கல்வி – தன்னிலையும் பணிவும்

nitya

நான் லெளகீக வாழ்க்கையில் (படிப்பு, வேலை….) வென்று பழகியவள். ஒரு படி கீழே நிற்பதென்பது பழக்கப்படாத அனுபவம். இதை நான் ஆணவத்துடன் குறிப்பிடவில்லை. மற்றவர்கள் என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை விட நான் என் மீது சுமந்து செல்லும் எதிர்பார்ப்பு பல மடங்கு.

தஞ்சை சந்திப்பைக் குறித்து பிரியம்வதா எழுதிய கடிதத்தின் மேலே குறிப்பிட்ட வரிகள் என்னை கவர்ந்தன அக்கடிதத்திற்கான பதிலில் அதை எழுதத் தொடங்கியபின் ஒரு தனிப்பதிவாகவே அதை எழுதுவது நன்று என்று தோன்றியது.

நாம் நெடுங்காலம் வேர் விட்டு வளர்ந்து நிலை கொண்ட நிலப்பிரபுத்துவ அமைப்பொன்றின் இறுதிக்காலகட்டத்தில் பிறந்தவர்கள். நமது தந்தையர் அந்நிலப்பிரபுத்துவ காலகட்டத்துக்குள் முழுமையாகத் திளைத்து வளர்ந்து வந்தவர்கள். அவர்கள் அவ்விழுமியங்களையே நமக்கு அளித்தனர். ஆகவே குடும்பம், பள்ளி, அலுவலகம், சமூகச் சூழல் அனைத்திலுமே அந்நிலப்பிரபுத்துவத்தின் மரபுகளும் நெறிகளும் நம்பிக்கைகளுமே மேலோங்கி நின்றன.

நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படை என்பது மாறாத மேல் கீழ் அடுக்குகளை உருவாக்கி நிலை நிறுத்துவதுதான். நிலப்பிரபுத்துவத்தைத் தாண்டி வந்திருக்கும் இச்சூழலில் இன்று அதைப்பார்க்கும்போது அந்த அடுக்கதிகாரம் நமக்கு சோர்வை அளிக்கிறது. அதன் அடக்குமுறையும் அடிமைப்படுத்தலும் சினத்தை எழுப்புகின்றன. ஆனால் அதற்கு முந்தைய பழங்குடிக் காலகட்டத்தின் கட்டற்ற தன்மைக்கு எதிராக மெல்ல மெல்ல மானுடம் உருவாக்கிக் கொண்ட ஓர் அமைப்பு நிலப்பிரபுத்துவம்.

மார்க்சிய சிந்தனையை ஓரளவேனும் கற்ற ஒருவர் பழங்குடிகளின் கட்டற்ற பரவலான பண்பாட்டுவெளிக்கு நிலப்பிரபுத்துவம் பல வகையிலும் முற்போக்கான வளர்ச்சியையே அளித்தது என்பதை உணர்வார்கள். நிலப்பிரபுத்துவ அமைப்பு பழங்குடி சமுதாயங்களை ஒன்றுக்குமேல் ஒன்றென அடுக்கி உறுதியான பெரும்சமூகங்களை உருவாக்கியது, பேரரசுகளை கட்டமைத்தது. அதன் வழியாக உபரி தொகுக்கப்படவும் முறையாக பகுக்கப்படவும் வழிவகுத்தது. உபரியை உருவாக்கும் ஒருங்கிணைந்த வேளாண்மை, பாசனம், வணிகம் ஆகியவற்றை உருவாக்கியது. வலுவான அரசுகளை உருவாக்கி கொள்ளையும் சூறையாடலும் இல்லாமல் ஆக்கியது.

அதன் விளைவாகவே கலைகளும் இலக்கியங்களும் சிந்தனைகளும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்திற்குமேல் எழுந்து வந்த முதலீட்டியம் நிலப்பிரபுத்துவத்தோடு ஒப்பிட்டு நோக்குகையில் மேலும் முற்போக்கானது. அது நிலப்பிரபுத்துவத்தில் பல வகையிலும் நிலத்தில் தேங்கிக் கிடந்த முதலீட்டை விடுவித்து ஒற்றைப்பெருந்தொகுப்பாக ஆக்குகிறது. அதை உற்பத்தியிலும் விநியோகத்திலும் ஈடுபடுத்துகிறது. முதலீட்டை கலைகளை வளர்க்கவும், இலக்கியங்களையும் சிந்தனைகளையும் பெருக்கவும் தொழில் நுட்பத்தை வலுப்படுத்தவும் பயன்படுத்துகிறது.

