வைணவர்கள் நெடுங்காலம் தனிச்சமூகமாக ஒதுங்கி இருந்தமையினாலேயே அவர்களுக்கென ஒரு தனி மொழி உருவாகியது. அதை வைணவபரிபாஷை என்பார்கள். தூய தொல்தமிழும் வடமொழி மரூவும் கலந்த அந்த மொழி அது. அதற்கென ஒரு அழகும் நுட்பமும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஸ்ரீ , திரு என்று சேர்ப்பது அவர்களின் வழக்கம்
அதைப்பற்றி கல்கி ஒரு நகைச்சுவை எழுதியிருக்கிறார். பழையகதைதான்.நான்குநேரி ஜீயர் மடத்துக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் கிளை உண்டு. அங்கிருப்பவர் தாத்தாச்சாரியார். வழக்கம்போல மொட்டைமீது குடுமியும் நாமமும் உள்ள அய்யங்கார். அவர் தெப்பக்குளத்தில் கால்தடுக்கிவிழுந்து மண்டை அடிபட்டுவிட்டது. செய்தியை நான்குநேரிக்கு அனுப்பவேண்டும். அக்காலத்தில் ஆள்வழி செய்திதான்
ஆகவே குப்பனை அழைத்தார்கள். செய்தியை எழுதி அவனுக்குச் சொல்லி மனப்பாடம்செய்வித்தார்கள். அது இதுதான் ‘ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த தாத்தாச்சாரியர் திருக்குளத்தில் திருப்பாதம் வழுக்கி விழுந்து திருமண்டையில் திருக்காயம் ஏற்பட்டுவிட்டது. இப்போது திருப்படுக்கையில் திருப்பள்ளிகொண்டிருக்கிறார்’
குப்பன் எழுபதுகிலோமீட்டரை ஒரே நாளில் ஓடிவந்து அவன் நினைவிலிருக்கும் செய்தியை சொன்னான் ‘மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான்’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் தமிழில் மத தத்துவங்களைப்பற்றி எழுதிவரும் முக்கியமான எழுத்தாளர். தமிழினி மாத இதழில் அவர் பாரதியின் சாக்தம் பற்றியும் விவேகானந்தர் பற்றியும் எழுதிய கட்டுரைகளை அவ்வகையில் மிக முக்கியமான புதியதிசைத்திறப்புகள் என்று சொல்வேன். மோகனரங்கன் புதுக்கவிதைகளும் எழுதிவருகிறார்
மோகனரங்கன் வைணவ பரிபாஷை பற்றி எழுதிய கட்டுரைகள் அவரது இணையதளத்தில் உள்ளன. மொழியிலும் இலக்கியத்திலும் சமூகவியலிலும் மதத்திலும் ஆர்வமுள்ளவர்களுக்கு அவை மிக முக்கியமானவை
http://thiruvarangan.blogspot.com/2010/11/1_23.html