நேற்று காலைமுதலே ஒருவகையான நிலைகொள்ளாமை இருந்துகொண்டிருந்தது. தர்க்கபூர்வமாக இதற்கெல்லாம் ஓரு அர்த்தமும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எழுதமுடியாமல் கீழே சென்று படுத்துவிட்டேன். உடல் எடைமிகுந்து அசைக்கவே முடியாமலானதுபோல. விழிப்பு வந்தது. ஆனால் எழ முடியவில்லை. அருண்மொழி வழக்கம்போல பதினோரு மணிக்கு அழைத்தாள். நான் எடுக்கவில்லை. உண்மையில் தொலைபேசி அழைப்பை கேட்டுக்கொண்டே இருந்தேன். எழுந்து சென்று எடுக்கத் தோன்றவில்லை. நான் இறந்துகொண்டிருக்கிறேன் என்பதுபோல ஒர் எண்ணம் இருந்துகொண்டிருந்தது. இப்போது எண்ணிப்பார்த்தால் திக்கென்கிறது. அசோகமித்திரனை மிக அருகே என உணர்ந்தேன். அவருடைய கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதை வாசிக்கிறேன், சோஃபீஸ் சாய்ஸ் நாவல் பற்றி எழுதியிருக்கிறார். அந்நாவலை வாசித்து மிக ஆழமான உளச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் மனநிலையிலேயே ஒருமாதம் வாழ்ந்ததைப்பற்றி.
படபடப்புடன் அதை மீண்டும் மீண்டும் வாசித்தேன். பின்னர் விழிப்பு கொண்டபோது தெரிந்தது, அக்கடிதம் இருபதாண்டுகளுக்கு முன் உண்மையிலேயே அசோகமித்திரன் எழுதியது. அது நீல இன்லண்ட் உறை. நான் இப்போது வாசித்தது வெண்தாள். மீண்டும் தூக்கம். அல்லது மென்மயக்கம். மீண்டும்மீண்டும் கூப்பிட்டுச் சலித்து அஞ்சிய அருண்மொழி பக்கத்துவீட்டு பாட்டியைக் கூப்பிட்டு நான் வீட்டில் இருக்கிறேனா என்று பார்க்கச்சொன்னாள். அவர்கள் உள்ளே வர டோரா விடவில்லை.
அஜிதனை போனில் அழைத்து என்னைக்கூப்பிடும்படி அருண்மொழி சொல்ல அவன் நாலைந்துமுறை அழைத்தான். பின்னுச்சிப்பொழுதில் விழித்தேன். உடல் தள்ளாடியது. மிகமிக எடையுடன் இருந்த எண்ணம் இங்கிருந்து முற்றாக அகன்றுவிடவேண்டும் என்று. எதிலும் பொருளில்லை என்று. மேலும் ஒருசொல்லும் எழுதக்கூடாது என்று. ஏனென்றறியாத துயரம்போல கொல்லும்திறன் கொண்டது வேறில்லை. தனிமை. பிறிதொன்றிலா தனிமை.
