29. பிறிதொருமலர்
வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஊர்வசி ஆலயம் அமைந்த சோலைவிட்டு கிளம்பும்போது பீமன் மூச்சைக்குவித்து இழுத்து தொலைவில் எழுந்த மெல்லிய நறுமணத்தை முகர்ந்து அத்திசை நோக்கி ஓநாய்போல மூக்கு கூர்ந்தபடி நடந்தான். அந்த மணம் மிக அருகே என ஒருகணம் வீசியது, மிக அப்பாலென மறுகணம் தோன்றியது. அது வெறும் உளமயக்கே என அடிக்கடி மாயம் காட்டியது. அந்த ஊசலில் ஆடிச் சலித்து அதை முழுமையாக விலக்கியபடி நடந்தபோது அதுவே வந்து அவர்களை அழைத்துச்சென்றது.
ஊர்வசியின் ஆலயத்திலேயே அவர்கள் ஓர் இரவை கழித்தனர். இரும்புநீர்மை என குருதி மாறி தசைகள்மேல் பேரெடையைச் சுமத்தியது போன்றதொரு களைப்பு பீமனை ஆட்கொண்டது. உடலை சற்றும் அசைக்கமுடியாதவனாக அவன் சருகுமெத்தைமேல் படுத்து இருண்டுவிட்ட வானை நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்கள் துளித்து ஒளிகொண்டு ததும்பி அதிர்ந்து நின்ற வானம். மெல்லிய அதிர்வொன்று நிகழ்ந்தால் அவையெல்லாம் பொலபொலவென உதிர்ந்து மண்ணை நிரப்பிவிடுமென்று இளவயதில் கேட்ட கதையை நினைவுகூர்ந்தான்.
அவன் அருகே அமர்ந்திருக்க சதசிருங்கத்தின் ஏரிக்குமேல் எழுந்த விண்மீன்பரப்பை சுட்டிக்காட்டி தருமன் சொன்னான் “அங்கு நின்றிருப்பது இலைக் கருமை தழைத்த ஒரு பெருமரம், மந்தா. அதில் கரிய சிறகுள்ள பறவைகள் என இப்போது பறந்தலைபவர்கள் கந்தர்வர்கள். கண்ணுக்குத் தெரியாத இன்னிசை எழுப்புபவர்கள் தேவர்கள். இந்த இனியமணம் அதன் மலர்கள் எழுப்புவது.”
அவ்வெண்ணம் எழுந்ததுமே திரும்பிவிடலாம் என்று தோன்றியது. மறுகணமே உள்ளம் எழுந்து கிளம்பிவிட்டது. உடலை அசைக்க அதனால் முடியவில்லை. இரும்புத்துண்டில் கட்டப்பட்ட பறவை என அது சிறகடித்துச் சுழன்று வந்தது. அறியா மணமொன்றைத் தேடி அலைவதன் அறிவின்மையை அவன் அருகில் மலை என கண்டான். அது வெறும் உளமயக்கு. அல்லது ஓர் அகநகர்வு. அதை பருவெளியில் தேடுவதைப்போல பொருளிலாச் செயல் பிறிதொன்றில்லை.
ஏன் இதற்கென கிளம்பினேன்? உண்மையிலேயே அவள் விழிகனிந்து கேட்ட அக்கணத்தில் என் உள்ளம் எழுச்சிகொண்டதா? இல்லை, நான் நாப்போக்கில் சொன்னதுபோல அர்ஜுனன் மீண்டுவந்தான் என்பதனால்தான் என்பதே உண்மையா? அல்லது அங்கே இருந்த சலிப்பை வெல்லவா? ஒருவேளை நானும் ஒரு பயணம் செய்யவேண்டும் என்னும் சிறுவனுக்குரிய வீம்பா? எதுவோ ஒன்று. ஆனால் இனிமேலும் இதை நீட்டித்தால் வீணனென்றே ஆவேன்.
