27. வீடுகோள் செலவு
கீற்றுநிலா முகில்களுக்குள் மறைந்தும் விளிம்புகாட்டியும் நகரை ஆக்கி அழித்துக்கொண்டிருந்த பின்னிரவில் முரசோ கொம்போ ஒலிக்காமல் ஓரிரு பந்தங்கள் மட்டுமே எரிந்த சிறைமுற்றத்தில் ஐம்பது வில்வீரர்கள்கொண்ட படை காத்திருந்தது. உள்ளிருந்து எழுவர் புரூரவஸை கை பிணைத்து தள்ளி அழைத்துவந்தனர். அதுவரை இருளில் கிடந்த அவன் ஒளியை நோக்கி கண்கூசி முழங்கையால் முகம் மறைத்தான். ஒரு வீரன் “ம்” என ஊக்க அவன் நடந்து அங்கே காத்துநின்ற சிறிய மூடுதிரைத் தேரில் ஏறிக்கொண்டான். படைத்தலைவன் கைகாட்ட படை ஒரு புரவி பிறிதொன்றை உந்தியதுபோல அசைவுகொண்டு கிளம்பியது.
நகரத்தெருக்களில் ஏறி கோட்டை முகப்பைக் கடந்து பெருஞ்சாலையில் ஓடி வடதிசை நோக்கி அகன்றது. அதன் ஓசை ஒரு கோபுரம் கற்களாக இடிந்து சரிவதுபோல ஒலித்து அழிந்தது. குடிமக்கள் எவரும் இல்லங்களைவிட்டு வெளியே வரலாகாதென்று ஆணை இருந்தமையால் நகர் முற்றிலும் ஒழிந்து கிடந்தது. பின்னிரவின் தூசுமணக் காற்று மட்டும் தெருக்களில் சுழித்துக்கொண்டிருந்தது. அங்காடி முகப்பில் அவிழ்த்துவிடப்பட்ட அத்திரிகள் ஒலிகேட்டு செவிகூர்ந்து கனைத்தன. நாய்கள் எழுந்து குரைக்கத்தொடங்கின.
காவல் மாடங்களில் கைகளைக் கட்டியபடி எழுந்துநின்று நோக்கிய வீரர்கள் படைசென்று மறைந்த புழுதிமணம் இருளில் எழ பெருமூச்சுவிட்டனர். இல்லங்களின் இருண்ட அறைக்குள்ளெல்லாம் புரவிக்குளம்படிகளின் ஓசை பெருகி சுவர்களை அதிரவைத்து பின்பு ஓய்ந்தது. இருளுக்குள் சிறகடிக்கும் கலைந்த பறவைகளின் ஓசைகள் மட்டும் எஞ்சின. அங்காடிச் சதுக்கத்தில் காவல்பூதத்தின் காலருகே நின்றிருந்த பித்தன் ஒருவன் கைகளை வீசி உரக்க நகைத்தான்.
திண்ணையில் கம்பளி போர்த்தி அமர்ந்திருந்த முதியவர் நீள்மூச்செறிந்து “உறுத்துவந்தூட்டும் ஊழ்வினை. பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றார். இடைவழிக்கு அப்பால் மறுதிண்ணையிலிருந்த இன்னொரு முதியவர் “பெருவாழ்வு. எனவே வீழ்ச்சியும் பெரிதே” என்றார். “ஆம். எண்ணுகையில் எளியோனாக வாழ்ந்து எளியோனாக இறப்பதே உகந்ததென்று தோன்றுகிறது” என்றார் முதல் முதியவர். “யானைக்கு புண் வந்து சீழ் கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? படிகக் கோடரியால் வெட்டி முழங்கைவரை உள்ளேவிட்டு மருந்திடுவார்கள். பெருவலி கொண்டு அக்கரிய உடல் துடிப்பதை நெடுந்தொலைவிலேயே நின்று பார்க்கமுடியும்.”