நம் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தின் இறுதிக்காலமென்று இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தை சொல்லலாம். முதலீட்டியம் உருவாகி வந்த காலம். நமது தந்தையரின் காலகட்டத்தில் ஓங்கியிருந்த நிலப்பிரபுத்துவத்திற்குள் முதலீட்டியம் ஊடுருவத் தொடங்கியதென்றால் நமது காலகட்டத்தில் முதலீட்டியம் ஓங்கி அதற்குள் நிலப்பிரபுத்துவம் உள்ளடங்கியிருக்கிறது. இன்று நம் வாழ்வில் நேரடியாக நிலப்பிரபுத்துவத்திற்கு இடமில்லை. நாம் முதலீட்டியத்தின் ஊழியர்கள். அதில் பங்களிப்பாற்றுபவர்கள்.

ஆனால் சென்ற காலம் பொருளியல்தளத்திலும் அரசியல்தளத்திலும் பின்னகர்ந்து விட்டாலும் கூட சமூகத் தளத்திலும் பண்பாட்டுத்தளத்திலும் நீடிக்கவே செய்யும். இன்று நம்மை ஆளும் மதிப்பீடுகள் நிலப்பிரபுத்துவக் காலத்தைச் சேர்ந்தவை .அவை இலக்கியங்களாக, நீதிநூல்களாக, ஆசாரங்களாக, ஒழுக்க வரையறைகளாக, அற மதிப்பீடுகளாக ஆழ்படிமங்களாக நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக அவற்றை உற்று நோக்கி ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்வதினூடாகவே நாம் அவற்றை கடந்து செல்ல முடியும். ஓரிரு தலைமுறைகளுக்குப்பின்னரே அம்மதிப்பீடுகளிலிருந்து முழுமையாக விடுபடவும் முடியும்.

அம்மதிப்பீடுகளில் அடுத்த கட்டத்திற்கும் பொருந்தக் கூடிய சாராம்சமான பகுதிகள் மறுஆக்கம் பெற்றுத் தொடரும். அவை பெரும்பாலும் அறமதிப்பீடுகளே ஒழிய ஒழுக்க மதிப்பீடுகளோ நெறிமுறைகளோ ஆசாரங்களோ அல்ல. அந்த மாற்றம் மிகமெல்ல வளர்சிதை மாற்றமாக, முரணியக்கத்தின் வழியாக மட்டுமே நிகழமுடியும். பெரும்பாலும் அது நிகழ்ந்தபின்னரே அதன் முழுச்சித்திரத்தை நாம் அடைவோம்.

இச்சூழலில் நாம் ஒவ்வொருவரும்அறியும் ஓர் இடருண்டு. நமது குடும்பத்தில் தந்தைக்கும், கல்வி நிலையங்களில் ஆசிரியருக்கும், தொழில் நிலையங்களில் மேலதிகாரிகளுக்கும், சமூகச் சூழலில் மூத்தவர்களுக்கும் முழுமையாக அடிபணியவே நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளால் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இயல்பாகவே நாம் அதை செய்தும் வருகிறோம். இன்றைய தலைமுறையில் அந்த மதிப்பீடுகளை உதறி முன்னகரும் இயல்பு உருவாகிறது. பெரும்பாலும் நவீன தொழிற்சூழலில் இருந்து இது முளைவிடுகிறது.

முதலீட்டியம் வலுப்பெற்ற அமெரிக்க ஐரோப்பா நாடுகள் தொழில்துறையில் பழையகால நிலப்பிரபுத்துவப் பண்புகள் எதிர்மறை விளைவுகளை உருவாக்குபவை என்று கண்டடையப்பட்டுள்ளன. அங்கு முதலீட்டியத்தால் வரையறுக்கப்பட்ட உறவுகளும் உணர்வுகளுமே சிறப்பான பயனை விளைவிக்ககூடியவை என்று உணரப்பட்டிருப்பதால் அவை வலியுறுத்தப்படுகின்றன.

