காமிக்ஸ் -கடிதங்கள்

LionComicsIssueNo164DatedOct2000Mara[3]

 

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் சாருக்கு,

வணக்கம். உங்களின் இன்றைய வலைப்பக்கத்தில் எங்களது சமீப வெளியீடு (என் பெயர் டைகர்) பற்றியதொரு விரிவான பதிவுக்கு நன்றிகள். வெகுஜன ரசனையிலிருந்து வெகு தூரத்தில் ஒதுங்கி நிற்கும் காமிக்ஸ் இலக்கியத்துக்கு, தங்களைப் போன்ற ஆற்றலாளர்களின் பங்களிப்பு பெரிதும் உதவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை.

கதையின் மையத்தில் வந்திடும் அந்தச் “செவ்விந்தியச் சிறார்களைக் கிருத்துவர்களாக மதமாற்றம் செய்யும் யுக்திக்கு” நாயகர் டைகர் எதிர்ப்புச் சொல்வது போலவே கதை சித்தரிக்கப்பட்டுள்ளது சார். அதனை முன்மொழியும் மேல் அதிகாரிகளின் பேச்சுக்கு டைகர் மறுப்புச் சொல்கிறார். அந்தச் சிறு பிசிறைத் தவிர்த்து தங்களின் மற்ற வரிகள் சகலமும் மிகுந்த உயிரோட்டத்துடன் இருந்தன! தங்களின் பரந்த வாசக வட்டத்துக்கு காமிக்ஸ் எனும் சுவையினை அறிமுகம் செய்திட இது நிச்சயம் உதவிடும்! எங்களது நன்றிகள் சார்!

அன்புடன்,

S .விஜயன்

எடிட்டர்

LION – MUTHU COMICS

8/D-5, Chairman PKSAA Arumuga Nadar Road,

Ammankoilpatti, SIVAKASI 626 189. South India.

Tel : 04562-272649.

www.lion-muthucomics.com

Our Online Sales Website : http://lioncomics.in/

Our Paypal id: [email protected]

*

அன்புள்ள விஜயன் அவர்களுக்கு

நானும் நீங்கள் சொன்ன பொருளில்தான் எழுதியிருந்தேன். ஆனால் கதையை முழுமையாகச் சொல்லிவிடக்கூடாதென்பதனால் குறைவாகவே சொன்னேன். உங்கள் பதிப்பு முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்

ஜெ

***

அன்புள்ள ஜெ

காமிக்ஸ் பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசித்தேன். நுணுக்கமான கட்டுரைகள். எத்தனை தீவிரமான வாசிப்புக்குள்ளும் நாம் நம் சிறுவனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை நானே எனக்கும் ஒரு பாடமாக வைத்திருக்கிறேன். இல்லை என்றால் என்ன ஆகும் என்றால் புத்தியை வைத்து உடைத்துப்பார்க்கும் விஷயங்களில் மட்டுமே நமக்கு ஆர்வம் இருக்கும். மற்ற அனைத்தும் பெரிதாகப்படாது. முக்கியமாக நாம் இலக்கியங்களை வாசிக்கும்போது அப்படியே அதற்குள் கனவுபோல புகுந்து நாமும் அங்கே வாழ ஆரம்பிக்கவேண்டும். அந்த அனுபவம் இல்லாமலாகிவிடும். வெறுமே தெரிந்துகொள்ளும் அனுபவம் மட்டுமே எஞ்சும். இதை நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் என நினைகிறேன்

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெ

அசோகமித்திரன் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பேட்டியிலே அவருக்கு பிடித்த புஸ்தகம் என்று கேட்டபோது கௌண்ட் ஆஃப் மாண்டிகிரிஸ்டோ என்னும் நூலைச் சொன்னார். ‘கற்பனையைத் தூண்டிவிட அருமையான சாதனம்’ என அவர் சொன்னது ஞாபகம் இருக்கிறது. எப்போதானலும் சரி கற்பனையைத்தூண்டுவதே இலக்கியத்தின் முதல் அம்சம். அசோகமித்திரன் போன்ற ஒரு யதார்த்தப்படைப்பாளி அப்படிச் சொன்னது அன்றைக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று அதனப்புரிந்துகொள்ளமுடிகிறது. காமிக்ஸில் மூழ்கும் மனம் கொண்ட ஒருவரால்தான் போரும் அமைதியும் நாவலையும் உணர்ந்து வாசிக்கமுடியும் என நினைக்கிறேன்

சாரங்கன்

***

என்பெயர் டைகர்

கடவுள் இல்லாத நிலம்

 

முந்தைய கட்டுரைகார்ல் சகன் ,கடிதம்
அடுத்த கட்டுரைநாட்டியப்பேர்வழி