ஒற்றைக்காலடி

Kanyakumari

 

 

ஒற்றைக்காலடியைத் திரும்ப திரும்ப மீட்டுருவாக்கம் செய்து கொண்டிருந்தேன். அப்பா காலையில், மக்கா! நைட் ஃபுல்லா ஒரே கனவு என்றார். ஒத்தைக் காலடியில தவம் செய்யுதா அம்மை. எதுக்கு? யாருக்கு? கொற்றவை! கொற்றவைனு காதுல உழுந்துட்டே இருக்கு. என்னதுனு சொல்லத் தெரியல. அரங்குக்குள்ள போய் கன்னியாரி அம்மைய பாத்தேன். என்னத்துக்குட்டி இப்படி நிக்க. உனக்கு காலு வலிக்கலியான்னேன். அவ உனக்கு கடைசி தங்கச்சி மக்கா! அப்படித்தான் தோணுகு.

இத்தனைக்கும் அப்பா அந்த நாவலின் அட்டைப் புத்தகத்தை மட்டுமே பார்த்திருந்தார். தீயெரியும் காகிதம் வழி. அம்மைக்கு என்ன வேண்டும்? அவளுக்கு கால் வலிக்காதுடா? என் அம்மா சொன்னாள். என்னால் நம்ப இயலவில்லை. உங்கள் மகள் அவதானித்ததை என் அம்மையும் சொல்கிறாள்.

korravai

 

ஏன் என்று கேட்டேன். அவ அம்மைலா மக்கா. அம்மைக்கு வேறேன்ன வேணும். என் பிள்ளைகள் நல்லா வாழணும். அதுக்கு தானே அவள் உடல் பொருள் ஆவியெடுத்து வந்துருக்கா. அதுக்காக அவ என்னமும் செய்வா? ஏன்னா! அதுதான் அம்மை. அவ தனக்கு ரத்தத்த உட்டாக்கும் உருவாக்கிருக்கா இந்த மொத்த ஒலகத்தையும். அவ செய்யெதெல்லாம் பிள்ளைகளுக்காக்கும். பிள்ளைகளுக்கு செய்யதுக்கு எந்த அம்மைக்காது வலிக்குமாலெ.

அப்பா கனவின் விளிம்பில் இன்னும் நகராமல் இன்னும் கனவுக்கண்களுடன் முழித்துக் கொண்டிருந்தார். அம்மை அடிக்கடி சொல்லுவா! உங்கப்பா எனக்கு கடைசி பிள்ளையாக்கும். நான் போய்ட்டன்னாலும் அப்பாவ நல்லா பாத்துக்குவீங்களாலனு என்னிடம் தம்பியிடமும் அடிக்கடி கேட்பார்கள். அம்மைக்கு ஒலகம் பிள்ளைகளாலானது.

ஆம். அந்த அம்மைக்கு வலி இல்லை. காலமில்லை. எந்த விதிகளுமில்லை. அவள் கருணையே அனைத்துமாய் பூமி முழுதும் இடைவிடாது நிரம்பிக்கொண்டிருப்பவள். கிழித்து நிரப்புங்கள் பிள்ளைகளே. பிரபஞ்சம் முழுமைக்குமாய் வளர்ந்து நிறையுங்கள். அதற்காகவே தவமிருக்கிறேன். என்னுள் நிறைத்து சிந்தும் குருதியை உண்டு அனைத்திலும் இடைவெளியின்றி நிரப்புங்கள்.

இத்தனையும் நிகழ்ந்தது. இரண்டு நாள் முன்பு கன்னியாகுமரிக்கு போய் வந்த பிறகு. சின்ன வயதில் ஒவ்வொரு சுசீந்திரம் தேரோட்டத்துக்கும் குமரியன்னையைப் பார்க்க சென்றிருக்கிறேன். அவளின் இள நகையில் மூக்குத்தி ஜொலிப்பில் சந்தனக்காப்பு சாத்திய வட்ட முகத்தில் நான் எப்பொழுதும் ஒன்றை தேடிக்கொண்டிருந்தேன். என்ன அது என்று சொல்ல வழியின்றி. பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

srinarayani2

ஜோ.டி. க்ரூஸ். அவள் தான் முதல் பரத்தி என்றார். அவளை நானும் பார்க்கிறேன். என் தங்கையை போல அறிகிறேன் இப்பொழுது. என் வீட்டின் கன்னியவளா? அவள் ஏன் கன்னியாகவே இருக்கிறாள். திரும்பவும் காலத்தில் பின்னோக்கி செல்கிறேன். அன்று எங்கள் தெரு விடுமாடன் கோவில் கொடை. கார்த்திகை மாசம் எல்லா வருடமும் நடக்கும். தப்பட்டை விடாமல் அடித்துக் கொண்டிருக்க, துர்க்கம்மை வந்த அவ்வையார் மஞ்சனையை வாயில் விழுங்கி கமுகம் பூவால் தலையில் அடித்துக் கொண்டு தலைவிரி கோலமாய் உறுமிக் கொண்டிருந்தாள்.

