‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36

36. மலர்வைரம்

காட்டில் மாறாக்கன்னியென இருந்தபோது அசோகசுந்தரியின் துள்ளலும் பொருளிலாச் சிரிப்பும் மழலையும் எதிலும் நிலைக்காமல் தாவும் விழிகளும் உலகறியாமையும் நகுஷனின் கண்ணில் பேரழகு கொண்டிருந்தன. கன்னியுடலில் வாழ்ந்த சிறுமியின் கைபற்றி தேரிலேற்றிக் கொண்டபோது பனித்துளிகளமைந்த வெண்மலரொன்றைக் கிள்ளி கையிலெடுத்து முகர்ந்து நோக்கவும் தயங்கி நெஞ்சோடு வைத்துக்கொண்டு செல்வதாகவே அவன் உணர்ந்தான்.

செல்லும் வழியெல்லாம் அவள் சிட்டுக்குருவியென சிலம்பிக்கொண்டே வந்தாள். முதற்கணம் அவள் ஒரு சிட்டு என்று தோன்றிய அவ்வெண்ணம் வேறு எப்படி ஒப்புமை கொண்டாலும் மீண்டும் அங்கேயே வந்து சேர்ந்தது. தேன்சிட்டு. சிட்டு என உடலில் எப்போதும் ஓர் விரைவசைவு இருந்துகொண்டிருந்தது. அடிக்கடி எழுந்தமைந்து, சிறகு விரித்து  சேர்த்து அடுக்கி, வால் சொடுக்கி துள்ளி அமைந்து, சிறுகால்கள் எடுத்து வைத்து பறந்தெழுந்தமர்ந்து திரும்பிநோக்கி விழியுருட்டி, கிளைமேலேறி அமர்ந்து, உடனே மீண்டும் மண்ணுக்கு வந்து, இருமுறை கொத்தி மீண்டும் பறந்தெழுந்து சிட்டு கொள்ளும் சலிக்காத துடிப்பு அவளிடம் இருந்தது.

சோலைக்கு வெளியே வந்ததுமே அவள் அகவை குறைந்துவருவது போலிருந்தது. சாலைக்கு வந்தபோது அவள் மழலைச்சிறுமகளாக ஆகிவிட்டிருந்தாள். காணும் ஒவ்வொன்றையும் சுட்டி “அது என்ன?” என்றாள். அதற்கு அவன் மறுமொழி கூறுவதற்குள் பிறிதொன்றைச் சுட்டி “அதோ அது! அது என்ன?” என்றாள். அவள் உள்ளம் உதடுகளில் நிகழ்ந்தது.  “அந்த மரம் நகைக்கிறது” என்றாள். “குழந்தைப்பறை அது” என சுட்டினாள். கூகையொன்று மரப்பொந்திலிருந்து எழுந்து வெளிவருவதைப் பார்த்து அஞ்சி கூச்சலிட்டு பாய்ந்து அவனை கட்டிக்கொண்டாள். அவன் தோளில் முகம் புதைத்து “பார்க்கிறது, பார்க்கிறது, அது என்னைப் பார்க்கிறது” என்று கூவினாள்.

மென்பட்டாடை ஒன்று தோள் தழுவியதுபோல் உணர்ந்து அவள் இடைசுற்றி அணைத்தபடி “அஞ்சாதே” என்று அவன் சொன்னான். அஞ்சும் ஒரு மெல்லியலாளை தோள் சேர்த்தணைக்கும்போது மட்டுமே ஆணுக்கெழும் நிறைவை அப்போது அடைந்தான். மறுகணமே அவள் சிரித்தபடி துள்ளி ஒரு குரங்கைப் பார்த்து “அதன் வால்… அதோ, அதன் வால்!” என்று துள்ளத் தொடங்கினாள். “அந்தக் குரங்கு நல்ல குரங்கா?” “ஆம்” என்று அவன் சொன்னான். “குரங்குகள் நல்லவை.”

“அந்தக் குரங்கு… ஆனால்… இதோ, இது என்ன?” என்றாள். அவன் மறுமொழியை எதிர்பாராமல் தேரைச் சூழ்ந்து வரும் வீரர்களைப் பார்த்து கைவீசி “விரைக! விரைக!” என்று ஊக்கினாள். காவல்வீரனொருவன் தேரைக் கடந்து முன்னால் சென்றபோது “பிடியுங்கள்… அவனை பிடியுங்கள்” என்று நகுஷனின் தோளைத்தட்டி துள்ளிக் குதித்து கூவினாள். “அவன் முந்துகிறான்… அவனை கடந்து செல்லுங்கள்… அய்யோ… விரைவு!”