மறுமுதியவர் இருமி ஓய்ந்து இழுத்து சிரித்து “எறும்புக்கும் யானைக்கும் இறப்பு ஒன்றேதான் போலும்” என்றார். மற்றவர் சொல்லெடுக்காமல் பெருமூச்சு மட்டும் விட்டார். அப்பால் எதிர்த்திண்ணையிலிருந்து ஒரு குரல் “ஆம், ஆற்றல்மிக்க விலங்குகள் நொந்து நாட்பட்டு சாகின்றன. எறும்புகள் நொடியில் பல்லாயிரமென மறைகின்றன. ஊழுக்கும் கருணையுண்டு” என்றது. முதல் முதியவர் “எவர் துயரும் அதற்கு ஒரு பொருட்டல்ல. எல்லாமே குமிழிகள்தான் நதிக்கு. அதில் பெரிதென்ன சிறிதென்ன?” என்றார்.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேட்டு எய்தி தருக்கி இழந்து ஏங்கி வாழும் அனைத்துக்கும் அப்பால் சென்று ஒரு வெறுமையின் முழுமையைக் காணும் கணமாக அமைந்தது அது. அதை சொல்லென ஆக்குவது மட்டுமே அதன் பேரெடையை தவிர்க்கும் வழி என்று தோன்றியது. ஆனால் பேசும்போதே அதன் பொருளின்மையை உணர்ந்து பெருமூச்சுடன் அமைதியானார்கள்.
கோட்டைக்கு அப்பால் குளம்படிகள் மறைந்ததும் வலி கொண்ட எருதின் ஒலியுடன் கதவுகள் மூடின. சக்கரத்தைச் சுழற்றிய பின் “இனி அவர் நகர் நுழையமுடியாது அல்லவா?” என்று ஒரு வீரன் கேட்டான். “ஆம், விலக்கு அவர் முழுவாழ்வுக்கும்தான்” என்றான் இன்னொருவன். “ஒரு சிறு மைந்தனை இழப்பதற்கே அத்தனை துயரென்றால் இத்தனை பெரிய நகரை இழப்பது துயர்களில் மலை” என்றான் அவன். “அவருக்கு இனி வாழ்வில்லை” என்றான் ஓர் இளைஞன். “மானுடர் அவ்வாறல்ல. சென்ற இடத்தில் முற்றிலும் பொருந்தும் இயல்புடையவர்கள். சில நாட்களில் இந்நகரில் இருந்ததையே அவர் மறந்துவிடக்கூடும்” என்றார் மேலே நின்ற இன்னொரு முதியவர்.
“எப்படி மறக்க முடியும்? இந்நகர் ஒரு சிலந்தி வலை. இதைப் பின்னி இயக்கி இதுவென்று விரிந்து இதன் நடுவில் இருந்தார் அவர்” என்றது மேலும் உயரத்தில் ஒரு குரல். பிறிதொருவர் “இங்கு அவருக்கென எதுவும் எஞ்சி இருக்கவில்லை. மைந்தர் இனி அவர் மைந்தரல்ல. குடிகள் அவர் குடிகளும் அல்ல. இங்கிருந்து துயர் கொள்வதைவிட அகன்று செல்வது உகந்தது” என்றார். அனைவரும் அதை உண்மை என உணர்ந்தமையால் மறுமொழி எழவில்லை. “பல தருணங்களில் பிரிவென்பது சிறந்த அறுவை மருத்துவம். அழுகியதை, கருகியதை வெட்டி வீசிவிட்டால் அப்புண் சில நாட்களிலேயே கருகும். தோழரே, தொப்புள்கூட ஒரு புண் கருகிய வடுதான்” என அவரே தொடர்ந்தார்.
