தஞ்சைச் சந்திப்பு -கடிதம்

yamunai

 

தஞ்சை சந்திப்பு மறக்க முடியாத நிகழ்வாக, முன்பே கூறியது போல ‘நல்ல திறப்பாக’ அமைந்தது. சில தீவிர வாசகர்களின் அறிமுகமும் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.

அங்கு வருவதற்கு முந்தைய இரண்டு நாட்களாக தூங்காமல் இருந்தேன். போதாதற்கு இரவு ரயில் பயணம் வேறு. அந்த அளவிற்கு விழிப்புடன் நிகழ்வு முழுக்க இருந்தது பெரிய ஆச்சரியம்தான். புகைப்படத்தில் பார்த்தால் யாரோ போல இருக்கிறேன். .

சந்திப்பிற்கு வர  ஒரே காரணம் தான் இருந்தது. தீவிரமாக இயங்குபவர்களை எனக்கு பிடிக்கும். அவர்களுடன் இருக்கவும், உரையாடவும், அவர்கள் பேசுவதைக்கேட்கவும் என்றுமே சலிப்பதில்லை. உங்கள் புனைவு, அபுனைவு, மொழிப்பெயர்ப்புகள், திரையில் பணியாற்றுவது என்பதனையெல்லாம் தாண்டி அந்தத் ‘தீவிரம்’ எனக்கு பிடிக்கும். நகைச்சுவையாக நீங்கள் குறிப்பிட்ட கேரள screw loose ஆளுமைகள் என்னைப்பெரிதும் கவர்ந்தனர்.

கடைசியாக தமிழில் வாசித்த ஒரு கோட்பாட்டு புத்தகம் மிகுந்த தலைவலியினையும் மனச்சோர்வினையும் தந்ததால் ஆங்கில அபுனைவு நூற்களையே வாசித்து வந்தேன். சந்திப்பு முடிந்தும் தான் புனைவுகள் வாசிப்பதற்கான ஒரு மனநிலை உருவானது. Saul Bellow எழுதிய Herzog, Nikos Kazantzakis எழுதிய The last temptation இப்போது கைகளில். வாசிப்பதற்கே படைப்பூக்க மனநிலை தேவைப்படுகிறது.

உங்களிடம் கோட்பாடுகள் குறித்து இவ்வளவு விரிவான பதிலை எதிர்பார்க்கவில்லை. நாவல், சிறுகதை, கவிதை, சினிமா, வரலாறு, அரசியல், ஆளுமைகள் குறித்த உங்கள் தரப்பு பல்வேறு புதிய விடயங்களைக் கற்றுக்கொடுத்ததுடன் ஏற்கனவே கொண்டிருந்த பார்வைகளைக் கூர்மைப்படுத்தியது.

அதேபோல நகைச்சுவைகளைக் கூறி அடுத்தவர்களை சிரிக்கவைத்து தானும் சப்தமாகச் சிரித்து அதகளம் பண்ணிவிட்டீர்கள்.

எனது ஆய்வு குறித்து உங்களிடம் கூறத்தயங்கிக்கொண்டிருந்தேன். அது எவ்வளவு தவறு என்பது அதனைக் குறித்து நீங்கள் பேசியபின்பே உணர்ந்தேன். And yes, totally unexpected. அப்படியொரு கோணத்தில் நான் அணுகவேயில்லை. அதற்கு தனியாக எனது நன்றிகள். மேலும் தமிழகத்தில் செய்யப்படும் ஆய்வுகள், பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்கள், மாணவர்களின் நிலை & எப்படி போட்டித்தேர்வுகள் கற்பனைத்திறனற்ற மாணவர்களை உருவாக்கிவருகிறது என்பது பற்றியும் உங்கள் வருத்தத்தைக் கூறினீர்கள். ஒரு ஆய்வு மாணவனாகவும் தீவிர இலக்கிய வாசகனாகவும் சந்திப்பை முழுமையாக அனுபவித்தேன். சில நேரங்களில் கேள்வி தோன்றியும் கேட்காமல் இருந்தேன். அதற்கு வேறொரு வடிவத்தில் பதில் கிடைத்துக்கொண்டே இருந்ததுதான் காரணம்.

