முழுதுறக்காணுதல் – கடலூர் சீனு

senu

இனிய ஜெயம்,

சிலநாட்கள் விடுமுறையில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த காரைக்குடி பிரபு எங்கேனும் ஒரு இந்தியப் பயணம் போகலாமா, என்றார். மனமெல்லாம் அப்போது கிராதத்தின் அர்ஜுனன் பயணத்திலேயே உழன்றுகொண்டு இருந்தது. கேதார்நாத் போகலாம் என்றேன். அங்கே இப்போது மைனஸ் பத்து சீதோஷ்ணத்தில் உறைபனி மேல் வெண்பனி மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பிரபு அங்கே உறைபனியில் ஊர் சுற்றி அனுபவம் கண்டவர். போகலாம் என்றார். சிவாத்மா தொடர்வண்டி பதிவு செய்தார். இணையத்தில் அங்குள்ள தட்பவெப்பம் சரி பார்த்தார். பேஸ்தடித்த முகத்துடன் ”அங்க இப்போ எப்டி இருக்கும் தெரிமா?” என்றார். ”அதப் பாக்கத்தான் போகப்போறோம் ” என்றேன். மகா சிவராத்திரி அன்று ராணுவம் மற்றும் உள்ளூர் உழவாரப்பணி மக்கள் இணைந்து கேதார்நாத் கோவிலுக்கு சென்றதாக ஈ டிவி செய்திக்குறிப்பு ஒன்று கண்டேன். ஏதேனும் வழி இருக்கும். அல்லது எவ்வளவு தூரம் வரை கிராத நாத பர்வதம் நோக்கி செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று திரும்புவது என நானும் பிரபுவும் முடிவு செய்தோம். கிளம்பினோம்.

எட்டாம் தேதி மென்னிருள் காலையில் கிருஷ்ணா நதி கடந்தோம். மேற்கு, கிழக்கு, விந்திய மலைத்தொடர்களால் சூழப்பட்ட தண்டகாரண்யம் நுழைந்தோம். மனம் இயல்பாக இங்குதான் எங்கோ, சண்டன் நின்று நடந்து திசைவென்ற அர்ஜுனன் புகழ் பாடி தாண்டவம் ஆடினான் என நினைத்துக் கொண்டேன். பிரபுவிடம் பகிர்ந்து கொண்டேன். இது பிரபுவின் முதல் இந்தியப் பயணம். சற்றே பிளந்த வாயுடன் பெட்டி வாசலில் நின்று, பின்வாங்கி விரையும் தண்டகாரண்யக் காட்டை நோக்கிக்கொண்டு இருந்தார். சட்டென மனதுக்குள் அஜிதனின் அண்மை தேடி ஏக்கம் எழுந்தது. சென்ற வருடம் இதே பின்பனிக் கால பயணத்தில் இதே நிலத்தில் ப்ளாக் பக் மான்கள் குறித்து சொல்லித்தந்தான். ஒரு எல்லையில் துள்ளி ஓடிய அந்த மான்கூட்டம் கண்டு இருவருமே எஈ ஏஏ என விநோதமாகக் கூவியபடி தோளணைத்து இருக்கிக்கொண்டோம். நேற்றைய பொழுது கண்ணோடு…. இனிய ஆயாசம் அழுத்த இருக்கைக்கு திரும்பினேன். எதிரில் ஒரு வடக்கத்தி யுவதி. வலது கையில் சாத்துக்குடி வைத்திருந்தாள். இடதுகையில் வாழைப்பழத்தை தின்றுகொண்டிருந்தாள். ஒட்டிய உடையில் லஜ்ஜா கௌரி நிலையில் அமர்ந்திருந்தாள்.

பின் மாலை ஒளி ஏந்தி சரிந்து கிடந்தது வெளியே சம்பல் பள்ளத்தாக்கு. ராய் மாக்சிம் உப்பு வேலி தேடி அவரது தோழி பூலாந்தேவி யுடன் அலைந்த நிலம். சிறிய வயதில் பூந்தளிர் இதழில், இன்ஸ்பெக்டர் ஆசாத் இந்த நிலத்தில்தான் ஓடி ஓடி கொள்ளையர்களை சுட்டு தள்ளுவார். ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல் ஒன்று இந்த பள்ளத்தாக்கின் கொள்ளையர்கள் குறித்து என்றொரு மெல்லிய நினைவு. பல்லாயிரம் ஹெக்டேர் பொன்வண்ண சரிவு. மண்புழுவாக தொடர்வண்டி. அதனுள் சிற்றுயிர்கள். நிலம் இருண்டு அணையும் வரை வாசலிலேயே நின்றிருந்தோம்.

