொல்லிவிடலாம் என்றில்லாமல், ஒரு issue-வை முன்வைத்து கூர்மையான கேள்வியை எழுப்புவது, முதலில் தன் தரப்பை சொல்லி அங்கிருந்து கேள்வியை கேட்பது போன்ற அடிப்படைகளை மீண்டும் மீண்டும் மிகப்பொறுமையாக சொன்னார். ஒரு நல்ல ஆசிரியக்கான பரந்த வாசிப்பு, அறிவு மீது தீரா பற்று, இவற்றை தாண்டி ஆக்கப்பூர்வமான விவாதங்களை வரவேற்கும் தன்மை, மாணவரின் புற-அக நலன் மீது அக்கறை, மற்றும் அளவற்ற பொறுமையை இந்த சந்திப்பில் நான் கண்டு வியந்துகொண்டே இருந்தேன்.
ஒரு மாணவரின் தனிப்பட்ட விவாதச்சிக்கலையோ தவறான புரிதலையோ மெல்ல அவிழ்த்து சரி செய்து, “எங்க, இப்போ நா சொன்னத திருப்பி சொல்லு பாப்போம்,” என்று அந்தப் புரிதலை அவருள் ஆணி போல் அறையும் தன்மை, ஜெ.வை மிகச்சிறந்த ஆசிரியராக எனக்குக் காட்டியது. பள்ளிக்கல்லூரிகளில் அறிவியல் படித்தாலும், அறிவியல் முறைமையோ, தர்க்கமோ, philosophy of science-ஓ சொல்லித்தரப்படுவதில்லை. அந்த அடிப்படை இல்லையென்றால் விவாதமே சாத்தியம் அல்ல. அறிவியலை தொழிலாக செய்யும் எனக்கு இக்கூறுகள் ஓரளவுக்கு முன்பு அறிமுகம் ஆகியிருந்தாலும் தினப்படி செயலில் அக்கூறுகளை பொருத்தி செயல்படுவது வேறு, அதன் தத்துவார்த்த அடித்தளத்தையும் வரலாற்று பின்னணியையும் தெளிவாக தெரிந்துகொள்வது வேறு. அந்த முறைமைகயை சீராக கற்க வெகுநாளாக ஆவல், இந்த சந்திப்பில் அது ஒரு வகையில் தொடக்கம் கண்டது.
அன்று மாலைநடைக்குப் பிறகு கொசுக்கடியையும் மீறி வாசலில் நின்ற மாவின் இளமரத்தடியில் அமர்ந்திருந்தோம். நாய் வயதைப்போல மனித வருடங்களில் அம்மரத்தின் வயதை கணக்கிட்டிருந்தால், வடுவும் காயும் தொங்கிய அது என் வயதை ஒட்டியிருந்திருக்கும் என்று நினைத்து சிரித்தேன். அங்கே நடந்த விவாதத்தில், இலக்கியத்திலும், ஞானமுறைகளிலும், அடிப்படையில் காட்சிகளாக இருக்கும் படிமங்களின் முக்கியத்துவத்தை பற்றியும், ஒன்றில் வரும் படிமத்தை இன்னொன்றில் பயன்படுத்தலாமா என்றும் நான் கேட்டேன். முடியாது என்று கூறி, metaphor-ருக்கும் allegory-க்குமான வேறுபாட்டை விளக்கினார். அதன் பின், “நான் முன்வைத்த வாதத்திற்கு பிரதிவாதம் முன்வைக்க முடியுமா?” என்றார். கொஞ்சம் யோசித்து பதில் சொன்னேன். அந்த process-ல் தான் உண்மையான கல்வி நடக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் தான் இந்த சந்திப்பு எனக்கு முற்றும் முழுமையானதாக நான் உணர்ந்தேன்.