90களுக்குப்பிறகு உலகமயமாக்கம் இந்தியாவில் ஐரோப்பிய அமெரிக்கபாணி தொழில்- வணிகச் சூழலை உருவாக்கியது. குறிப்பாக கணிப்பொறித்துறை போன்றவற்றில் ஐரோப்பிய பாணி நிர்வாகிகளும் தொழில்உறவுகளும் உருவாயின. அங்கு மேல் கீழ் அடுக்கு என்பவை ஆசாரங்களாகவோ நம்பிக்கைகளாகவோ இல்லை. நிர்வாகத்தின் பொருட்டு உருவாக்கப்பட்ட தொழில்முறை உறவுகளே உள்ளன. அங்கிருந்து அந்த மனநிலை கல்வி நிலையங்களுக்கு வந்துள்ளது. மெல்ல குடும்பங்களுக்கும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.

விளைவாக எவரும் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காமலிருக்கும் மனநிலை இளைஞர்களிடம் இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. தந்தையோ ஆசிரியரோ மேலதிகாரியோ மூத்தவர்களோ அவர்களிடம் ஆணையிட இயல்வதில்லை. மானுடனாக தான் பிறருக்கு முற்றிலும் சமானமானவன் என்ற உணர்வை இளமையிலேயே அவர்கள் அடைந்துவிடுகிறார்கள். எனக்கும் என் தந்தைக்குமான உறவல்ல எனக்கும் என் மகனுக்குமான உறவு. நான் என் தந்தைக்கு நிகராக நின்று ஒருசொல்லும் பேசியதில்லை.என் மகன் என்னை அஞ்சுவதில்லை, அடிபணிவதுமில்லை.

இது மிகப்பெரிய வாய்ப்பு என்பதை மறுக்க முடியாது. தனது அறிவார்ந்த தேடலையும் ஆன்மீகமான மலர்வையும் நோக்கி ஒவ்வொரு தனியாளுமையும் சென்று சேர்வதற்கான விடுதலையை இது அளிக்கிறது. அதற்கெதிரான சமூகத் தடைகள் அனைத்தையும் பெரும்பாலும் விலக்குகிறது. பிறிதொருவரின் வாழ்க்கைக்குமேல் நாம் செல்வாக்கு செலுத்துவது பிழை என்ற எண்ணம் இன்று வலுப்பெற்று வருகிறது. தன்மேல் பிறர் செலுத்தும் ஆதிக்கம் என்பது ஒருவகையில் அத்துமீறலே என்னும் எண்ணம் உருவாகி நிலைபெற்றுள்ளது. அனைத்து வகையிலும் முந்தைய நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளிலிருந்து முற்போக்கானதென்றும் பயன் மிக்கதென்றும் இதை ஐயமில்லாமல் சொல்ல முடியும்.

ஆனால் அனைத்து தளங்களிலும் அல்ல. இதை ஒரு விவாதக்குறிப்பாகவே முன் வைக்கிறேன். கற்றுக் கொள்ளும் இடங்களில் இந்த ஆதிக்கஎதிர்ப்புமனநிலை என்பது பலசமயம் எதிர்மறை இறுக்கத்தை அளிக்கிறது. ஏற்றுக்கொள்வதற்கு எதிரான வீம்பாக மாறுகிறது. புதியவை உள்ளே வருவதைத் தடுக்கும் ஆணவத்தின் கோட்டை என ஆகிவிடுகிறது.

தந்தையிடம், நிறுவனம்சார்ந்த ஆசிரியரிடம், மேலதிகாரியிடம், மூத்தவரிடம் அதிகாரத்திலோ ஆளுமையிலோ முற்றிலும் நிகரென்று நிற்கலாம். அவர்கள் நம் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை முழுமையாகவே நம் ஆளுமை கொண்டு எதிர்க்கலாம். அது விடுதலையளிக்கும். ஆனால் அதே எதிர்ப்பு நம்மை உடைத்து வார்க்கும் வாய்ப்புள்ள, நமக்கு முற்றிலும்புதிய ஒன்றைக் கற்பிக்கும் வழிகாட்டியான ஆசிரியனிடம் செலுத்தப்படும் என்றால் அங்கு கல்வி மறுப்பே நிகழும்.