மேலே சென்று பழைய சேமிப்பில் எங்கோ இருந்த அசோகமித்திரனின் கடிதம் இருக்குமா என தேடினேன். பின் இணையத்தை தொடங்கி என்னைப்பற்றிய ஆவணப்படத்தில் அம்மாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இல்லை, இது என்னை உறிஞ்சிவிடும் எனத் தோன்றியது. சாரு நிவேதிதாவின் தளத்திற்குச் சென்றேன். அங்கே கிரேடில் ஆஃப் ஃபில்த் இசைத்துணுக்கு. அதை பார்த்திருக்கக்கூடாது. மீண்டும்மீண்டும். ஊளை, உறுமல், கர்ஜனை, விம்மல். மூளை துளைக்கும் ஓசைகள். நிலைகுலையச்செய்யும் தாளம். இத்தனை கீழ்மைநிறைந்த ஓசைகளில் எப்படி நிகழ்கிறது ஒத்திசைவு? ஒன்றரைமணிநேரம் அவர்களின் இசையையே தேடித்தேடிப் பார்த்தேன். எஞ்சிய ஆற்றலும் முழுமையாக அகன்றது. இருக்கையில் இருந்து எழுந்து படுக்கைநோக்கிச் செல்லவும் முடியவில்லை. சுவரைப்பற்றியபடி சென்று மீண்டும் படுத்துக்கொண்டேன். நெடுநேரம் கழித்து மீண்டும் மீண்டும்
அருண்மொழியின் அழைப்பு. எழுந்து செல்பேசியை எடுத்தேன். அவள்குரல். மிகமிக ஆழத்திலிருந்து எழுந்து அந்தச் சரடைப் பற்றிக்கொண்டு மேலே வந்தேன். கிணற்றில் தொலைந்துபோனதை பாதாளக்கரண்டியால் துழாவித்துழாவி கொக்கியில் சிக்கவைத்து மீட்பதுபோல. எந்த இருளிலும் தேடிவந்துவிடுவாள் போலும். எப்படித்தெரிகிறது இப்படி இருக்கிறேன் என்று? என்ன செய்கிறது என்றாள். எனக்கு நாக்குழறியது. முழுமையாக ஒருசொல்லும் சொல்லமுடியவில்லை. அவள் பேசிமுடித்ததும் அப்படியே கைதளர மீண்டும் தூக்கம். முற்றிலும் அவிழ்ந்துபரந்த நிலை. பல்லைக்கடித்தபடி அறுத்துக்கொண்டு எழுந்து வெளியே சென்றேன்.
டோரா பாய்ந்து வந்தது. நாய்களின் முகத்திலிருக்கும் கனிவு மனிதன்மேல் இன்னமும் தெய்வங்கள் அன்புடன் இருக்கின்றன என்பதற்கான சான்று. அவளை கொஞ்சியபோதுதான் என் முகம் அத்தனைச் சோர்ந்திருப்பதை, தசைகள் தொய்ந்திருப்பதை நானே உணர்ந்தேன். மெல்ல முகம் மலர்ந்தது. அவளை இழுத்துச்சென்று குளிப்பாட்டினேன். பிறநாய்களைப்போலன்றி டோராவுக்குக் குளிப்பது பிடிக்கும். அவள் உடலில் நம் கைகள் ஓடுவது அவளை விழிசொக்கச்செய்யும். டாபர்மானின் கண்கள் சிறியவை. பால்மாறா குழந்தைகளுக்குரிய பாலாடைமங்கல் படிந்தவை. மயங்குபவை. அவ்வப்போது என்னை முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள். அவளை நீராட்டி முடித்தபோது விடுபட்டுவிட்டேன்.
அஜிதனைக் கூப்பிட்டேன். அம்மா அவனைக்கூப்பிட்டு என்னிடம் பேசச்சொன்னதாகச் சொன்னான்.. பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தேன். கிரேடில் ஆஃப் பில்த் கேட்டதைப்பற்றிச் சொன்னேன். “அதெல்லாம் உனக்குள்ளதில்லை” என்றான். எதுவும்செய்யத் தோன்றவில்லை. வீட்டிலிருந்த அத்தனை பாத்திரங்களையும் கழுவி வைத்தேன். மீண்டும் கணிப்பொறிமுன் சென்று அமர்ந்தேன். அதை திறந்தால் நான் அம்மாவின் படத்தைத்தான் பார்ப்பேன். அம்மாவும் அசோகமித்திரனும் எப்படியோ கலந்துவிட்டிருக்கிறார்கள். அவரிடம் அம்மாவைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன், அம்மா சால்பெல்லோ பற்றிச் சொன்னதை. சிரித்தபடி “பெண்களுக்கு நம்மளைவிட ஜாஸ்தி தெரியும்” என்றார்.
என்ன செய்கிறது எனக்கு? மிகமுக்கியமான எதையோ இழந்தவன் போலிருக்கிறேன். தூக்கமின்மைதான் காரணமா? ஆனால் எப்போதும் நன்றாகவே தூங்குகிறேன். வழக்கம்போல எலுமிச்சைப்பழத்தை பிழிந்து தலையில் தேய்த்தேன். அது உலர்ந்தபின் குளிர்ந்த எண்ணை. அதுவும் சற்றுக் காய்ந்தபின் வெந்நீரில் குளித்தேன். கணிப்பொறி முன் வந்தமர்ந்தபோது உடல் மீண்டும் எடைகொண்டு பக்கவாட்டில் சரிந்துகொண்டிருந்தது. ஆறரை மணிவரை அப்படியே அமர்ந்திருந்தேன்.