அதே விவாதத்தில் சொல்லப்பட்ட இன்னொரு முக்கியமான கூறு, விவாதத்தின் போது எதிர்தரப்பில் பேசப்படுவதை முழுமையாக உள்வாங்கவேண்டும். அதை கவனிக்கவேண்டும். அந்நேரத்தில் நாம் மனதிற்குள், இவர் சொல்வதை எப்படி நிராகரிக்கலாம், இவருக்கு எப்படி கவுண்டர் கொடுக்கலாம் என்று யோசிக்கக்கூடாது. நல்ல விவாதத்திற்கு அது அழகல்ல, என்றார். அவ்வளவு நேரமாக அதையே செய்துகொண்டிருந்த எனக்கு நன்றாக உறைத்தது.
சனிக்கிழமை இரவுணவிற்கு பிறகு பன்னிரண்டு மணி வரை அதே மாமரத்தின் அடியில் அமர்ந்து வேகஸ் சூதாட்டக் கஸீனோகளை பற்றி கதை சொல்லி, எழுபதுகளில் வெளிவந்த, நானெல்லாம் கேள்வியே படாத பாடல்களைப்பாடி, சிரிக்கச்சிரிக்க பேசிக்கொண்டிருந்தார் ஜெ. மலையாளம் பேசினால் தமிழ் போல் ஒலிக்கும் அவரது குரல் தீன்தமிழ்ப்பாட்டைப் பாடினால் மலையாளம் போல் ஒலிக்கும் விந்தையை ஆச்சரியக்குறி போட்டு கவனித்தேன். அன்றிரவு முதல் மாடியில் மூன்று பேர் கொண்ட ‘லேடீஸ் ஹாஸ்டல்’லில் உறங்குவதற்கு முன் மாங்காய் தொங்கிய இளமரம் கண்ணுக்குள் வந்து வந்து மீண்டது.
அடுத்த நாள் காலை ஐந்தேமுக்காலுக்கே முழிப்பு வந்துவிட்டது. கைகழுவ தண்ணீர் பிடித்து, அங்கு உலாவிய நாய்ப்படையுடன் அறிமுகம் செய்திகொண்டு, அப்போது எழுந்து வந்த மற்ற நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆறரைக்கு ஒரு சூரியோதய நடை. ஜெ. ஓரிரு நண்பர்களுடன் டீ குடிக்க சென்றபோது யாரும் அழைக்காமல் நானும் தொற்றிக்கொண்டேன். வந்து குளித்து காலை உணவு முடித்து கதை விவாதம் தொடங்கியது.
முதல்கதைகளின் பெயர்மரபு மாறாமல் வழிவரவேண்டும் இல்லையா? என் கதைக்கும் நான் “குடை” என்று பெயர் வைத்திருந்தேன். வேறு கதைகள் இருந்தாலும் இதன் நடையில் மற்ற எழுத்தாளர்களின் தாக்கம் குறைவாக இருப்பதாக எனக்குத் தோன்றியதால் இதை சமர்பித்தேன். தவிர இதை எழுதும்போது நிகழ்ந்த கற்பனை பாய்ச்சல் என்னை மகிழ்வித்தது. பொதுவாசிப்பில் இது எப்படி வரவேற்கப்படுகிறது, கண்டிப்பான மதிப்பீடுகளுக்கு முன் வைத்துப்பார்த்தால் இது எங்கே நிற்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன்.
ஒரு கதையை மதிப்பிட அந்த அவையில் மூன்று அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன.
- அனன்யத்துவம் – பிரிதெங்கும் அக்கதை எழுதப்படாமல் இருக்க வேண்டும்.
- வடிவ ஒருமை
- அது முன்வைக்கும் ஆன்மீக-தத்துவார்த்த தரிசனம்.
