அன்புள்ள ஜெயமோகன்,
அ.முத்துலிங்கம் அவர்களின் ‘விசா’ சிறுகதையை படித்தேன். படித்து முடித்ததிலிருந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கதை.
‘விசா’ மெல்லிய அங்கதம் கூடிய நடையுடன் துவங்குகிறது. கோணேஸ்வரன் என்ற முதிய கணித ஆசிரியர் ஒரு இயற்கை உபாசகர். குறிப்பாக ஒரு வண்ணத்துப்பூச்சி ஆர்வலர். எட்டு வயதில் வண்ணத்துப்பூச்சியை வலையில் பிடிக்க கற்றுக்கொண்டு, இருபது வயதில் ஆயிரம் வகைகளை சேகரித்தவர். கல்யாணம் முடிந்து முதலிரவில் மனைவி யாமினியின் சேலை வண்ணங்களை பார்த்து பூச்சிவகை ஞாபகத்தில் எழ இரவு மூன்று மணி வரை ஆராய்ச்சியில் மூழ்கிவிடுகிறார். அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கணித வகுப்புக்குள் “நர்த்தனம்” ஆடும் வண்ணத்துப்பூச்சியை தொடர்ந்து, சாக்பீஸும் கையுமாக, வகுப்பை அப்படியே விட்டுவிட்டு, சென்றுவிடுகிறார்.
கோணேஸ்வரன் மூன்று முறை விண்ணப்பித்து அமெரிக்கா செல்வதற்கு விசா பெறுகிறார். பத்து வருடங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்த பொழுது மறுக்கப்பட்டது. அவர் செல்வது வண்ணத்துப்பூச்சிகளை பார்க்க, என்ற விளக்கத்தை நம்ப மறுக்கிறார்கள். இரண்டாவது முறை சம்பிரதாயமான காரணங்களை சொல்லியும் பெற முடியவில்லை. எப்படியாவது பெற வேண்டுமென்று மூன்றாவது முறை உண்மையை சொல்லியே விண்ணப்பித்து பெற்றுவிடுகிறார். அலாஸ்காவிலிருந்து மெக்ஸிகோ வரை, குளிர்காலங்களை கடப்பதற்காக பயணம் செய்யும் ‘மொனார்க்’ பட்டாம்பூச்சியை கலிஃபோர்னியாவில் பார்க்க ஒரு வழியாக செல்கிறார் கோணேஸ்வரன். ”நந்தனார் சிதம்பரதரிசனத்துக்கு தவித்ததுபோல” பாடுபட்டு கடைசியில் “ஆதர்ஸம் கைகூடுகிறது”.
அமெரிக்காவில் சுங்க அதிகாரிகள் கோணேஸ்வரன் வைத்திருக்கும் அரிய வண்ணத்துப்பூச்சி specimen ஒன்றை குப்பையில் போட்டுவிடுகிறார்கள். நெஞ்சு பதைபதைக்கிறது. ஆனால் வெளியே வந்ததும் “தன் மனோரதம் ஈடேறப்போகிறதென்ற மகிழ்ச்சியில்” திளைக்கிறார் கோணேஸ்வரன். அவரை வரவேற்க வந்த தூரத்து சொந்தம் கணேசனுக்கு அவரின் பயண நோக்கம் மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. இவர் கிறுக்கா மேதையா? என்று எண்ணவைக்கிறது.
அடுத்த நாள் மொனார்க் வண்ணத்துபூச்சியை பார்க்க செல்கிறார்கள். காடு முழுவதும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மொனார்க் வண்ணத்துபூச்சிகள் இலைகளையும், மரங்களையும் மறைத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றன. காட்சியை பார்த்து பூரித்துப் போகிறார் கோணேஸ்வரன். அவ்வளவு இன்பத்தை தாங்க முடியாதவராக, பரவசம் ததும்புகிறார். நடுங்கும் அவரை கையை பிடித்துக் கொண்டு போய் மர இருக்கையில் அமரவைக்கிறான் கணேசன்.
கணேசனிடம் விம்மியபடியே பேசிச்செல்கிறார், “தம்பி! இது ஒரு புண்ணியபூமி. இதில் காலணியுடன் நிற்கக்கூட எனக்கு கூசுகிறது. பத்தாயிரம் மைல் நான் பறந்து வந்தது இதை பார்க்க அல்லவோ…இதற்காக எத்தனை கஷ்ட்டப்பட்டேன், எவ்வளவு அவமானம்… இந்த விசாவுக்கு எவ்வளவு பாடு படுத்திவிட்டார்கள். எவ்வளவு கேள்விகள்…? இந்த வண்ணத்துப்பூச்சிகள் அலாஸ்காவிலிருந்து மெக்ஸிகோ வரை பறக்கின்றனவே! இவைக்கெல்லாம் விசா யார் கேட்கிறார்கள்? இவைக்குள்ள சுதந்திரம்கூட இந்த மனிதனுக்கு கிடையாதா? வாஸ்கொட காமாவுக்கும் கொலம்பஸுக்கும் யார் விசா கொடுத்தார்கள்? அவர் உலகை விரித்தது இப்படி நாட்டுக்கு நாடு இரும்பு வேலி போடுவதற்கா? இயற்கை அளித்த இந்த மகா அற்புதத்தை பார்பதற்கு விசா கேட்பது எவ்வளவு அநியாயம்? இமயமலையும், சகாரா பாலைவனமும், நயாகரா வீழ்ச்சியும், அமேசன் காடுகளும் உலகத்து சொத்தல்லவா?”
