என் பெயர் டைகர்

டைகர்

 

சென்ற சில மாதங்களாகவே நான் நிறைய வாசிப்பது முத்து காமிக்ஸ் மற்றும் இணையத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் ஒபேலெக்ஸ் காமிக்ஸ்களை. என் எண்ணங்கள் இருந்துகொண்டிருப்பது மகாபாரதத்தில். அதிகம் வாசிப்பவை அதைச்சார்ந்த ஆய்வுநூல்கள். சொல்லப்போனால் நவீன ஆங்கிலமே ஏதோ அயல்மொழி போலத் தோன்றுமளவுக்கு எங்கோ இருக்கிறேன். நாளிதழ்களை, அன்றாட விஷயங்களை மிகமிகக்குறைவாகவே வாசிக்கிறேன். அவ்வப்போது சமகாலத்திற்கு வந்துவிட்டு மீண்டும் பின்வாங்கிச்செல்கிறேன்.

ஆகவே எழுத்தின், வாசிப்பின் இடைவெளிகளில் இளைப்பாறுவதற்கு வேறுவகைநூல்கள் தேவையாகின்றன. எப்போதுமே தனிவாழ்க்கையில், சிந்தனையில் ரொம்பவும் சீரியஸாக இருப்பது எனக்குக் கட்டுப்படியாவதில்லை. என் இயல்பே வேறு. சிரிப்பும் விளையாட்டும் இல்லாத ஒருநாள் கடந்தால் அது இழப்பென்றே மாலையில் தோன்றும். அதற்கான நண்பர்களே உடனிருக்கிறார்கள். சைதன்யா சொல்வதுபோல அப்பா ஒரு ‘கான்ஷியஸான லூசு’

துப்பறியும்நாவல்களையும் சாகசநாவல்களையும் விரும்பிப்படிப்பது ஒருவகையில் என் இளமையை தக்கவைக்கும் முயற்சியும்கூட. அவை என்னுள் உள்ள அழியாத சிறுவனை குதூகலப்படுத்துகின்றன. ஹாங்காங் சண்டைப் படங்கள், ஹாலிவுட் சாகசப்படங்கள் மேல் தணியாத மோகம் எப்போதும் எனக்கு உண்டு.

சினிமாவில் நான் சீரியஸ் படங்களை விரும்புவதில்லை. விதிவிலக்குகள் என்றால் மிகமிகச்சீரியஸான படங்கள், டெரென்ஸ் மாலிக் அல்லது ஹெர்ஷாக் போல. அதுவும் எப்போதாவது, மனதில் அந்த அளவுக்கு இடைவெளி இருக்கும்போது மட்டும். சினிமாவே பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய ஊடகம், நேரடியாக நிகழும் கனவு, அதிலென்ன சிந்தனை என்பதே என் எண்ணம். சினிமா பார்க்கும்போது எப்போதும் எனக்கு பன்னிரண்டுவயது.

நீண்ட இடைவெளிக்குப்பின் படக்கதைகளுக்கு வந்தது அவ்வாறுதான். தற்செயலாக கடையில் ஒரு டெக்ஸ்வில்லர் காமிக்ஸ் வாங்கினேன். என் கனவுநிலமான வன்மேற்குக்குச் சென்று சேர்ந்தேன். நேரில் சென்று அந்த நிலத்தை பார்த்தபோதும் அந்தக்கனவு கலையாமலிருக்கிறதென்பதே பெரிய ஆச்சரியம்தான். மோவே பாலை வழியாகச் செல்லும்போது நண்பர் திருமலைராஜன் இருந்தது தென்திருப்பேரையில். நான் இருந்தது கௌபாய் உலகில்

Blueberry25

முத்து காமிக்ஸ் என் இளமையில் பெரும் கனவை விதைத்த நூல்களை வெளியிட்டிருக்கிறது. சொந்தத் தோட்டத்திலேயே தேங்காயும் பாக்கும் திருடி விற்று வாங்கிய புத்தகங்கள் எத்தனை. முல்லை தங்கராசனை ஒருமுறை நேரில் காண வேண்டுமென்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். இன்று முத்து காமிக்ஸ் மீண்டு வந்துள்ளது.