அவன் உள்ளூர புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தான். ஆனால் உடல் கற்சிலை என மண்ணில் அழுந்திக்கிடந்தது. பெருமூச்சுடன் கலைந்து “நாம் எங்கு செல்லவிருக்கிறோம்?” என்றான். “அறியேன்” என்றான் முண்டன். “ஏனென்றால் நானும் இந்தப் பயணத்தை முதல்முறையாக நிகழ்த்துகிறேன். என்னிடம் கதைகள் உள்ளன என்பதற்கப்பால் நானும் உங்களைப்போன்றவனே” என்றான். பீமன் நெடுநேரம் வானை நோக்கிக்கொண்டிருந்தான். மீண்டும் பெருமூச்சுக்கள் விட்டபடி தன்னுணர்வுகொண்டு “இது முடிவடையாத பயணம் எனத் தோன்றுகிறது. மறுமுனையில் ஒளிதெரியா சுரங்கப்பாதை” என்றான்.
“எல்லா அகவழிப் பயணங்களையும்போல” என்றான் முண்டன். பீமன் கையூன்றி தன் உடலைப் புரட்டி ஒருக்களித்து “உம்மிடம் கதைகள் உள்ளன அல்லவா? அவற்றைக்கொண்டு கழங்காடவும் அறிவீர். ஆடுக!” என்றான். “இப்போதா?” என்றான் முண்டன். “இப்போது ஒளியில்லை. கழங்குகள் கண்ணுக்குத்தெரியாது.” பீமன் “கைகள் கழங்குகளை அறிந்தால் போதும்” என்றான். முண்டன் “ஆம், அதுவும் மெய்யே” என்றான். எழுந்தமர்ந்து தன் இடைக்கச்சையிலிருந்து கழற்சிக்காய்களை எடுத்துப் பரப்பினான். அவன் கைகள் அதில் ஓடத்தொடங்கின.
“பெயர்கள், பெயர்களின் நிரையன்றி பிறிதில்லை. நிரையெனில் சரடு எது? சரடெனில் வலை எது? பெயர்கள் விண்மீன்கள்போல தனிமைசூழ்ந்தவை. மின்னிநடுங்கும் விழிகள் அவை. இருள் சூழ்ந்த ஒளித்துளிகள். எவ்வொலிகளின் துளிவடிவுகள் அவை?” அவன் நாவிலிருந்து பொருளின்மை சூடிய சொற்கள் பொழியலாயின. “விஷ்ணு, பிரம்மன், சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன். ஆ… இடக்கை அள்ளிய இவை எவை? லட்சுமி, சரஸ்வதி, தாரை, இளை, ஊர்வசி. ஓ… இவள் இந்துமதி. இவள் அசோககுமாரி.”
கழற்சிகள் அவன் கைகளில் அந்திப்பறவைகள் சேக்கேறும் மரக்கிளையில் என பூசலிட்டு சுற்றிவருவதைக் காணமுடிந்தது. “கலையறிந்தவள் இந்துமதி. திருமகள் அசோககுமாரி. தனியள் ஊர்வசி. கோட்டெயிர் கொற்றவை போலும் அவள். ஆ… இவள் தாரை. மூதன்னை. குருதி ஊறிய முதல் கருவறை. நோக்குக, இது இளை! இருமுலையில் ஒன்று நஞ்சு, ஒன்று அமுது. இருவிழிகளில் ஒன்று ஆண், ஒன்று பெண். இவன் சந்திரன். வளர்ந்து மறைந்து மீண்டும் எழுந்து தேய்ந்தெழுகிறான் புரூரவஸ். இவள் ஊர்வசி. இருண்டிருக்கிறாள். கரியள்…”
அவன் சொற்கள் ஒழுகிச்சென்றன. பொருளின்மை கொள்கையில் சொற்கள் மேலும்மேலும் நுண்மையாகின்றன. ஆடைகழற்றிய குழவிகள்போல. இல்லை, எங்கும் தொடாத ஒளிபோல. சொற்களை அவன் அச்சத்துடனும் திகைப்புடனும் நோக்கிக்கொண்டிருந்தான். சொற்கள் ஏன் ஒன்றுடன் ஒன்று இணைவதே இல்லை? அவை பொருளென்னும் பிறிதொன்றால் இணைக்கப்படுகின்றன. அக்கணங்களுக்கு மட்டும். விளிம்புரசிக்கொண்டு விலகிவிடுகின்றன. விண்மீன்கள் ஏன் உரசிக்கொள்வதுமில்லை?