“தேவி, நீ இவ்வண்ணம் கூச்சலிடக்கூடாது” என்றான். “ஏன்?” என்று புருவம் சுருக்கினாள். “ஏனெனில் நீ அரசி” என்று அவன் சொன்னான். “ஏன்?” என்று அவள் மீண்டும் கேட்டாள். “நீ அரசி. அரசியர் இவ்வாறு கூச்சலிடுவதில்லை” என்றான். அவள் வியப்புடன் “ஏன்?” என்றாள். “அது முறையல்ல” என்றான். விழிகள் எண்ணம்கொண்டு சற்றே சுருங்க “முறை மீறினால் என்ன செய்வார்கள்?” என்று அவள் கேட்டாள். “முறை என்பது மீறாமலிருப்பதன் பொருட்டே…” என்று அவன் சொன்னான். அவள் குழப்பத்துடன் திரும்பி “இவர்கள் அனைவருமே முறை மீற மாட்டார்களா?” என்று வீரர்களை நோக்கி கேட்டாள். “ஆம். மீற மாட்டார்கள்” என்று அவன் சொன்னான். “இவர்கள் ஓடிப்பிடித்து விளையாடும்போதுகூட முறை மீற மாட்டார்களா?”

முதல்முறையாக நகுஷன் பொறுமையிழந்தான். “நான் சொல்வதை செய்” என்றான். அக்குரலின் கடுமையால் அவள் முகம் கூம்பி கண்கள் நீர்சிலிர்க்க தேரின் தூணைப் பற்றியபடி விலகி திரும்பி நின்றாள். அவள் உடலில் எழுந்த சோர்வு அவனை உளமிரங்கச் செய்தது. அவள் கைகளைப்பற்றி “உன்னை கண்டிக்கவில்லை. அன்புடன்தான் சொன்னேன்” என்றான். அவள் அவன் கையை உதறிவிட்டு சீற்றத்துடன் “நான் பேசமாட்டேன்” என்றாள். “விளையாட்டுக்குத்தான் சொன்னேன்” என்றான். திரும்பிக்கொண்டு “என்னிடம் பேசவேண்டாம்” என்றாள்.

“இதோ பார்…” என்று நகுஷன் தொடங்க அவள் சினத்துடன் தேர்த்தட்டில் காலை உதைத்து “என்னை திரும்ப காட்டில் கொண்டுவிடுங்கள். நான் அங்கேயே இருந்துகொள்கிறேன். இங்கே எல்லோரும் என்னை வசைபாடுகிறீர்கள்” என்றாள். “சரி, இனி ஒன்றும் சொல்லமாட்டேன்” என்றான். அவள் “அதோ அந்த வீரன், அவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பவன் என்னை  பார்க்கிறான். அவனை இந்த வேலால் அடியுங்கள்” என்றாள்.

நகுஷன் தன்னை மீண்டும் கட்டுப்படுத்திக்கொண்டு “சரி, இப்போது இதைப்பற்றி பேசவேண்டாம். அரண்மனைக்குச் சென்றபிறகு நான் முதுசெவிலியரை அனுப்புவேன். அவர்கள் சொன்னபடி நீ கேட்டால் போதும்” என்றான். “ஏன்?” என்று அவள் மீண்டும் கேட்டாள். “ஏனெனில் நீ அரசி” என்றான் நகுஷன். “அரசியென்றால் விளையாடமுடியுமா?” என்று அவள் கேட்டாள். “விளையாடலாம். அதற்குரிய தோழிகள், மலர்த்தோட்டம் அனைத்தும் உண்டு. ஆனால் எல்லா இடத்திலும் விளையாடக்கூடாது. எங்கு எப்படி இருக்கவேண்டுமென்று ஒரு முறை உள்ளது. அப்படி இருக்க வேண்டும்.”