எனக்கோ இந்த சாமியாடிகளிடம் பெரிதாய் நம்பிக்கை இல்லை. சும்மா நடிக்குதுகோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சுந்தர மாமாக்கு விடுமாடன் வந்து ஆடி ஓஞ்சி திருனார் கொடுத்திட்டிருந்தார். ஆள் நல்ல உயரமும் தொப்ப தள்ளுன உடம்பும் பாக்கதுக்கு விடுமாடன் மாரித்தான் தோணும். ஆனா அவருக்கு கடா மீசை இல்லைன்னால சாமின்னு தோணல இருந்தாலும் திருனார் பூசி விடும் போது கொஞ்சம் பயந்துதான் நின்னேன்.

\ராத்திரி பூசைக்கு சாமி ஒழுகினசேரி சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்து ஆட்டம் நடக்கு. தப்பட்டையு,ம் நாதஸ்வரமும் கொட்டும் ஒரே முழக்கமா மேலயும் கீழயும் போய்ட்டிருக்கு. உச்சக்கட்டமா சாமிக்கு ஊட்டுப்படையல் வச்சு தீவாரண நடக்க போகு. மாடத்தியா ஆண்டாள் மாமா கெடந்து திங்கு திங்குனு சாடி காலெல்லாம் ரத்தம் கொட்டுகு. மஞ்சனைய வாயில தேச்சிட்டுக்கிட்டு நாக்க நீட்டி சாடுகாறு. ஒரே களேபரம். எனக்கு பெருசா ஈடுபாடில்லாட்டாலும் கொட்டுசத்தம் ஒரு மாறி கெளப்பி உடம்பெல்லாம் புல்லரிச்சு போய் நிக்கேன்.

பக்கத்துல என் ஃப்ரெண்டு சண்முகம் சும்மதான் நின்னுகிட்டுருந்தான். திடீர்னு அலறுகான். காலு கைலாம் வெட்டு வந்தா கனக்க ஆடுகான். அப்ப அவன் குரல் அவன மாறியே இல்ல. வேறேதோ குரல். உறுமலும் சத்தமும் ஒரு பெண்ணைப்போல இருந்தது. நான் பயந்து பத்தடி பின்னால போய் எங்க சித்திக்கு புறத்தால போய் ஒளிஞ்சுகிட்டேன். அவன் அடங்கதுக்குள்ள சுந்தர மாமா ஆடிக்கிட்டே அவன் கிட்ட வந்தார். சிரிச்சார். மாடனுக்கு குரலுல்ல. உறுமிக்கிட்டே திருனார அவன் நெத்தில அழுத்தி அடக்கினாரு. கொஞ்சம் தண்ணியக் கொடுத்து அவன உட்கார வச்சிருந்தாங்க.

 Kanyakumari

நான் பயந்துட்டு அவன் கிட்டயே போகல. சித்தி ஏங்கிட்ட வந்து. லேய் கன்னியாக்கும். கொட்டு சத்தமும் தப்பட்டையும் அடிச்சுல்லா அதான் வந்துட்டா. அவளுக்கு ஒழுங்கா செஞ்சிருக்க மாட்டானுங்க. அதாக்கும் இப்படி ஏறிட்டா என்றாள். எனக்கு ஒன்னும் புரியவில்லல். கன்னியா> அது யாரு சித்தி? லேய் அவா குடும்ப வழில பிராயத்துல செத்து போயிருக்கும். அவளுக்கு ஒடுக்கத்தி வெள்ளிகெழம தோறும் வெளக்கு கொழுத்தி கும்பிடனும். அவளாக்கும் அவங்களுக்கு கொலதெய்வம். ஒழுங்கா செய்யாம விட்டா இப்படித்தாம்ல வந்து கேப்பா.

எனக்கு உடல் சிலிர்த்து சிறு நீர் துளிர்த்தது. அன்னைக்கு படுக்கும் போது அம்மைட்ட கேட்டேன். நமக்கு யாரும்மா குலதெய்வம். லேய்! சீமாட்டி அம்மைதாம்ல எனக்கு கொலதெய்வம். அங்க ரயில் பாதைக்கு போக வழில பழையாத்தப் பாத்து ஆலமூடுல இருக்காள்ளா! உனக்குன்னா அப்பாக்கு வேறயா? ஆமாலே. அப்பாக்குள்ளதுதான் உனக்கும் நமக்கும் என்றாள். அவள் எங்கோ கேரளாவில் விழிஞ்சம் பக்கதிலென்றாள். நாம ஏம்மா அங்க போகல லேய் அப்பாக்கு அப்பா இருக்கார்லா நம்ம தாத்தா கிருஷ்ணபிள்ளை அவர் சின்ன வயசுல வீட்ட விட்டு ஓடி வந்துட்டார்ல இங்க நாகர்கோவிலுக்கு. அவரும் அப்பாட்ட சொல்லல. நமக்கும் தெரியாது. அதாம் போகல.