புலரிவரை குருநகரியில் புரூரவஸைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தனர். அங்காடி அருகே சிறுகுளத்தில் நீராடும்போது விடிவெள்ளி நோக்கி கைதொழுதபின் “எங்கு செல்கிறார்கள் என்று தெரியுமா?” என்றார் ஒரு வணிகர். “காட்டுக்கு” என்றார் பிறிதொருவர். “காடு ஊர் போலவே விரிந்து பரந்தது. காட்டில் எங்கே?” என்றார் இன்னொருவர். “அதை அவர்தான் தெரிவு செய்யவேண்டும், தன் திறனுக்கும் தேவைக்கும் ஏற்றபடி.” தணிந்த குரலில் “நாம் மீண்டும் அவரை பார்க்கப் போவதில்லையா?” என்று ஓர் இளைஞன் கேட்டான். “பார்க்கக்கூடும், ஆனால் அவர் பிறிதொருவர் என்றாகியிருப்பார். பண்டு காட்டில் இருப்பது அவருக்கு உகந்ததாக இருந்தது. இக்குலம் அங்கிருந்துதான் கிளம்பி வந்தது என்று அவர் சொல்வதுண்டு” என்றார் ஒருவர்.
அரண்மனை அனைத்து நாண்களையும் எதிர்புரி சுற்றித் தளர்த்திவைத்த யாழ்போல முற்றிலும் ஓசை அடங்கி இருந்தது. புரூரவஸின் தேவியர் தங்கள் மஞ்சத்தறைகளுக்குள் அவிழ்ந்த குழலும் அழுது வீங்கிய முகமுமாக அமர்ந்திருந்தனர். படைவீரர்கள் வேல்களையும் வில்களையும் சாத்திவிட்டு அதனருகே சிறு குழுக்களாக அமர்ந்து தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கி இருந்தனர். அமைச்சர்களின் அவையிலும் படைத்தலைவர்களின் கூடத்திலும்கூட சொல்லென ஏதும் எழவில்லை. அவ்வப்போது எழுந்த பேச்சுக்குரல்கள்கூட மிகத் தாழ்ந்த ஒலியிலேயே இருந்தன. அமைதி ஒவ்வொருவரையும் அச்சம் கொள்ளச்செய்து மந்தணம் பேசவைத்தது. மந்தணம் பேசும்தோறும் அனைத்துத் துளைகளும் செவிகள் போலாயின. அனைத்துக் குமிழ்களும் முனைகளும் விழியொளி கொண்டன.
தன் மஞ்சத்தறைக்குள் சாளரத்தினூடாக இருள்வெளியைப் பார்த்தபடி ஆயுஸ் கைகட்டி நின்றிருந்தான். குளிர்காற்றில் அவன் ஆடை எழுந்து பறந்தது. தொலைவில் வளைந்த வானில் தெரிந்த விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்களை நோக்குகையில் மண்மீதுள்ள ஒவ்வொன்றும் எளிதென்றும் பொருளற்றதென்றும் தோன்றும் விந்தை என்ன என்று எண்ணிக்கொண்டான். பொருளற்றவையே அனைத்தும் என்று தோன்றுகையில் எழும் விடுதலை உணர்வை எண்ணியபோது வியப்பு எழுந்தது. இச்சிறு வாழ்க்கை, இச்சிறு வாழ்க்கை என ஓடிக்கொண்டிருந்தது சித்தம்.
சிறு கூடொன்று கட்டி நான் நான் என்று தருக்கி நின்றிருக்கும் சிதல். எங்கோ எவரோ எதற்கோ நடந்துசெல்லும் கால்களால் தட்டி சிதறடிக்கப்படுகிறது. சலிக்காது மீண்டும் மீண்டும் கட்டி எழுப்புகின்றது. சிதல்கள் பிறிதொன்றை அறிந்திலாதவை. அது ஒன்றே தங்களுக்கு ஆணையிடப்பட்டிருப்பதுபோல அவை கணம் சோராது செயலாற்றுகின்றன. அதனூடாக நிறைவடைகின்றன. அல்லது அவற்றுக்கும் நிறைவின்மை உண்டா? எண்ணி அந்தக் கூட்டை அள்ளிக்கொள்ள இயலாது சித்தம் பேதலிப்பதுண்டா?