“இவள்!” என்றான் முண்டன். அவன் கையில் ஒரு கழற்சிக்காய் இருந்தது. மற்ற அத்தனை காய்களும் மெல்ல நாகம் பெட்டிக்குள் சுருண்டமைவதுபோல சரடாக மாறி அவன் கச்சைக்குள் சென்று அமைந்தன. “இவள் அவளே” என்றான். “யார்?” என்றான் பீமன் கனவுக்குரலில். “இவளை உமை உருவாக்கினாள் என்பது கதை” என்றான். “சொல்க!” என்றான் பீமன். “பெண்ணை எதிலிருந்து எழுந்தவள் என வகுக்கும் ஒரு நிமித்திக மரபுண்டு. மண்ணில் மைதிலி. புனலில் சத்யவதி. அனலில் துருபதன் கன்னி. அரசே, காற்றில் பிறப்பவர்களும் உண்டு. தாமரையில், அல்லியில், குவளையில், மந்தாரையில், செண்பகத்தில் பிறப்பவர்களுண்டு. வெண்தூவி அன்னத்தில், தாவும் சிட்டுக்குருவியில், மீன்கொத்தியில் பிறப்பவர்களுமுண்டு. மீனிலும் சங்கிலும் முத்துச்சிப்பியிலும் எழுந்தவர்களுமுண்டு.”
“இவள் மரத்தில் மலர்ந்தவள். ஆகவே இவளை அசோகசுந்தரி என்று சொல்கின்றனர் முனிவர்” என முண்டன் சொன்னான். “பாற்கடலை விண்ணவரும் ஆழுலகோரும் சேர்ந்து கடைந்தபோது எழுந்தது கல்பமரம். அதன் அலைவளைவு தண்டாக, நுரைகள் தளிரென்றாக, துமிகள் மகரந்தமென்று மாற உருக்கொண்டெழுந்தது. நோக்குவோர் இயல்புக்கேற்ப வண்ணமும் மணமும் கொள்வது. தூயநெஞ்சத்து முனிவருக்கு வெள்ளை மந்தாரம். கண்ணில் காமம் விரிந்த கன்னியருக்கு நெஞ்சை மயக்கும் பாரிஜாதம். அழிவின்மை கொண்ட தேவருக்கு அது சந்தனம். இன்பம் நாடும் உலகோருக்கு அசோகம். தெய்வங்களுக்குப் படையலாகும்போது ஹரிசந்தனம்.”
இளைஞனாகவும் கன்னியாகவும் ஆகி காதலாடும்பொருட்டு விண்ணில் உலாவிய சிவனும் உமையும் தொலைவில் எழுந்த நறுமணத்தை அறிந்தனர். “அது பாரிஜாதமணம் அல்லவா?” என்றாள் உமை. “ஹரிசந்தன மணம் வீசும் அது கல்பமரம். பாற்கடலில் எழுந்தது” என்றான் சிவன். அவர்கள் அருகணைந்தபோது அன்னை அவன் தோளை அணைத்து தன் முலையொன்றால் அவனை எய்து “எனக்கு மட்டும் ஏன் அது பாரிஜாதம்?” என்றாள். “ஆம், இப்போது நான் மந்தாரத்தை உணர்கிறேன்” என்றான் சிவன். அவர்கள் தழுவிக்கொண்டனர். இரு உடல்களாக இரு வகை அனல்கொண்டனர். முடிவிலா ஆடல் நிகழலாயிற்று. உமை மூச்சொலிக்கிடையே அவன் காதில் “அது சந்தனம்” என்றாள். “ஆம்” என்றான் அவன்.