எனக்கு பீதி நெஞ்சையடைத்துக் கொண்டது. இனி மேளம் அடிக்கும் பக்கமே போகக்கூடாது. என்று முடிவெடுத்துக் கொண்டேன். கனவில் சிவந்த அந்த மாடத்தியின் நாக்கு பயமுறுத்தியது. அம்மைட்ட சொன்னேன். அழுதேன். இரவில் கனவில் பயந்து கெடைல மோண்டேன்.

பிறகுதான் அம்மை சொன்னாள். லேய் அவ நமக்கு அம்மையாக்கும். அவளுக்கு ஏம்லெ பயப்படுக. அதற்கு பிறகுதான் தெரிந்தது அம்மா எல்லா ஒடுக்கத்தி வெள்ளிக்கிழமைகளிலும் விளக்கு தனியாக தென்மேற்காய் கொழுத்தி வைத்து பால் பழம் படைத்து வணங்குகிறாள். நினைவு தெரிந்த பின் நானும் அந்த தெரியாத அம்மையை வணங்க தலைப்பட்டேன். அவள் கன்னியாகவே இருக்கிறாள்.

காந்தி சொன்னது போல இந்த கடலும் கன்னிதான். ஊரில் நடுனாயகமாய் எல்லையில் இருக்கும் எங்கோடி கண்டன் சாஸ்தாவையும் வணங்குவாள். நமக்கென்னாவது உண்டும்னா அவர்தான் செஞ்சுதரணும் கேட்டியா. அவர் வழி செய்யாம நமக்கு ஒன்னும் வழிகெடைக்காது என்பாள்.

தெய்வங்கள் யார்? நமக்கவர்கள் என்ன தருகிறார்கள். அவர்களை நாம் ஏன் படைக்கிறோம். எல்லா கேள்விகளும் பதில்களின்றி அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. அம்மையுடன் சீமாட்டியம்மைக்கு பூஜை செய்ய போகும் போதெல்லாம். அம்மையின் உடல் அதிர்வதும் ஊசலாட்டமாய் அங்கிங்கு நகர்ந்து முணங்கி உறுமுவதையும் கண்டிருக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான் அம்மைக்காகிறது.

இது என்ன? இவர்கள் ஏன் நம்மிடம் முயங்கிறார்கள். இவர்கள் நம் வழி இங்கு வந்து நம்மிடம் படையல் வாங்கி கொள்கிறார்களே ஏன்? எங்கோ தனிமையில் ரத்தக்கண்களுடன், அரக்கப் பற்களுடன் சிவந்த நாக்கு நீட்டி நம்மிடம் வந்து ஆட்டுவிக்கும் இவர்கள் யார்? இவர்களெல்லாம் நான் தானோ?

எங்கோ எப்பொழுதோ என் மூதாதை இடியின் நாட்டியத்தில் மின்னலின் அலைக்கீற்றில் நடனமாடிக் கொண்டிருப்பதையும், கடலின் ஆழத்தில் அலைகளின் இடைவிடாத அரற்றலில் கருமையின் மோனத்தில் நீலத்தின் மென் நகையில் வானமும் பூமியும் முயங்கும் அனல் பரப்பில் மோனமாய் அமர்ந்திருந்தவன் நான் தானா?

 

இவர்களையெல்லாம் பரப்பி இன்னும் இன்னும் ஆற்றலாய் ஆதியந்தமில்லா குறையா நிறை சக்தியாய் என்னுள் நீக்கமுற ஆட்டுவிக்கும் அம்மையை அவளின் குறைவில்லா கருணையை அனல் கக்கும் வன்மத்தை வாழ்வின் நித்தியமான இன்பத்தை களித்துள்ளும் அனந்தத்தை எப்படி நிரப்பினும் நிரம்பா அல்குலை குமரிக்கோட்டின் உச்சிப்பாறையில் ஒற்றைக்காலடியில் மண்ணில் விழுந்து அவளின் எண்ணிலடங்கா துகளில் துளியாக ஏங்கினேன்.

என் அம்மை மெல்ல தலைத் தடவி, எல்லாம் நல்லா நடக்கும் மக்கா. கவலைப்படாத என்று ஒட்டைப்பல் தெரிய சிரித்தாள். ஆம்! அம்மைக்கு எப்பொழுதும் விதிகளில்லை காலமுமில்லை. கிழித்து நிரப்புவோம்.

நன்றி,

நந்தகுமார்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்