ஒன்பதாம் தேதி அதிகாலை டோஹிவாலா எனும் நிலையித்தில் வண்டி நின்றிருந்தது. பிளாட்பாரத்தில் இறங்கி நின்றோம். நான் பார்த்த புலர்வுகளில் தலையாயது இதுவே. எதிரே ரோஜா வண்ண, செர்ரி பிளாசம் மரச் செறிவு, உள்ளே இறங்கி வியாபித்து நிற்கும் பனி வலை. அதில் சாய் கோணத்தில் வந்து விழும் சூர்யக் கதிர்கள். மெல்லிய குளிர் ஆவி எழும் நீர் ஒழுக்கில், பொன்வண்ண தளதளப்பு. அங்க பாருங்க. தோளை தட்டி பிரபு திருப்பினார். பொன்னார் மேனியனின் மகத்தான கருணை. கரு நீல மலைத்தொடர்கள் பின்னே, தலையில் வெண் பனி அட்சதை தூவிய மலைத்தொடர்கள், பின்னே நிரந்தர மின்னல் விழுந்து கிடக்கும் மலைத்தொடர்கள் பின்னே, மிக மிக உயரத்தில், மானுடக் கீழ்மைகள் அண்டா உயரத்தில் ஒரு பனி முடி சிகரம். உதய ஒளி ஏந்தி. பொன்னே போல் சுடரும் சிகரம். புல்லுக்கும் புழுவுக்கும் உயிர்த் தொகுதி முழுமைக்குமான தங்க ஆசி. தூய்மை தூய்மை தூய்மை. பிரிதொன்றில்லா பரிசுத்தம். வருகிறேன் இதோ வருகிறேன் உன் காலடி தேடி வருகிறேன். ஒரே கணம் சூழல் மொத்தமும் மாறி மேகம் கவிந்து ஒளி அணைந்தது. தொடர்வண்டி குலுங்கி இழுத்து கிளம்பியது.ஓடிப் போய் ஏறிக்கொண்டோம். உண்மைதானா? உண்மைதானா, மன்னும் இமயமலை எங்கள் மாலையே எனும் சொல்லை நிகர்வாழ்வில் பார்த்துவிட்டேனா? இதயம் ஏங்கி கண்கள் தளும்பியது. திரும்பத் திரும்ப தேடிப் பார்த்தேன். நீலன் வண்ண மேகமுழுமையன்றி அங்கே ஏதும் இல்லை.

டேஹ்ராடூன் இறங்கி, [சாலிம் அலி தனது காதல் மனைவியோடும் காதலுக்குரிய பறவைகளோடும் வாழ்ந்த நிலம்] விசாரித்தோம், சீசன் இல்லை என்பதால் ருத்ரப்ரயாக் வரை ஒரே ஒரு பேருந்து காலை ஏழு மணிக்கு. இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே. அது மட்டுமே. தேடி உள்ளூர் மக்கள் பயணிக்கும் பகிர்ந்து பயணிக்கும் ஜீப் ஒன்றினில் ருத்ரப் பிரயாக் நோக்கி உயர்ந்தோம். புறவழி கொண்டு நகரங்களை தவிர்த்து, கூந்தல் அழகி சமநிலம் புகும் இமயக் கணவாயை அடைந்தது ஜீப். முதல் மலைத்தொடரின் வாயிலை தொட்டதுமே குளிர் காதைகிழித்தது. எதிர் சீட் அன்னையின் கைக் குழந்தை அவரது முலைக்குவைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டது. மூன்றாவது திருப்பத்தில் ஐம்பது அடிக்கு கீழே படுக்கப்போட்ட அருவியாக கொந்தளித்து விரைந்து கொண்டிருந்தாள் கங்கை. பச்சை வண்ண மேனி, ஹாங்காரம் கொண்டு விரையும் கல்லோலக் கோலம். நான்காவது திருப்பத்தில் நீலன் இறங்கிக் கவிந்தான். கீழே விரையும் கங்கை மழையாகி எங்கள் மேல் பொழிந்தாள். மழையும் புயலும் கலக்க சுழலும் கடலில் தத்தளிக்கும் மரக்கலம் போல எங்கள் ஜீப் எனக்கு அலைகழிவதாகவே உணர்வைத் தந்தது. ஆனால் உண்மையில் வெளியே அத்தனை வளைவுகள் வழியே ஜீப் இமயமலை தொடரில் உயர்ந்துகொண்டே இருந்தது. மாலை நான்கு மணிக்கு ஜீப். ருத்ரப் பிரயாகையை அடைய ஓடிச் சென்று காத்திருந்த குப்தகாசி பகிர் பயண வேனில் ஏறிக் கொண்டோம்.