கணேசன் வாங்கி வந்த குளிர்பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு, கோணேஸ்வரன், “தம்பி, 180 நாடுகளுக்கும் போக விசா வேண்டும், ஆனால் ஒரு இடத்துக்கு மட்டும் விசா தேவையில்லை. அது என்ன தெரியுமா?” என்று கேட்கிறார். கைகளை மேலே தூக்கிக்காட்டி “அங்கே போவதற்கு மட்டும் விசா தேவையில்லை. அதுவரையில் பெரிய ஆறுதல்.” என்கிறார். அவருடைய வண்ணத்துப்பூச்சி சேகரிப்புக்கு ஒரு மொனார்க்கை பிடிக்கவில்லையே என்கிற கணேசனிடம் “உலகத்தில் இருக்கும் எல்லா வண்ணத்துப்பூச்சிகளுக்கும் இது தான் அரசன். கோவிலிலே வந்து இந்தக் காரியத்தை செய்ய முடியுமா? இதை எப்படி பிடிப்பேன்?” என்கிறார். விருப்பமில்லாமல் ஆனால் நேரம் ஆகிவிடுவதனால் கோணேஸ்வரன் கணேசனுடன் அங்கிருந்து விலகுகிறார். அப்பொழுது ஒரு மொனார்க் வண்ணத்துப்பூச்சி அவரை வருடிச்செல்கிரது. பூரித்துப்போகிறார். காரில் ஏறிக்கொள்கிறார். அவருக்கு நந்தனாரின் ஞாபகம் வருகிறது. அந்த பக்தியை அவரும் உணர்ந்து தேகம் நடுங்குகிறார். கணேசன் காரை ஓட்டிக்கொண்டிருக்கையிலேயே விசா தேவையில்லாத ஓர் உலகத்துக்கு சென்றுவிடுகிறார்.
எல்லைகளில்லா உலகத்தை பற்றி ஒரு தனி மனிதனின் கோணத்தை சொல்லும்பொழுது ‘விசா’ அறம் வரிசையில் வந்த ‘உலகம் யாவையும்’ கதையை நினைவுறுத்தியது. அதையும் திரும்ப படித்தேன்.
நடையளவில் வேறுபாடுகள் பல இருந்தாலும், ஒரே விழுமியத்தின் தனிமனிதப்பார்வையை விசா முன்வைப்பதாகவும், அதே விழுமியத்தின் உலகளாவிய பார்வையை உலகம் யாவையும் சொல்லுவதாகவும் பார்க்கிறேன்.
‘உலகம் யாவையும்’ கதையில் டாக்டர் சாமி கார்ல் சகனின் புரோக்காஸ் பிரெய்ன் பற்றிச்சொல்லும் பொழுது “ராத்திரியில் உலாவும் கிறுக்கர்கள் இல்லாவிட்டால் அறிவியலே இல்லை.”, என்கிறார். அ.முத்துலிங்கத்தின் கோணேஸ்வரனும் அந்த வகையில் ஒரு கிறுக்கனே. காரி டேவிஸ்ஸும் ஆசிரியரிடம் “நீ சிரிக்கிறாய். இதை கிறுக்குத்தனம் என்கிறாய். நான் உலகின் இருநூற்று ஐம்பது நாடுகளில் பல்லாயிரம் பேர் இந்தச் சிரிப்பை சிரிப்பதை கவனித்திருக்கிறேன்… நூறுவருடங்களுக்கு முன் கறுப்பனும் வெள்ளையனும் சமம் என்று சொன்னபோது இப்படித்தான் சிரித்திருப்பார்கள்.”, என்கிறார். ஒரே விதமான கிறுக்குத்தனத்தின் உந்துதலால்தான், காரி டேவிஸ்ஸும், கோணேஸ்வரனும் இட்டுச்செல்லப்படுகிறார்கள். காரி டேவிஸ்ஸை கொள்கையளவில் பின்தொடரும், அவரை ஒரு ஆதர்ச ஆளுமையாக மதிப்பிடும் கோணேஸ்வரனை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது.
காரி டேவிஸ்ஸின் தனிச் சிறைவாச பகுதியில், எல்லைகளில்லா உலகத்தை வேதாந்தம் வழியாக அவர் தனக்கென உருவகித்துக் கொள்ளுகிறார். பல தேசங்கள் அவரின் உலகக் குடிமை சிந்தனையை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், புற உலகால் அது நடைமுறைக்கு ஒத்துவராத இலட்சியவாத நோக்காகவே பார்க்கப்பட்டாலும், தென்னாப்ரிக்காவின் சிறையில் அவர் அந்த எல்லையில்லா வாழ்க்கையை அருவமாக, பரிபூர்ணமாக வாழ்ந்துவிடுகிறார். சிறையை விட்டு வெளியே வந்த பிறகு, புறஉலகம் மூச்சடைக்கும் அளவுக்கு சிறியதென்றுணரும் அளவுக்கு, அவர் சிறையில் சுதந்திரத்தை உணருகிறார். ஆம், அவர் சிறையினுள், கண்டங்களை தாவித்தாவி கடக்கும் ஒரு மொனார்க் வண்ணத்துப்பூச்சியாகவே வாழ்கிறார்.
– விஜய்