தன் எண்ணங்களை தாளாதவன்போல நீள்மூச்சு விட்டபடி அவன் அறைக்குள் நடந்தான். பீடத்தில் இருந்த தன் உடைவாளை எடுத்து அதன் உறையில் இருந்த சிற்பச்செதுக்குகளை வருடியபடி பொருளற்ற எண்ணங்களுக்குள் சென்று மீண்டும் பெருமூச்சுவிட்டான். அதை வைத்துவிட்டு வந்து விண்மீன்களை நோக்கி நின்றிருந்தான். எவரென்று நான் இருப்பேன் இக்குலநிரையில்? இது ஒரு அருமணி மாலை. வெறுங்கல்லென்றிருந்தாலும் மணியொளி உண்டு. முண்டிப்புடைத்தெழுந்து ஒளிகொண்டு ஆவதொன்றுமில்லை. இருத்தல், கடந்துசெல்லுதலுக்கு அப்பால் எஞ்சுவதொன்றும் இல்லை.
துயின்றுகொண்டிருந்த ரயனுக்கும் விஜயனுக்கும் அருகே மஞ்சத்தில் ஒருவர் இருப்பை ஒருவர் உணர்ந்தபடி அமர்ந்திருந்தனர் ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும். நெடுநேரத்திற்குப்பின் ஸ்ருதாயுஸ் உடல் அசைய ஒலிகொண்டு “காட்டுக்குள் புகுந்திருப்பார்கள் போலும்” என்றான். சத்யாயுஸ் ஆம் என்று தலையசைத்தான். மீண்டும் ஒரு வினாவை அவன் கேட்க விரும்பினான். அதை சொல்லென ஆக்கினால் பிறகு அழித்தெழுத முடியாத கல்வெட்டென்று ஆகிவிடும் என்று எண்ணி ஒதுக்கினான். குளிரென குத்தும் வலியென உயிரை வதைத்த அத்தருணத்தை கடக்கத்துடித்த உள்ளம் அதில் ஆழ்வதை விரும்பத்தொடங்கியது எப்போது என எண்ணிக்கொண்டான்.
அரசவைவிட்டு தன் இரு மாணவர்கள் நிழலென தொடர இல்லம் வந்த அமைச்சர் பத்மர் தன் அறைக்குள் அமர்ந்து மைந்தனுக்குரிய ஆணைகளை பன்னிரு ஓலைகளிலாகப் பொறித்து பட்டுத்துணியில் சுற்றிவைத்தார். பதினாறு வயதான சுதர்மன் நகருக்கு அப்பால் குருவாகினி என்னும் ஓடைக்கரையில் அமைந்திருந்த வேதக்கல்வி நிலையிலிருந்து தேரில் அழைத்து வரப்பட்டிருந்தான். அவர் எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அவன் வந்து வணங்கினான். நிமிர்ந்து நோக்கி அவனை சற்றுநேரம் வெறித்தபின் நீராடி வரும்படி ஆணையிட்டார். ஈரக்குடுமியில் நீர் சொட்ட கைகளைக் கட்டிக்கொண்டு தன் அருகே நின்ற அவனிடம் அச்சுவடிகளை கொடுத்தார்.
“இவை ஆணைகள், நெறிகாட்டுதல்கள், அருஞ்சொற்றொடர்கள். மைந்தா, அறம் ஒன்றைத்தவிர பிறிதொன்றை இறையென்றும், கொடியென்றும், உறவென்றும் இலக்கென்றும் கொள்ளாதிருத்தல் உன் கடன். நலம் சூழ்க!” என்று வாழ்த்தினார். அவன் அவர் தாள்தொட்டு சென்னிசூட தலையில் கைகளை வைத்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவன் விழிநீரை இமையசைத்து உலரச்செய்தபடி பின்காலடி வைத்து அவர் முன்னிலை நீங்கினான். அவன் அன்னை அங்கே காத்திருந்தாள். அவன் தோளில் கைவைத்து “அழக்கூடாது” என்றாள். அவன் நிமிர்ந்து நோக்கினான். அவள் முகம் சிலையென்றிருந்தது.