அந்த “மின்சார நாற்காலி” அமர்வு என்னை பலவகைகளில் மகிழ்வித்தது என்றே சொல்லவேண்டும். வருவதற்கு முன்னால் எனக்கிருந்த பதற்றம் அங்கு உண்மையிலேயே மறைந்துவிட்டது. ரொம்ப குதூகலமாகவே இருந்தேன். இவ்வளவு பேர் நம்ம கதையை படிச்சாங்களா என்ற பெருமிதம் ஒருபக்கம். அதற்கு நிமிர்வான மதிப்பீடுகளைக்கொண்டு வைக்கப்பட்ட விமர்சனம் மறுபுறம். அதற்கடுத்து நல்ல படைப்பிலக்கியத்துக்கான கரு அதில் உள்ளதென்று சொன்ன குரலகள் தந்த நம்பிக்கை. குடையை பிரித்து கம்பியாக்கிய அனைத்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையுமே நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
கதையின் ஆசிரியர் என்ற முறையில் அதன் சில வாசிப்புகள் முழுமையாக இல்லை என்பதையும் பதிவுசெய்யவேண்டும் (பெண்கள் ஏன் பெண் பிரச்சனைகளை பற்றி மட்டுமே எழுதுகிறார்கள் என்ற விமர்சனத்தை இதில் சேர்க்கவில்லை). பரவாயில்லை, முழுமையாக வாசிப்பவர்கள் வருவார்கள். உண்மையில் இக்கதை இதே வடிவில் வெளிவந்தால், நான் நிறைய பெண்ணியவாதிகளிடமும் சரி, பெண்ணிய வெறுப்பாளர்களிடமும் சரி, அடி வாங்குவேன் என்றே உணர்கிறேன். இக்கதை இருவரையும் ஏதோ வகையில் சீண்டுகிறது என்று தோன்றுகிறது எனக்கு. All in the game :)
என் கதை விமர்சனத்தில் ஐசக் டினேசனின் “நீலஜாடி” கதையை ஜெ. பரிந்துரைத்தார். சந்திப்பு முடிந்து வந்து வாசித்தபோது, இப்படியொரு கதையை எழுதிவிட்டால் நாம் நம்மை எழுத்தாளரென்று கூறிக்கொள்ளலாமென்று தோன்றியது. இச்சந்திப்பில் பல நூல்கள் வெவ்வேறு சமயங்களில் பரிந்துரைக்கப்பட்டன. அந்த பட்டியலை வைத்தே ஒரு விதத்தில் விவாதத்தை மீண்டும் தொகுத்துக்கொள்ள முடிந்தது.
சந்திப்பு முடிவில் தொகுத்துக்கொண்டு பார்த்தல் நான் எழுதிவந்த கேள்விகள் பெரும்பாலும் எதையுமே கேட்கவில்லை. விவாதத்தில் உதித்த கேள்விகளையே கேட்டேன். ஜெ.வின் ஆக்கங்களை பற்றி பேசவே நேரமிருக்கவில்லை. அது ஆசான் ஜெயமோகனின் பட்டறையாகவே இருந்தது. அவர் சொன்னதை விட, சொல்லிக்கொடுத்ததை விட, அன்று காலையும் வெண்முரசு எழுதிய அவரது படைப்பூக்கமும் அர்ப்பணிப்பும், இதில் ஒரு பங்காவது நாம் நம் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும் என்று நினைக்கவைத்தது. ஜெ.வை ஒரு நல்ல படைப்பாளியாக, விமர்சகராக வருங்காலம் நினைவில் கொள்ளுமோ இல்லையோ, ஒரு சமூகத்தின் முதன்மை ஆசானாக நினைவில் கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தச்சமூகத்தின் மனதிலும் சொல்லிலும் நிற்பீர்கள், ஆசானே.
சந்திப்பின் பெரிய மகிழ்வென்பது பல புதிய நண்பர்களை சந்தித்தது.சந்திப்பை ஒருங்கிணைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
கையொப்பப்படலம், புகைப்படப்படலம், எல்லாம் முடிந்து சந்திப்பின் நினைவுகள் மனதில் முட்ட அன்று மாலை வீடு சென்று சேர்ந்த பிறகு தான் சனிக்கிழமை மாலை நடையின் போது ஜெ. அந்த இள மாமரத்தின் காயை உண்டு பார்த்தது நினைவுக்கு வந்தது. “துவர்க்குது!” என்று முகத்தை சுருக்கினார். பிறகு, “எங்க வீடு பக்கமா ஒரு மாமரம் இருக்கு. அது வருஷம் பூராவும் கனியும்! அவ்வளவு இனிப்பா இருக்கும்,” என்றார்.
இந்த மரமும் அப்படிக் கனிய காத்திருக்க வேண்டும்.
***