கல்லூரியில் என்னுடைய பேராசிரியர்களிடம் நான் தலைவணங்கியதில்லை. ஆனால் என் குருநாதர்களிடம் தலைவணங்கவே செய்தேன். நித்ய சைதன்ய யதியிடம் முழுதாகப் பணிந்தேன். அதன்மூலம் பயன் பெற்றேன் என்றே சொல்வேன். எனது ஆணவத்தை அவர்கள் முன்னால் திறந்து வைத்தேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை அவர்கள் உடைக்கவும் அவர்கள் என்னுள் புகவும் நான் அனுமதித்தேன். அது எனக்கு இறப்புக்கு நிகரான அனுபவமாக இருந்தாலும் அதனூடாகவே நான் என் இளமையின் அறியாமை எனக்களித்த ஆணவத்திலிருந்து வெளியே வந்தேன்.

இதற்குக் காரணம், சிந்தனையைத்தான் நூல்கள் அளிக்கமுடியும் சிந்திப்பதை ஆசிரியர்களே கற்பிக்கமுடியும் என்பதுதான். நம் எண்ணங்களை தர்க்கபூர்வமாக மாற்றுபவன் முதன்மை ஆசிரியன் அல்ல. தன் ஒட்டுமொத்த ஆளுமையையே நம் மீது பதிப்பதன்மூலம் நம்மை உடைத்து உருமாற்றி வார்ப்பவனே முதன்மையாசிரியன். குரு என்னும் சொல்லால் அதை குறிக்கலாம். அவன் எங்கே எப்படி நம்மை பாதிக்கிறான் என நாம் எளிதில் அறியமுடியாது. நம் உலகநோக்கை, சிந்தனைமுறையை நம்மையறியாமலேயே அவன் மாற்றுகிறான்.

இது ஒரு நுட்பமான குறியீட்டுத் தொடர்பு என்றே என் அனுபவத்திலிருந்து எனக்குத் தோன்றுகிறது. ஆசிரியனுடனான நம் உறவில் நாம் அவனை மெல்லமெல்ல ஓர் அடையாளமாக ஆக்கிக்கொள்கிறோம். அவன் சொல்லாதவற்றையும் அவனிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். அந்த நுட்பமான தொடர்புறுத்தலுக்கு தடையாக இருப்பது எப்போதும் தர்க்கபுத்தியை தீட்டி முன்வைத்திருப்பது, தன்னை முன்வைத்து எதிர்த்துக்கொண்டே இருப்பது

நம்மீது கருத்தியலாதிக்கத்தை செலுத்த எவரையுமே அனுமதிக்காத இறுக்கத்தை நாம் கொண்டோமென்றால் நாம் எங்கு நிற்கிறோமோ அங்கேயே இறுதி வரை நின்று கொண்டிருப்போம். நம்முள் எந்த புதுக்கருத்தும் உள்ளே வரவும் முளைத்து மேலெழவும் அனுமதிக்காமலிருப்போம்.

நம்மை முழுமையாக பிறருடைய கருத்துக்களுக்கு விட்டுக் கொடுத்து ஒரு கால்பந்தாட்டத்தின் பந்து போலாவது எவ்வளவு அசட்டுத்தனமானதோ அதற்கிணையாகவே இரும்புத்தூணென நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும் உறுதியும் அபாயகரமானது. அறிவுத்துறைகளிலோ கல்விநிலையங்களிலோ நிலவும் வெறும் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லை. உண்மையிலேயே நமது தேடலைத் தொட்டு நமது ஆழ்தளங்களை விரியச்செய்யும் ஆசிரியனிடம் நாம் அதே வெற்றாணவத்தைக் காட்டக்கூடுமா என்பதைப்பற்றி மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன்.

இது பெரும்பாலும் தனிப்பட்ட தெரிவென்பதை மறுக்கவில்லை. தன் ஆளுமையாகவே தன்முனைப்பையும் கட்டமைத்து வைத்திருப்பவர்களிடம் இச்சொற்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை.ஒருவர் தன் குருவை தானேதான் தெரிவுசெய்துகொள்ளவேண்டும். முதன்மையாசிரியர்களை, குருநாதர்களை, அணுகும் வழி என்று மட்டுமே இதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். உதாரணமாக நான் நடத்தும் நவீன இலக்கிய விவாதங்களில் தன்னிலையைப் பேணிக்கொள்ளும் ஒருவர் நல்ல பங்களிப்பை ஆற்றமுடியும். ஆனால் சுவாமி வியாசப்பிரசாத் போன்ற குருநாதர்களிடம் அந்தமனநிலையுடன் அணுகினால் வெறும் ஆணவமே எஞ்சும்.நான் சுட்டிக்காட்ட விரும்புவது இந்த வேறுபாட்டையே.