குப்தகாசி இறங்கினோம். மாலை ஆறு மணி. பூஜ்யக்குளிர். வசீகர இருள். மொத்த நகரும் அடைந்து உள்ளே எங்கோ ஒடுங்கி கரைந்து காணாமல் போய் இருந்தது. மொத்த நகரின் ஒவ்வொரு பொருளும் பனிப் பாவை போல குளிர்ந்து உறைந்து நின்றது. சூழச் சூழ பனிக்கொண்டல். உண்மையில் அங்கே பனிமலையை கண்டேனா என்ன? அருகிலிருந்து யாரோ அழைக்க திரும்பிப் பார்த்தோம். நமது நண்பர் யோகா ஆசிரியர் சௌந்தர் தோற்றத்தில் ஒரு நண்பர், அவரது மகனுடன் நின்றிருந்தார். எங்களுக்கு புரியும் மழலை ஹிந்தியில் ” நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி கேதார் நாத் அப்டின்னு பேசறது கேட்டேன் நீங்க யார் எங்க போறீங்க ” என விசாரித்தார். சொன்னோம் வியப்பால் அவர் விழிகள் விரிய, சற்று நேரம் அமைதி ஆனார்.

” இப்போ கேதார்நாத் பாக்க முடியாது. மே கடைசி வாரம்தான் பாதை திறக்கும். இப்போ மூலவர் இங்கிருந்து பத்து கிலோமீட்டர் மேலே உக்கி மடம் என்னும் மடத்தில் இருக்கும்.அங்க போனா மூலவர பாக்கலாம். உக்கி மடத்திலிருந்து உழவாரப் பணியாளர்கள் மிலிட்டரி உதவியுடன்தான் மூலவரை கோவிலுக்கு கொண்டு போவார்கள். தனியே யாரும் அங்கே போக அனுமதி கிடைக்காது. இது பனி உருகும் காலம். அந்த மலை பனி உங்கள் மேல் விழுந்தால். உங்கள் ரத்தம் உறைந்து போகும்” என்றார். சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தார். நான் பித்தன் போல ”கேதார் நாத் கிட்ட போகணும். பனி மலையை பாக்கணும்” என்றேன்.

”மகா சிவன் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும். ஒண்ணு செய்றேன்.என் கூட வாங்க.. பட்டா அதுதான் என் கிராமம் பன்னிரெண்டு கிலோமீட்டர்ல இருக்கு.முதல்ல ஒரு அறைக்குள்ள போய் ஒடுங்குங்க. கடைல சப்பாத்தி தயார் பண்ண சொல்றேன். இனிமே குளிர் மைனஸ்ல போகும். காலைல எழுந்து என்ன பன்னனும்ம்னு யோசிச்சி அதை பண்ணுங்க” அவரே அவரது கிராமத்தில் இருந்து ஒரு வாகனத்தை வரவழைத்து எங்களையும் ஏற்றிக் கொண்டார். அவர்தான் கேதார் நாத் கோவில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவர். வீர் ஷிவ் திவாரி அவரது பெயர். மொபைல் எடுத்து படங்களை காட்டினார் அவரிடமிருந்து பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி, கர்ணம் மல்லேஸ்வரி என முக்கியஸ்தர்கள் பிரசாத தட்டு வாங்கிக் கொண்டிருந்தனர். மொத்தம் பத்தே அடி அகல பாதை. பாதாளத்தில் கங்கையின் அழைப்பு. இருளுக்குள் சுழன்று சுழன்று, சாலையற்ற சாலையில் குலுங்கிக் குலுங்கி உயர்ந்துகொண்டிருன்தது ஜீப். சாரதி கார்வாலி மொழியில் பாடல்களை ஒலிக்கவிட்டு தலையாட்டியபடியே இயங்கிக் கொண்டு இருந்தார். ”இப்போ அங்க போகவே முடியாதா” என்றேன் மீண்டும். திவாரி முடியாது என தலையாட்டினார். அவரது குடுமியும் முடியாது முடியாது என்று மறுத்தது.