அவள் நீர்படர்ந்த விழிகளால் தலை சரித்து நோக்கி “இதையெல்லாம் நீங்கள் என்னிடம் முன்னரே சொல்லவில்லை” என்றாள். நகுஷன் “குருநகரியின் அரசியென உன்னை அழைத்துப்போகவே வந்தேன்” என்றான். “அரசியென்றால் அங்குள்ள முதுமகள்களின் சொற்படி நடக்கவேண்டும் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை?” என்றாள். நகுஷன் “சரி, நாம் பிறகு பேசுவோம்” என்று சாலையை பார்க்கத் தொடங்கினான். அவள் “என்னை முதுமகள்கள் வசையுரைத்தால் நான் அவர்களை அடிப்பேன்” என்றாள். அவன் திரும்பியே பார்க்கவில்லை. “அடிக்க மாட்டேன்… ஆனால்…”

அதை அவ்வாறே விட்டு பிறிதொருத்தியென மாறி விந்தையான ஒரு பறவைபோல் ஒலியெழுப்பி கைகளைக் கொட்டியபடி அவள் துள்ளிக் குதித்து “குரங்கு! குரங்கு!” என்றாள். “அதோ, குட்டியுடன் குரங்கு!” அவனால் திரும்பிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்த அன்னைக் குரங்கு அவனை நோக்கி புன்னகைப்பதுபோல் இருந்தது. “அதோ, இன்னொரு குரங்கு…” என்று அவள் அவன் தோளை அறைந்தாள். “அந்தக் குரங்கு சிரிக்கிறது…”

தேரைச் சூழ்ந்து சென்ற காவலர்கள் அனைவரும் அவளுடைய விந்தையான நடத்தையை அதற்கு முன்பே புரிந்து கொண்டுவிட்டிருந்தனர். அவர்கள் முகங்கள் எந்த உணர்வையும் காட்டவில்லையெனினும் விழிகள் அனைத்திலும் திகைப்பும் நகைப்பும் கூர்கொண்டிருந்தன. எவர் முகத்தையும் நோக்குவதைத் தவிர்த்து, முன்னால் வளைந்து எழுந்து வந்து தேருக்கு அடியில் ஒழுகிச் சென்றுகொண்டிருந்த செம்மண் சாலையை மட்டுமே நோக்கியவனாக அவன் தேர்த்தட்டில் நின்று குருநகரியை நோக்கி சென்றான்.

tigerகுருநகரியின் மக்கள் அவன் அவளை அழைத்துவரச் செல்வதை முன்னரே அறிந்திருந்தனர். நகருக்கு பழி எஞ்சவைக்கும் பிறிதொரு அணங்கென்றே அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதை அவனும் ஒற்றர்கள் வழியாக அறிந்திருந்தான். அவளை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்னும் பதற்றம் காட்டுக்குச் செல்லும்போதே அவனிடம் இருந்தது. அவளைக் கண்ட முதற்கணம் அது மறைந்தது. இவளை விரும்பாதோர் இருக்கமுடியாது என்று எண்ணினான். ஆனால் தேரில் வரும்போது அவள் ஒரு கேலிப்பொருளாகிவிடக்கூடுமென்று எண்ணத் தொடங்கினான். கோட்டை வாயில் கடந்து நகருக்குள் அவள் நுழைந்தபோதெழுந்த பெரும்வரவேற்பொலி அவனை உளம் மலரச் செய்தது.

அந்தணர்களும் குலத்தலைவர்களும் அமைச்சர்களும் நிமித்திகர்களும் சூதர்களும் ஏவலரும் கூடிய அரண்மனைப் பெருமுற்றத்தில் சென்று நின்ற தேரிலிருந்து இறங்கியபோது அத்தனை முகங்களும் மலர்ந்து சூழ்ந்திருப்பதை அவன் கண்டான். முதுகுலப்பெண்டு ஒருத்தி கையில் கண்ணேறு நீக்கும் நீர், மலர், சுடர் என்னும் மூன்று மங்கலப்பொருட்களும் உப்பு, மிளகு, மண் என்னும் மூன்று கொடைப்பொருட்களும் கொண்ட தாலத்துடன் அணுகி வந்து தலையுழிந்தாள். அவள் தலைசுழற்றி அதை நோக்கிவிட்டு அதை தன்னிடம் கொடுக்கும்படி கைநீட்டி சிணுங்கினாள்.

மூதாட்டி முகச்சுருக்கங்கள் விரிய சிரித்தாள். இயல்பாகவே குழந்தையிடம் பேசும் மொழி அவளுக்கு அமைந்தது. “ஒன்றுமில்லை அரசி, இது ஒரு சிறிய விளையாட்டு” என்றபடி செங்குழம்பு தொட்டு அவள் நெற்றியில் வைத்து “விழிக்கோள் அகல்க! மங்கலம் பொலிக! எங்கள் அரண்மனைக்கு அகல் சுடரென வருக!” என்று வரவேற்றாள் மூதாட்டி. அவள் அதிலிருந்த செங்குழம்பை ஒரு கை அள்ளி அம்மூதாட்டியின் தலையில் விட்டு “குருதி! குருதி போல!” என்று சொல்லி குதித்து சிரித்தாள். திரும்பி நகுஷனிடம் “குருதி போலவே இருக்கிறது, பாருங்கள்” என்றாள்.

