ஊட்டி வேதாந்த வகுப்பு – ஒரு நினைவுப்பதிவு

பூர்ணமது , பூரணமிது

பூரணத்தில் இருந்து பூர்ணம் வெளிப்பட்டது

எடுத்தாலும் சேர்த்தாலும் எடுத்ததும் சேர்த்ததும்

எஞ்சுவதும் கொண்டதும் பூர்ணமே

சாந்தி சாந்தி சாந்தி

சாந்தி மந்திரம் ஈஷா உபநிஷதம்

 

vyasaprasad

ஊட்டி நாராயண குருகுலம் முன்னெப்போதும் இப்படி இருந்ததில்லை. அதே சூழல், அதே கட்டிடம் ஆனால் மதிப்புணர்வு வேறு.  கடந்த பிப். 25,26 இருநாட்கள் 12 பேர்களுடன்  ஸ்வாமி வியாஸப்ரசாத்தின் வேதாந்த வகுப்பில் கலந்து கொண்டேன். பத்து பேரே அதிகம் என்பது அவரின் எண்ணம். ஆகவே அதிக ஆட்களை அழைத்துச் செல்ல இயலவில்லை. இது “விஷ்ணுபுரத்தின்” இன்னுமொரு நிகழ்வு.

சில ஐயங்களை தீர்க்கும் பொருட்டு மீண்டும் புதன் கிழமை அவரை சந்தித்தேன்.

2

ஸ்வாமி வியாஸாவின் காணொளிகளை கடந்த ஒரு வாரகாலமாகவே பார்த்து எங்களுக்குள் உரையாடி ஒரு தயாரிப்புடனேயே சென்றிருந்தோம். அந்த காணொளியில் அவர் வகுப்பெடுத்த விதமே மிக சுவாரஸ்யமாக இருந்தது.

ஒரு காணொளியில் யதியின் ஒரு உதாரணத்தை வரைந்து கூறி இருப்பார். இரண்டு வெண் குவியல்கள் உள்ளது, ஒன்று சக்கரை மற்றொன்று உப்பு. குழந்தை இரண்டையும் அதன் நிறத்தை வைத்து ஒன்றெனக் கூறும், ஒரு சமையற்காரி இரண்டும் வேறெனக் கூறுவாள், ஒரு விஞ்ஞானி இரண்டும் அணுக்களால் ஆனது ஆகவே இரண்டும் ஒன்றே என்பார்.

எனது பயணம் குழந்தையில் இருந்து விஞ்ஞானிக்கு, உப்பிலிருந்து சக்கரைக்கு.

இனி காணொளியிலும் வகுப்பிலும் ஸ்வாமி வியாஸப்ப்ரசாத்தின் வார்த்தைகளில் :

தொழிற்புரட்சிக்கு பின் மேற்குலகம் ஆச்சர்யத்தில் இருந்து ஐயத்திற்கு சென்றது (from wonder to doubt), அறிவியல் பூதாகரமாக வளர்ந்து அது அனைத்து மீபொருள் (meta phisical field) துறையையும் பரிசோதித்து, அதன் அடித்தளத்தை ஆட்டம் காண செய்த்து. பின்னர் குவான்டம் கொள்கை வந்ததும் மீபொருள் துறை மறுமலர்ச்சி கண்டது. பிற்கால வேதாந்தம் உத்திர மீமாம்சை எனப்படும், இது இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று, பிற்கால வேதாந்தம் என்றால் அது அத்வைதம், துவைதம் மற்றும் விஷிட்டாத்வைதம்.

ஊட்டி நாராயண குருகுலம் அத்வைத தரிசனத்தில் நம்பிக்கை கொண்டது. நாராயணகுருவுக்குப்பின் வேதாந்தம் தன்னை நவீனமயமாக்கியது, வறட்டு வேதாந்தம் என்கிற அடைமொழியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. முன்னேறிய அறிவியலின் கூறுகளையும், மேற்கு தத்துவஞானிகளையும் உதவிக்கு அழைத்துக் கொண்டது. ஆகவே முன்னெப்போதும் இல்லாத அளவு அது சுவாரஸ்யமானது. பர்மனைட்சும், ஹெராக்லிடீசும், ஸ்பினோசாவும், கான்ட்டும், ஹெகலும், ஷ்ரோடிங்கரும், பெர்க்சனும் அறிதல் வட்டத்திற்குள் வந்தனர். ஹெகலைத் தவிர்த்து இவர்கள் அனைவரும் வேதாந்ததால் ஈர்க்கப் பட்டார்கள், ஷோபெண்ஹரர் மற்றும் நீட்ஷே தமது அறிதலை பெரிதும் வேதாந்தத்தை முன்வைத்தே பேசினார்.

3

Uncertainty principle, Schrodinger’s cat போன்றவை இந்த வேதாந்த வகுப்பில் புழங்கியது. நவீன அறிவியலுடன் வேதாந்தத்துக்கான ஓர் உரையாடல்முனையை திறக்கவே நாராயணகுருகுலம் முயல்கிறது. வேதாந்தத்தை நவீன அறிவியலைக்கொண்டு ‘நிறுவும்’ முயற்சி அல்ல இது

நாராயண குருகுல மரபு, பிரஸ்தானத் த்ரயத்தை (பிரம்ம சூத்திரம், கீதை மற்றும் உபநிஷத்துக்கள்) தமது அடிப்படை நூல்களாக கொள்கிறது. நாராயண குருவின் ஆத்மோபதேச சதகம் ஸ்வாமி வ்யாஸப் பிரசாத்தின் அடிப்படை நூல், அவர் இதை தனது சுருதியாகக் கொள்கிறார்.

