அன்புள்ள ஜெ,
ஜக்கி பற்றிய தங்களின் சமீபத்திய கட்டுரை வழக்கம்போல பல விவாதங்களை எழுப்பியுள்ளது. நிறைய எதிர்வினைகளையும் நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். எனக்கும் உங்கள் கருத்துகளில் நிறைய முரண்பாடு இருக்கிறது. அது இருக்கட்டும். நான் சொல்ல வந்தது வேறு விஷயம்.
நேற்று (25.02.2017) அன்று தூக்கத்தில் எனக்கு ஒரு கனவு வந்தது. அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. நான் மிக ஆர்வமாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கூர்ந்த கவனிப்புக்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களும் சுப. வீரபாண்டியன் அவர்களும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சுப. வீ.யின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்கிறீர்கள். இரு எதிர் சிந்தனைகள் எதிரெதிரே. அவரின் அடுத்த கேள்வியும், அதற்கு தங்களின் பதில் என்னவாக இருக்கும் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு சுப.வீ.யின் மீது பெரும் மதிப்பு உண்டு. அவரும் மிகத் தெளிவாக, அதே சமயம் காட்டமான மொழியில் இல்லாமல் தன் தரப்பை வைக்கக்கூடியவர். பெரியார் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் என்ன விளக்கம் கொடுப்பார் என்றும் நான் காத்து பார்த்துக்கொண்டிக்கிறேன். பேட்டி முடிவதற்குள் கனவு முடிந்துவிட்டது. கனவு முழுவதுமாக இப்போது நினைவிலும் இல்லை.
சுப.வீ.யின் உரைகளையோ நூல்களையோ படித்திருக்கிறீர்களா? அவருடன் நேரடியாக பழகிய அனுபவம் உண்டா? இருந்தால் எழுதுங்கள்.
பி.கு 1: அந்தக் கனவு நினைவில் நடந்தால் என் போன்றவர்களுக்கு அறிவு விருந்தாகும்.
பி.கு 2: சென்னைக்கு வரும்போது தங்களை நேரில் வந்து பார்க்கும்படி சொன்னீர்கள். எப்போது வருவீர்கள் என்றும் எங்கு தங்குவீர்கள் என்றும் சொன்னால் நான் சந்திக்க ஏதுவாக இருக்கும்.
அன்புடன்,
தீனதயாளன். மு
***
அன்புள்ள தீனதயாளன்
சுபவீயிடம் மட்டுமல்ல எவரிடமும் என்னால் நேருக்குநேர் பேச முடியாது. ஏனென்றால் என் சொல்லாட்சியும் என்னை மேடையில் முன்வைக்கும் திறனும் மிகமிகக் குறைவு. அவர்கள் சிறந்த மேடை வெளிப்பாடு கொண்டவர்கள். அதில் வாழ்பவர்கள்
மேலும் நான் சிந்திப்பதற்கும் அவர்கள் சிந்திப்பதற்கும் நேர் எதிரான இயங்குமுறை உள்ளது. அது கொஞ்சம் காலம் சென்றால் உங்களுக்கு விளங்கலாம். அவர்களுடையது உறுதியான நிலைபாடு. அதைச் சார்ந்த தர்க்கங்கள். அவை முன்னரே உருவாக்கப்பட்டவை. மிகமிக எளிமையானவை. சொல்லிச்சொல்லி கூரானவை
நான் நிலைபாடு அற்றவன். யோசிப்பவன், குழம்புபவன். எளிமைப்படுதலுக்கு எதிராக சிக்கலான வரலாற்றுப் பண்பாட்டுச் சித்திரத்தை முன்வைப்பவன். ஒன்றை திரும்பச் சொல்லும் வழக்கமும் என்னிடம் இல்லை
ஜெ
***
அன்புள்ள ஜெ
நான் பார்த்த வரையில் அனைத்து சிவன் கோவிலிலும் லிங்க வழிபாடே உள்ளது அப்புறம் எப்படி குனித்த புருவமும் என்று பாடல் எழுதினார்கள். இப்பொது சைவ திருமுறை வகுப்புக்கு போக ஆரம்பித்துள்ளேன் முதல் பாடல் தோடுடை செவியன் எப்படி இதை எழுதினார்கள். தயவு செய்து தெளிவு படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திருமலை
***
அன்புள்ள திருமலை
என்ன எளிமையான கேள்வி
சுவர் ஓவியங்கள் இல்லையா? கோபுரத்தின் சுதைச்சிலைகள் இல்லையா? நூற்றுக்கணக்கான கற்சிற்பங்கள் இல்லையா? மூலச்சிலை மட்டுமே லிங்கம். பிற அனைத்துமே உருவங்கள்தானே?
