பனித்தமிழ்

snow man

ஜெ,

இந்தச்செய்தியை பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?

பெருமாள் எஸ்

பனிமனிதன் பேசியது தமிழா?

***

அன்புள்ள பெருமாள்,

தமிழில் பெர்முடா முக்கோணம், எகிப்திய பிரமிடு, சைபீரியப்பனி, வேற்றுகிரக மனிதர்கள், எய்ட்ஸ் கிருமி, யோகம், தியானம் எல்லாவற்றையும் பற்றி இதே தரத்தில்தான் எழுதப்படுகின்றன.

நான் முன்பொருமுறை வேடிக்கையாகச் சொன்னேன். நான் வெண்முரசில் புராணங்களை அறிவியல் நோக்கில் புரிந்துகொள்ள முயல்கிறேன். நம் மக்கள் அறிவியலை புராணநோக்கில் புரிந்துகொள்கிறார்கள். இரு எல்லைகள்

இந்த பனிமனிதனை இல்லுமினாட்டி என அடித்துவிட்டால் என்ன ? அதற்கும் ஒரு மூன்றுகோடி ஆதரவாளர்கள் வரமாட்டார்களா என்ன?பார்க்கவும் ஹாலிவுட் நடிகர் மாதிரி இருக்கிறார். வாயைப்பார்த்தால் துரை “Ye, come on” என்று சொல்வதுபோல இருக்கிறது.

ஜெ

***

ஜெ

என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். நான் இந்த பனிமனிதனைப்பற்றி மேலதிகமாக விசாரித்தேன். ”புரட்சித்தலைவி அம்மா வாழ்க” என்றுதான் அவர் சொல்கிறார்

பெருமாள் எஸ்

**

அன்புள்ள பெருமாள்,

மனுஷ்யபுத்திரன் அவர் சொல்வது  ‘தானைத்தலைவர் கலைஞர் வாழ்க’ என்றுதான் என ஏற்கனவே பதிவு போட்டிருப்பார். பாருங்கள்

ஜெ

***

அன்பு ஜெ

பார்த்தேன். அவர் “ தளபதிவாழ்க” என்று சொல்வதாகத்தான் மனுஷ்யபுத்திரன் நக்கீரனில் எழுதியிருக்கிறார். அது தவறு

பெருமாள் எஸ்

***

அன்புள்ள பெருமாள்,

இப்போதுதான் பார்த்தேன். முப்பாட்டன் பனித்தமிழன் பேசிய பனித்தமிழே இனித்தமிழ் என்று சொல்வோம் என்று செந்தமிழன் சீமான் சொல்லியிருக்கிறார்.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

நான் கேள்விப்பட்டதே வேறு. சீமானை விட சிவப்பாக இருப்பதனால் இனி அந்த துரையைத்தான் செந்தமிழன் என்று சொல்லவேண்டும் என நாம்தமிழர் கட்சி சொல்லிவிட்டதனால் சீமான் கடுப்பில் இருக்கிறார்

பெருமாள் எஸ்

***

அன்புள்ள பெருமாள்

கரச என்னும் தமிழறிஞர் இருக்கிறார். என் நம்பிக்கையின்படி அவர் தேவநேயப் பாவாணரின் மறுபிறவி. அவர் தமிழின் வேர்ச்சொற்கள் இந்த மூன்று ஒலிகளில் இருந்துதான் வந்திருக்கிறது என ஒரு நீண்ட ஆயவுக்கட்டுரையை [*} டிவிட்டரில் எழுதியிருக்கிறார். படியுங்கள்

ஜெ

**

ஜெ

பனிமனிதன் பாடிய தமிழே பனிக்கூழே என்று சினிமாவில் யுகபாரதி எழுதிய பாடல் பதிவாகப்போகிறது என்று செய்தி.

பெருமாள் எஸ்

***

அன்புள்ள பெருமாள்,

விடமாட்டீர்கள் போல

மேடைப்பேச்சாளரா?

ஜெ

***

அன்புள்ள ஜெ,

ஆமாம், பேசுவேன்

குரலை வைத்துப்பார்த்தால் பனிதமிழனின் மரபு எம்.ஆர்.ராதாவரை தொடர்வதாகத் தெரியவில்லையா?

பெருமாள் எஸ்

***

அன்புள்ள பெருமாள்,,

பனித்தமிழ் தமிழிலே உள்ள 4 வகை தமிழ்களில் ஒன்று.

  1. சிம்மத்தமிழ் [இது சினிமாத்தமிழ் என்றும் அழைக்கப்படும். அதில் மணித்தமிழ் ,அதாவது மணிரத்னம் படத்தில் வரும் தமிழ் ,தனிவகை–அதாவது தங்கச்சி முறையாக வரும்]
  2. டிவித்தமிழ்,

3 சாதாத்தமிழ்.

பனித்தமிழ் தொன்மையானது. முப்பாட்டன் முருகப்பாக் குறவர் பேசியது இதுவே. ஜலதோஷத்தமிழ் என்று இதை தமிழ்ப்பகைவர் சொல்வதுண்டு.

குறிஞ்சித்திணையில் பெய்யும் மழைக்கு ஜலதோஷம்பிடிக்காமல் முதுகுவலியா வரும்? கபிலரின் கவிதைகளையே கூட இதே மாதிரி படிக்கலாம்.  ‘ஜுனைப்பூ க்குற்று ஜொடலை ஜையி’ என்பதைத்தான் சுனைப்பூ குற்று தொடலை தையி என பிற்கால ஆசிரியர்கள் தொகுத்திருக்கிறார்கள்.

ஜெ

*

அன்புள்ள ஜெ,

மூன்றுதமிழ் பேசியதும் உன்னிடமோ என்று இதைத்தான் சொல்கிறார்களா?

பெருமாள் எஸ்

*

அன்புள்ள பெருமாள்,,

இதைத்தான் இன்றைய ரோபோ க்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிட ஏற்றது. ரோபோ  என்பது தமிழ் வேர்ச்சொல் அடிப்படையில் அமைந்த தமிழ்ச்சொல் என அறிஞர் கரச சொல்கிறார். ரோ என்றால் இயந்திரம் உரசும் ஒலி . போ  என்றால் அதை தயாரித்தவர் செல்க என்று இட்ட ஆணை.

ஜெ

* மாட்டின் உடலில் உண்ணிகளை ஆயர்கள் தேடித்தேடிப் பொறுக்கிக்கொண்டிருந்த கலைதான் ஆய்வு என பின்னாளில் சொல்லப்பட்டது. ஆய் அண்டிரன் புறநாநூற்றுக்கால ஆய்வாளர்களில் ஒருவன். ஆய்போகலாமே ஒழிய அதை ஆயக்கூடாது என்பது கிராமத்துப்பழமொழி. – கலைச்சொல் ஆய்வு

முந்தைய கட்டுரையோகமோசடி -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–39