அ. வாழ்க்கையை இரு பிரிவுகளாக பிரிகிறார்கள், செங்குத்து வாழ்க்கை அதாவது ஆன்மிகம் சார்ந்தது, பக்கவாட்டு பார்வை அது லௌகீகம் சார்ந்தது. செங்குத்து வாழ்க்கை மதீப்பீட்டையும் பக்கவாட்டு வாழ்க்கை வெற்றி, பொருள், புகழ் போன்ற சாதனைகளையும் சார்ந்தது. இரண்டும் சந்திக்கும் வெட்டு புள்ளியே சுயம். அங்கிருந்து லௌகீகமாக பக்கவாட்டில் நகரலாம், ஆன்மீகமாக செங்குத்தாக உயரலாம். இந்த செங்குத்து வாழ்க்கை மட்டுமே இலக்கு.

 

4

ஆ. ஒரு மாணவனுக்கு முதலிலேயே வேதாந்தத்தின் உச்சகட்ட ஞானம் அறிமுகப்படுத்தப்படும். இதுபடிப்டியான கல்வியில் நம்பிக்கை வைப்பதில்லை. இந்த அதி உயர் வேதாந்தத்தை அவன் அறிவது உடனடியாக இருந்தாலும் உணர்வதற்கு சில காலம் பிடிக்கும். பொதுவாக சுமார் 12 ஆண்டுகள்.

இ. வேதாந்தக் கல்வி ஒரு முழுமைநோக்கில் (contemplation)   கூர்உயர்தல் (transcendental) என்கிற வழியைக் கொண்டுள்ளது அதன் இலக்கு முழுமை (absolute) . யோகக் கல்வி மாறுபட்டது அது. யோகம் உள்ளொடுங்குதலையும் செய்பயிற்சியையும் தனது தியானமாகக் கொண்டுள்ளது அதன் இலக்கு கைவல்யம். ஒரு பெரும் நோக்கில் இரண்டு அடைதலும் ஒன்றே.

1

ஈ. தத்துவக் கல்வியை நோக்கி வருபவனுக்கு பொதுவாக இரண்டு கேள்விகள் இருக்கும் அது “நான் யார்” மற்றும் “இப்பிரபஞ்ச காரணி எது”.

இவ்வகுப்பில் பெரிதும் பேசப்பட்டது முக்குணக்கங்கள் மற்றும் சுதர்மம். சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஒரு சுழலும் முக்கோணம், சிலநேரங்களில் சத்வம் மேலிருக்க பிற இரண்டும் கீழிருக்கும். அதே போல மற்றவையும் மேற்செல்லும். எது பிரதான ஆதிக்கத்தை செலுத்துகிறது எனப் பார்த்து அக்குணத்தை சேர்ந்தவன் அவன் என ஒருவாறு வகைப்படுத்தலாம். ஆனால் குணங்களும் உயர்தலுக்கு தடையே, குணங்களை கடந்த குணாதீத நிலையை அடைவதே இலக்கு.

சுதர்மம் ஒரு தொழில்படுதலில் நாம் நிறைவுகொள்ளல். நிறைவுறும் தொழிலை தேடிக் கொள்ளலாம், அல்லது ஒரு சுதர்ம தரிசனமடைந்து தமது வாய்க்கப்பட்ட  தொழிலை சுதர்மமாகக் கொள்ளலாம்.

மேலுச்சங்களைப் போலவே கீழும்சங்களும் ஆன்ம உணர்வை அடைய உதவுமா என்றால் அல்ல, கீழ்மைகளை மேன்மைகளுடன் குழப்பிக் கொள்வது அவித்யா எனப்படும். இந்த முதல் படியில் இருந்து தான் வேதாந்தக் கல்வி துவங்குகிறது.

ஒரு மாணவனுக்கு ஷமா, தாமா, உபர்மா, தீக்ஷா, ஷ்ரத்தா மற்றும் சமாதானா ஆகியவை தகுதிகள், அதேபோல ஒரு குருவுக்கு தரிசனமடைந்திருத்தல், சுருதிகளில் நல்ல பயிற்சி மற்றும் சீடனை பயன்படுத்திக் கொள்ளாதிருத்தல் ஆகியவை தகுதிகள்.

அறிதலில் உள்ள தடைகள் கிளேஷைகள் எனப்படும். அவித்யா, அஸ்மிதா, ராகா, த்வேஷா மற்றும் அபிநிவேஷா ஆகும் இதை பதஞ்சலி யோக சூஸ்திரத்தில் காணலாம்.

முற்பிறப்பு மறுபிறப்பு, மேற்கத்திய தத்துவவியல் மறுத்தல் வாதத்திற்கும் நமது தத்துவ நோக்கில் முரண்பாடுகளும் உள்ள வேறுபாடு, ஆகியவை பற்றியும் கேட்கப்பட்டது. மே மாதம் முதல் சீராக அடுத்த வகுப்புகளுக்கு செல்ல இருக்கிறோம்.

ஸ்வாமி வியாசரை எனக்கு 8 ஆண்டுகளாகத் தெரியும், அவரை அணுக இத்தனை ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது. ஆம் வேதாந்தத்தில் உயர்தத்துவம் முன்னரே அறிமுகப் படுத்தப்பட்டு விடும், உணர்வதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும்.

கிருஷ்ணன்

 

சுவாமி வியாசப்பிரசாத் காணொளி வகுப்புகள்

நாராயணகுருகுல துறவியர்

 

வியாசப்பிரசாத் வகுப்புகள்

வேதாந்தவகுப்புகள்

குருகுலமும் கல்வியும்

நாராயணகுருகுலம் நிதியுதவி

 

ஒரு விண்ணப்பம்

 

 

முந்தைய கட்டுரைரவிசுப்ரமணியன் ஆவணப்படங்கள்
அடுத்த கட்டுரைமீண்டும் அறிவியலுக்கு…