மரவுரியை அணிந்து பிற அணிகளேதுமின்றி வலக்காலெடுத்து படியிறங்கி திண்ணைக்கு வந்து அங்கு எழுந்தமர்ந்திருந்த தன் தந்தையை அணுகி குனிந்து அவர் கால்களைத்தொட்டு சென்னிசூடினார் பத்மர். “முன்னரே செல்கிறாய், மூதாதையர் எண்ணம் அதுவெனில் ஆகுக!” என்றார் கிழவர். “தங்களுக்கு என் மைந்தன் இருக்கிறான், தந்தையே” என்றார். “ஆம், உனக்கு அவன் அளிக்கும் நீரும் எள்ளும் தேவையில்லை. வடக்கிருப்பவன் இங்குள அனைத்தையும் துறந்து செல்கிறான். பதினெட்டு நாட்களில் உடல் விட்டு உயிர் அகலுமென்பார்கள். முதல் ஆறு நாட்கள் விழைவுகள். இரண்டாவது ஆறு நாட்கள் சினங்கள். மூன்றாவது ஆறு நாட்கள் பற்றுகள். அவை உனக்கு நிகழட்டும்” என்றார் முதியவர்.
“தங்கள் நற்சொல் திகழ்க!” என்றார் பத்மர். “நம் குடியில் முன்னர் மூன்று மூதாதையர் வடக்கிருந்ததுண்டு. அவர்கள் சென்றமைந்த அவ்வொளிமிக்க உலகில் நீயும் சென்று அமைக! நலம் சூழ்க!” என்றார் முதியவர். அவர் முகத்தில் துயர் ஏதும் தெரியவில்லை. துயரற்ற புன்னகையுடன் அவரைத் தொழுது பத்மர் புறம்காட்டாது விலகி இருள் பரந்த தெருவில் இறங்கினார். அங்கே நின்றிருந்த அவருடைய மாணவர்கள் தொழுது உடன்வந்தனர்.
நகருக்கு வெளியே தெற்கு எல்லையில் அமைந்த கொற்றவை ஆலயத்தின் அருகே நின்றிருந்த தொன்மையான அரசமரத்தின் அடியில் அவருக்கென தர்ப்பையிருக்கை விரிக்கப்பட்டிருந்தது. அவருடைய இரு மாணவர்கள் அங்கே காத்து நின்றிருந்தனர். நகரத் தெருவினூடாக கைகளைக் கூப்பியபடி அவர் நடக்க அவரை அழைக்க வந்திருந்த இரு மாணவர்கள் அவருக்குப்பின் ஓசையின்றி நடந்தனர். அவர்களின் காலடியோசைகள் மந்தணச்சொற்கள்போல இருட்டுக்குள் ஒலித்தன.
ஓர் ஆழுள்ளத்து எண்ணம்போல அவர்கள் செல்வதாக அவருடைய மாணவர்களில் ஒருவன் எண்ணிக்கொண்டான். நகரின் முழுவாழ்வையே மாற்றி அமைக்கும் நிகழ்வுகள் நடந்த அந்த இரவில் குடிமக்கள் எவரும் எதையும் அறியலாகாதென்று சொல்லப்பட்டிருந்தது. உடலுக்குள் நெஞ்சும் வயிறும் மூச்சுப்பையும் இயங்குவதுபோல் அவர்கள் அறியாது அவை நிகழ்ந்துகொண்டிருந்தன என அவனுக்குத் தோன்றியது. அத்தருணம் பின்னர் தன்னால் கூர்ந்து நினைவுற்று மீண்டும் மீண்டும் சொல்லப்படப் போவதென்பதை உணர்ந்தமையின் கிளர்ச்சியால் அவன் உடல் அடிக்கடி விதிர்த்துக்கொண்டிருந்தது. கூடவே பென்னம்பெரிய நிகழ்வுகள் அத்தனை எளிதாகவும் இயல்பாகவும்தான் நிகழுமா என அவன் உள்ளம் வியந்துகொண்டது.