எழுந்து அமர்ந்து அவன் விழிகளை விலக்கும்பொருட்டு மறுபக்கம் நோக்கிய தேவி அந்த மரத்தைப் பார்த்து “என்ன மரம் இது? எதை நமக்குக் காட்டுகிறது?” என்றாள். “நாம் யாரென்று” என்றான். “நான் இப்போது யார்?” என்றாள். “அதை கேள்” என்றான் சிவன். அவள் கைநீட்டி ஒரு மலரைப்பற்றி “அசோக மணம்” என்றாள். “உலகியலின் நறுமணம். நீ அகம் கனிந்து அன்னையென்றாகியிருக்கிறாய்” என்றான் சிவன். அவள் அந்த மலரைப் பறித்து கையில் எடுத்தாள். அது ஓர் அழகிய கன்னி என அவள் முன் நின்றது.
சிவன் “நீ உளம்கொண்ட மகள்” என்றான். “இவளை அசோகசுந்தரி என்றழை!” உமை அவளை அருகழைத்து நெஞ்சோடணைத்து குழல் முகர்ந்தாள். “இனியவள்” என்றாள். “இவளுக்கு உகந்த துணைவன் எங்குள்ளான்?” என்று திரும்பி தன் கணவனிடம் கேட்டாள். “தேவகன்னி இவள். தேவர்க்கரசனுக்கு அன்றி பிறருக்கு துணையாகலாகாது” என்றான். “தேவர்தலைவனுக்கு அரசி இருக்கிறாள்” என்ற உமை “தேவர்க்கரசனுக்கு நிகரென்றாகி அவன் அரியணையில் அமர்பவனுக்கு துணைவியாகுக!” என்றாள்.
சிவன் நகைத்து “அத்தகைய ஒருவன் பிறக்க இன்னும் நீண்டகாலம் ஆகும். சந்திர குருதிமரபில் ஆயுஸின் மைந்தனாக அவன் பிறப்பான். அவன் பெயர் நகுஷன்” என்றான். உமை “அவனுக்காகக் காத்திரு. அவனை அடைந்து மைந்தனைப் பெறும்வரை உன் இளமை மாற்றமின்றி நீடிக்கும்” என அவளை வாழ்த்தினாள். அவள் அன்னையின் கால்தொட்டு வணங்கி மண்ணில் ஒரு பொற்துளி என உதிர்ந்தாள்.
அறச்செல்வன் என்று பெயர்கொண்டிருந்தான் ஆயுஸ். தந்தையிடமிருந்து கற்ற நெறிகள் அனைத்தையும் தலைகொண்டிருந்தான். ஊனுணவு உண்ணவில்லை. உயிர்க்கொலை செய்யவில்லை. எனவே போருக்கு எழவில்லை. புலவர் அவைகளில் நூலாய்ந்தும் வைதிகர் அவைகளில் மெய்ச்சொல் அறிந்தும் முனிவர் நிலைகளில் யோகத்திலமர்ந்தும் நாடுபுரந்த அவனை அறத்தோன் என்னும் சொல்லாலேயே குடிகளும் பிறஅரசரும் அழைத்தனர்.
ஆயுஸ் அயோத்தியின் அரசர் சுவர்ஃபானுவின் மகள் இந்துமதியை மணந்தான். அவர்கள் நீண்டநாள் காதலில் மகிழ்ந்திருந்தும்கூட மைந்தர் பிறக்கவில்லை. இந்திரனை வெல்லும் மைந்தன் அவர்களுக்கு பிறப்பான் என்று நிமித்திகம் சொன்னது. அதற்காகக் காத்திருந்து சலித்த ஆயுஸ் அருந்தவத்தாராகிய வசிட்டரைச் சென்றுகண்டு தாள்பணிந்து தனக்கு மைந்தன் உருவாக அருளும்படி கோரினான். “நான் அருளி உனக்கு மைந்தன் பிறப்பதாக என் உள்ளம் சொல்லவில்லை, நீ துர்வாசரிடம் செல்!” என்றார் வசிட்டர்.