உரையாடலில் முக்கியமாக நான் எடுத்துக்கொண்டது இதனைத்தான். ஒரு படைப்பினை படிக்கும்போது, குறைந்தபட்சம் அந்தப்படைப்பின் வரலாற்றுப் பின்னணி (உதாரணங்களாக மீஸான் கற்கள், பொலானோவின் 2666, டிராகுலா திரைப்படம்), அது முன்னிறுத்தும் கேள்விகள் என அப்பிரதியினை முழுமையாக உள்வாங்க வேண்டுமென்பதே. ஏற்கனவே அப்படித்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்றாலும் அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது. அவ்வாறு ஒரு படைப்பினை ஆழமாகவும் அதன் பின்னணியோடு உணர்ந்து வாசிக்கும் வாசகர்களுடனே தொடர்ந்து உரையாட எனக்கு விருப்பம். அப்படி சில வாசகர்களை தஞ்சை சந்திப்பு அறிமுகப்படுத்தியது. அவர்களில் சிலருடன் ஏற்கனவே உரையாடல் தொடங்கிவிட்டது.

நிறைய கேள்விகள் இருந்தாலும் அனைத்தையும் கேட்கமுடியவில்லை. கேள்விகள் என்பது எப்போதுமே தீராத ஒன்றுதான் போலும்.

நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றி.

இப்போதைக்கு வாசிக்க வேண்டும். தொடர்ந்து உரையாட விருப்பம்.

யமுனைச் செல்வன்

திருநெல்வேலி

 

அன்புள்ள யமுனைச்செல்வன்

தமிழ் கோட்பாட்டு எழுத்துக்களின் சிக்கல் என்னவென்றால் அவர்கள் பாடப்புத்தக எழுத்தாளர்கள் என்பதுதான். அவர்களால் நாம் நம் பொதுவான வாசிப்பு மற்றும் கற்பனையைக்கொண்டு சென்றடையும் தொலைவிற்கு மிகமிகப்பின்னால்தான் தங்கள் கோட்பாடுகளுடன் நிற்கமுடிகிறது. காரணம் அவர்கள் எதையும் புரிந்து வாசித்தவர்களோ சிந்தித்ததை எழுதுபவர்களோ அல்ல என்பதே

உண்மையில் பலர் சொல்வதுபோல அவர்கள் மொழிப்போதாமை கொண்டவர்கள் அல்ல. மொழிப்போதாமை எனத் தெரிவது சிந்தனைப்போதாமைதான். ஏனென்றால் சிந்திப்பவர்களுக்கு இயல்பாகவே மொழி அமையும். அவை வேறுவேறல்ல. கோட்பாடுகளை ஆங்கிலத்தில் வாசிப்பதே நல்லது. இது பட்டறிவு, நொந்தறிவும்கூட. அனைத்துச் சிந்தனையாளர்களுக்கும் சுருக்கமான எளிமையான அழகான வழிகாட்டிநூல்கள், தொகைநூல்கள் உள்ளன. உங்கள் நோக்கம் எதிர்காலக் கோட்பாட்டாளராக ஆவதல்ல என்றால் அவையே போதுமானவை.

இணையக்காலகட்டத்திற்கு முன் தகவல்களை அளிப்பவர்கள் என்னும் இடம் அவர்களுக்கு இருந்தது. அவ்வகையில் அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. இன்று வாசகர்களிலேயே பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் வழி தமிழிலக்கியத்திற்கு வருபவர்கள், இணையத்தில் வாழ்பவர்கள். அவர்களின் இடம் இன்று சுருங்கிவிட்டது

இச்சந்திப்புகளின் முக்கியமான நோக்கம் அங்குவரும் இளைஞர்கள் தங்களுக்குள்ளும் பேசிக்கொள்ளவேண்டும் என்பதே.

 

மீண்டும் சந்திப்போம்.

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
அடுத்த கட்டுரை‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 4 – இளையராஜா