இருளுக்குள் நடந்துசென்று தன் வடக்கிருத்தலுக்கான இடத்தை அடைந்த பத்மர் கொற்றவை ஆலயத்தை அணுகி கொலைவிழியும் கோட்டெயிறும் ஈரெண் கைகளில் படைக்கலங்களுமாக நின்ற அன்னையை வணங்கி அவ்வாலயத்தை மும்முறை வலம் வந்தார். அரசமரத்தடியை வந்தடைந்ததும் அவர் ஒரு மாணவனை நோக்க அவன் மெல்ல தலையசைத்து உரிய நற்பொழுது அணுகிவிட்டது என்று உணர்த்தினான். கைகூப்பியபடி அவர் அரசமரத்தடி மேடைமேல் ஏறி தர்ப்பைப்புல் இருக்கை மேல் கால் மடித்தமர்ந்தார். முழுவிடுகை முத்திரையில் வலக்கையை மலர்த்தி அதன்மேல் இடக்கையை வைத்தார். கண்களை மூடி தன் நெஞ்சத்து ஆழத்தின் அதிர்வில் சித்தம் நாட்டி அமர்ந்தார்.
நான்கு மாணவர்களும் அவரையே நோக்கி நின்றனர். அவரது மூச்சு சீராக எழுவதையும் உடல் இயல்பாக தளர்நிலை கொள்வதையும் கண்டதும் மெல்ல பின்னடைந்து அங்கிருந்த உதிரிப் பாறைகளில் அமர்ந்தனர். அப்போதுதான் நகருக்குள் புரவிக்குளம்போசைகள் எழுந்து அகல்வதை அவர்கள் கேட்டனர். திரும்பி ஒருவரை ஒருவர் நோக்கினர். ஓசை முற்றடங்கியபோது நால்வரும் ஒருங்கே பெருமூச்சு விட்டனர்.
புரூரவஸை அவனது படைவீரர்கள் காட்டின் எல்லையென அமைந்த திரிகூடம் என்னும் மூன்று மலைப்பாறைகளின் அடிவாரம்வரை கொண்டுவந்து இறக்கிவிட்டனர். அவன் கைகளைக் கட்டியிருந்த பட்டுத்துணியை அகற்றியபின் படைத்தலைவன் “செல்க!” என்று முகம் நோக்காது ஆணையிட்டான். இடறிய காலடிகளுடன், களைப்பில் விழிகள் மங்கி காட்சிகள் நீர்ப்பாவை என அலையடிக்க அவன் நடந்தான். இமைகளை அடித்து திறந்து நோக்கினான். மெல்லத்தெளிந்த காட்டுமுகப்பில் விழுந்து பெருகிய பின்காலையின் வெண்ணிற ஒளி அனைத்தையும் வெளிறச்செய்திருந்தது. முந்தையநாள் மழைபெய்திருந்த ஈரமண்ணிலிருந்து நீராவி எழுந்து மூச்சடைக்க வைத்தது. காட்டிலிருந்து எழுந்த பறவைக்குரல்கள் செவியின் நுண்சவ்வை அதிர வைக்குமளவுக்கு உரக்க ஒலித்தன.
அவனுக்கு வாழ்த்தோ வணக்கமோ உரைக்காமல் படைவீரர்கள் தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். தேர் திரும்பும் சகட ஒலி கேட்டது. விழப்போன புரூரவஸ் கால்களை ஊன்றி நின்று சிறிய மரமொன்றை பற்றிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். கால் கீழ் மண்பரப்பு காற்றுத் திரையென நெளிந்து புகையென்றாகி அடியிலியில் அவனை வீழ்த்திக்கொண்டே இருந்தது. மூச்சிரைக்க உடல் வியர்வையில் நனைந்து காட்டிலிருந்து வந்த காற்றில் குளிர்கொள்ள அவன் மெல்ல நிலைமீண்டபோது தனக்குப்பின் அச்சிறு படை நின்றிருப்பதாகவே உள்ளம் உணர்ந்தது. திரும்பி நோக்கியபோது நெடுந்தொலைவில் குளம்புகள் எழுப்பிய புழுதி முகில்கீற்றென கரைவதைக் கண்டான்.