துர்வாசர் “நீ பெறப்போகும் மைந்தன் நான் உளம் கொள்பவன் அல்ல. நீ செல்லவேண்டிய இடம் அந்தணராகிய தத்தாத்ரேய மாமுனிவரின் குருநிலை” என்றார். நோன்பிருந்து வணங்கிய கைகளுடன் தத்தாத்ரேயரின் தவக்குடிலுக்குச் சென்றான் ஆயுஸ். அங்கே அம்முனிவர் முப்புரிநூல் அணியாமல், இருவேளை நீர்வணக்கமும் மூன்றுவேளை எரியோம்புதலும் ஒழித்து காமத்திலாடிக்கொண்டிருப்பதை கண்டான். அழகிய மங்கையர் அவருடன் இருந்தனர். அவர்கள் கழற்றி வீசிய அணிகளும் ஆடைகளும் மலர்க்கோதைகளும் அங்கே சிதறிக்கிடந்தன. காமச்சிரிப்பும் குழறல்பேச்சும் ஒலித்தன.
ஆயுஸ் உள்ளே செல்ல ஒப்புதல் கோர “வா உள்ளே” என்றார் தத்தாத்ரேயர். “இது உகந்த தருணமா?” என அவன் தயங்க “நான் முப்போதும் இப்படித்தான்… விரும்பினால் வருக!” என்றார். அவன் கைகூப்பியபடி குருநிலைக்குள் சென்றான். மதுமயக்கில் சிவந்த விழிகளுடன் இருந்த தத்தாத்ரேயர் அரசனை நோக்கி சரியும் இமைகளைத் தூக்கி சிவந்த விழிகள் அலைய “நீ யார்?” என்றார். “முனிவரே, நான் துர்வாசரால் உங்களிடம் ஆற்றுப்படுத்தப்பட்டேன். பெருவல்லமைகொண்டு இந்திரனைவெல்லும் மைந்தனை நான் பெறுவேன் என்கின்றன நிமித்திக நூல்கள். அத்தகைய ஒரு மைந்தனுக்காக நாங்கள் காத்திருக்கத் தொடங்கி நெடுநாட்களாகின்றன. கனி உதிர்ந்து எங்கள் மடி நிறைய உங்கள் சொல் உதவவேண்டும்” என்றான்.
“அரசே, நான் இங்கு செய்துகொண்டிருப்பது என்ன என்று நீ பார்த்திருப்பாய். நான் அந்தணன் அல்ல, அறவோனும் அல்ல. என் சொல் முளைத்தால் அது நன்றென்று கொள்ளமுடியாது” என்றார். “நான் துர்வாசரால் இங்கு அனுப்பப்பட்டேன். அவர் அறியாதவரல்ல. தங்கள் அருளால் மட்டுமே என் மைந்தன் மண்நிகழ்வான்” என்றான் ஆயுஸ். “அரசே, என் வாழ்க்கையை நீ அறியமாட்டாய். நினைவறிந்த நாள்முதல் முழுப்புலனடக்கம் பயின்றவன் நான். நாச்சுவையை முற்றிலும் ஒறுத்தேன். குளிருக்கும் வெயிலுக்கும் பழகி தோலை கல்லாக்கினேன். நாற்றத்திற்கு மூக்கை அளித்து நறுமணத்தை அறியாதவனானேன். விழியின்பம் அளிக்காத வெறும் பாலையில் வாழ்ந்தேன். செவியின்பம் அளிக்கும் சிறுபூச்சிகளைக்கூட தவிர்த்தேன். உறவை நான் அறியவில்லை. காமத்தை திறக்கவே இல்லை.”
“அவ்வண்ணம் முற்றிலும் புலன்வாயில்களை மூடி அமர்ந்து நெடுந்தவம் இயற்றினேன். படிகளில் ஏறி பின் பறந்து பின்னர் கரைந்து பின்னர் முற்றழிந்து அதுவென்றாகும் கணத்தில் என் முன் ஓர் அழகி தோன்றினாள். நான் அவளைக் கண்டதும் அஞ்சி விழிமூடினேன். இமையூடாகத் தெரிந்தாள். அணுகி வந்து என் முன்நின்றாள். அச்சம் காமம் என்றாக நான் அவளை தொட்டேன். என்னை சிறுமகவென ஆக்கி தன் மடியிலிட்டாள். அனைத்தையும் மறந்து அவள் முலையுண்டு மகிழ்ந்து அங்கிருந்தேன்.”