அருண்மொழி வந்து கதவைத்தட்டியது தெரியவில்லை. செல்பேசி அடித்ததும் தெரியவில்லை. அவள் மேலே வந்து ஜன்னலைத்தட்டித்தட்டி அழைத்தாள். ஒருகணம் கழிந்தபின்னர்தான் எங்கிருக்கிறேன் என்றே தெரிந்தது. உள்ளே வந்ததுமே “என்ன செய்கிறது?” என்றாள். எனக்குச் சொல்லத்தெரியவில்லை. சொல்லாக்கியிருந்தால் “இவையனைத்தும் வெறும் சொற்கள்” என்று சொல்லியிருப்பேன். “இவை வெறும் அலைகள் மட்டுமே” என்றிருப்பேன்.
இருவரும் ஒரு அந்திநடை சென்றோம். எட்டுமணிக்கு திரும்பிவந்தபோது மெல்ல மீண்டு வந்திருந்தேன். தோசை சாப்பிட்டேன். மேலே சென்றமர்ந்து வெண்முரசு அத்தியாயம் ஒன்று எழுதினேன். எழுதத் தொடங்கியதும் அதுவே உருகிவழிந்து வடிவம் கொள்கிறது. எனக்கு முற்றிலும் அன்னியமானதாக அங்கே தெரிகிறது. அதை திரும்ப வாசிக்கவே என்னால் முடியாது. அதை பிழைதிருத்துவதுகூட இயல்வதல்ல. பாட்டுக்கேட்க முயன்றேன். ஓரிரு ஒலிகளுக்கு அப்பால் செவிகூர முடியவில்லை. மீண்டும் மீண்டும் எதையோ வாசித்தேன். சொற்கள் அர்த்தமாகவில்லை. பன்னிரண்டரை மணிக்கு சென்றுபடுத்தேன். விழுந்துகொண்டே இருப்பதுபோலிருந்தது.
இறப்பு என்பதை இந்நாவலில் மீளமீள எழுதுகிறேனா? இறப்பை எழுதுபவனை அது சூழ்ந்துகொள்கிறதா? எல்லா நரம்புகளிலும் அதுவே நுரைத்தோடுகிறதா? இறப்பை எண்ணும்தோறும் நாம் நம் ஒவ்வொரு செல்லுக்கும் அச்செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். பிறப்பும் இறப்பும் நம்மில் கணம்கோடி என நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இறப்பு வாழ்கிறது உடலில். அது அறியும் சொற்களை.
காலையில் எழுந்தபோது புத்துணர்ச்சியுடன் இருந்தேன். ஆம், அது ஒருநாள்.அவ்வப்போது வந்துசெல்லும் ஒர் எளிய சோர்வு. எழுதினேன். மின்வாரியம் சென்று கட்டணம் செலுத்தினேன். வங்கிக்குச் சென்றேன். மீன் வாங்கிவந்தேன். மசால்வடை வாங்கிவந்து ரசத்தை சூடுசெய்து போட்டுவைத்தேன். பாத்திரங்களைக் கழுவி வைத்தேன். ஆனால் மதியம் தூங்கமுடியவில்லை. படுத்ததுமே உள்ளம் எழுந்துவிட்டது. மாலையில் ஒரு நீண்ட நடைசென்று மீண்டேன். கிருஷ்ணனிடம் பேசினேன். அசோகமித்திரனின் முழுத்தொகையில் அப்பாவின் சினேகிதர் வரை வந்துவிட்டதைச் சொன்னார். “மிகஎளிமையான எழுத்து. ஒட்டுமொத்தமாக அது நிறைக்கிறது” என்றார்.
