பேருந்துகள்

bus1

அன்புள்ள ஜெ

நான் தங்கள் தளத்தின் ஒரு தொடர் வாசகன், ஒரு எழுத்தாளனாகும் சிறுவயது ஆசை தந்த தைரியத்திலும், எது வேண்டுமானாலும் எழுதினால் பிரசுரிக்க முடியும் என்ற வசதியினாலும் வலைப்பக்கம் துவங்கி சில கிறுக்கல்களை வலையேற்றி ப்ளாக்கில ப்ளாப் ஆகி ஒரு நேரத்தில் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தபின் ‘இன்னும் நாமல்லாம் வளரணும் தம்பி’ என்று எழுதுவதை நிறுத்தியவன்.

எழுதுவதை நிறுத்திய பின் கைஅரிப்பு தாங்காமல் பல நேரங்களில் தங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்து கடைசி நேரத்தில் வாலை சுருட்டிக்கொண்டதுண்டு. தங்கள் தளத்திலுள்ள எல்லா பயணக்கட்டுரைகளையும் தேடித்தேடி வாசிப்பதில் ஒரு அலாதி பிரியம் மற்றும் தங்கள் உடன் எல்லா பயணங்களிலும் பயணிக்கும் கிருஷ்ணன் மேல் ஒரு சிறு பொறாமை கூட உண்டு.    நான் துபாயில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரணமானவன்,  இளமையில் கஷ்டத்தில் வளர்ந்து, கடனுடன் வாழ்ந்து, ஒரு வழியாய் படிப்பை முடித்து இப்போது குறை ஒன்றும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்.  நான் ஓய்வு பெற்று இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் கழிந்து உங்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையும் மனதில் உண்டு.  மேலதிகமாய் எனக்கும் நாகர்கோவில் தான், ஊருக்கு வரும்போது உங்களை வந்து சந்திக்க மனம் விளையும், ஆனால் தைரியம் வராது.

நிற்க, தங்கள் பயணக்கட்டுரைகளில் டில்லி பஸ்களை பற்றியும் பிற வடக்கத்திய மாநில பஸ் வசதியின்மை பற்றியும் நிறைய எழுதியிருக்கிறீர்கள், சமீபத்திய பயணத்திலும் நெல்லை வரை பஸ் பயணம் என்று வாசித்ததால் இந்த கேள்வி.  தற்போதைய நம் தகரடப்பா பஸ்களை பார்க்கும் போது என்ன தோன்றுகிறது, தற்போதைய நெல்லை பஸ்களில் சமீபத்தில் பயணித்த என் அனுபவம் மிக கொடுமையானது,  கழிந்த 6 அல்லது 7 ஆண்டுகளாய் தமிழ்நாட்டில் பஸ்களை பராமரிப்பதே இல்லை என நினைக்கிறேன், இதைப்பற்றிய தங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

அன்புடன்

மணிகண்டன், துபாய்.

***

அன்புள்ள மணிகண்டன்,

சமீபத்தில் நான் நெல்லை செல்ல SETC பேருந்தில் ஏறினேன். நாகர்கோயில் முதல் நெல்லைவரை 60 கிமி. சென்று சேர 2.15  மணிநேரம் ஆகியது. நான் தூங்கிவிட்டமையால் தெரியவில்லை. அதேநேரத்தில் மதுரையைக் கடந்த சக்திகிருஷ்ணனும் கோஷ்டியும் இருநூறு கிமீ தொலைவைக் கடந்து அதேநேரத்தில் வந்துசேர்ந்தனர். நாகர்கோயிலில் இருந்து 600 கிமி தொலைவில் உள்ள சென்னையை தனியார் வண்டிகள் 9 மணிநேரத்தில் சென்றடைகின்றன. அரசு வண்டிகளுக்கு 14  மணிநேரம்.

நடத்துநர் என் அண்ணாவின் தோழர். ஆகவே  என்ன நிகழ்கிறதென்று கேட்டேன். சென்ற பத்தாண்டுகளாகாவே  அரசுப்பேருந்து நிர்வாகம் உச்சகட்ட ஊழலில் அராஜகத்தில் சிக்கியிருக்கிறது. பேருந்துக்கொள்முதல் முதல் உதிரிபாகங்கள் கொள்முதல்வரை ஊழல் என்பது 70 சதவீதத்துக்கும் மேல். சமீபத்தில் அரசு வாங்கிய தாழ்தளப்பேருந்துகளைப் பார்த்தீர்கள் என்றாலே தெரியும் ஆறுமாதங்களில் அவை டப்பாபோல ஆயின.

உதிரிபாகங்கள் மாற்றுவது மற்றும் பழுதுபார்ப்பதில் இத்தனை சிக்கல் இருப்பதனால் வண்டிகளை மிக மெதுவாக ஓட்டும்படி ஆணை. ஆகவே சிறந்த சாலை இருந்தால்கூட 60 கிமீ வேகத்தைத் தொடுவதில்லை.  “வேகமாக ஓட்டாமலிருப்பது நல்லது சார்” என்றார் நண்பர்

ஊழல் பொறுப்பின்மை ஆகியவற்றின் மீது மக்கள் அதிருப்தி கொண்டால், அது தேர்தல்களில் எதிரொலித்தால் மட்டுமே நிலைமை சீரடையும். மக்கள் காசுக்கு வாக்களித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். காசை வேறெங்கே தேற்றுவார்கள்?

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
அடுத்த கட்டுரைஈரோடு சந்திப்பு, சுபவீ, லிங்கம்- கடிதங்கள்