“மீண்டதும் நான் என் உடலெங்கும் புலன்கள் விழித்துக்கொண்டிருப்பதை கண்டேன். நானிருந்த செம்புலத்தில் எத்தனை வண்ணங்கள், எத்தனை புள்ளொலிகள், எத்தனை தளிரோசைகள் என அறிந்தேன். அள்ளி அருகிருந்த ஊற்றுநீரை உண்டபோது நாவினிமையில் திளைத்தேன். வெந்தமண்ணில் விழும் முதல்மழைத்துளி மணல் அலைகளை மலரிதழ் வளைவுகளென மணக்கச்செய்வதை அறிந்தேன். இன்காற்று உடல்தழுவ சிலிர்த்தேன். அவையனைத்தையும் நான் முன்னரே அறிந்திருப்பதையும் உணர்ந்தேன்.”
“என் முன் இருந்த மென்மணல்வெளியில் பெண்ணுடல் தெரியலாயிற்று. வளைவின் அழகுகள், குழைவின் மெருகுகள், குன்றெனும் எழுச்சிகள், ஓடையெனும் கரவுகள். காமத்தில் உடல் எழ கைமணலை அள்ளி எழுக என் விழைவு என்றேன். சிலம்பொலி கேட்க திரும்பி நோக்குகையில் இவளைக் கண்டேன். பிறிதொரு கைப்பிடி மண்ணை அள்ளி இவளில் இல்லாதவை எழுக என்றேன். அவள் வந்தாள். இருவரும் அல்லாத ஒருத்தி வருக என்றேன். மூன்றாமவள் அமைந்தாள். அதன் பின் பெண்கள் பெருகிக்கொண்டே இருந்தார்கள்.”
“நுகர்வில் திளைக்கும் புலன்களுக்கு நடுவே நான்குமுனைகளையும் தாவித்தாவி இணைக்கும் எண்காலி என இருந்த ஆறாவது புலன் மனம். தன் முதுகில் சுமந்திருந்த மூட்டைச்சுமையே புத்தி. எட்டு காலை அசைத்தசைத்து ஓயாது பின்னச்செய்யும் ஒன்றென அதன் உள்ளுறைந்த தன்னிலை சித்தம். அவ்வலையே அதுவென்று எண்ணும் அதன் அறியாமையே அகங்காரம். ஒன்பது இருப்புகளையும் கரைத்து ஒளியென புறவுலகில் பரவியமைவதே முழுமை என உணர்ந்தேன்.”
“யோகமுழுமை என்பது உள்ளொடுங்குதல், போகமுழுமை வெளிவிரிந்தமைதல். உள்ளணைத்து புலன்களை வெளிப்பொருள் விரிவின் பகுதியென்றாக்குவது கள். களிமயக்கில் திளைக்கையில் உணவில் பிறந்து உணவை உண்டு உணவில் கழித்து உணவில் திளைத்து உணவில் இறந்து உணவாகும் சிறுபுழுவின் இன்ப முழுமையை அடைந்தேன். அவ்வாறு இங்கிருக்கிறேன்” என்றார் தத்தாத்ரேயர். “நச்சுக்கலம் என உலகோர் என்னை சொல்லக்கூடும். என்னில் ஒருதுளியையும் பிறருக்கு அளிக்க முடியாது.”
“அதையறிந்தல்லவா துர்வாசர் என்னை இங்கு அனுப்பியிருப்பார்?” என்றான் ஆயுஸ். “அறியாதும் அனுப்பியிருக்கலாம். சென்று அதையும் கேட்டு வருக!” என்றார் தத்தாத்ரேயர். ஆயுஸ் மீண்டும் துர்வாசரிடம் சென்று தத்தாத்ரேயர் இருந்த நிலையைச் சொல்லி செய்யவேண்டுவதென்ன என்று கேட்டான். “சிப்பியில் மாசும் பாம்புள் நஞ்சும் முத்தென்றாகின்றன. அவருள் எது ஒளிகொண்டிருக்கிறதோ அதை மைந்தன் என அளிக்கும்படி கோருக!” என்றார் துர்வாசர்.