புல் பரப்பில் அப்படை வந்து சென்ற தடம் எஞ்சியிருந்தது. ஒரு மழையில் அது முற்றிலும் அழியும். பின் அவன் அங்கு வந்ததற்கு சான்றிருக்காது. அங்கிருந்து அவன் மீண்டு சென்றால் அவன் புரூரவஸ் என்பதற்கும் சான்றிருக்காது. அக்கணம்வரை அவனில் நிறைந்திருந்த ஏதோ ஒன்று ஒரு கணத்தில் முழு எடையையும் அகற்றி வெறும் நுரையென, புகையென ஆயிற்று. அவன் முதலில் உணர்ந்தது ஒரு வகை உவகையை. அது விடுதலை உணர்வு என்று அறிந்தான். அதன்பின்னரே அது எதிலிருந்து என தெளிந்தான்.
உணவறையிலிருந்து முதலில் இழுத்துச் செல்லப்பட்டபோது எழுந்த முதல் அதிர்ச்சி, அது விலகியபோது எழுந்த துயர், பின்பு ஊறி எழுந்து நிறைந்த கசப்பு, அனைத்தும் அகன்ற பின் எஞ்சியது அது. அதை ஓர் உணர்வென்றே அவன் எண்ணவில்லை. நெஞ்சமெனும் பட்டுத்துணி மேல் வைக்கப்பட்ட பெரும்பாறை. சொல்லென்றாகாத ஒன்று. எஞ்சிய வாழ்நாள் முழுக்க அதை சுமந்தலையப் போகிறோமென்றே எண்ணியிருந்தான். உண்மையில் நகர் நீங்குகையில் இனி இப்பேரெடையும் நானும் மட்டும்தானா என்றெண்ணியே உளம் பதைத்தான். அது அப்படி விலகுமென்று எண்ணியிருக்கவேயில்லை.
கைகளை விரித்தபடி காடு நோக்கி ஓடவேண்டும் போலிருந்தது. இயல்பான தன்னுணர்வால் அவ்வெண்ணத்தை அடக்கியதுமே ஏன் அடக்கவேண்டும் இனி என்ற எண்ணம் வந்தது. இனி எத்தளையும் இல்லை. எந்தப் பார்வைக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. அரசன் சொற்களெனும் சரடுகளால் நாற்புறமும் இழுத்துக் கட்டப்பட்டவன். முந்தையோர் சொன்ன சொற்கள். சூழ்ந்திருப்போர் சொல்லும் சொற்கள். நாளை நாவிலும் நூலிலும் வாழப்போகும் சொற்கள். இது சொல்லின்மை வாழும் காடு. பொருள் ஏற்றப்படாத மரங்களின், புதர்களின், விலங்குகளின் வாழ்வுப்பரப்பு.
முற்றிலும் விடுதலையடைந்திருக்கிறோம் என்று மீளமீளச் சொல்லி தனக்கே அவ்வுணர்வை ஊட்டிக்கொண்டான். அவன் உள் அதை அறிந்ததுமே இரு கைகளையும் விரித்து உரக்கக் கூவியபடி துள்ளிக்குதித்தான். சுழன்று சுழன்று கூச்சலிட்டு தடுமாறி விழுந்தான். இரு கைகளாலும் நிலத்தை ஓங்கி அறைந்து கூச்சலிட்டான். அவ்வோசை செவியில் எழ உள்ளிருந்து மீண்டும் மீண்டும் கூச்சல்கள் கிளம்பி வந்தன. சொல்லற்ற பொருளற்ற வெற்றொலிகள். விலங்குநிகர் கூவல்கள், பிளிறல்கள், அமறல்கள், அலறல்கள்.
