இன்று மாலை ஒரு மலையாள எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அசோகமித்திரனை மலையாளத்தில் வாசித்திருக்கிறார். “இங்கே அத்தகைய ஒரு மாபெரும் எழுத்தாளர் மறைந்தால் முதலமைச்சரே சென்று அஞ்சலி செலுத்தியிருப்பார். அத்தனை அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும் சென்றிருப்பார்கள்” என்றார். “தமிழகத்தில் சினிமாநடிகர்கள் தவிர எவருக்கும் அந்த மரியாதை அளிக்கப்படுவதில்லை இல்லையா?” என்று கேட்டார்.
அது உண்மை. ஆனால் நிலைமை மிகமிக மாறிவிட்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை எழுத்தாளர்கள் மறைந்தால் அது ஒரு செய்தியே அல்ல. நாலைந்து நாட்கள் கழித்து அந்த எழுத்தாளரின் உறவினர்கள் அளிக்கும் சிறிய ’நீத்தார்க்குறிப்பு’ விளம்பரம் வழியாகவே அவரது மறைவு தெரியவரும். மேலும் இரண்டுமாதம் கழித்து சிற்றிதழ்கள் சில கட்டுரைகளை வெளியிடும். மௌனி இறந்ததை ஒருவாரம் கழித்தே சுந்தர ராமசாமி அறிந்தார். தி.ஜானகிராமன், க.நா.சு போன்ற புகழ்மிக்கவர்களுக்கே அதுதான் நிலைமை. ப.சிங்காரத்தின் இறப்பு ந.முருகேசபாண்டியன் அறிந்து அவரிடமிருந்தே மற்றவர்களுக்குத் தெரியவந்தது.
எழுத்தாளர்களின் இறப்பைச் செய்தியாக்கும்போது மிகச்சுருக்கமான ஓரிருவரிகளையே நாளிதழ்கள் வெளியிட்டன. மிஸ்டர் கே.என்.சுப்ரமணியத்தின் இறப்பைச் சொன்ன தி ஹிந்துவின் செய்தி க.நா.சு என்னும் சகாப்தத்தைக் குறிக்கிறது என எவருக்கும் தெரிந்திருக்காது. 2007 லா.ச.ரா இறந்தபோது உடன் லா.சு.ரங்கராஜன் என்பவரின் படத்தை தி ஹிந்து வெளியிட்டது.
அந்நிலைமையை மாற்றியவர் என்றால் தினமணியின் ஆசியராக வந்த ஐராவதம் மகாதேவனைச் சொல்லவேண்டும். அவர்தான் எழுத்தாளர்களைப்பற்றிய செய்திகளை வெளியிடத்தொடங்கியவர். அவர்கள் இறக்கும்போதேனும். தினமணிக்கு இராம சம்பந்தம் ஆசிரியராக வந்தபின்னர்தான் இலக்கியவிழாக்களைப்பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கின. எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. பல அஞ்சலிக்கட்டுரைகளை நான் எழுதியிருந்தேன்.
இன்று இணையம் வந்தபின்னர்தான் இந்த ஆளுமைகளுக்கு இளையதலைமுறையினரிடம் ஓர் இடம் உள்ளது என்பது நம் ஊடகங்களுக்குத் தெரிகிறது. நாளிதழ்கள் செய்திகள் வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் செய்தியுடன் காணொளிகளையும் வெளியிடுகின்றன. இந்த அளவுக்கான ஒரு மாற்றம் தமிழில் நிகழுமென நான் பத்தாண்டுகளுக்கு முன்பு நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஆம், அரசியல்வாதிகள் வரவில்லை. ஏனென்றால் இதில் வாக்குகள் உண்டு என அவர்கள் எண்ணவில்லை. அதற்கப்பால் பண்பாட்டுச்செயல்பாடு என ஒன்று உண்டு என்பதையே அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.
தமிழகத்தின் அரசியல்வாதிகளில் தொல் திருமாவளவன் மட்டுமே நேரில் வந்து அசோகமித்திரனுக்கு அஞ்சலி செலுத்தியதாக அறிந்தேன். என்றும் அவர்மேல் நான் மதிப்பு கொண்டவன். இன்று அம்மதிப்பு மேலும் வளர்கிறது.
எளிய அரசியலுக்கு அப்பால் சென்று பண்பாட்டுச்செயல்பாட்டின் முக்கியத்துவத்தை காணமுடிபவர், கணக்குவழக்குகள் நோக்காமல் அதை மதிப்பவரே உண்மையில் அரசியல்வாதி என்னும் நிலைவிட்டு அரசாளர் என்னும் நிலைக்கு எழுபவர்.
அசோகமித்திரனின் வாசகன் என்ற நிலையில் திருமாவளவனுக்கு என் நன்றி
***