அறைக்குள் ரஜாய் தாண்டி, விண்டர்சூட் தாண்டி, உல்லன் தாண்டி, ரெயின் கோட் தாண்டி, தீண்டிய முதல் குளிர், தசையை தளர்த்தி எலும்பை இறுக்கியது. அடுத்த குளிர் எலும்புகளை கலகலக்கவைத்து தசையை இருகவைத்தது. இறுதிக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக கழுவாக இறங்க, யாரோ கதவு தட்ட விடிந்திருந்தது.

பத்தாம் தேதி காலையில் நேற்றைய சப்பாத்தி தோழர், கீழே அவரது கடையில் தேநீர் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இறங்கி வந்து அவரது அடுப்பில் விரல்களை குளிர் உறுக்கினேன். கண் படா பறவைகளின் வினோத ஒலிகள். உணவுக் கடை எதிரே மேலே, சரிவில் இன்னும் துயில் எழா கிராமத்திலிருந்து, படிக்கட்டு பச்சை வயல்கள் ஓரமாக, மோழை போல தோற்றம் தரும் பசுக் கூட்டம் காளையுடன் இறங்கி வந்து கொண்டு இருந்தது. மெல்ல பனி விலக, , , , கண்டேன் கண்டேன் பனிமலை நாதனை, கங்கை வார் சடையனை. வெள்ளி மலை. கண்கள் சடுதியில் கலங்கி வழிந்தன. பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த வெண்மை. கடந்து இறங்கிச் சென்றார் சுடலைப் பொடி பூசிய திகம்பர காளாமுகர் ஒருவர். ” நீங்க பாத்தீங்களா? என்னால பின்னால தான் பாக்க முட்டிஞ்சது” என்றபடி என்கிரிந்தோ ஓடி வந்து நின்றார் பிரபு. அதற்குள் கண்நெட்டிய தொலைவு கடந்து கரைந்து போய் இருந்தார் அந்த காளாமுகர்.

தேநீர்க்கடைக்குள் வந்த ஒரு வயோதிகர், கடைக்காரர் வசம் எங்களைக் காட்டி, இவங்கதானா என விசாரித்தார். நான் அவரால் எங்களை கேதார்நாத் அழைத்து செல்ல முடியுமா என கேட்டேன். அவர் புன்னகையுடன் சொன்னார். ” எதிர்ல பார் அந்த மலைதான் கேதார நாதன் தெரியலையா? நீ நிற்கும் நிலம் அவன் தந்த வரம் இல்லையா. நீ நிற்கும் இடமே தேவ பூமி ” கை கூப்பி மலையை நோக்கி மெல்ல எதோ பாடினார். மலையை நோக்கினோம். குளிர் வெண்மை நோக்கி நடக்கத் துவங்கினோம். எதிரே சாலை இரண்டாய் பிரிய, வலது சாலை கீழே இறங்கியது. அதில் இறங்கினோம். என்றோ பயன்பாட்டில் இருந்து இன்று கைவிடப்பட்ட சாலை. பெயர்ந்து வெறும் மண் பாதையாக சரிந்தது. வலது பள்ளத்தாக்கில் முழுக்க முழுக்க அஜி பெயர் சூட்டிய குதிரைவால் மர சோலை. [எனக்கு] பெயரறியா விநோதப் பறவைக் கூட்டம் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தன. அஜியின் நினைவு எழுந்தது. அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