அந்தச் சிலைகளுக்கு மூலமாக இருப்பது நடனம். ஆடவல்லான் என்றே சிவன் அழைக்கப்படுகிறான். எத்தனையோ தலைமுறைகளாக ஆடப்படுகிறது அவன் உருவம்
அதற்கும் மூலமாக உள்ளது மனிதன் இறைவடிவம் கட்டி பூசைதெய்வமாக அமரும் முறை. அங்கிருந்து தொடங்குகிறது அவ்வுருவ வர்ணனை
ஜெ
***
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
காதலிக்கு எழுதும் முதல் கடிதத்தை போல, மிகுந்த தயக்கத்திற்கு பிறகே இக்கடிதத்தை எழுதுகிறேன். வாசகர் சந்திப்பு மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக அமைந்தது. தொடக்கம் முதலே நிறைய ஆச்சரியங்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மனம் மிக எளிதாக பழக்கப்பட்டது ஆச்சரியமான விஷயம் தான். காரணம் எல்லோரும் இனிமையாக நடந்து கொண்டதாகக்கூட இருக்கலாம். முதலில் நான் எதிர்பார்த்த துதி பாடல் சம்பவம் நடைபெறாமல் போனதும் மிகுந்த நிறைவை அளித்தது.
நிறைய கற்றல், கற்பது எப்படி என்னும் கற்றல், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் ஆன வித்தியாசங்களில் ஆரம்பித்து நிறைய விஷயங்களை எங்களுக்கு அளித்தீர்கள். எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது கேள்வி எப்படி அமையவேண்டும், கேள்வி கேட்கும்போது செய்யக்கூடாதவை பற்றி தான்.ஒரு சில அண்ணன்கள் தங்கள் வலைதளத்தில் தாங்கள் ஏற்கனவே எழுதியவற்றையே புதிது போல கேட்டது ஒன்றே சற்று bore அடித்தது {எ.கா:த்வைதம், அத்வைதம் சார்ந்தவை }.
இரவில் தாங்கள் கூறிய பேய்க்கதை, அதற்கு ஏற்றாற்போல் current cut (தமிழில் சரியாகக் கூற முடியவில்லை).எல்லாமே அருமையான அனுபவங்கள்.
சந்திப்பை ஏற்பாடு செய்த கிருஷ்ணன் அண்ணன் மற்றும் அனைவருக்கும் நன்றி!
கடிதத்தில் கண்டிப்பாக பிழை இருக்கக்கூடும், மன்னிக்கவும். எழுதுவதற்கு முன் நிறைய தோன்றியது. இப்போது எதுவும் நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது.
ஒரே ஒரு சிறிய கேள்வி, நம்முடைய தியானம் மற்றும் யோகா முறைகள் scientific frame of reference ற்கும் methodology க்கும் பொருந்தி வருமா? (பதில் அளிக்க தகுதி உடைய கேள்வியா என்று தெரியவில்லை )
இப்படிக்கு,
மிகுந்த அன்புடன்
குமார் ராஜா
***
அன்புள்ள குமார்ராஜா
மீண்டும் சந்திப்போம். யோகம் பற்றிய உங்கள் கேள்விக்கு வேறு ஒருவருக்கான பதிலில் விரிவாக விளக்கம் சொல்லியிருந்தேன்
ஜெ