திரும்பிவந்த ஆயுஸ் “அந்தணரே, எது உங்களை ஒளிவிடச்செய்கிறதோ அதுவே என் மைந்தனாக எழுக!” என்றான். “என்னுள் எரிவது காமம். அனல்துளி, தடைகள் அனைத்தையும் உணவென்று கொள்வது. தன்னை தானே அன்றி அவிக்கமுடியாதது” என்றார் தத்தாத்ரேயர். “அதுவே என் மைந்தனாகுக!” என்றான் ஆயுஸ். “அனலை வாங்கிக்கொள்கிறாய், அது முதலில் இருந்த கலத்தையே எரிக்கும். நீ துயருற்று அழிவாய்” என்றார் தத்தாத்ரேயர் “ஆம், அதை நான் முன்னரே எந்தையிடமிருந்து அறிந்துள்ளேன். அவ்வாறே ஆகுக!” என்றான் ஆயுஸ்.
தத்தாத்ரேயர் அளித்த மாங்கனியுடன் அரண்மனை மீண்டான் ஆயுஸ். அதை தன் மனைவிக்கு அளித்தான். அதை உண்ட அந்நாளில் இந்துமதி ஒரு கனவுகண்டாள். அவள் காலைப்பற்றி கொடி ஒன்று மேலேறியது. கவ்வி தொடைசுற்றி அவள் கருவறைக்குள் புகுந்தது. தொப்புளினூடாக அதன் தளிர்நுனி வெளிவந்தது. மூக்கில் வாயில் செவிகளில் எழுந்து கிளைத்தது. அது ஒரு மாநாகம் என அவள் அறிந்தாள். வேர் மண்ணில் விரிந்து பற்ற வால்நுனிகளென தளிர்த்தண்டுகள் விரிய இலைத்தழைப்பென படம் எடுத்து அது மரமென்றும் நின்றிருந்தது.
அவளுக்குள் அந்நாகம் பெருகிக்கொண்டே இருக்க தசைகள் இறுகிப்புடைத்தன. நரம்புகள் பட்டுநூல்களென இழுபட்டுத் தெறித்து அறுந்தன. உச்சித்தலை பிளந்து மேலெழுந்த மரம் இரு கிளை மூன்று கிளை நான்கு கிளை என விரிந்தது. அதில் மலர்கள் எழுந்து கனி செறிந்தது. பறவைகள் அடர்ந்து அது ஓயாது ஒலிகொண்டது. அவள் உடல் பட்டுச்சீலை என கிழிபடும் ஓசையை கேட்டாள். மரப்பட்டை போல உலர்ந்து வெடித்து விழுந்தாள். மரத்தின் வேர்கள் அவளை அள்ளிப்பற்றி நொறுக்கிச் சுவைத்து உண்டன. இறுதித்துளியும் எஞ்சுவதுவரை விழிமலைக்க அவள் அந்த எழுமரத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.
நாற்பத்தைந்து நாட்களுக்குப்பின் அவள் கருவுற்றிருப்பதை மருத்துவர் உறுதிசெய்தனர். அவள் அக்கனவை கணவனிடமும் சொல்லவில்லை. அவன் அவளிடம் தத்தாத்ரேய முனிவரின் அருளால் அந்தணனுக்கு இணையான அறச்செல்வன் ஒருவன் தோன்றவிருப்பதாகவே சொல்லியிருந்தான். எனவே அவள் அக்கனவை தானே சொல்லிக்கொள்ளவும் அஞ்சினாள். சொல்லப்படாத கனவு அவளுக்குள் வளர்ந்தது. கருங்கல் உருளைபோல ஆகி எப்பொழுதும் உடனிருந்தது.
