பொய்பித்தல்வாதம் ,பேய்சியன் வாதம், அறிவியல்

இயற்கைஎரிவாயு, அணுவுலை போன்றவை சார்ந்த போராட்டங்களை ஒட்டி இணையத்தில் சமீபமாக அறிவியலைப்பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன.அவ்விவாதங்கள் அனைத்திலும் நான் பொதுவாகக் கண்டது அறிவியலைப்பற்றி கருத்து சொன்ன எழுத்தாளர்களுக்கு பொதுவாக அறிவியல்தத்துவம் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதும், மிகப்பொதுப்படையான புரிதலைக்கொண்டே அவர்கள் அறிவியலாளர்களை எதிர்கொள்கிறார்கள் என்பதும்தான். மறுபக்கம் அறிவியலைப்பற்றிப் பேசுபவர்கள் அறிவியல் என்பது மாறாத புறவய முறைமைகொண்ட ஒரு மதம் என்னும் கோணத்திலேயே பேசிக்கொண்டிருந்தனர்.

Jpeg

எண்பதுகளில் அறிவியலை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் பின் நவீனத்துவப் பேச்சுக்கள் இங்கே ஓங்கி ஒலித்தன. பின் நவீனத்துவத்தில் அது  ‘முன் சோக்கல்’ காலகட்டம். ஆகவே கூச்சல் உக்கிரமானதாக இருந்தது. அக்கருத்துக்களால் கவரப்பட்ட நான் நித்ய சைதன்ய யதியிடம் அதைச் சொல்லப்போக கார்ல் பாப்பர் அறிமுகமானார். அறிவியல்கண்டுபிடிப்புகளின் தர்க்கம் என்னும் அந்த பெரிய நூல் இருபதாண்டுகளாக கால்வாசி வாசிக்கப்பட்டு இன்றும் என்னிடம் உள்ளது. அறிவியல்கற்காதவன் என்பதனால் அதில் தத்துவார்த்தமான பகுதிகளை மட்டுமே என்னால் புரிந்துகொள்ளமுடிந்தாது. பெரும்பகுதி தேற்றங்களால் ஆனது அது. ஆனால் அறிவியல் குறித்த என் நோக்கை மாற்றியமைத்தது அந்நூல்.

தகுதியான ஒருவர் இதைப்பற்றி தமிழில் எழுதலாமே என்னும் எண்ணம் எனக்கிருந்தது. அறிவியல் குறித்த அனைத்து விவாதங்களிலும் எழுந்து வருவது பொய்ப்பித்தல் முறைமை. அதையும் அதனுடன் முரண்பட்டு விவாதிக்கும் பேய்சியன் வாதத்தையும் விளக்கி குழுமத்தில் ஒரு விவாதம் நிகழ்ந்தது. அவ்விவாதத்தை ஒட்டி ஒரு விரிவான கட்டுரையை அளிக்கும்படி நண்பர் ‘ராக்கெட்’ ராஜாவிடம் கேட்டிருந்தேன். மன்றாடி கேட்டு ஒருவழியாக எழுதியிருக்கிறார்

இளையராஜா என்னும் இயற்பெயர் கொண்ட ராஜா சண்டிகரில் விண்வெளிநிலையத்தில் அறிவியலாளராக பணிபுரிகிறார். என் வாசகராக நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.சற்று கூர்ந்து வாசிக்கவேண்டிய கட்டுரை. ஆனால் தமிழில் இவ்வகையில் இது முதலாவது என நினைக்கிறேன்

முந்தைய கட்டுரைமுழுதுறக்காணுதல் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகுருநித்யா காவியமுகாம் , ஊட்டி 2017