இரு கைகளாலும் தோள்களையும் மரங்களையும் அறைந்தான். நெஞ்சும் முகமும் நிலம்பட விழுந்து புல் பரவிய தரையில் முகத்தை உரசிக்கொண்டான். புரண்டு புரண்டு எழுந்தமர்ந்து மீண்டும் கூச்சலிட்டான். பாய்ந்து காட்டுக்குள் ஓடி சுற்றி வந்தான். ஒவ்வொரு மரத்தையாக தழுவினான். துள்ளி கிளைகளைப் பற்றி குதித்து உலுக்கினான். சிரிப்பும் அழுகையும் ஓய்ந்தபோது தெய்வங்களுக்குரிய முகத்துடன் ஒரு சாலமரத்தின் அடியில் தலைக்கு கைவைத்து மல்லாந்து படுத்திருந்தான். அவன் முகம் கிளைகளினூடாக வந்த ஒளி விழுந்து பொற்தழல் சூடியது.
மெல்லிய நிழலாட்டம் ஒன்றை இமைகளுக்குள் உணர்ந்து அது எதுவென்று செவிகூர்ந்தான். ஊனுண்ணியா, பன்றியா? களிறல்ல, எருதும் அல்ல. பின்பு விழிதிறக்காமலேயே அப்பெருங்குரங்கை அவன் கண்டான். மெல்ல எழுந்து அமர்ந்தபோது சற்றும் அஞ்சாமல் அவன் அருகே முகம் நோக்கி அது அமர்ந்திருந்தது. “ரீச்” என்ற ஒலி எழுப்பி பற்களைக் காட்டியது. அவன் “ஆம்” என்றான். “ரீச்” என்று ஒலி எழுப்பி அது காட்டைக் காட்டியது. “ஆம், காட்டுக்கென்று வந்துவிட்டேன். உங்களுடன் இருக்கப்போகிறேன்” என்றான். இரு விழிகளும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டன. அக்குரங்கை பலமுறை பார்த்திருப்பதுபோல் அவன் உணர்ந்தான்.
ஒரு மெல்லிய திடுக்கிடலுடன் ஏதோ ஒரு கனவில் குரங்குகளுடன் கிளை தாவி கூச்சலிட்டதை நினைவுகூர்ந்தான். அப்போது அது உடனிருந்தது. நெடுங்காலத்துக்கு முன்பு. அல்லது நெடுங்காலத்துக்குப் பின்பா? அவனும் ஒரு பேருடல் குரங்காக இருந்தான். அவன் அதன் விழிகளை நோக்கி “பீமன்! என் பெயர் பீமன்!” என்றான். அது மெல்ல அருகே வந்து சுட்டுவிரலால் அவன் மூக்கைத் தொட்டது. பின்பு பற்களைக் காட்டியபடி குனிந்து அவன் முகவாயை தன் உதடுகளால் தொட்டது. அதற்குப் பின்னால் மேலும் குரங்குகள் எழுந்து வந்தன. அவன் எழுந்து அவற்றை நோக்கி சென்றான். ஒரு குரங்கு எழுந்து அவன் கைகளை பற்றிக்கொண்டது.
முதலில் அவனை சந்தித்த குரங்கு “வருக!” என்றது. “ஆம், இனி உங்களுடன்தான்” என்று அவன் சொன்ன முதல் கணமே அது சொன்ன மொழி எப்படி தனக்கு புரிந்ததென்று திடுக்கிட்டான். அது விழிகளை சந்தித்து “இனி நாம் பேசிக் கொள்ளமுடியும்” என்றது. புரூரவஸ் தன் நெஞ்சொலிக்கும் ஓசையை கேட்டான். “இத்தனை எளிதாகவா?” என்றான். “மிக மிக எளிது. ஒரு மெல்லிய கோடு மட்டுமே தாண்டப்பட வேண்டியது” என்றது அக்குரங்கு.