இப்போது இன்னும் தனிமை கொண்டிருக்கிறேன்
இன்னும் துயருற்றிருக்கிறேன்
மேலும் பலவற்றை பின்னால் உதிர்த்துவிட்டிருக்கிறேன்
இந்த அளவுக்கு நீ என்னை அனுமதிக்கலாம்
என் தேவனே
எளிமையும் தூய்மையும்
இயல்வதல்ல என்றாலும்
இவையேனும் நிகழ்ந்திருக்கிறதல்லவா?
அரிதானவை எத்தனை கூரியவை!
கூரியவை அனைத்திலும் குருதி தோய்ந்திருப்பது
ஏனென்று நீ முன்னரும் சொல்லியிருக்கிறாய்
அணுகுபவை எத்தனை மென்மையானவை
அவை எவருடையவை என்று
நானும் உணர்ந்திருக்கிறேன்
என் தேவனே
இனிய குளிர்ந்த தனித்த பின்னிரவு
இன்னமும் உனது தேவாலயங்களில்
எண்ணற்ற மண்வாழ்க்கைக் கோரிக்கைகளுமாக
உன் மதத்தவர் விழித்தெழவில்லை.
புலரிப்பறவைகளும் நானும்
இந்த அலைக்கழியும் குளிர்காற்றும் மட்டும்
இங்கே எஞ்சியிருக்கிறோம்
உடனிரும்
பிறிதொன்றும் வேண்டுவதற்கில்லை