சற்று முன் அவர்கள் வெளியிட்ட என்பெயர் டைகர் நூலை வாசித்தேன். முழுக்க வண்ணப்படக்கதை. உரையாடல்களும் உறுத்தாமல் உள்ளன [நல்லவேளையாக நம்மூர் பேச்சுமொழியை அமைத்து கொலை செய்யவில்லை]. இது ஒரு சாகஸப் படக்கதை என்பதை விட ஒரு முழுநாவல் என்பதே பொருத்தம். ஏராளமான கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நுட்பமான குணாதிசயங்கள். கதைநிலம் விரிவான தகவல்களுடன் கண்முன் எழுகிறது. அங்கிருந்த சமூக வாழ்க்கையின் ஒட்டு மொத்தச் சித்திரத்தையே அளிக்கிறது

அத்துடன் மிகக்கவனமாக முன்னும் பின்னும் நெய்யப்பட்ட கதைச்சரடுகள் ஆச்சரியமூட்டுகின்றன. ஒன்று டைகரின் நினைவு. இன்னொன்று அவனைக் கொல்லத் தொடர்பவர்களின் கதை. இன்னொன்று அந்த சிறுநகரில் நிகழும் கொலை கொள்ளைகளின் பின்னணியும் அதற்கு எதிராகப் போராடும் காவலர்களும் .இன்னொன்று செவ்விந்தியர்களின் போராட்டம். இவையனைத்தையும் எழுத வரும் எழுத்தாளர்களின் வாழ்க்கை கடைசியாக. கச்சிதமாக அத்தனை கதைகளும் ஒன்றிணைகின்றன.

அனைத்துக்கும் மேலாக செவ்விந்தியர்களை வெறும் காட்டுமிராண்டிகளாக காட்டாமல் அந்நிலத்தின் உரிமையாளர்களாக, வாழ்க்கைக்காகப் போராடுபவர்களாகக் காட்டும் கோணம் நமக்கு முக்கியமானது. செவ்விந்தியர் தலைவனின் பெருந்தன்மையும் ஆண்மையும் மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

பலவகையிலும் ஆஸ்திரேலியாவின் கதையுடன் ஒத்துப்போகிறது இக்கதை. செவ்விந்தியக் குழந்தைகளைப் பிடித்துவந்து ஓர் அனாதை இல்லம் நடத்தி அங்கே அவர்களை வலுக்கட்டாயமாக கிறித்தவர்களாக ஆக்குகிறார்கள். தங்கள் குழந்தைகளைச் சிறைமீட்கப்போராடும் செவ்விந்தியத் தலைவனின் கதையே மைய இழை

”கிறித்தவர்களாக ஆன செவ்விந்தியர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் அவர்களை கீழ்மக்களாகவே நடத்துவோம். அவ்வாறாக அவர்களின் வாழ்க்கையை நாம் அழிப்போம். ” என மனக்கசப்புடன் கதாநாயகன் டைகர் சொல்கிறான். அதுவே கதையின் மைய வரி என நினைக்கிறேன். அவ்வகையில் இது ஒரு மாபெரும் சூறையாடலின் வரலாறும்கூட.

எளிமையான நம்மூர் வணிகக் கதைகளுக்குப் பழக்காமல் குழந்தைகளை இந்தவகை ஊடுபாவுகள் கொண்ட கதை சொல்லலுக்குப் பழக்குவது நல்லது என்று தோன்றுகிறது. சுஜாதாவிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வரும் பாதையை விட இது இன்னும் அணுக்கமானது, நேரடியானது

 

முந்தைய கட்டுரைதேவதேவன் – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–30