சூழ்ந்திருந்தவர்களின் கண்களில் தெரிந்த திகைப்பு முதுமகளின் கனிந்த சிரிப்பை பெற்றுக்கொண்டதும் முகங்கள் மலர்ந்து நகைப்புகளின் ஒளி அவர்களை சூழ்ந்தது. முதுமகள் “வருக, அரசி!” என்று அவள் கைகளை பற்றினாள். “இவர்களெல்லாம் யார்?” என்று அவளைத் தொடர்ந்து வந்த பெண்களை நோக்கி அவள் கேட்டாள். “இவ்வரண்மனையின் சேடியர், உங்களுக்கு அன்னையும் உறவும் தோழிகளுமாக இருக்கப்போகிறவர்கள்” என்றாள் தலைவந்த செவிலி.

“எனக்குத்தான் அன்னை, தோழி, உறவு என எவருமே இல்லையே?” என்றாள் அசோகசுந்தரி. “இனி இவர்கள்தான் அவ்வாறு இருக்கப்போகிறார்கள்” என்றாள் முதுசெவிலி. “அப்படியென்றால் நானும் இவர்களுக்கு உறவாக இருக்கவேண்டுமா?” என்றாள். “ஆம், இருக்கவேண்டும்” என்றாள் முதுபெண்டு. “நான் எப்படி இருக்கவேண்டுமென்று யார் சொல்வார்கள்?” என்றாள் அசோகசுந்தரி. “நான் சொல்கிறேன், வருக!” என்று அவளை அழைத்துச் சென்றாள் முதுசெவிலி. அவள் “நான் பாட்டெல்லாம்கூட பாடுவேன்” என்றபடி அவள் கைகளை பற்றிக்கொண்டு தலையை அவள் தோளில் சாய்த்து கொஞ்சியபடி சென்றாள்.

நகுஷன் பதற்றத்துடன் குலமூத்தார் விழிகளை நோக்க அவையனைத்திலும் இனிய புன்னகையே நிறைந்திருப்பதைக் கண்டான். அவன் உள்ளத்தில் எழுந்த பதற்றம் அடங்கி முகம் புன்னகைகொண்டது. முதுசெவிலி “இந்த நீர்க்குடத்தை இடுப்பில் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தச் சிற்றகலை வலக்கையில்” என்றாள். “நீரை என்ன செய்யவேண்டும்?” என்று அவள் கேட்டாள். “உள்ளே சென்றதும் நானே வாங்கிக்கொள்கிறேன்.” அவள் உள்ளே எட்டிப்பார்த்து “உள்ளே இருட்டாக இருக்குமா?” என்றாள். “இருக்காது. இந்த விளக்கு அழகுக்காக” என்றாள் மூதன்னை. “ஆம், அழகாக இருக்கிறது. இதை நானே வைத்துக்கொள்ளவா?” என்றாள். “இங்குள்ள அனைத்தும் உங்களுக்குத்தான்.” அவள் வியந்து “எனக்கேவா?” என்றாள். “ஆம் அரசி, வருக!” என அவளை தோள்தழுவி அழைத்துச்சென்றாள் மூதன்னை.

நகுஷன் தன் அறைக்குச் சென்று ஆடைகளைந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது மெல்லிய காலடிகளுடன் உள்ளே வந்த முதுசெவிலி புன்னகையுடன் “கவலை கொள்ளவேண்டாம் மைந்தா, கானகக் குடிலில் தனித்து வாழ்ந்திருக்கிறார். தந்தையை அணுகவில்லை. அன்னையை அறிந்ததே இல்லை. விளையாட்டு ஒன்றைத் தவிர இத்தனை நாட்களில் அவர் செய்தது எதுவுமே இல்லை. அதையன்றி பிறிதெதையும் அறியாமலும் இருக்கிறார். அனைத்தையும் பழக்க முடியும். சில நாட்களாகும்” என்றாள்.  அறிவிப்பின்றி அவன் அறைக்குள் செல்லவும், அவன் உடலை தயங்காது தொடவும் அன்னை என  அவள் உரிமைகொண்டிருந்தாள்.