கீழே கங்கை நோக்கி இறங்கும் பாதை போலும். இறங்கினோம் இறங்கினோம் இறங்கிக் கொண்டே இருந்தோம். பாதை அறுந்து விழுந்த தொங்கு பாலம் ஒன்றனில் முடிவற்று தொடர்பு அறுந்து நின்றது. சூழச் சூழ இயற்கையின் சன்னதியில் நெடு நேரம் அமர்ந்திருந்து விட்டு மீண்டும் கிராமம் வந்தோம். மேலே கவ்ரிகுந்து வரை தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப் வர, அதில் ஏறிக் கொண்டோம். வழியில் நிலம் சரிந்து ஒரு ஜீப் அதற்குள் புதைந்து கிடந்தது. ஒன்று இரண்டு என தட்டுப்பட்டு, பத்து இருபது என உயர்ந்து கூட்டமாக பெருகி நின்றிருந்தது மட்டக் குதிரைகள் கூட்டம். இதுதான் எல்லை என இறங்கிய இடம் சோன்பிரயாக். மந்தாகினியும் பாஸ்கியும் சங்கமிக்கும் களம். முற்றிலும் மலையின் சிறு பகுதி சரிந்து விழுந்து மறைந்து கிடந்தது. வரும் யாத்திரை காலத்துக்குள் பிரயாகையை மீட்க அசுர இயந்தரங்களுடன் தொழிலாளர்கள் இயங்கிக் கொண்டு இருந்தார்கள். இறங்கி அவர்களை கடந்து நடந்து பாதை இட்டு சென்ற இறுதியை அடைந்தோம். யூ பி காவல் துறையும் ராணுவமும் தடுப்பரண் அமைத்து நின்றிருந்தார்கள். எங்களை ஆச்சர்யமாக பார்த்தார்கள். ராணுவ வீரர் சொன்னார். தேவ பூமிக்கு வந்திருக்கீங்க அதுவே போதும்ன்னு திரும்புங்க. மேலே ரெண்டு இடத்தில் நில சரிவு, கழுதையால் கூட போக முடியாது. புரிந்தது இதுதான் எங்கள் இறுதி எல்லை. அண்ணாந்து பார்த்தேன் தலையில் அட்சதையாக பனி தூவிய கிராத பர்வதம். பின்னால் இன்னும் உயரத்தில் என் ஆன்மாவின் தூலம். எத்தனையோ காளாமுக மெய்யறிவர்கள் தங்கள் ஆன்மாவை ஒப்புக் கொடுத்த இடம். இக் கணம் இதோ இக் கணம் அவர்கள் நடந்த சென்ற பாதையில் நானும் நிற்கிறேன். போதும் இது போதும். மனமார வணங்கினேன். பிரபுவும் சொல்லற கலங்கி நின்றிருந்தார். வாங்க போலாம். சட்டென திரும்பி கீழே நோக்கி இறங்கத் துவங்கினோம். அளகனந்தா. கீழே தேவப்பிரயாகை. சார் தேவப் பிரயாகை போலாம் என்றார் பிரபு. நடந்தோம். பின்னால் வந்த தொழிலாளர் ஜீப் எங்களை சுமந்து, ருத்ரப் பிரயாக் வந்து இறக்கி விட்டது. ஆறு மணிக்கு மேல் வாகனங்கள் கிடைக்காது ஆகவே கண்ணில் பட்ட முதல் வாகனத்தில் ஏறி முடிந்த எல்லை வரை முன்னால் பயணித்தோம். நல்ல மழையில் ஸ்ரீ நகரில் முடிந்தது அந்த நாள். ஊரே இருளில் கிடக்க, தெருத் தெருவாக அறை தேடி மழை குளிரில் அலைந்தோம். நவீன் என்ற யுவன் வலிய வந்து விசாரித்து எங்களுக்கு அந்த ஊரில் ஒரு அறை சிபாரிசு செய்துவிட்டு சென்றான். இருளுக்குள் போர்வைக்குள் புகுந்தோம். கனவில் கிராத மலை ஒளியுடன் மீண்டது.

*

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
அடுத்த கட்டுரைபொய்பித்தல்வாதம் ,பேய்சியன் வாதம், அறிவியல்