கருணைநதி -கடிதங்கள்

800px-Manimuthar_Falls

தங்களின் கருணை நதி கரை கட்டுரை படித்தேன், எனது சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சி. ஆழ்வார்குறிச்சி, கீழாம்பூர், சுற்றுவட்டார கிராமங்களுக்கு சிவசைலபதியும் பரமகல்யாணியும் அப்பன் அம்மையை போன்றவர்கள் அவ்வளவு எங்கள் கிராம மக்கள் இறைவனிடித்தல் பாசமுள்ளவர்கள். நான் எனது தாத்தா அத்ரி தீர்த்தம் சென்று வந்ததை சொல்ல கேட்டிருக்கிறேன் இதுவரை சென்றதில்லை தாங்கள் சென்று வந்த கட்டுரை மிகுந்த மனநிறைவு அளிக்கின்றது. கட்டுரையில் ஒரு சிறு திருத்தம் சிவசைலம் கோயில் ஒட்டியுள்ள நதி கடனா (கருணை) ஆறாகும். இந்த நதி முக்கூடல் அருகே தாமிரபரணியுடன் சங்கமிக்கிறது.

நன்றி,

ராம்குமாரன்

***

சார் வணக்கம்,

இன்று கருணாநதிக்கரை முதல் பதிவு வாசித்தேன். எப்பொழுதும் போலவே தொடரும் அடுத்த பதிவுகளையும் வாசித்தபின் உங்களுக்கு எழுதலாமென்னும் முடிவில் தோல்விதான். இப்போதே எழுதுகிறேன்.

//அருண்மொழி என் வாழ்க்கையில் நுழைந்தபின் அம்மாவை நினைவு கூர்வதென்பது சாதாரண ஒரு நிகழ்வாகவே இருந்தது.//

மிகச்சாதாரணமாக பெரிய விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள். துயருற்றவர்களின் வாழ்வில் அன்புகொண்டவர்கள் இணைகையில் அது எத்தனை காயங்களுக்கு அருமருந்தாக இருக்கிறதென்பதை அனுபவத்தினால் மட்டுமே உணர முடியும்.

கருணாநதிதான் கடனாவாக” மருவிவிட்டதா சார்? இந்த காயும் கோடையில் நினத்துப்பார்க்கையில் எல்லா நதிகளுமே கருணை நதிகள்தான் எனத்தோன்றுகிறது.

உங்களின் எல்லா பயண அனுபவ பதிவுகளிலும் நாங்களும் உடன் வருவது போன்ற உணர்வே இதிலும் ஏற்படுகிறது. மலைகளில் ஏறி இறங்கி, நெடுக நடந்து சலித்து, அருவியிலும், சுனையிலும், நதியிலுமாக தூய நீரில் குளித்து, கிடைத்த உணவை சாப்பிட்டு என எல்லாமே வாசிக்கிறவர்களும் அனுபவிக்கிறோம்.

கூடவே அந்த இடம் பற்றிய எல்லா தகவல்களும் சொல்லி விடுகிறீர்கள். அதிலும் இந்த பதிவில் மழைக்காடுகள் குறித்து மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்: இலை மெத்தை மேல் வெள்ளிவட்டம் போல ஒளி, இலையை பிடித்தபடி மேலேறிச்செல்லும் ஒளிச்சட்டம், அனைத்து இலை நுனிகளிலும் எண்ணையென வழியும் ஒளி, ஒளி விழும் மழைக்காட்டுப்பகுதி உயிரின் மாபெரும் நாடகமேடையேதான் சார். உங்களின் இந்த பதிவை வாசித்தபின் அனைவருமே இதை உணருவார்கள். அதுவும் ஒளியை அமுது என்று சொல்லி இருக்கிறீர்கள். ஒளியமுதுதான், உலகம் முழுமையும் உயிருடன் இருப்பதற்கான ஒளியமுது. இந்த வார்த்தை மறக்க முடியத ஒன்றாக ஆகிவிட்டது

கோரக்கரின் ஆலயமும் கருணாநதியும், நடந்து களைத்தபின் காட்டில் உண்ணும் சுவையான உணவுமாக, பகலெல்லாம் நாற்காலியில் இருக்கும் எங்களைப்போன்றவர்களும் உங்களுடனே பயணித்தது போல இருக்கிறது உங்களின் இந்த பயணப் பதிவு

நன்றி சார்

அன்புடன்

லோகமாதேவி

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44
அடுத்த கட்டுரைசகரியாவின் ‘இதுதான் என்பெயர்’