“மணநிகழ்விற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அதற்குள் குடியினர் கண்முன்னர் மட்டுமாவது அவையடக்கத்துடன் இருக்கும்படி அவளிடம் சொல்ல முடியுமா?” என்றான் நகுஷன். “சொன்னால் புரிந்து கொள்ளக்கூடியவராக இருக்கிறார். அன்புடன் சொல்வனவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற இயல்பும் உள்ளது. எதன்மேலும் சினமோ ஐயமோ வருத்தமோ இல்லை என்பது ஒரு பெரும்பேறு” என்றாள் முதுசெவிலி. “துயரற்றவர்களை எளிய மானுடரால் தாளமுடிவதில்லை என்பது எவ்வளவு பெரிய விந்தை என எண்ணிக்கொண்டிருக்கிறேன். இவ்வுலகின் அனைத்து ஒழுங்குகளும் முறைமைகளும் துயர்கொண்டவர்களுக்காக அமைக்கப்பட்டவை போலும். பிறர் துயரை சீண்டிவிட்டுவிடலாகாதென்னும் எச்சரிக்கையாலேயே நம் இடக்கரடக்கல்கள் அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளன.”

“அவள் துயரற்றிருக்கும்பொருட்டே பிறந்தவள்” என்றான் நகுஷன். முதுசெவிலி “ஒருவகையில் வாழ்ந்து கனிந்து நாம் சென்றடைய வேண்டிய இடத்தில் முன்னரே இருந்துகொண்டிருக்கிறார் நம் அரசி. அவரது வாழ்க்கைச்செலவு என்பது நாம் செல்லும் திசைக்கு எதிரானது. நமக்கு எதிரே அங்கிருந்து இறங்கி வந்துகொண்டிருக்கிறார்” என்றாள். நகுஷன் “அவளுக்கு இன்னும் வயதாகவில்லை. அவள் கொண்ட சொல்பேற்றின்படி அக்குடில்விட்டு எழுந்த பின்னர்தான் அவள் அகவை தொடங்குகிறது. கனிந்து நிறைவுற இன்னும் காலமிருக்கிறது” என்றான்.

முதுசெவிலி “ஆம், அவர் கனியக்கூடும்” என்றாள். “ஆனால் அக்கனிவு ஒரு வீழ்ச்சியோ என ஐயம் கொள்கிறேன். சிறுமியென்றிருந்த நினைவுகள் பெண்களை முதுமைவரை வளர்ந்தபடி தொடர்கின்றன. முதுமையில் அவை முற்றொளி கொள்கின்றன. அதை என்னைப்போன்ற முதுமகள்கள் சொல்லக்கூடும். உங்களைப்போன்ற ஆண்மகன்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.” நகுஷன் சிறுசீற்றத்துடன் “கொஞ்சிக்கொஞ்சி அவளை அவ்வாறே வைத்திருக்கவேண்டாம். அறிந்திருப்பீர்கள், குட்டிக்குதிரை அழகியது. ஆனால் அதை கொஞ்சக்கூடாது. கொஞ்சப்படும் குதிரைக்குட்டி கடிவாளத்தையும் சேணத்தையும் ஏற்றுக்கொள்ளாது” என்றான். “சிறுமி கன்னியென்றாகட்டும். கன்னி அரசியென்றாகி அன்னையென்றாகி மூதன்னையாகி முதிரட்டும். அதுவே கனிதல். அன்றேல் அது வெம்புதல்.”

“நான் சொல்லாட வரவில்லை, மைந்தா. பெண்ணின் முதிர்வு உடலின் போக்கில் நிகழ்வது அல்ல” என்றாள் முதுசெவிலி. “நீ ஐயமோ துயரோ கொள்ளவேண்டியதில்லை. அவரை சீர்ப்படுத்த ஏழு செவிலியர் செலுத்தப்பட்டுள்ளனர். அன்னையென்று இருவர், தமக்கையென இருவர், தோழியென இருவர், இளையவளாக ஒருத்தி. அனைத்தும் அவர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.” “ஆம், முதிய குதிரைகளுடன் குட்டிக்குதிரையை சேர்த்து அனுப்புவதே பழக்கும் வழி” என்றான் நகுஷன். “ஆனால் வைரத்துடன் வைக்கப்படும் பளிங்குகள் தாங்கள்தான் ஒளியை பெற்றுக்கொள்கின்றன” என்றபின் முதுசெவிலி திரும்பிச் சென்றாள்.