சமூக வலைதளங்களைப்பார்க்கையில் இந்த தலைமுறையின் மிகப்பெரும்பாலானவர்கள் தங்கள் இளமையின் அறியாமை அளிக்கும் வெற்றாணவத்தை கடந்து செல்லும் ஓர் ஆளுமையைக் கூட எதிர்கொண்டதில்லையென்றும் அல்லது எதிர்கொண்டாலும் அவர்களை அவர்கள் தங்கள் மேல் அனுமதிப்பதில்லையென்றும்தான் தோன்றுகிறது. எத்தகைய தகுதி கொண்டவரையும் தனக்கு நிகரெனக் கருதி அவர்கள் சொல்லாடுகிறார்கள். ஆகவே அவர்களிடமிருந்து ஒரு சொல்லைக்கூடப் பெற்றுக்கொள்வதில்லை. மிகப்பெரிய இழப்பு இது. ஆனால் அவர்கள் அந்த எல்லையைக் கடந்து உண்மையான அறிதலை அடையாதவரை தாங்கள் இழப்பது என்ன என்று அறியாமலேயே இருப்பார்கள். தாங்கள் உறுதியான தன்னிலையுடன் தன்மதிப்புடன் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்.

அனைத்து புதிய கருத்துக்களையும் முன்னரே அறிந்தவற்றைக் கொண்டு எதிர்கொள்வது, தன்னை ஒரு பீடத்தில்வைத்துக்கொண்டு பிறவற்றைக் கிண்டல் செய்வது, புறக்கணிப்பது ஆகியவற்றைச் செய்பவர்கள் எங்கே தொடங்குகிறார்களோ அங்கிருந்து ஒருகணமும் முன்னகர முடியவில்லை என்பதைக் கானலாம். பத்தாண்டுகளாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை எதிர்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன் எங்கு தொடங்கினாரோ அதே அறிவுத்தளத்தில் நின்றிருக்கிறார் என்றால் மிகப்பயனற்ற ஒரு செயலை பத்தாண்டுகளாக அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று தான் பொருள்.

இன்றைய முதலீட்டிய உலகில் பிற அனைத்து துறைகளிலும் சுதந்திரம், தனித்துவம், வணங்காமை, தன்முனைப்பு ஆகியவை ஒருவகைப் பண்புகளாகவே நிலைகொள்கின்றன. கற்றுக்கொள்ளும் இடத்தில் மட்டும் உரிய இடத்தில் வணங்குதலும் உரிய முறையில் பணிதலும் அங்கே அவசியமானவை என்று தோன்றுகிறது. நாம் நமது வணக்கத்தின் மூலம், பணிதலின் மூலம் நாம் நம்து எல்லையைக் காணமுடியும். நமது பலவீனங்களையும் குறை பாடுகளையும் அளந்து அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அதன்பின்னரே நம்மை நாமே உடைத்து மறுவார்ப்பு செய்ய முடியும்.

நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. அதனூடாகவே வெளியிலிருந்து வரும் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் நம்முள் இடமளிக்க முடியும். அவற்றை நம்முள் நாமே வளர்த்து எடுக்க முடியும் அதனூடாக நாம் வளர்ந்து நாம் பணிந்தவர்களையும் வணங்கியவர்களையும் உண்மையிலேயே நிகரெனக்காணும் இடத்தை அடைய முடியும். கடந்து செல்லவும் கூடும்.

பிற உறவுகளிலிருந்து இவ்வுறவு வேறுபட்டது. பிற சமூக உறவுகள் அனைத்திலும் சற்றேனும் பொருளியல்சூழலின் கட்டாயங்கள் கலந்துள்ளன. அவை காலந்தோறும் நுணுக்கமான மாற்றங்களையும் அடைகின்றன. நிலப்பிரபுத்துவ காலகட்டக் காதலும் முதலீட்டியக் காலகட்டக் காதலும் வேறுபட்டவை. ஆனால் ஆசிரிய மாணவ உறவு எப்போதுமே காலாதீதமானது.

***

முந்தைய கட்டுரைஅ.மி
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன் அஞ்சலிக்கூட்டம்