அன்புள்ள ஜெ,
ராஜா எழுதிவரும் பொய்ப்பித்தல்வாதம் Vs. பேய்சியன் வாதம் கட்டுரைத்தொடர் மிகவும் முக்கியமானது. நம் குழுமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு இவ்விவாதத்தை தொடங்கியபோது ஆர்வத்துடன் இரண்டொரு பதிவுகளை இட்டுவிட்டு வழக்கம்போல் காணாமல் போய்விட்டேன். அக்காலத்தில்தான் என் பல்கலையில் அறிவியலின் தத்துவத்தை மையமாகக் கொண்டு ஒரு சிறிய பாடத்திட்டத்தை முன்னெடுத்திருந்தேன். எழுத்தாளர்களுக்கு அறிவியலின் மைய தத்துவம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது மோசமில்லை. ஆனால், மிகப் பெரும்பாண்மையான, அறிவியலாளர்களுக்கே அது தெரியாது என்பதுதான் நகைமுரண். கார்ல் பாப்பர் பெயரே தெரியாதவர்கள் எல்லாம் மிகப்பெரிய அறிவியலாளர்களாக பெயர் பெற்றுள்ளார்கள். கருதுகோள், எதிர்கருதுகோள் என்பனவற்றை ஏன் வரையறை செய்கிறோம், அதில் எதிர்கருதுகோளை ஏன் மறுதலிக்க முயல்கிறோம் என்ற எந்தப் புரிதலுமில்லாமல் அவற்றை இயந்திரத்தனமாக அமைப்பவர்களே இன்றைய அறிவியலாளர்கள். ஆகவேதான் நான் அறிவியலின் தத்துவத்தை இளம் மாணவர்களுக்கு விளக்கி பாடம் நடத்துகிறேன். என் துறையான நோய்ப்பரவியல் (Epidemiology) துறையானது, பொது சுகாதார கோட்பாடுகளை உருவாக்குவதிலும், சான்று சார்ந்த மருத்துவத்திலும் பெரும்பங்கு ஆற்றுகிறது. அதில் பொய்ப்பித்தல்வாதமும், பேய்சியன் வாதமும் மிக முக்கியமானவைகளாகும். ஆகவே ராஜாவின் கட்டுரை எனக்கு மிகவும் முக்கியம்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் “சிரிக்கத்தெரிந்த மார்க்சிய அறிஞர்” மறைந்த சோதிப்பிரகாசம் கார்ல் பாப்பரின் வெங்காயம் என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். கார்ல் பாப்பர் பொய்ப்பித்தலுக்கு மார்க்சியம் உடன்பட மறுப்பதால் அது அறிவியல் அல்ல என்று சொல்லியிருப்பதால் அதை மறுத்து சோதிப்பிரகாசம் அக்கட்டுரைத்தொடரை எழுதினார் என்று ஞாபகம். பூர்ண சந்திரன் அவர்க்ளும் அறிவியலின் தத்துவம் என்று தமிழில் எழுதியிருக்கிறார். ஆனால், ராஜா எழுதிவருவது அவை எல்லாவற்றையும் விட, மிக முக்கியமாக அறிவியலின் தத்துவம் வளர்ந்த விதத்தை ஒரு பருந்துப்பார்வையில் விளக்குவதாகும்.
தங்கவேல்
அன்புள்ள தங்கவேல்,
அது நான் கார்ல் பாப்பரை கண்டுகொண்ட ஆண்டு. கார்ல் பாப்பரின் அறிவியல்நெறிகளின்படி மார்க்ஸியத்தை அறிவியல் என்று சொல்லமுடியாது, அப்படிச் சொல்லலாம் என்றால் வேதாந்தமும் அறிவியலே என ஒரு கட்டுரையில் எழுதினேன். ஏன் மார்க்ஸியம் அறிவியலல்ல என்று விளக்கினேன். சோதிப்பிரகாசம் அதற்கு எழுதிய நீண்ட பதில்தான் கார்ல் பாப்பரின் வெங்காயம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் கார்ல் பாப்பரை வாசிக்கவில்லை. அது முதலாளித்துவ அறிவியல் என்று நிராகரித்துவிட்டார். மார்க்ஸியம் அறிவியலை எப்படி வரையறுக்கிறதோ அதன்படி மார்க்ஸியம் ஒர் அறிவியல் என்பதே அவருடைய அந்த விளக்கத்தின் சாரமாக இருந்தது.
ஜெ