tigerநகுஷன் அவளை அரண்மனை மாற்றிவிடுமென எண்ணினான். ஏனென்றால் அவனை அரண்மனை முற்றிலும் மாற்றிவிட்டிருந்தது. அவன் அரண்மனைக்கு வந்த சிலநாட்களில் வெளியே காவலர்கள் குரங்குக் கூட்டம் ஒன்றை முரசெழுப்பித் துரத்தும் ஒலி கேட்டு “என்ன அங்கே? இங்கு அரசுசூழ்தல் நிகழ்கிறதென்று அறியமாட்டீர்களா?” என சினந்தான். “ஒரு குரங்குக் கூட்டம், அரசே” என்றான் காவலர்தலைவன். “அவற்றைத் துரத்த உங்களுக்கு தேரும் புரவியும் தேவையா?” என அவன் கூவினான். தலைவணங்கி காவலர்தலைவன் வெளியே சென்றான். குரங்குக் கூட்டம் படைவீரர்களால் சிற்றம்புகள் எய்யப்பட்டு துரத்தியடிக்கப்பட்டது.

அன்று மாலை அவன் அறைக்கு வந்த முதுசெவிலி “நான் புறங்காட்டுக்கு சென்றிருந்தேன்” என்றாள். அவள் முகம் சிவந்து சினம்கொண்டிருப்பதை உணர்ந்த நகுஷன் “என்ன?” என்றான். “வந்த குரங்குகளில் ஓர் அன்னை இருந்தாள். முதுமகள், விரைவிலேயே இறந்துவிடுவாள். அவள் முகத்தைக் கண்டதுமே நான் அறிந்துகொண்டேன், இப்பிறவியில் நான் பெருங்கடன் கொண்டிருப்பது அவள் ஒருத்தியிடம் மட்டுமே” என்றாள். திகைத்து எழுந்த நகுஷன் “அன்னையா? எங்கே அவள்?” என்றான். “புறங்காட்டில் ஒரு மரத்தில் இருக்கிறாள். நோயுற்றிருக்கிறாள். நான் சென்று அவள் அடிபணிந்து உணவளித்து மீண்டேன். அவளும் என்னை அறிந்துகொண்டாள்.”

கண்ணீருடன் அவன் புறங்காட்டுக்கு ஓடினான். அவனுடன் முதுசெவிலியும் வந்தாள். “அவள் உன்னை காணவிழைகிறாள். ஆனால் அதை கேட்காமலிருக்கும் தன்மதிப்பு கொண்ட பெருங்குடிமகள் அவள்” என்றாள். அவர்கள் சென்றபோது அன்னை கீழே விழுந்திருந்தாள். குரங்குகள் அவளைச் சூழ்ந்து அமர்ந்திருந்தன. அவன் அணுகுவதைக் கண்ட ஒரு குரங்கு முழவோசை எழுப்பியது. அவன் அன்னையை அணுகியதும் அவள் மைந்தர்களில் ஒருவன் அவள் கைகளைப்பற்றி ஆட்டி அவன் வந்திருப்பதை அறிவித்தான். அவள் விழித்தசைகள் அதிர்ந்து இமைகள் கீழிறங்கி நோக்கு பனித்துளியென எழுந்தது. அவனை நோக்கி தன் கையை நீட்டினாள். அவன் அதை பற்றிக்கொண்டான். நகங்கள் எழுந்த முதிய கை நெடுநேரம் நடுங்கிக்கொண்டிருந்தது. பின் அவள் விழிமூடி மூச்சுசீரடைந்து மெல்ல தேய உயிர் அணைந்தாள்.

அவளை அவள் குலத்தவர் தூக்கி காட்டுக்குள் கொண்டுசென்றார்கள். விழிநீருடன் நின்ற நகுஷனிடம் ஒவ்வொரு குரங்காக வந்து கைநீட்டி அவன் கைகளைத் தொட்டு உதட்டைநீட்டி தலைகுனிந்து விடைபெற்றன. பல குரங்குகளின் உடலில் சில்லம்புகள் பட்ட புண்கள் இருந்தன. அவர்கள் சென்று மறைந்ததும் அவன் நிலத்தில் அமர்ந்து அழுதான். மூதன்னை “எப்போதும் எதையும் மறக்காமலிருப்பதே அரசபண்பு. இன்று நீ வந்து அன்னையைக் கண்டது உன் நற்செயல்விளைவாக அல்ல, அவள் கொண்ட நற்பேறினால்தான்” என்றாள்.