சையதுமாமாவை நினைவுகூர்ந்தேன். ஐநூறுகோப்பைத்தட்டுகள் கதையில் அறிமுகமாகிறார். மிகமிக ஆரம்பகாலக் கதை. தொடர்ந்து அசோகமித்திரனுடன் இருந்துகொண்டிருந்திருக்கிறார். அசோகமித்திரன் அவருடைய அப்பாவிடமிருந்து விலகியதே இல்லை. அப்பாவின் சினேகிதர் எப்படி அகலமுடியும்? முதல்முறையாகச் சவரம் செய்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். முகம்முழுக்க காயம். “நீ சரியாகச் சொல்லித்தரவில்லை. உன் பிளேடு பழையது” என்று அப்பாவிடம் சிணுங்குகிறார். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் எத்தனை காயங்களைக் காணப்போகிறாய் என நினைத்திருக்கலாம்.
பெருமூச்சுடன் அன்றி எண்ணமுடியாத வாழ்க்கையால் சூழப்பட்டவர். இழந்தவாழ்க்கை இனிமையாகத் தெரிந்தது என்றால் எந்தவாழ்க்கையில் வாழ்ந்தார்? திரும்பிவந்து தேங்காய் உரித்தேன். நெத்திலிமீனை ஆய்ந்துவைத்தேன். தி ஹிந்து கோலப்பன் அழைத்து அசோகமித்திரன் மறைந்துவிட்டதைச் சொன்னார். ஒருகணம் ஆழ்ந்த உறைநிலை. இதற்காகத்தானா? இல்லை, இதுவேறு. மிகைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இப்படியெல்லாம் ஊடுபாவாகப் பின்னப்பட்டுகிறது. அகமும் புறமும் என. அறிந்ததும் அறியாததும் என. இருப்பதும் இன்மையும் என. மீண்டும் முழு உடலும் எடைகொண்டது. படிகளில் நின்று நின்று ஏறவேண்டியிருந்தது.
கணிப்பொறி முன் வந்து அமர்ந்து ஒரே வரி எழுதினேன். கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு எழுதியிருக்கிறேன். எவ்வளவு உரையாடியிருக்கிறேன். 1985ல் முதல்முறையாக அவரைச் சென்று கண்டேன். வாழ்விலே ஒருமுறை தொகுப்பை வாசித்திருந்தேன். தாமோதர ரெட்டி தெருவிலிருந்த அவருடைய ஓட்டுவீட்டில். “வீட்டுக்குள் முழுக்க மனுஷா… வாடகைக்கு விட்டிருக்கேன்… வெளியே போய் பேசலாமே” என்றார். வெளியே சென்று ஒரு சிறிய கடையில் காபி சாப்பிட்டோம். “வாசிக்கிறது நல்லதுன்னு நான் சொல்லமாட்டேன். எதுக்குன்னு தோணுது. எல்லாம் அர்த்தமில்லாத விஷயங்கள்” அதற்குப்பின் பலமுறை. ”ஒட்டுமொத்தமா பாக்கக்கூடாது. அதான் சிறுகதையே நன்னாருக்குன்னு நான் சொல்றேன். ஒட்டுமொத்தமா பார்த்தா ஒரு அர்த்தமும் கெடையாது. வார் ஆன்ட் பீஸ் வாசிச்சா என்ன மிஞ்சுது? ஒண்ணுமில்லை”
இந்த இரவில் இதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கப்போகிறேனா? அரங்கசாமி அழைத்தார். கிருஷ்ணனின் குறுஞ்செய்தி. நான் இங்கிருப்பேன். முழுமையான தனிமையில். பின்னால்செல்வதே ஒரே வழி. அஞ்சுபவர்கள் பின்னால்தான் செல்லவேண்டும். பின்னகர்வதற்கான வழி இசை. பழைய பாடல்கள். கால இடத்துடன் நினைவுடன் பிரிக்கமுடியாதபடி பிணைந்தவை. எழுபதுகளின் மலையாளப்பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விளக்காக அணைந்து இருள்கிறது துறைமுகநகரம். கலங்கரைவிளக்கு மட்டும் அலைகடலை வீணாகத் துழாவிக்கொண்டிருக்கிறது.