பன்னிருமாதம் கடந்தபின்னரே இந்துமதி குழந்தையை பெற்றாள். வயிறு வளர்ந்து எடைகொண்டு கால்தாளாமலானமையால் அவள் எப்போதும் படுக்கையிலேயே இருந்தாள். அவள் உண்டு ஊறச்செய்த குருதி அந்த மைந்தனுக்கு போதவில்லை. எனவே அவள் மெலிந்து பழுத்திலைபோல மஞ்சள் நிறம்கொண்டு வாய்வறண்டு விழிவெளுத்து தோல் பசலைகொண்டு சொல்லும் எழா சோர்வுடன் கிடந்தாள். வெறித்த விழிகளுக்கு முன் சூழ்ந்தோர் எவருமறியா ஒன்றை அவள் கண்டுகொண்டிருந்தாள் எனத் தோன்றியது. அடிக்கடி ஒலியென்றாகாச் சொற்களை அவள் உதடுகள் அசைவென காட்டிக்கொண்டிருந்தன.
நாள்கடக்குந்தோறும் மருத்துவர் அஞ்சலாயினர். தாதியர் “உள்ளிருப்பது குருதிவிடாய் கொண்ட கொடுந்தெய்வம் போலும். அவரை கருவமைந்தே உண்கிறது” என்றனர். நாள்தோறும் மருத்துவர் வந்து நோக்கி அரசனுக்கு செய்தி சொன்னார்கள். “அவர் இங்கிருந்து அகன்றுவிட்டார், இனி மீளமாட்டார்” என தலைமை மருத்துவர் தன் மாணவர்களிடம் சொன்னார். அவள் விழிகளிலும் ஏதும் தெரியாதாயின. அவள் ஓர் ஓவியத்திரையென்று ஆகியதுபோல உணர்ந்தனர்.
ஒருநாள் மாலை அவள் அலறும் ஒலிகேட்டு அனைவரும் ஓடிச்சென்று நோக்கினர். அவள் எழுந்து அமர்ந்து கைகள் பதற உடைந்த குரலில் கதறிக்கொண்டிருந்தாள். “எருமை! எருமையை விரட்டுக! எருமை!” என்றாள். “அரசி, அரசி” என சேடி அவளை உலுக்கினாள். “எருமையில் குழந்தையை கொண்டுவருகிறான்… எருமைமேல் அமர்ந்திருக்கிறது” என அவள் நீர் வறண்டு அச்சம் மட்டுமே வெறிப்புகொண்டிருந்த விழிகளால் சொன்னாள். “அரசி படுங்கள்… படுங்கள்!” என்றாள் முதியசேடி. “இருண்டவன்… இருளேயானவன்… தென்திசைத்தலைவன்… அதோ!”
துணிகிழிபடும் ஒலி கேட்டது. சூடான குருதியின் வாடை. முதுசேடி தன் கையை வெங்குருதி தொட்டதை உணர்ந்து அரசியை தள்ளிப் படுக்கச்செய்தாள். கதவைத் திறந்து வெளிவருபவன்போல அரசியின் இறந்த கால்களை அகற்றி மைந்தன் வெளிவந்தான். கரியநிறம் கொண்டிருந்தான். வாயில் வெண்பற்கள் நிறைந்திருந்தன. அவன் அழவில்லை, புலிக்குருளைபோல மெல்ல உறுமினான். மருத்துவச்சி கதவைத் திறந்து ஓடிவந்தபோது தொப்புள்கொடியுடன் குழவியை சேடி கையில் எடுத்திருந்தாள். நோக்கும்போதே அவள் அறிந்தாள்… அரசி இறந்துவிட்டிருந்தாள்.
மைந்தனை நோக்க ஓடிவந்த அரசனிடம் அரசியின் இறப்பே முதலில் சொல்லப்பட்டது. அவன் ஒருகணம் விழிமூடி நெற்றிநரம்பொன்று புடைத்து அசைய நின்றபின் “நன்று, அவ்வாறெனில் அது” என்றபின் குழந்தையைக் கொண்டுவர ஆணையிட்டான். அப்போதே உறுத்த உடலும் தெளிமுகமும் கொண்டிருந்தது குழவி. அவன் குனிந்து அதை நோக்கியபோது அதுவும் அவனை நோக்கியது. அவன் “நகுஷன்” என்றான். “நிமித்திகர் கூற்று முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது. இவன் இந்திரனை வெல்பவன். நகுஷன் என பெயர் கொள்பவன்” என்றான்.