ஆனால் மீண்டும் அவன் அரசச்செயல்களில் ஈடுபட்டபோது குரங்கன்னை நினைவாழத்திற்கு சென்றாள். அவன் நாடு திரிகர்த்தர்களிடமும் உசிநாரர்களிடமும் பூசலில் இருந்தது. எல்லைப்பகுதிகளில் அசுரகுடிகளும் நாகர்குடிகளும் ஆற்றல் பெற்றுக்கொண்டிருந்தனர். “நாகர்நாடு நம்மை எக்கணமும் வென்றுவிடுமென நாம் அஞ்சிய காலமொன்றிருந்தது, அரசே. ஆனால் இன்று நாகர்களின் பேரரசன் ஹுண்டன் கால்தளர்ந்து படுக்கையில் கிடக்கிறான். அவன் முன்னின்று படைநடத்தாதவரை நாம் அஞ்சவேண்டியதில்லை” என்றான் பத்மன். ஒவ்வொருநாளும் அவன் அரசப்பணிகளில் மூழ்கவேண்டியிருந்தது. அரசப்பணி ஆற்றும்தோறும் அரசனாக ஆனான். மொழியும் நோக்கும் அரசத்தன்மை கொண்டன. முடியும் கோலும் அவன் உடலென்றே ஆகின. அவ்வாறே அவளும் ஆகவேண்டுமென எண்ணினான்.

பத்மன் அவனுள் எழுந்த அந்தச் சிறுநம்பிக்கையையும் அழித்தான். “தாங்கள் அவர் இப்போது இருக்கும் இவ்வண்ணத்திலேயே ஏற்றுக்கொள்ள பழகத்தான் வேண்டும்” என்றான் அவன். “தாங்கள் கண்டு காமுற்றது அக்கன்னிமையின் அழகையல்லவா? எவ்வளவு எண்ணியும் நான் புரிந்து கொள்ளாதிருப்பது இது ஒன்றே. கன்னிமையின் எழிலையும் துடிப்பையும் கண்டு ஆண்கள் காதல் கொள்கிறார்கள். கைபிடித்த மறுகணமே அக்கன்னிமை எழில் கரைந்து அவள் ஓர் அன்னை என்று ஆகவேண்டும் என விழைகிறார்கள்.”

நகுஷன் சினத்துடன் “பிஞ்சுக்கு ஓர் அழகு உண்டு. தனி மணமும் உண்டு. ஆனால் பிஞ்சென்றே தொடர்வது கனியாகப் போவதில்லை” என்றான். “கனியப் போகும் காய் பிஞ்சிலேயே அதன் இயல்புகளை கொண்டிருக்கும்” என்று பத்மன் சொன்னான். “அரசே, சில மலர்கள் பிஞ்சோ காயோ கனியோ ஆவதில்லை. அவை மானுடர் அறியமுடியாத நோக்கங்களுக்காக படைக்கப்பட்டவை. தொன்மையான  சூதர்பாடலான குஸுமாவளியில் காயாமலர்கள் என்று ஒரு பகுதி உண்டு. காயாகி கனியாகும்பொருட்டு பல்லாயிரம் மலர்களைப் படைத்த பிரம்மன் தன் கலைத்திறன் கண்டு மகிழ்ந்து தான்நோக்கி மகிழ்வதற்கென்றே படைத்தவை அவை என்று அது சொல்கிறது.”

நகுஷன் அதை காதூன்றிக் கேட்பதற்கே கசந்தான்.  பத்மன் சொல்லிமுடிக்கும் உளவிசை கொண்டிருந்தான். முதிர்ந்த அமைச்சர்களுக்குரிய உளக்கட்டுப்பாட்டை அவன் இன்னமும் அடைந்திருக்கவில்லை. “நேற்று அரசி தன் அறைக்குள் விளையாடுவதை சென்று பார்த்தேன். ஒரு குழந்தை விளையாடுவதைக் கொண்டே அது பின்னாளில் எவர் என சொல்லமுடியும் என்பது நிமித்திகநூல் கணிப்பு” என தொடங்கினான். நகுஷன் அவன் விரும்ப ஒண்ணா எதையோ சொல்லப்போகிறான் என்று உணர்ந்தவனாக விழிகளில் விலக்கத்துடன் நோக்கினான். அதிலிருந்த மன்றாட்டே சிறுவனாகிய பத்மனை மேலும் எழுச்சிக்கொள்ள செய்தது.

“அரசே, எழுந்து அமர்ந்து, இதழ் நீரொழுக, திருந்தாமொழி பேசி விளையாடும் சிறு பெண்குழந்தைகளை கண்டிருக்கிறேன். அப்போதேகூட அவர்கள் அன்னையர்தான். சிறு பொருட்களை அவர்கள் கையிலெடுப்பதும் மடியமர்த்துவதும் மார்புசேர்ப்பதும் கண்டால் அவர்களின் கைத்தளிர் பட்டு குழைந்து அப்பொருட்கள் குழந்தைகளாக ஆவதை காணமுடியும். அன்னையென்று ஆவது மட்டுமே பெண்மழலையருக்கு ஆடல்” என்றான் பத்மன்.

“ஆனால் நம் அரசியில் ஒருகணமும் அன்னை எழவில்லை. அவரது உள்ளம் அதை அறியவில்லை. ஏனென்றால் அவர் அன்னையை கண்டதில்லை. உடலும் அறிந்திருக்கவில்லை என்பதே விந்தை. வண்டென்றும் சிட்டென்றும் மானென்றும் குரங்கென்றும் மட்டுமே விளையாடுகிறார். அன்னையென்று ஆடும்படி அவரது களித்தோழிகளிடம் சொல்லியனுப்பினேன். அவர்கள் மரப்பாவைக்குழவியை கொண்டுசென்று காட்டினர். அது என்னவென்றுகூட அவரால் உணரமுடியவில்லை. அவரால் அவ்விளையாட்டில் கலந்துகொள்ளவும் முடியவில்லை. கைக்குழந்தைகளையே அவர் விளையாடும்பொருட்டு அளித்தேன். அவற்றை அவர் தன்னைப்போன்றே எண்ணுவது தெரிந்தது.”

நகுஷன் “அப்படியென்றால்…?” என்றான். “இவரை நாம் சில செயல்களுக்கு பழக்கமுடியும். ஒருவேளை அரசாடை புனையவும், அரியணையில் சற்று நேரம் அமரவும், விழாக்களில் அணிசூடி நின்று குடிவாழ்த்து வழங்கவும் பயிற்றுவிக்கமுடியும். ஒருபோதும் இவ்வரண்மனைக்கோ இக்குடிக்கோ இந்நகருக்கோ உரியவர்களாக ஆக்க முடியாது” என்றான் பத்மன். “பழக்க முடியுமென்று செவிலி சொன்னார்” என்றான் நகுஷன். “அரசே, கிளியையும் மைனாவையும் பழக்க முடியும். குயிலை பழக்க முடியாது” என்று பத்மன் சொன்னான்.

பெருமூச்சுடன் தளர்ந்து “நான் இதை எண்ணவே இல்லை. அவள் மேல் மையல்கொண்டபோது நான் அரசனாக இல்லை” என்றான். “இல்லை அரசே, குரங்கன்னையின் மைந்தனாக இருந்தபோதே நீங்கள் அரசன். ஆகவேதான் உங்களால் அன்று எண்ணிப்பார்க்கவும் இயலாத அழகுடன் இம்மங்கையை பார்த்தபோதுகூட இவளை கைப்பற்ற வேண்டும், உரிமை கொள்ள வேண்டும் என்ற விழைவு உங்களிடம் எழுந்தது. நீங்கள் அஞ்சி விலகவில்லை. ஐயம் கொண்டு ஒடுங்கவும் இல்லை” என்று பத்மன் சொன்னான்.

நகுஷன் நீள்மூச்சுடன் “பிறிதொன்றில் என் உள்ளம் அமையவில்லை, பத்மரே. பிற பெண்கள் பொருட்டெனத் தெரியவும் இல்லை. அரச முறைப்படி நான் பல பெண்டிரை மணப்பேன் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் ஒவ்வொரு ஆணுக்கும் அவன் உளம் அமைந்த பெண்ணொருத்தி உண்டு. எனக்கு அவள் இவளே” என்றான்.

ஓரிரு நாட்களிலேயே முதுசெவிலியும் வந்து சொன்னாள் “அரசியை மாற்ற முடியுமென்று தோன்றவில்லை, அரசே. மலர்போன்ற மென்மை என எண்ணினோம். அணுகுகையில் வைரத்தில் செதுக்கப்பட்டது அம்மலர் என்று தோன்றுகிறது. எதுவும் அவரில் படிவதே இல்லை. இங்கிருந்து எதையும் அவர் உள்வாங்குவதில்லை. அனைத்தும் சிரிப்பாக விளையாட்டாக பட்டு எதிரொளித்து வெளிவந்துவிடுகின்றன.”

நகுஷன் “என்ன செய்வது? மணநாட்களிலாவது அவள் அரசியெனத் தோன்றினால் போதும்” என்றான். “அதைத்தான் மீள மீள சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதுவரைக்கும் எந்த நம்பிக்கையும் அவர் அளிக்கவில்லை” என்றாள் முதுசெவிலி.

முந்தைய கட்டுரைமார்ச் 6 -2017
அடுத்த கட்டுரையோகம் கடிதங்கள்